Saturday, May 7, 2011

மாற்றங்கள் வெற்றியின் நுழைவு சீட்டுகள்

"விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல'' என்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்பின் அடையாளம். எப்போதேனும் சிட்டுக் குருவியின் கூட்டைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நேரம் கிடைக்கும் போது கவனித்துப் பாருங்கள்.

சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்படி இருக்கின்றன? கடந்த ஆண்டு எப்படி இருந்தன? கடந்த நூற்றாண்டில் எப்படி இருந்தன?

இந்த கேள்விக்கு வியப்பூட்டும் பதில் என்னவென்றால், 'நூற்றாண்டுகளாக இவற்றில் ஏதும் மாற்றம் இல்லை' என்பதே!

விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது.

அந்த மாற்றங்கள் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டு வருகிறது.

சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக, அலுவலக வேலை, பிஸினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார்கள். கிணற்றுத் தவளையைப் போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில் தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்டவணையை மாற்றி எதுவும் செய்யமாட்டார்கள். வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கடிகார முள்போல, அவர்களுடைய வாழ்க்கை, பேட்டரி தீரும் வரை ஓடி முடிகிறது.

ஒரு புதிய ரக செல்போனைப் பார்த்தவுடன் நமது செல்போனை மாற்றி விடலாமா எனத் தோன்றுகிறது. ஒரு எல்.இ.டி. டிவியைப் பார்த்ததும் நமது சின்ன டிவியை மாற்றி விடலாமா என தோன்றுகிறது. புத்தம் புதிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தவுடன் மாற்றத்துக்காக மனம் தயாராகி விடுகிறது. ஆனால், முக்கியமான வேலை சார்ந்த மாற்றங்கள் வரும்போது மட்டும் பயம் வந்து கூடாரமடிக்கிறது.

வெற்றியாளர்கள் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடுவதில்லை. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சரியான மாற்றத்தை தேடிப் போய் அணைத்துக் கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் பொருளாதார வீழ்ச்சியில் வழுக்கியது. பலர் வேலையிழந்து, பணமிழந்து சிக்கலில் விழுந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால், மாற்றங்களைக் கண்டு மிரண்டு போனவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு மடிந்தே போனார்கள்.

மாற்றம் நல்லது என்று பலரும் சொன்னாலும் மாற்றங்களை மக்கள் வெறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

என்ன நடக்கப் போகிறதோ, தெரியலையே! எனும் பயம் முதலாவது. ஒரு வட்டத்துக்குள்ளேயே நீந்திக் கொண்டிருப்பவர்கள் சட்டென ஒரு மாற்றத்தைக் காணும் போது நிலை குலைந்து போகிறார்கள். தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனை பிடித்து தரையில் விட்டால் துடிப்பதைப் போல இவர்கள் துடித்து விடுகிறார்கள்.

உண்மையில் விடப்பட்டது தரையில் அல்ல, கடலில் எனும் வாழ்வின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

என்னோட வேலை என்ன ஆகும்ன்னு தெரியலையே? என்னோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலையே, வாழ்க்கையை ஓட்ட என்ன செய்வேன்னு தெரியலையே என்றெல்லாம் மாற்றம் குறித்த திகில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.

இரண்டாவது பயம் கட்டுப்பாடு சார்ந்தது. 

நம்ம கையில 'கண்ட்ரோல்' எதுவும் இல்லையே எனும் பயம் அது!

நடக்கும் மாற்றங்களை எல்லாம் வேறு ஏதோ ஒரு நபருடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல ஒரு எண்ணம் இவர்களுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நமது வாழ்வின் கடிவாளம் நம்மிடம் இல்லையேல் இதில் எப்படி வெற்றி பெறுவது எனும் பயம் அவர்களுக்கு மாற்றத்தைக் கண்டு விலகி ஓடும் மனநிலையைத் தந்துவிடும்.

மூன்றாவது பயம் தோல்வி சார்ந்தது. 

சூழல் மாறிவிட்டால் வெற்றி பெற முடியுமா எனும் குழப்பம்.

புதிய இடம் எப்படி இருக்குமோ?, புதிய தலைமை எப்படி இருக்குமோ? தரப்பட்டிருக்கும் புதிய வேலையில் திறமையாய் செயல்பட முடியுமா? ஒருவேளை வெற்றி பெறாவிடில் வேலை நிலைக்குமா? இப்போது இருக்கின்ற நல்ல பெயர் தொடருமா..? என சங்கிலித் தொடர் போலத் தொடரும் பயங்கள் இதில் அடக்கம்.

நான்காவது பயம் சோம்பேறிகளின் பயம்.

இந்த வேலையை நாலு வருஷமாவோ, நாப்பது வருஷமாவோ பண்றேன். இதோட எல்லா நுணுக்கங்களும் எனக்குத் தெரியும். கண்ணை மூடிட்டு கூட இந்த வேலையைச் செய்ய முடியும். இனிமே புதிய வேலையைச் செய்தா எப்படி? இப்போ இருக்கிற இந்த ரிலாக்ஸான சூழல் நிலைக்குமா...? எனும் பயம் அது.

ரொம்பவே சொகுசான வேலைச் சுழற்சியிலிருந்து வெளிவர பயப்படும் மனநிலை இது.

"மாற்றங்களை வெறுப்பவன் அழுகத் துவங்குகிறான், மாற்றங்களை ஏற்காதவர்கள் கல்லறை மனிதர்கள் மட்டுமே'' என்கிறார் இங்கிலாந்தின் ஹேரால்ட் வில்சன்.

பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து டிராப் ஓடேட்டா எனும் சின்ன நிறுவனத்தை ஆரம்பித்தார் ஒருவர். டிராபிக் சிக்னல் தொடர்பான தகவல்களைப் பெற்று, அவற்றைப் பயனுள்ள அறிக்கைகளாக மாற்றுவது தான் அவர்களுடைய திட்டம்.

ஓரளவு நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கிக் கொண்டிருந்த போது அவர் அதை உதறி விட்டு மாற்றத்தை நாடினார். அந்த மாற்றம் அவருக்கு உலகப் புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நம்மைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்களை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மாற்றங்களுக்குள் இணைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். திசை மாறித் திசை மாறி ஓடும் நதியின் ஓட்டத்துக்கு ஏற்ப நீந்துவதே எளிதானது. எதிரேறுதல் கடினமானது.

எனவே, மாற்றங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வதே, மாற்றங்களைப் பழகிக் கொள்வதன் முதல் படியாகும்.

ஒரே பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி, பணிமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் மன உளைச்சல் கடுமையானது. அவர்கள் பழகிய சூழலை விட்டு வெளியேறுவதை சுமையாகக் கருதுகிறார்கள். புதிய நபர்களுடன் பழகுதல், புதிய சூழலில் நடைபோடுதல், புதியவற்றைச் செய்தல்... என பல்வேறு நல்ல அம்சங்கள் அதில் உள்ளன.

இரண்டு மணிநேர திரைப்படத்துக்கே பல மாற்றங்கள், இனிய ஆச்சரியங்களெல்லாம் எதிர்பார்க்கும் நம்மில் பலரும் வாழ்க்கையில் அத்தகைய ஆச்சரியங்களைச் சந்திக்கப் பயப்படுவது வியப்பளிக்கிறது.

மாற்றமும் அத்தகையதே. ஒரு சின்ன மாற்றம் கூட நம்முடைய பார்வையில் மிகப்பெரிய விஸ்வரூப வேறுபாட்டைக் காட்டக் கூடும். எனவே, மாற்றங்களைக் குறித்து மலையளவு கற்பனைகள் வளர்க்காமல், அதன் இயல்பிலேயே அணுகுவதே சிறந்தது.

"காலங்களைத் தாண்டி வாழ்பவை மிகவும் வலுவான பிராணிகளோ, மிகவும் அறிவார்ந்த பிராணிகளோ அல்ல. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பிராணிகளே தலைமுறை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார் டார்வின்! மாற்றங்களை ஏற்றுக் கொள்வதன் தேவையை தனது பாணியில் சொல்கிறது டார்வினின் தத்துவம். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் எனும் அவருடைய கோட்பாடு கூட மாற்றத்தின் மீதான கட்டமைப்பு தானே!

முன்னேற்றத்துக்கான மாற்றங்களை விரும்பும் மனம் பாசிடிவ் மனநிலையிலிருந்தே புறப்படுகிறது. நான் இந்த மாற்றத்துக்காகப் பயப்படுகிறேனா? பயப்படுகிறேன் எனில், ஏன் பயப்படுகிறேன்? இந்தப் பயம் நியாயமானது தானா? எனும் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்பதே நமக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அள்ளித் தரும்.

எத்தனை முறை மாற்றத்தைக் குறித்து நேர்மறையாய் சிந்தித்திருக்கிறோம், எத்தனை முறை எதிர்மறையாய் சிந்தித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் வெற்றியாளரா, இல்லையா என்பது புரியவரும்.

அமெரிக்காவிலுள்ள மேசிஸ் எனும் மிகப்பெரிய விற்பனை நிலையம் இன்று சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிறு
வனத்தை ஆரம்பித்த ரவுலண்ட் ஹஸி மேசி என்பவர் அந்தக் கடையை ஆரம்பிக்கும் முன் நான்கு கடைகளை ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக நான்குமே தோல்வியடைந்தன. ஒவ்வோர் தோல்வியிலும் மாற்றத்தைக் கற்றுக் கொண்டார். அதை விரும்பி ஏற்றுக் கொண்டு அடுத்த நிலைக்குத் தாவினார். கடைசியில் மேசிஸ் அவருக்கு வெற்றி தந்தது. இன்று 800-க்கும் மேற்பட்ட கடைகள் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

துணிச்சலுக்கும், முட்டாள்தனத்திற்கும் வேறுபாடு உண்டு. விமானத்திலிருந்து பாராசூட்டுடன் குதிப்பதற்கும், எதையும் யோசிக்காமல் குதிப்பதற்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.

எனவே, மாற்றத்தை நோக்கி இடம் பெயரும் முன் அது குறித்த புரிதலும், அறிதலும் இருக்க வேண்டியது அவசியம். அதன் பின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முதல் சுவடை வைக்கும்போதே இதன் முழுப் பொறுப்பும் என்னுடையது என்பதை மனதில் எழுதுங்கள்.

அது மாற்றத்தை வெற்றிகரமாக மாற்றும் உத்வேகத்தை உங்களுக்குத் தரும்.

மாற்றங்களை எதிர்கொள்வோம்,
வாழ்வினிலே இனி வெல்வோம்!
சேவியர்

No comments: