Friday, May 6, 2011

இரைந்து கெடு இவ்வுலகை!

நம்மை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்று பிறர் நினைத்தாலும் பரவாயில்லை, வாயைத் திறக்காதிருப்பது நல்லது என்பர். வாயைத் திறந்து அவர்கள் நினைத்ததே சரி என்று உறுதிப்படுத்துவதை விட பேசாதிருப்பது நல்லதுதான்.

நம் முட்டாள்தனம் வெளியே தெரிந்துவிடாமல் இருக்க, வாயை மூடி இருப்பதுதான் சிறந்த வழி. இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், இந்த வழியைத் தெரிந்து வைத்திருப்பவர் முட்டாளாயிருக்க முடியாது என்பதால் இந்த உபாயம் பெருமளவுக்கு உபயோகத்திலிருப்பதில்லை. எனவே சவால்கள், சபதங்கள், முழக்கங்கள், மிரட்டல்கள் என பேச்சுச் சுதந்திரத்தின் ஜிலுஜிலுப்பை பெருமளவுக்கு அனுபவித்து வருகிறோம். நாம்தான் மௌனத்தின் சிறப்புப் பற்றியே மணிக்கணக்கில் பேசக் கூடியவர்களாயிற்றே!

பிறர் பேசுவதைக் கேட்கும் உபத்திரவத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தாமே விடாமல் பேசிக் கொண்டிருப்பதை ஒரு தந்திரமாக வைத்திருப்பவர்களும் உண்டு. மற்றொருபுறம் ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குவதில் மக்களுக்கிருக்கும் துடிப்பும் அவர்களை சும்மாயிருக்க விடுவதில்லை. எனவே மௌனத்தைக் கிழித்து நார் நாராக்கி உலகம் பேச்சோசையால் விளையும் இரைச்சலில் திளைக்கிறது.

‘மௌனம் என்பது ஒரு அழகிய திரை; சத்தம் என்பது அதில் விழும் பொத்தல்’ என்றொரு கவிஞர் சொன்னார். எனவேதான் சத்தங்களால் சலித்துப் போன ஞானிகளும் துறவிகளும் மனிதசஞ்சாரமில்லாத மலைகளையும் காடுகளையும் சென்று அடைகிறார்கள். விரல்களுக்கிடையில் உலகையே உருட்டிக் கடத்திவிடும் வித்தையை அறிந்துகொண்டு பேசாமல் எங்காவது அமர்ந்துவிடுகிறார்கள் சிலர்.

பேச்சினால் ஒருவர் என்னென்ன விதமாக தொல்லைக்கு ஆளாக நேரும் அல்லது ஆளாக்கலாம் என்பதை நாமெல்லோருமே அறிந்திருக்கிறோம். உலகையே உதறி வெல்லும் ‘வீர’ உணர்வும், மற்றோரெல்லாம் எதிரிகளே என்னும் வெறுப்புணர்வும் நமக்குச் சும்மா வந்துவிடவில்லை. ‘நாம் வேறு அவர்கள் வேறு’ என்று நம் அடிநாளிலிருந்தே பேசிப் பேசி நம்மை ஆக்கி வைத்திருக்கிறார்கள் இப்படி!

ஒரு புலவனால் அறம் பாடிக் கொன்றுவிட முடியும் என்பதும் நம் பழந்தமிழ் நம்பிக்கை. சிலர் தமது நாக்கைக் கடித்துக் கொண்டாலே இறந்துவிடுவார்கள்; அந்தளவுக்கு அவர் நாவில் விஷம் என்று இன்றும் பலர் சொல்லக் கேட்கிறோம். வயது போகப் போக பற்கள் விழுவதை விட நாக்கு விழுந்தால் நலமாக இருக்கும் என்று சொன்னார் கண்ணதாசன்.

‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை’ என்று அவரேதான் மௌனத்தின் சிறப்பைச் சொன்னார். ‘நா காக்க’ என்றும் ‘சும்மா இரு சொல் அற’ என்றும் ‘சொல் குறுக நிமிர் கீர்த்தி’ என்றும் முன்னோடிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘சங்கடமான நேரங்களில் நான் மௌனமாக இருக்கிறேன்’ என்று அந்தக் கடவுளரே செல்லியிருக்கிறார்கள். ‘பேசாத வாய் கீழிறங்கி இதயத்திற்குப் போய்விடுகிறது’ என்று பேச்சற்ற நிலையின் பெருமையை விளக்கியிருக்கிறார்கள். ‘நுணலும் தன் வாயால் கெடும்’, ‘கொட்டிய நெல்லை அள்ளிவிடலாம் சொல்லை அள்ள முடியுமா’ என்றெல்லாம் எத்தனையெத்தனை முதுமொழிகள்! ஆனாலும் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதை நாம்தான் நிறுத்தவில்லை.
விவரங்கள் சொல்லி விவரங்கள் கேட்டுச் சலித்துப் போனவராக ஆத்மாநாம் ஒரு கவிதையில் சொன்னார்: “நீங்கள் யாரானால் என்ன ஃ நான் யாரானால் என்ன ஃ அனாவசியக் கேள்விகள் ஃ அனாவசியப் பதில்கள் ஃ எதையும் நிரூபிக்காமல் ஃ சற்றே சும்மா இருங்கள்!”

வரிகளுக்கு இடையே உள்ள மௌனத்தில்தான் கவிதையின் மேன்மை ஒளிந்திருக்கிறது என்பார்கள். சவடாலில் அல்ல, மௌனம் என்னும் கொக்கியில் தன் ஜீவனைச் சொருகிக் கொண்டிருக்கிறது கவிதை என்று சுந்தர ராமசாமி சொன்னார். இசையிலும் கூட மௌன இடைவெளிகளே அதை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது. அற்புத உணர்வான காதல்! அது சொற்களில் வெளியாவதில்லை. ஒரு குதூகலமான பார்வை, திருப்தியான புன்னகை, அந்நியோன்யமான பாவனைகள், செய்கைகள், விழியசைப்புகள்…. இந்த மௌன நாடகங்களே காதலைப் பிரகடனப்படுத்துகின்றன. சொல்லின்மை ஏற்படுவதே தரிசன உச்சம் என்பர். பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி என்று பாடல் சொல்வதும் அதைத்தான்.

மௌனத்தின் மற்றெல்லாச் சிறப்புகளும் இருக்கட்டும், அந்த மொழியில் சண்டை போட்டுக்கொள்ள முடியாது என்பதே பெருஞ் சிறப்பல்லவா? வார்த்தைகளில் இல்லாத மௌனம் பலவற்றைச் சொல்லிவிடுகிறது. சங்கடங்களைத் தவிர்த்து நெருக்கத்தைக் கொண்டுவருகிறது. இரைச்சலை விழுங்கி அமைதியைக் கொண்டுவருகிறது. மறுப்பு வார்த்தைகளைக் கொட்டாமல் சமாதான விருப்பத்தை ஏற்படுத்துகிறது.
“வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளை விளக்காது” எனச் சொல்கிறது ஸென் பௌத்தம். இதை விளக்கச் சொல்லப்படுகிற கதை இது:

புத்தரின் பிரசங்கத்தைக் கேட்பதற்காக மக்கள் கூடினர். புத்தர் வந்தார். மேடைக்குப் போய் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடன் காசியபனைப் பார்த்துச் சிரித்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்து போய்விட்டார். அவ்வளவுதான் பிரசங்கம் முடிந்துவிட்டது. ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எப்படி பிரசங்கம் நடந்ததாகச் சொல்ல முடியும்? அப்படித்தான், ‘முடியும்’ என்கிறது ஸென் சித்தாந்தம். புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் மூலம் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம், கேட்கலாம், உணரலாம். ஆனால் அதை விளக்க, மொழிபெயர்க்க முடியாது என்பது ஸென் சித்தாந்தத்தின் அடிப்படை.

கண்டபடி பேசாதிருந்தால் குறைந்தபட்சம் உங்கள் கன்னத்தையாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகிற விதமாக ஒரு ஜோக். இதை பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் தன் கட்டுரையொன்றில் தந்திருக்கிறார்.

ஒரு கனவான் ஒரு ரோபோவை விலைக்கு வாங்கினார். அந்த ரோபோவின் விசேஷம் என்னவென்றால், அதற்கு எதிரே யார் பொய் பேசினாலும் பொய் பேசியவரின் கன்னத்தில் அறைந்துவிடும். இது தன் வீட்டுக்கு அவசியம் தேவை என்று கருதினார் கனவான். ஏனென்றால் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருந்தான் அவர் மகன்.

வீட்டுக்கு ரோபோவை எடுத்துவந்து அதைப் பற்றிய விவரத்தையும் சொன்னார் கனவான். ஒருநாள் பையன் தாமதமாக வந்தான். கேட்டதற்கு, ஸ்பெஷல் கிளாஸ் என்றான். ரோபோ அவன் கன்னத்தில் விட்டது ஒரு அறை. அறை வாங்கிய பிறகுதான் உண்மையைச் சொன்னான் மகன்; நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றிருந்ததாக.

உடனே கனவான் சொன்னார்: “டேய், உன்னை மாதிரி சிறுவனாக இருக்கும்போது நான் இப்படியெல்லாம் பொய்யே சொன்னதில்லை”
விழுந்தது அவர் கன்னத்திலும் ஒரு பளார்.

இந்த இரண்டையும் பார்த்த கனவானின் மனைவி சொன்னாள்: “பாருங்கள், உங்கள் பையனும் உங்களை மாதிரிதானே இருப்பான்?”
இப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அவளுடைய கன்னத்திலும் விழுந்தது ஒரு அறை!

பேசத் தெரியாமல் இருப்பது முட்டாள்தனமே ஆனாலும், பேசி அதை அழுத்தமாக நிரூபித்து விடாமலிருப்பதில் சிறிதளவேனும் புத்திசாலித்தனம் இருக்கிறதுதான்!

No comments: