Monday, May 23, 2011

அன்று நீ பிறந்தபோது...

"மகளே ! மலரில் பூத்த சிறு மலரே !
மருத்துவமனையின் உள்ளே உன் தாய் !
நகம் கடித்து வெளியே நின்ற நான் !
மகன் பிறப்பான் என்றே எங்களது
இரு மூளை மேடையில் ஒரு கற்பனை !
இரு நூலிடையே வேண்டுதல் நெசவு !
கமுக்க ரகசிய அமுக்கல் கனவு !
கதைப் பின்னலில் எதிர்பார்த்த மின்னல் !

மகளே ! நீ பிறந்தாய் என்றதும் மன ஈர
மண்வற்றி பாலைவனக் காற்று !
கண்கள் வானில் அம்பு குத்தின !
கடல் அலை ஆனது உடல் ரத்தம் !
சுவையால் பிறந்தது சுமை ஆகியதே !
தொங்கிய தலை - தோளில் விழுந்தது !

உள்ளே சென்றேன்; உன் தாய் முகம்
ஒளி தொலைந்த விளக்காய்
என்னைப் பார்க்காது எதிர்பக்கம்
ஒரு சொட்டு நீரை ஒளித்து வைத்தது !
'பெண் பிறந்தால் என்ன ? நாட்டுக்குப்
பெயரே - இந்தியத் தாய் !
மொழிக்குப் பெயர் - தமிழ் அன்னை !
நதிக்குப் பெயரும் - தாய் - தேவியே !'
நான் அடுக்கிய பொய்க் கோட்டையை
நகைக்காத நகைப்பால் உடைத்தாள் !

'தேவியர் அவர்களுக்கு எல்லாம்
திருமணம் இல்லையே இதுவரை !
வரதட்சணைக்குப் பயந்தே அவர்கள்
வாழ்கிறார்கள் - கன்னியராய் !'
என்றாள் உன் தாய்; என் மயில் !
ஏட்டுச் சுரக்காயாய் நின்றேன் !"

தொட்டிலில் கிடக்கும் ஒரு
தங்க நிறப் பனிக்கட்டியே !
'குழந்தை பிறந்தது'
என்ற குதூகலச் சொல் எனது !

'ஆணா, பெண்ணா ...?
'ஆணில்லை, பெண்தான் !' 

நண்பர்களின் முகத்தில்
நைந்த மின் கம்பியில்
ஏறிய மின்சாரம்.....
இனிப்பு நீட்டினேன்
எடுக்கும் கைகளில் ஏனோ தயக்கம்...
ஆண்கள் மட்டுமா....? எனது
அம்மா ஆசை - பேரனே
என் துணை மயிலின் அம்மாவுக்கும்
'பிரசவத் தேர்வில்
தன் மகள் தோற்பாம் !

என் அக்கா தங்கை
எதிர், அண்டைவீட்டுத்
தாய்க்குல மனங்களில்
ஒதுக்கல் - உதட்டுப் பிதுக்கல் !

பாட்டிச் சொல் என்ன...?
'ஆணோ, பெண்ணோ
ஆண்டவன் சித்தம் !'
- பக்திச் சொல்லா இது ?
பிறந்ததை என்ன செய்வது எனப்
பெருஞ் சங்கடத்தைச் சலிப்போடு
செரித்துச் சீரணிக்கும் சித்தாந்தம் !

ஆனாலும் ஆடிப் பிறையே !
அழகே !
எத்தனை பேர் வெறுத்தாலும்
'அப்பாக்கள்' மகளை
வெறுப்பதில்லை !
அப்பாவுக்கு மகன் சண்டைச்
சேவல் !
ஆளாகிவிட்டால்
அவன் தோழன் !
ஆனாலும் மகளே ... நீ எனக்கு
எப்போதும் இனிக்கும் வெல்லம் !
அதனால் நீ அப்பாச் செல்லம் !

உள இயல் ரகசியம் ஒன்று;
ஆண் குழந்தைகள்
அம்மா தோளை விடாத
குரங்கு குட்டிகள் !
பெண் குழந்தைகளோ,
அப்பா முகம் விரைவில் அறிந்து
ஆனந்த மின்னலோடு
அம்மா மடியிலிருந்து
அப்பா தோளுக்கு தாவும்
அணில் பிள்ளைகள் ! 

அடியார்
நன்றி ஆ.வி.
 

No comments: