Tuesday, May 17, 2011

தற்கொலைப்படை கேட்கிறதா தமிழும்?

மொழி நமக்கு கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறது; உணர்ச்சிவசப்பட வைக்கிறது; ஒன்றுபடுத்துகிறது; உயிரை இழக்கவும் கொல்லவுமான ஆவேசத்தையளிக்கிறது; இன்னும் என்னவெல்லாமோ செய்ய வைத்துவிடும் சக்தியைக் கொண்டிருக்கிறது.

மொழியை உயிருக்கு நேராகக் காண்பதும், மொழிக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் செய்துவிடத் துடிப்பதும், பாடையில் ஏறுவதானாலும் சரி ஓடையில் சாம்பலாய்க் கலப்பதானாலும் சரி உவகையுடன் வரவேற்பதும், மொழிக்காக எத்தனை ஆயிரம் உயிர்கள் வேண்டுமானாலும் அழியலாம் என்று துடிப்பதும் எதனால் நேர்கிறது? மொழி வெறும் ஊடகம் என்ற அளவில் நின்றுவிடாமல், மனிதனை இயக்குகிற சக்தியாக, சொல்லப் போனால் மொழியே அவனாக மாறுகிற விந்தை எவ்விதம் நிகழ்ந்தது!

“மொழிதான் நமக்கு உலகத்தை அளிக்கிறது. அதேசமயத்தில் அந்த உலகத்துக்கான எல்லைகளையும் அது வரையறுத்து விடுகிறது…. இன்னொருபுறம் இந்த உலகின் இருப்பை சாத்தியப்படுத்துவதாகவும் மொழி செயற்படுகிறது” என்றார் நீட்ஷே. ஒவ்வொருவரிடமும் உள்ளே ரத்தமாகவே ஓடுமளவுக்கு மொழி உயிராகக் கலந்திருக்கிறது. அதற்காகப் பல்லாயிரம் பலலட்சம் உயிர்களை அழிக்கும் போர்கள் செய்யவும் தயங்காததாக மனிதகுலம் இருக்கிறது.

க.பஞ்சாங்கம் ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்: “மொழியைத் தவிர மனிதர்கள் வேறு அல்லர். மனிதர்கள் கடவுளால் அல்ல, மொழியால் வடிவமைக்கப்பட்டவர்கள். மனிதத் தன்னிலையின் நனவிலி மனம் முழுவதும் மொழியின் குறியீடுகளால் நிரம்பி வழிகிறது. மொழியின் ஆவணக் காப்பகமாக ஆழப்பட்டுக் கிடக்கிறது. மொழிதான் மனிதனுக்கான பிரச்சினை என்றுகூடச் சாராம்சப்படுத்திவிட முடியும்போல் தோன்றுகிறது” என்கிறார்.

மொழியின் மூலமாகவே நாம் உருவாகி வருகிறோம். காணும் யாவற்றுக்கும் பெயரிடுதல் என்ற மொழிச் செயற்பாட்டின் மூலமே சூழலை நம் வசப்படுத்திக் கொள்கிறோம். மொழி ஒரு நதி; அது காலத்தைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பார்கள். ஒவ்வொரு பிரதேசத்தினதும் பல்லாயிரம் வருடத்து வாழ்க்கையை அவ்வப் பிரதேசத்துக்குரிய மொழி தனக்குள் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்துவரும் பண்பாட்டுச் செயற்பாடுகளின் தொடர்ச்சி மொழிவழியாக நிகழ்ந்து வருவதேயாகும். சொல்லப்போனால் அந்தப் பண்பாடே மொழிதான். மனிதர்களை உருவாக்குவதும் மொழிதான்.

“மொழி என்பது வலி. அது நாம் பிறந்ததுமே நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வளர வளர, படிப்படியாக மொழியாலேயே குழந்தை கட்டமைக்கப்படுகிறது. வார்த்தைகள் தொடர்ந்து குறியீடுகளால் குழந்தையை மேலும் மேலும் வடிவமைக்கின்றன. தொடர்ந்து வார்த்தைகள் குழந்தையைச் செப்பனிட்டபடி இருக்கின்றன. நாம் வளர்ந்து ஆளான பிறகும் வார்த்தைகள் நம்மை ஆள்கின்றன” என்றெல்லாம் மொழி பற்றி விவரிக்கிறார் ழாக் லக்கான்.

இதனாலேயே மொழியைக் காரணமாக்கி மனிதர் ரத்தத்தைத் துடிப்புறச் செய்ய முடிகிறது. வன்முறைக்கும் உயிர்க் கொலைகளுக்கும் கூட இந்த மொழி அபிமானம் மனிதரைக் கொண்டுசெல்கிறது.

எழுத்தாளர் மர்க்கி தெ ஸாத் இன் வாழ்க்கையில், அவர் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்று பற்றி சாரு தன் வலைப்பதிவில் தந்திருக்கிறார். சிறுவன் தன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்கிறான்: “நாம் மிருகங்களைக் கொல்கிறோம், அது கொலையாகக் கருதப்படுவதில்லை. ஆனால் மனிதர்களைக் கொன்றால் அதைக் கொலை என்கிறோம். நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழி ஒன்றுதான். ஆக, நாம் பேசும் மொழியை மிருகம் பேசுவதில்லை என்பதாலேயே அதைக் கொன்றால் அது கொலையாகக் கருதப்படுவதில்லை. அப்படியானால் மொழி என்பது எவ்வளவு  பெரிய வன்முறை?”

நமது மொழியைப் பேசாதவன் மீது அந்தரங்கத்தில் நமக்கொரு எதிர்ப்புணர்வு இருந்துகொண்டேயிருக்கிறது. அவனை நம்மிலிருந்து விலக்கிவிட நமது மொழி மீதான அபிமானத்தைக் கவசமாக உயர்த்திப் பிடித்துக் கொள்கிறோம். எந்த பாதகமும் அற்றது இயல்பானது என்று நாம் கருதுகிற மொழிப் பற்றானது, பிறரைச் சகிக்கமுடியா மனநிலைக்கு நம்மைத் தள்ளிச் சென்றுவிடுவது இவ்வாறுதான்.

இதைப் போலவேதான் இனஅபிமானம், தேசஅபிமானம், சாதிஅபிமானம், மதஅபிமானம் எல்லாமே நம்மைப் பிறவற்றிலிருந்து தனிப்படுத்தி வன்முறைக்குத் தயாராக்கி வருவதைக் காண்கிறோம். இவற்றின் காரணமாகவே உலகில் நூற்றுக்கணக்கான போர்கள் காலம் காலமாக நடந்து வருகின்றன என்பதையும், அதன் கரணமாகவே லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதையும் நாமறிவோம். இதனால்தான், எந்த ஒன்றின் மீதும் கொள்ளும் அபிமானமே உலகின் துக்கங்களுக்கெல்லாம் காரணம் என்று புத்தர் சொல்லியிருக்க வேண்டும்.

உடனேயே, ‘தாய்மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்று கிளம்பிவிடக் கூடாது. நமது மொழி நமக்கு இனிமையானதுதான். அதுபோலவேதானே மற்றவர்க்கும் அவரவர் மொழி? நமது மொழிபோல் இனிய மொழி உலகெங்கிலும் இல்லை என்று நம் பாரதியைப் போலவேதான் மற்றைய மொழிக் கவிஞர்களுக்கும் கருத்து இருக்கும். இந்த உணர்ச்சி பொய்யானதில்லை. ஆனால் இந்த நம்பிக்கையிலுள்ள வன்முறையையே நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். இதைச் சொல்லும்போதும், நம்பிக்கையுடன் அறிவிக்கும்போதும் மாற்றானின் இருப்பு முற்றாக மறுக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். மதம், சாதி, நிறம் போன்றவற்றிலும் இதுதான் நடக்கிறது.

‘எனக்கும் தமிழ்தான் மூச்சு; ஆனால் அதைப் பிறர் மேல் விடமாட்டேன்’ என்பது ஞானக்கூத்தனின் பிரபலமான கவிதை வரி. மொழியின் மீது வெறித்தனமான அபிமானம் கொள்ள வேண்டியதில்லை என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டியது. அதேசமயம் அபிமானத்திலிருந்தே பிறவற்றின் மீதான மறுப்பும் வன்முறை உணர்வும் வளர்வது குறித்தும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். சமூகம் நம் மூளையில் திணிக்கின்ற அனைத்து விஷயங்களைப் பற்றியும் நாம் வேறோர் கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

தேசம், மதம், மொழி, இனம் போன்ற பல்வேறு எல்லைக்கோடுகளை நமக்குள் போட்டு வைத்துக்கொண்டு அதனுள்ளேயே இருப்பதன் மூலம் நாம் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்கிறோம். ஆனால் உண்மையில் இந்தப் புனித எல்லைக்கோடுகள் யாவும் மனிதகுலத்துக்குத் தீங்கு விளைவிப்பவையாகவே உள்ளன என்றும் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிந்துகொண்டே வருகிறோம்.

அதிகார விருப்பங்களுக்காகவும், குறுகிய லாபங்களுக்காகவும் மக்களைப் பிரித்து பூமிப்பரப்பில் செயற்கையாக வரையப்படும் எல்லைக்கோடுகளால் ஏற்படும் சமூகப் பிளவுகளும், வன்முறையும், மனித அவலமும் பற்றி இலங்கையில் படித்த இந்தியரான அமிட்டவ் கோஷின் நாவல் ‘நிழல் கோடுகள்’(The Shadow Lines)

தேசத்தை உருவாக்குவதற்கான தேசியவாதத்தை முன்னெடுப்பவர்கள் மற்றவர்கள் மீதான வெறுப்பைக் கட்டியெழுப்புவதனூடாகவே தேசியத்துக்கான ஒருங்கிணைவைச் சாதிக்கின்றனர் என்பதை நாவல் விவரிக்கிறது. அச்சமூட்டக்கூடிய தேசியவாத ஒருங்கிணைவு பற்றி ஒரு பாத்திரம் கூறுகிறது: “அந்த மக்கள் அந்த நாட்டைக் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுத்தது. பலநூறு வருடக்கணக்கான போருக்கும் பெருகியோடிய குருதிக்கும் பின்பு அங்கு வாழ்கின்ற ஒவ்வொருவரும் அதற்கான உரிமையைத் தமது இரத்தத்தை, தமது தந்தையர்களது இரத்தத்தை, தமது சகோதரர்களின் இரத்தத்தைக் கொடுத்து பெற்றிருக்கின்றனர். அவர்கள் தமது நாட்டின் எல்லைக்கோட்டை குருதியால் வரைந்திருப்பதால் தாமனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே எண்ணுகிறார்கள்.”

மற்றவற்றை மறுப்பதன் மூலமும் வெறுப்பதன் மூலமுமே இந்த ஒருங்கிணைவு உண்டாக்கப்படுகிறது. இந்தக் கருத்தியலின் பிரதான குணமே சமூக முரண்பாடுகளையும் எதிர் தரப்புகளையும் மறுப்பதாக இருக்கும். அந்த மறுப்பை வன்முறையினால் நிலைநாட்டுவதில் சென்று முடியும். தேச, இன, மொழி, சாதி, மதம் போன்றவற்றின் மீதான அபிமானமானது பாசிஸமாக வளர்ந்ததே நம் காலத்திய வரலாறாக இருக்கிறது. சமத்துவம், பல்கலாசாரம் போன்றவற்றை மறுக்கும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதாக மாறுகிறது.
எந்த ஒன்றின் மீதும் விமர்சனத்திற்கு அப்பாலான அபிமானம் வேண்டியதில்லை.

No comments: