Monday, May 2, 2011

கடாபியைக் காக்கும்'கன்னிப் படை


உள்ளூர் கிளர்ச்சியாளர்களையும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் அதிரடியையும் எதிர்த்துப் போராடி வருகிறார், லிபிய அதிபர் மும்மர் கடாபி.

போரில் தோற்றாலும்கூட, சதாம் உசேனுக்கு நேர்ந்தது போன்ற பரிதாப முடிவு கடாபிக்கு நேராது என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள். கடாபியை நெருங்கவே முடியாது. காரணம் அவரைச் சுற்றி நெருப்பு வளையமாய் நிற்கும் 40 கன்னிப் பெண்கள்!

அந்தப் பெண்கள் உதட்டுச் சாயம் பூசியிருக்கிறார்கள், நகைகள், குதிகால் உயர்ந்த காலணி, நவீன குளிர்கண்ணாடி அணிந்திருக்கிறார்கள், கம்பீரமான ராணுவ உடையில் கவர்ச்சியாய் தோன்றுகிறார்கள்.

ஆனால் இவர்களின் வாழ்வில் இயல்பான எந்தப் பொழுதுபோக்கும், உல்லாசமும் இல்லை. பேச்சு, மூச்சு, உயிர் எல்லாமே கடாபியைப் பாதுகாப்பதில்தான்!

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள மகளிர் ராணுவ அகாடமியில் கடுமையான பயிற்சியில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் இந்த அதிரடிப் பெண்கள்.

அந்த அகாடமியின் உயர்ந்த கேட்களுக்கு இடையே கசிந்த தகவல்கள்படி, இந்த நாற்பது பெண்களும் அங்கு மூன்றாண்டுகள் மிகக் கடுமையான பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

பயிற்சி என்றால், அது சாதாரணமானவர்களுக்கு சித்ரவதை. அதிகாலை 4.30-க்கெல்லாம் எழ வேண்டும். அடுத்து ஒன்றரை மணி நேரம் `ஜாகிங்' செய்ய வேண்டும். பின்பு பற்பல யுக்திகள் பயிற்றுவிக்கப்படும். அவற்றுள் முக்கியமானது, எதிராளியை எப்படிக் கொல்வது என்பது. இந்தப் பெண்களால் வெறுங்கைகளாலே எதிராளியைத் தாக்கி மூச்சை நìறுத்திவிட முடியும்.

சில பெண்களுக்கு போர் விமானம் ஓட்டும் பயிற்சி கூட அளிக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் அடிப்படையான இலக்கு ஒன்றுதான். அது, எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கடாபியின் உயிரைக் காப்பது. அதற்காக, செக்ஸ், திருமணம் எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள் இப்பெண்கள்.

இந்தப் பெண்களைப் பற்றி இப்படி கூறுவதற்கு ஒரு சான்று...!

1998-ம் ஆண்டு கடாபியின் வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தினார்கள் தீவிரவாதிகள். கடாபியை நோக்கியும் புல்லட்கள் சீறி வந்தன. அப்போது ஆயிஷா என்ற மேற்கண்ட `கன்னிப்படை' பெண், கடாபி மீது பாய்ந்தார். தாக்குதலில் ஆயிஷா உயிர் துறந்தார், கடாபி சிறு கீறலும் இல்லாமல் தப்பித்தார்.

கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜேன் கோகன். அவர், கடாபியின் மெய்க்காவலர்கள் குறித்த ஓர் ஆவணப் படம் தயாரிப்பதற்கு லிபியா அரசின் அரிதான அனுமதியை 1995-ல் பெற்றார். அவர் மூலமாகவே கடாபியின் கட்டிளம் பெண்கள் படை பற்றிய தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கின்றன.

டக் சான்டர்ஸ் என்ற மற்றொரு கனடா பத்திரிகையாளரும் லிபிய மகளிர் ராணுவ அகாடமிக்குள் நுழையும் அனுமதியைப் பெற்றார். அவர் தனது வலைப்பூவில், குறிப்பிட்ட பெண்கள் படை, `வி.ஐ.பி.யின் பாதுகாவலர்கள்' என்று அழைக்கப்படுவதாக எழுதியிருக்கிறார். லிபியாவில் இப்படியொரு பெண்கள் படையை உருவாக்கியிருப்பது கடாபியின் வினோதமான, புதிரான மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, கன்னிப்படை, தமது உயிருள்ள வரை கடாபியைக் காப்பாற்றும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகமில்லை. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் விசுவாசமும், `தலைவரை'க் காக்கும் துடிப்பும் தெறிக்கின்றன.

பாதுகாவல் பெண்கள் படையைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணான பாட்டியா கூறுகையில், ``தலைவர் இல்லாமல் லிபியா பெண்கள் ஒன்றுமேயில்லை. அவர்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தார். அவருக்காக நான் உயிரைக் கொடுக்கவும் தயார். அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தந்தை, சகோதரர், நண்பர். அவர் எவ்வளவு அடக்கமாக இருப்பார் என்று உங்களால் கற்பனை செய்யவே முடியாது.''- என்கிறார்.

இந்தப் பெண்கள் எந்தளவு கடாபி மீது உறுதியான பற்று வைத்திருக்கிறார்களோ, அதே அளவு நம்பிக்கையை அவர் இவர்கள் மீது வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடாபியின் உறவினர்கள் பலரும் கூட இன்று அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். ஆனால் இந்த பெண்கள் படை மட்டும் இறுதிவரை அவருக்கு அரணாக நிற்கும் என்பது நிச்சயம்.

No comments: