Wednesday, June 1, 2011

தேய்ந்தழிந்து போவதெல்லாம் தேர்வுப்பிழைதானோ?

சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்கிற அவா மனிதர்கள் எல்லோருக்குமே பொதுவாயுள்ளதுதான். ஆனால், நமது யதார்த்த நிலை, சூழல், பிறருடைய சுதந்திரம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் நமது சுதந்திரத்திற்காக ஆவேசப்பட்டுப் பொங்க முடியாது. மற்றவற்றைக் கணக்கிலெடுக்காத ‘நமது சுதந்திரம்’ என்ற வீம்புக் கோஷத்தில் எந்த நியாயமுமில்லை. இதுகுறித்து ழான் பவுல் சார்த்தர் ஓர் உதாரணம் தருகிறார். மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடும் அவர், இத்தகைய சுதந்திரம் ஆபத்தாகிவிடக் கூடிய சூழ்நிலை பற்றியும் சொல்கிறார். மலை முகட்டில் நின்றுகொண்டிருப்பவனுக்கு இன்னும் ஓரங்குலம் நகர்வதற்கான சுதந்திரம் என்பது அதலபாதாளத்திற்கே இட்டுச் செல்வதாகி விடும். எப்போது, எதை நம் சுதந்திரம் என்று தேர்வு செய்கிறோம் என்பதில் விழிப்புணர்வு அவசியம் என்கிறார். நம்முடைய வாழ்க்கையை எப்படி நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதற்கான தேர்வுகள் நம் கையிலேயே உள்ளன.

நாம் அறிந்துகொள்ள வேண்டியது, சுதந்திரத்திற்காக நமது வீராவேசங்கள் முறுகல்களை எப்போது பயன்படுத்துவது, இணக்கத்தையும் விட்டுக்கொடுப்பையும் எப்போது பயன்படுத்துவது என்ற தெளிவைத்தான். இனி நாம் பெற்றுக்கொள்ளக் கூடுமான தீர்வை அதிகாரங்களை விட மேலான அதிகாரங்களை உரிமைகளைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழல்களை எல்லாம் இந்தத் தேர்வுப்பிழை காரணமாகக் கோட்டை விட்டதை இப்போது எல்லோருமே அறிவோம்.

கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதும், சமரசங்கள் இணக்கங்களை வெறுப்பதும், இலட்சியத் தூய்மைவாதமும் உயிர்ப்பலிகளுக்கே இட்டுச்செல்லும் என்பதை இப்போது நாம் வரலாற்று நூல்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. இலட்சியத்திற்காகப் புகழுடன் சாவதற்கு மனிதர்களைத் தயார் செய்வதென்பது, அந்த இலட்சியத்திற்காக வாழ்வதற்கு அவர்களைத் தயார் செய்வதைக் காட்டிலும் எளிதானது என்பதையும் நாம் பார்த்து விட்டோம். நம் இலட்சியத்திற்கு - இலக்குக்குத் தேவை என்று நியாயப்படுத்தப்பட்டால் நாம் எந்த அநீதியையும் ஏற்போம், எந்தப் பாதகத்துக்கும் துணைநிற்போம் என்பதே நம் வரலாற்றிலும் நிரூபிக்கப்பட்டது.

நமக்குரிய நியாயங்கள் இருந்தால் நாம் எதையும் செய்யலாமா என்பதே கேள்வி. அந்த நியாயங்கள் மாபெரும் அழிவை ஏற்படுத்தித் தவறாகிப் போகுமென்றால், அதுவரை நம்மால் போற்றிப் புகழ்பாடி முன்னெடுக்கப்பட்ட செயல்களின் பொறுப்பை யார் ஏற்பது?

தங்களது ரோசத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப மட்டுமே தீர்வு வரவேண்டும் என்று அழுத்தமான பிடிப்போடு இருப்பவர்கள், அந்த லட்சியமே முக்கியம் என்று நினைக்கின்றவர்கள் அடிப்படையில் மிகுந்த சுயநலவாதிகள். அவர்களிடம் எல்லையற்ற அகந்தையே நிறைந்து கிடக்கிறது.
அதனாலேயே சாதாரண சமூக வாழ்வுக்கான சமரசங்களை செய்துகொள்ள மறுப்பவர்களாயிருக்கிறார்கள். இது தங்களது லட்சியங்கள் வேட்கைகளுக்காக சாதாரண மக்களைக் கஷ்டப்பட வைக்கவும் பலிகொடுக்கவும் தயங்காத தீவிரமாக மாறிவிடுகிறது. இந்தத் தீவிர மனநிலை என்பது, தீக்குள் இறங்கினால் தெய்வதரிசனம் ஏற்படுவதாகச் சொல்பவர்களின் மனநிலையை ஒத்தது. தீ சுட்டால் எரிகிறதே என்று பதறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்காக இவர்கள் பேசுகிறார்கள் - அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் நம் சூழலின் துயரம்!

பிரபல உளவியலாளர் சிக்மண்ட் ஃபிரெய்ட்: “பல்வேறு வகைகளிலும் உள்ள மக்களை, ஒரே மாதிரியாகப் பசியுடன் வைத்திருக்க வேண்டும். பசியின் உந்துதல் அதிகரிக்கும்போது, தனித்தனியான இயல்புகள் மறைந்துவிடும். அவர்களிடத்தில் ஒரே மாதிரியான ஒரு உணர்வு தோன்றும்” என்று சொன்னார். மக்களிடத்தில் ஏகப்பிரதிநிதித்துவத்தை மூச்சுமுட்ட வலியுறுத்துபவர்கள் பலரின் நோக்கம் மக்கள் தொடர்ந்து கஷ்டத்திற்குள்ளிருக்க வேண்டும் என்ற உள்விருப்பமாக மாறுவது இவ்வாறுதான். ஆகவே, கஷ்டங்களை மாற்றுவதற்கான எத்தனங்களை ‘அது நடக்காத அலுவல்’ என்ற முடிந்த முடிவுக்குள் தள்ளிவிட்டு, புதிது புதிதாய் கஷ்டங்களைக் கண்டுபிடித்துப் பிரலாபம் வைத்துக் கொண்டிருப்பதையே அரசியலாய்ச் செய்துவருவதைப் பார்க்கிறோம்.

இணக்கமோ சமரசமோ அற்ற கொள்கைப் பிடிவாதமானது மக்களை ஒரே பசியுடனும் தொடர் துன்பங்களுக்குள்ளும் வைத்திருப்பதைத் தேவையாக்குகிறது. அழிவையும் சாவுகளையும் தவிர்க்க முடியாதவையாக நியாயப்படுத்துகிறது. சாதாரண மக்களைப் பலிப் பொருட்களாக்கி விளையாடும் இலட்சியவீம்பில் சங்கடம் ஏதுமின்றி இருப்பது மட்டுமல்ல அதைக் கொண்டாடவும் செய்கிறது. சார்த்தரின் ‘கறைபடிந்த கரங்கள்’ நாடகம் குறித்து தனது ‘விடுதலையின் பாதைகள்’ நூலில் எஸ்.வி.ராஜதுரை தந்துள்ள குறிப்புகளில் இதுபற்றிய ஒரு விவாதத்தை நாம் காண முடிகிறது.

இல்லீரியா என்னும் கற்பனையான கிழக்கு ஐரோப்பிய நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹோடெரெர். கட்சியின் ஒரு பிரிவினர் தலைவர் இலட்சியத்திற்குத் துரோகமிழைப்பதாகக் கருதுகின்றனர். எனவே அவரை ஒழித்துக்கட்ட, கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள ஹ்யூகோ என்னும் இளைஞனைத் தேர்ந்தெடுக்கின்றனர். தான் செய்யப்போகும் கொலை தன்னை முக்கியமானவனாக்கும் என்று கருதிச் சம்மதிக்கிறான் ஹ்யூகோ. இவனைத் தனது நேர்முக உதவியாளனாக்கிக் கொள்கிறார் ஹோடெரெர். கட்சியில் சேரும் ஒவ்வொருவரும் சுயமரியாதையைப் பெறுவார்கள் என்று தான் கருதியதாலேயே அதில் சேர்ந்ததாக ஹோடெரெரின் மெய்க்காப்பாளர்களிடம் ஹ்யூகோ கூறுகிறான். ஆனால், அவர்களோ தாங்கள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென்றும், பசிக்கொடுமை தாங்காததால்தான் தாங்கள் அக்கட்சியில் சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.

ஹ்யூகோ ஓர் அப்பழுக்கற்ற கறாரான இலட்சியவாதியாகவும் ஹோடெரெர் அரசியல் தீர்வுக்காகக் கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளும் சமரசவாதியாகவும் காட்டப்படுகின்றனர். வேறு சாத்தியப்பாடுகள் இருக்கும்போது வன்முறையை மட்டும் தேர்ந்தெடுப்பது மனிதர்கள் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்பது ஹோடெரெர் பாத்திரத்தின் தர்க்கம். ஆனால், ஹ்யூகோ ஓர் அருவமான இலட்சியத்தை, அதன் தூய்மை சிறிதும் கெடாமல் பாதுகாக்க விரும்புகிறவன், அந்த இலட்சியத்தின் பெயரால் எத்தனை பேரை வேண்டுமானாலும் காவு கொடுக்கத் தயங்காதவன் என்பதை நாடகத்தின் உரையாடல்கள் புலப்படுத்துகின்றன.

ஒரு கொள்கையை நிறைவேற்றுவதற்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் காவு கொடுக்கலாம் என்ற அவனது கருத்தை நிராகரித்து ஹோடெரெர் சொல்கிறார்: ஹ்யூகோ நீ மக்களை நேசிப்பதில்லை. கொள்கைகளைத்தான் நேசிக்கிறாய்.

ஹ்யூகோ: மனிதர்கள்? அவர்களை ஏன் நான் நேசிக்க வேண்டும்? அவர்கள் என்னை நேசிக்கிறார்களா?

ஹோடெரெர்: அப்படியானால் எங்களிடம் ஏன் வந்தாய்? மனிதர்களை நீ நேசிக்கவில்லை என்றால், அவர்களுக்காக நீ போராட முடியாது.

ஹ்யூகோ: கட்சியில் நான் சேர்ந்ததற்குக் காரணம் அதனுடைய இலட்சியம் நியாயமானதாக இருக்கிறது என்பதால்தான். அந்த இலட்சியம் நியாயமானதாக இல்லாமல் போகுமானால் நான் அதை விட்டு விலகுவேன். மனிதர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவர்களால் எப்படிப்பட்டவர்களாக ஆகமுடியும் என்பதில்தான் எனக்கு அக்கறை உள்ளது.

ஹோடெரெர்: நானோ, அவர்கள் எப்படி உள்ளார்களோ அதற்காகவே அவர்களை நேசிக்கிறேன். அவர்களது அழுக்குகள், தீமைகள் அனைத்தையும் சேர்த்து…. என்னைப் பொறுத்தவரை இந்த உலகில் ஒரு மனிதன் கூடுதலாக இருப்பதோ குறைவாக இருப்பதோ முக்கியமான விஷயம். அது விலைமதிக்க முடியாதது. நீ யார் என்பது எனக்கு இப்போது தெரிகிறது. நீ ஒரு நாசகாரன். உன்னையே நீ வெறுப்பதால் மனிதர்களை நீ வெறுக்கிறாய். உனது இலட்சியத் தூய்மை மரணத்தின் நிழலைக் கொண்டிருக்கிறது. நீ கனவு காணும் புரட்சி எங்களுடைய புரட்சி அல்ல. நீ உலகத்தை மாற்ற விரும்பவில்லை. நீ அதை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க விரும்புகிறாய்.

No comments: