Wednesday, May 18, 2011

மறுத்தல் உயர்வு தரும்!

தமிழில் நாம் சொல்வதற்குத் தயங்கும் ரொம்பக் கஷ்டமான வார்த்தை என்ன தெரியுமா?

'முடியாது' என்பதுதான்.

இந்தியக் கலாச்சாரத்தில், 'மறுத்துப் பேசுவது' என்பது கொஞ்சம் அநாகரீகமானது.

'பெரியவங்க சொன்னா மறுத்துப் பேசாதே' எனும் பாட்டி அட்வைஸ் முதல், 'ஐயாவோட பேச்சுக்கு மறுப்பு ஏதுங்க' என்று கக்கத்தில் துண்டைச் செருகும் உழைப்பாளியின் பதில் வரை, மறுத்துப் பேசக் கூடாது என்பதையே போதிக்
கிறது.

'முடியாது' என்று சொல்ல விடாமல் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் காரணிகள் பல உண்டு.

அந்த நபருடனான நட்பு முறிந்து விடுமோ? நம்மை நம்பி வந்து கேட்கிறார், முடியாது என்றால் நல்லாவா இருக்கும்? முடியாதுன்னு சொல்லிட்டா ரொம்ப வருத்தப்படுவாரே? ஒருவேளை கோபப்படுவாரோ? இப்படிப்பட்ட காரணங்கள் தான் `சரி' எனும் தலையாட்டல்களுக்குக் காரணமாகி விடுகின்றன.

மறுத்துப் பேசாமல் இருப்பது நம்முடைய முதுகின் மேல் `விக்கிரமாதித்த வேதாளமாக' சோதனைகள் வந்து அமரக் காரணமாகிவிடும் என்பதை நாம் உணர்வதில்லை.

'சரி' என்று சொல்வது மிகவும் எளிது. `இதை வாங்கித் தருவீங்களா டாடி?' என்று மகள் கொஞ்சுவாள்...

'இந்த வேலையைச் செய்ய முடியுமா?' என்று மேலதிகாரி விண்ணப்பம் வைப்பார்...

'இதைப் பண்ணுடா ப்ளீஸ்' என்று நண்பன் கேட்பான்...

அப்போதெல்லாம், `சரி' எனும் ஒரு வார்த்தைப் பதில் ரொம்பவே எளிது. ஆனால், அந்த ஒரு பதிலுடன் வேலை முடிந்து போவதில்லை. அதன் விளைவால் நடக்கும் நிகழ்ச்சிகள் நமக்குப் பிடிக்காததாகவோ, நம்மால் செய்ய முடியாததாகவோ இருந்து விடுகிறது.

நமக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்ய நாம் ஒத்துக்கொள்ளும்போது, நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்யும் வாய்ப்பு தடைபட்டுப் போகிறது.

உதாரணமாக, அலுவலகத்தில் அதிகமான வேலை தரப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். `சாரி... இன்னிக்கு முடியாது' என்று சொல்வது உங்களுடைய தன்னம்பிக்கையின் அடையாளம்.

அதை விட்டு விட்டு, `சரி குடுங்க' என இழுத்துப் போட்டுக்கொண்டால் உங்களுடைய மாலை நேர திட்டங்களெல்லாம் காலி.

குழந்தை ஏதோ ஒரு பொருளை விரும்பிக் கேட்கிறது. அது தேவையற்றது என நீங்கள் நினைக்கும்போது 'முடியாது' என்று சொல்வதே நல்லது.

எல்லாவற்றுக்கும் சரி என்பது குழந்தைகளின் பதின்வயதுக் காலத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

'முடியாது' என சொல்லி மறுத்து, தோல்வியின் முகத்தையும் குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும். அதுதான், பிற்காலத்தில் தோல்விகள் சகஜம் என்பதைக் குழந்தைகளுக்குப் போதிக்கும்.

அது தெரியாத இளசுகள்தான் `தோல்வி' எனும் வார்த்தையைக் கேட்டதும் தற்கொலைக்குத் தயாராகி விடுகிறார்கள்.

நெருங்கிய நண்பர்களுக்கிடையே `மறுப்பு' இல்லாதபோது பல கெட்ட பழக்கங்கள் வந்து தொற்றிக் கொள்கின்றன.

'ஒரு தம் போடுவோம் மச்சி' எனும்போது, `வேண்டாம், சாரி...' என ஒரு சின்ன மறுப்பைச் சொன்னாலே தப்பித்து விடலாம்.

'முடியாது' என்று சொல்வது நம்மை நாமே மதிப்பதற்குச் சமம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

தன்னுடைய லட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருப்பவர்களால் எளிதில் மறுப்பைச் சொல்ல முடிகிறது. அரைவேக்காடு மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் மறுத்துச் சொல்லத் தயங்குகிறார்கள்.

காரணம், அது சரியா, தவறா என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை!

என்னோட நேரத்தை நான் மதிக்கிறேன் என்பதன் அடையாளம்தான் தேவையற்றவற்றுக்கு `நோ' சொல்வது!

அடுத்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் நீங்கள் அடுத்தவர்களை மதிக்கிறீர்கள், உங்களை மதிக்கவில்லை என்பதுதான் ஒருவரிச் செய்தி!

எல்லாவற்றையும் தலையாட்டிக் கொண்டே ஏற்றுக் கொள்பவர் களுக்கு ஆயுளும் ரொம்பக் கம்மி. காரணம், அவர்களிடம் எப்போதுமே மனஅழுத்தம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும்.

மறுக்காததற்காக தன் மீதான கோபமும், தன்னை இந்தச் சூழலில் மாட்டிவிட்டதற்காக மற்றவர்களிடம் கோபமும் எப்போதும் இவர்களிடம் இருக்கும்.

கோபம் கொந்தளிக்கும் மனம் நோய்களின் கூடாரம்தானே!

'முடியாது' என்று சொல்வது தவறில்லை எனும் மனநிலை முதல் தேவை. சொல்வதற்கெல்லாம் `சரி' என தலையாட்டிக் கொண்டிருக்க யாராலும் முடியாது.

'சரி' என ஒத்துக் கொண்டால், அதன் தொடர்ச்சியான விளைவுகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

'என்ன, ஒரு அரை மணி நேர வேலைதானே!' என்று முதலில் நாம் நினைப்போம். அந்த அரை மணி நேரம், அதன் பின் வரக்கூடிய எல்லா வேலைகளையும் பின்னுக்குத் தள்ளும்.

இதேபோல நான்கைந்து அரை மணி நேர வேலைகள் வந்தால் நிலைமை என்னவாகும்? பிஸி...பிஸி... என ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நேற்றைக்குத் தொலைத்த பணத்தை இன்று மீட்கலாம். ஆனால், நேற்று தொலைத்த நேரத்தை என்றுமே மீட்க முடியாது!

'சரி' என்று சொல்வதற்கு ஒரு வார்த்தை போதும்.

'சாரி' என்று சொல்வதற்கு ஒரு சின்ன விளக்கமும் தேவைப்படும்.

மன்னியுங்கள், ஒரு முக்கியமான வேலையில இருக்கேன்...

சாரி, இது எனக்குத் தெரியாத விஷயம்...

சாரி, இப்போதைக்கு புதுசா எதையும் ஒத்துக்கொள்ற மாதிரி இல்லை...

எனக்கு டைமே இல்லை...

இப்போதைக்கு என்னோட கவனத்தை இதுல செலுத்துற மனநிலையில் நான் இல்லை...

சாரி, எனக்கு கொஞ்சம் குடும்பம் சார்ந்த வேலைகள் இருக்கு...

இப்படி ஏதாவது ஒரு சின்ன காரணம் சொல்லி விட்டாலே போதுமானது!

மறுக்கும்போது உங்களுக்கு மாற்று வழி ஏதேனும் தோன்றினால் அதைச் சொல்லலாம்.

மாற்று வழி சொல்லவேண்டும் என்பது கட்டாயமில்லை. மனதில் தோன்றினால் மட்டும் சொல்லுங்கள். தேவையில்லாத விஷயங்களைச் சொல்லி அது `பூமராங்' மாதிரி உங்களைத் திரும்பித் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அகஸ்டின் ஓக் மண்டினோ புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர். அவருடைய பல புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. அவருடைய `த கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் த வேல்ட்' புத்தகம் ஐந்து கோடிக்கு மேல் விற்றுப் பட்டையைக் கிளப்பியது. அவர் எழுத்தாளராவதற்கு முன் வாழ்வில் பல்வேறு சோதனைகளில் சிக்கினார்.

மிகப்பெரிய குடிகாரராய் மாறினார். கடைசியில் மனதை ஒருமுகப்படுத்தி, குடிக்கு 'நோ' சொல்லி எழுத்துக்கு வரவேற்புக் கம்பளம் விரித்தார். அதுதான் இன்று அவரை உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்களின் வரிசையில் அமர வைத்திருக்கிறது.

எனவே, `நோ' சொல்வது மற்றவர்களோடு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் மனம் உங்களை தவறு செய்யத் தூண்டும் போதெல்லாம் கூட எழும்பட்டும், `நோ'.

உங்களுடைய வேலைகளையெல்லாம் தரம் பிரியுங்கள். எது அதிமுக்கியம் என்பது முதல், எது அவசியமற்றது என்பது வரை தரம் பிரியுங்கள். அதனடிப்படையில் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். எதை மறுக்கவேண்டும் என்பது உங்களுக்கு அப்போது புரியும்.

மறுத்துப் பேசுவது உங்களுக்கு நல்ல பெயரைத்தான் சம்பாதித்துத் தரும் என்பது உண்மைதான். இருப்பினும், எதை, எந்தச் சூழ்நிலையில் மறுக்க வேண்டும் என்பதும் முக்கியம். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் அளிக்கப்படும் பணியை மறுக்கும்போது, அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக, மேல் அதிகாரி சொல்லும் எல்லா வேலைக்கும் `நோ' சொன்னால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை வரலாம். `இந்த ஆள் எந்த வேலை சொன்னாலும் என்னால் முடியாது என்று சொல்கிறார். எனவே, இவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கொடுப்பது சரியல்ல' என்று நிறுவனம் நினைக்கலாம்.

எனவே, எந்த சூழ்நிலையில் 'நோ' சொல்ல வேண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்வதே புத்திசாலித்தனம்.

'அவரு முடியும்னா முடியும்னு சொல்லுவாரு, சொன்னா முடிச்சிடுவாரு' எனும் டயலாக்கை நீங்கள் ஆங்காங்கே கேட்டிருக்க வாய்ப்பு உண்டு!

உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வாரன் பபெட் சொல்லும் சேதி சுவாரஸ்ய
மானது.

சாதாரண வெற்றியாளர்களுக்கும், சாதனை வெற்றி
யாளர்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

'சாதனை வெற்றியாளர்கள் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் 'நோ' சொல்வார்கள்' என்கிறார் இவர்.

முக்கியமானவை தவிர எல்லாவற்றையும் மறுத்துவிட வேண்டும் என்பதே இவரது வெற்றி பார்முலா.

மறுப்புச் சொல்லிட மறக்கவும் வேண்டாம்.

வாழ்வின் இனிமையைத் துறக்கவும் வேண்டாம்!

No comments: