Wednesday, May 18, 2011

வீம்பு அரசியலும் வீரப் பாவனைகளும்

புலிகள் வீழ்ந்து இரண்டு வருடமாகி விட்டதே…. மக்களின் அல்லல்களை மேலும் நீடிக்க விடாமல் அவர்கள் மீளும் வழியை விரைவுபடுத்த செய்த முன்முயற்சிகள் என்னென்ன? என்று யோசித்தால், சில வீரவசனங்களும்…. வெளிநாட்டுப் பயணங்களும்…. பழைய பெருங்காய டப்பா எதிர்ப்பறிக்கைகளும்…. சனத்தைப் பொய்யான கனவுகளில் மிதத்திப் போட்டுச் சரித்த ‘தேசத்தந்தை’ முடிந்தார், இனி அவர் தாயை வைத்தாவது உணர்ச்சியேத்தலாமா என்று ஓடிய நாடகமும்தான் ஈராண்டுச் சாதனையாக எஞ்சுகின்றன! பதவி என்று வந்துவிட்டால் முன்னாள் புலியெதிர்ப்புப் போராளிகளுக்கும்தான் திடீரெனப் பார்வதியம்மா மீது எவ்வளவு பாசக்கதறல் வருகிறது!

இன்னல்கள் நீங்கிவிட்டால் மக்கள் அரச எதிர்ப்பை மறந்துவிடுவார்களே என்ற பதற்றமே இன்னமும் இவர்களது ஒரே அரசியலாகத் தொடர்வதை என்னவென்று சொல்ல? மக்கள் படும் கஷ்டங்களை நீக்குவதற்காக, தங்களது எந்தவொரு வீம்பையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத மேட்டுக்குடி அரசியலிலேயே இவர்கள் திளைத்து வருகிறார்கள். ஏதாவது விந்தையால் தீர்வு வந்துவிடுமென்று வீரவசனங்களைப் பேசிக் காத்திருக்க இவர்களது இழப்பில்லா நோவில்லா வாழ்நிலை இடமளிக்கலாம். ஆனால், போரினால் இழந்தவைகளை மீளப்பெற்றுத் தங்கள் இயல்பு வாழ்வை அடைந்துவிட முடியுமா என்ற ஏக்கத்துடன் உலைபவர்களுக்கு இவர்களது ‘விந்தை நினைவுகள்’ உணவாகாது; வீடாகாது; தொழிலாகாது; நிம்மதியுமாகாது. அவர்களது கஷ்டங்களினால் உண்டான விரக்தியையும் கோபத்தையும் வெறுப்பையும் தவறான வழியில் அரசியலாக்கிப் பிழைக்கும் கொழுப்பே இதுவாகும்.

சிங்கள அரசுக்குச் சவால் விட்டபடி, அவர்களைப் பணியவைக்கும் காலத்திற்காகக் காத்திருக்க, போருக்குத் தப்பி ‘வாழ்ந்திருக்க’ முடிந்த சிலருக்கு முடியுமாக இருக்கலாம். ஆனால், போருக்குள் சிக்கவைக்கப்பட்டு நொந்தலையும் சாதாரண மக்களுக்கு இன்றைய உடனடித் தேவைகளே பெரும் ஏக்கமாக இருக்கிறது. யாருடைய வாழ்வை அழித்து யார் வீம்பு கொள்வது?

ஒரு ஸென் கதை: பலகாலமாகத் தன்னை வருத்திப் பயிற்சி செய்து தண்ணீரின் மேல் நடக்கும் விந்தையைக் கற்றுக் கொண்டார் ஒரு துறவி. இறுதியில் எப்படியோ தனது இலட்சியம் கைகூடிவிட்ட திருப்தியை வெளிப்படுத்தி நீரின் மேல் நடந்து காட்டி பெருமையடித்துக் கொண்டார். கரையிலிருந்த மற்றொரு துறவியின் சீடன், இந்த விந்தையைப் பார்த்துவிட்டுக் கேட்டான். “குருவே, உங்களிடம் இதுபோல விந்தை ஏதும் இல்லையா?” துறவி சிரித்தார். “ஏன் இல்லை? என்னிடம் ஒன்றல்ல மூன்று விந்தைகள் இருக்கின்றன” என்றார். “அப்படியா?” என்று ஆவல் தாங்கமாட்டாமல் கேட்டான் சீடன். “எனக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தால் அடங்கி விடுகிறது. இது முதல் விந்தை. பசியெடுக்கும்போது சாப்பிட்டால் பசி அடங்கி விடுகிறது. இது இரண்டாம் விந்தை. இதையெல்லாம் விடப் பெரிய விந்தை தூக்கம் வந்தால் படுத்தவுடன் உறக்கம் கூடிவிடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதேயில்லை.”

அற்புதங்களுக்குக் காத்திருக்கச் சொல்வதை விட அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து அந்த விந்தையைக் கண்டுகொள்ளச் சொல்லும் கதை அது. எதிர்காலத்துக்கான இன்சூரன்ஸ் ஏற்பாடுகளைச் சொல்லிக் கொண்டிருப்பது, நமது இன்றைய வாழ்வை வலிந்து வதைபட விடும் ஏமாற்றாக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. நாம் மீள்வதற்கான வழிகளை அடைத்தபடியே சுயவிருப்ப வீம்பு அரசியலைத் தொடர்ந்து நடத்தும் வீரப் பாவனைகளை இனி நாம் நிறுத்த வேண்டும்.

நொந்த மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்குள் தள்ளிவிடும் இலகுவான அரசியலையே தேர்தல் வாக்குகளுக்காகச் செய்கிறீர்கள். புண்பட்ட மனங்கள் வெறுப்பை எளிதில் வாங்கிக் கொள்கின்றன. செயற்கையான வீராவேசப் பேச்சுத் துப்பல்களில் மயங்கி சமூகம் பிழையான திசையில் இழுத்துச் செல்லப்பட அனுமதித்தோம். விளைவை அனுபவித்தோம். ஆவேசத்தால் அழிவுகளை உருவாக்கிப் பின் அந்த அழிவுகளால் ஆவேசத்தை வளர்த்து மேலும் மிகையழிவு தேடி…. என்னும் இந்தச் சுழலிலிருந்து இனி நாம் விடுபட வேண்டும்.

வெறுப்பில் இருந்து ஆக்கபூர்வமாக எதுவும் உருவாகாது. அது உடனடியாக வன்முறை அரசியலாளர்களின் கைக்கு ஆயுதமாகச் சென்றுவிடும். பிறகு அதிலிருந்து மீள்வதற்கான போராட்டமே மிகக் கடுமையானதாக மாறிவிடும். அரசியல் தேவைகளுக்காக உருவாக்கி வளர்க்கப்படும் வெறுப்பு, வரலாற்றில் மிகப்பெரிய விலையை நம்மிடம் கோரும் என்பதை நாம் அறிந்துகொண்டு விட்டோம்.

வெறுப்பு, நமது குறைகளை நாம் காணமுடியாதபடி மறைத்துவிடுகிறது. நம் குறைகளை இனங்கண்டு களைவதன் மூலமே நம்மை நீதியுள்ள சமூகமாக்கிக் கொள்ள முடியும்@ உலகின் ஆதரவு பெற்ற சமூகமாக முடியும். அதன்பிறகே அநீதிகளை எதிர்த்து நாம் வெற்றி பெறுவதற்கும் வழி கிடைக்கும்.

சுதந்திரத்திற்காக வன்முறையைக் கைக்கொண்ட சமூகங்கள் மேலும் அடிமைத்தனத்தையே அடைந்ததை வரலாறு காட்டுகின்றது. சுயமரியாதைக்காக வன்முறையைக் கைக்கொண்டவர்கள் மேலும் இழிவையே தேடிக்கொண்டதே பாடமாக இருக்கிறது. வன்முறை நம்மிடம் இருப்பதையும் பறித்துவிடும், எதையுமே அளிக்காது என்பதை இன்று நம்மைவிட உணர்ந்தவர்கள் யாரிருக்க முடியும்? ஆனபோதும், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் பேச்சுக்களுக்கு அப்பால் எதையும் நகர்த்தத் தெரியாதவர்களையே இன்னும் நம் தலைவர்களாக உலாவர விட்டிருக்கிறோம். ஒட்டுமொத்த சமூகத்தையே பாசிஸ மனநிலைக்குள் அமிழ்த்தும் வெற்று வீம்பு ரோச உரையாடல்களே இன்றும் நம் அரசியல் அபத்தமாகத் தொடர்கிறது.

இந்த பாசிஸ மனஉருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள நாம் மீண்டும் மீண்டும் ஒருகால ஜெர்மானிய தேசத்தந்தை, பெருந்தலைவர் அடோல்ப் ஹிட்லர் அவர்களையே வியந்து நாட வேண்டியிருக்கிறது. என்னமாதிரி ஒரு முன்னோடித் தேசியத் தலைவர் அவர்!

ஹிட்லரை உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து ‘பாசிஸமும் பொதுமக்கள் உளவியலும்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவரான வில்ஹெல்ம் ரீஷ், ஹிட்லரின் மேடைப்பேச்சு பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் கருத்துக்கள் இவை: “அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து விடுவது அவர் பாணி. அவை ஒருபோதும் மக்கள் திரளைக் கொந்தளிக்க வைப்பதில்லை. கலாசாரம் சார்ந்த விஷயங்களைப் பேசுபொருளாக எடுத்துக் கொள்வதே அவர்களைக் கவரும். அவற்றைக் கனவும் இலட்சியவாதமும் சார்ந்து உச்சப்படுத்துவார் அவர். பொது எதிரியை உருவாக்குவார். சகல தீமைகளுக்கும் அதுவே காரணம் என்பார். அதன்மீது வெறுப்பை உருவாக்கி தீவிரப்படுத்தியபடியே செல்வார்….

மக்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமாறு பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உரியதாகும் என்பது ஹிட்லரின் வாதம். தனிமனிதனின் சிந்தனைத் திறன், மனசாட்சி ஆகியவற்றை ஊதித்தள்ளிவிட வேண்டும். தனிமனிதர்கள் ஒரு கூட்டமாக ஒன்றிணையும்போது அவர்களின் தனிப்பட்ட அறிவுத்திறன்கள், தர்க்கநியாயங்கள் அனைத்தையும் இழந்து உணர்ச்சிகளால் ஆட்டுவிக்கப்படும் அறிவற்ற ஒற்றைப் பெருங்கும்பலாக ஆகிவிடுகிறார்கள். இந்தக் கும்பல் மனநிலையைக் கையாள்பவர்களுக்கே அதிகாரம் வாய்க்கிறது என்பதே ஹிட்லரின் வரையறுப்பு.”

மக்கள் போற்றிய மாட்சிமை பொருந்திய விறைப்பும் வீறும் கொண்ட தேசியத் தலைவர் ஹிட்லர் நமது ஆசானல்லாமல் வேறென்ன?

No comments: