Thursday, May 5, 2011

அவசரகாலச் சட்டத்தை நீக்கிப் பாருங்கள் ஆறுமாதத்தில் இந்த ஆட்சி கவிழும் - சிவசக்தி ஆனந்தன்

இந்த நாட்டு மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் மக்கள் வீதியில் வந்து போராடுவார்கள். அப்பொழுது இந்த அரசாங்கத்தினால் அவைகளைச் சமாளிக்க முடியாமல் போகும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆகவே இறந்துபோன புலிகளின் சடலங்களைத் தோண்டியெடுத்தாவது அவசரகாலச்சட்டத்தை நீட்டிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அவசரகாலச் சட்டம் இல்லாமல் இவர்களால் ஆட்சி செய்ய முடியாதுள்ளது. என்று 05.05.2011 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட நீட்டிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்துவதாலோ ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதினாலோ எதுவிதப் பயனும் கிட்டாது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஐயோ என்று போட்ட மரண ஓலமும்; ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரும் உயிர்த் தியாகமும் தான் ஐ.நா.நிபுணர்குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ளது. இந்நாட்டில் அறுபதாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இப்பொழுதுதான் ஐ.நா.வின் கதவைத் தட்டியுள்ளது. எனவே அரசாங்கம் இனியும் காலம் தாழ்;த்தாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வினைக் காணவேண்டும். என்று கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வன்னி மாவட்டத்தில் அரசாங்க உயரதிகாரிகள் வன்னி மாவட்ட மக்களின் ஆதரவினால் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட ஒருவரினால் அரசியல் பழிவாங்கப்படுகின்றனர்.

மன்னார் அரசாங்க அதிபர், மடுவலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரின் இடமாற்றங்களும், மன்னார் பிரதேச செயலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், முசலி பிரதேச செயலாளர் ஆகியோரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகள் சில  உதாரணங்கள் மட்டுமே.

எனக்கு முன்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கௌரவ சந்திரகுமார் அவர்கள் வவுனியா நகரசபை குறித்து பேசினார். அவர் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு யாழ் மாநகரசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. இன்று யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது? ஆளும் கூட்டணியினுள்ளேயே ஈபிடிபியினர் ஓரணியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் ஓரணியிலும் நிற்கின்றனர். மேயருக்கெதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அவர் யாழ் மாநகரசபையின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு வரட்டும். வவுனியா நகரசபையின் பிரச்சினைகள் தொடர்பாக நான் இந்தச் சபைக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

சமீபகாலமாக நகரசபை நிர்வாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களால்; நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுகாதாரச் சீர்கேடுகளால் இங்குள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 28.05.2011 அன்று நகரசபைச் செயலாளர் திரு.வசந்தன் அவர்களால் நகரசபைக்கு வெளியில் வேப்பங்குளம் என்னுமிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான இயந்திர நிர்மாண ஆரம்ப நிகழ்வில், செயலாளருக்கும் நகரசபை உறுப்பினரான திரு.எஸ்.எஸ்.சுரேந்திரன் அவர்களுக்கும் இடையில் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து 03.05.2011 அன்றிலிருந்து நகரசபை உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதுடன் நகரசபை நுழைவுவாயில் பூட்டப்பட்டுள்ளது. மேலும் நகரத்தின் மையத்திலுள்ள பொது மலசலக்கூடங்கள், குளியலறைகள் என்பனவும் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொதுநூல்நிலையமும் பூட்டப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றப்படாமையினால் வர்த்தக நிலையங்களின் வாயில்களில் அசுத்தங்கள் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றது.

இதன் பின்னணியில் உள்ளுராட்சி நிர்வாகத்தை நெறிப்படுத்தும்; பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் செயற்படுவதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது. நகரசபை உறுப்பினர் திரு.சுரேந்திரன் தவறிழைத்திருந்தால் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்கும். அல்லது நகரசபை நிர்வாகம் குறைந்தபட்சம் பொலிஸ் அல்லது நீதிமன்றத்தையாவது நாடியிருக்க வேண்டும். அதனை விடுத்து தமது கையில் அதிகாரத்தை எடுத்து அதிகாரிகள் செயற்படுவதானது வருந்தத்தக்கது. இவரது தூண்டுதலின் பேரில் ஒருசில ஊழியர்கள் கடைகளைப் பூட்டி ஆதரவு வழங்குமாறு வர்த்தகர்களை வற்புறுத்துகின்றனர். ஏற்கனவே கீழ்காணும் விடயங்கள் தொடர்பாக நகரசபை மற்றும் உள்ளுராட்சி அதிகார சபை அலுவலகத்தால் எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையில் மேற்குறித்த சம்பவம் இங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வவுனியா நகரசபைக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்த ஈட்டிக்கொடுத்துவந்த வவுனியா சந்தை சுற்றுவட்டத்துக்குள் அமைந்துள்ள மாட்டு இறைச்சிக்கடை, ஆட்டு இறைச்சிக்கடைகளை எவ்வித கேள்விப்பத்திரமும் கோராமல் தனிநபர் ஒருவருக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மிகக்குறைந்த குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் நகரசபைக்கு இலட்சக்கணக்கில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதே வேளையில் குருமன்காடு சந்தையில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக்கடை பகிரங்க கேள்வி விடப்பட்டு வருடாந்தம் 29லட்சம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனைப் போன்றே பூந்தோட்ட சந்தையில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக்கடை பகிரங்க கேள்விப்பத்திரம் விடப்பட்டு ஆண்டிற்கு 19லட்சம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு இடங்களையும்விட வவுனியா சந்தைக்கு மூன்று முதல் நான்கு மடங்குவரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.

 டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்திலும் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக ஆளுநரால் நகரசபைக்கு எண்பத்திரண்டு இலட்சம் (82இலட்சம்) நிதிவழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதினைந்து மாதமாகியும் இதுவரை இதற்கான செலவுக்கணக்கோ அல்லது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தோ சபைக்கு அறிவிக்கப்படவில்லை.
கோவில்குளத்தில் பாலர் பாடசாலை கட்டி முடிக்கப்பட்டதாக சபையில் பணக்கொடுப்பனவுக்கான அனுமதி பெறப்பட்டு கு.து.ஏ என்னும் ஒப்பந்த தாரருக்கு ஒரு லட்சத்து எழுபத்தியேழாயிரத்து நூற்று எண்பது ரூபாய் அறுபத்தியாறு சதம் (177,180.66) வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஆனால் அந்த இடத்தில் பாலர் பாடசாலை கட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வீதிகளில் மின்விளக்கு பொருத்துவதற்கு வடமாகாண ஆளுநரால் ரூ.5.5 மில்லியன் வழங்கப்பட்டது. இதற்கான கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. வேலை முன்னேற்றம் தொடர்பாகவும் தரவு இல்லை.

வவுனியா குளத்தினை அழகுபடுத்துவதற்கு அரசாங்க அதிபரால் ரூ75இலட்சம் வழங்கப்பட்டது. குளம் அழகுபடுத்தப்படவும் இல்லை. இதற்கான கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

இவ்விடயங்களை அம்பலப்படுத்தி நீதியான தீர்வைப்பெற்றுக்கொள்வதற்காகவும் நகரசபையின் வளர்ச்சிக்காகவும் சபையில் உள்ள ஏனைய ஏழு அங்கத்தவர்களுடன் தலைமைதாங்கி திரு.எஸ்.எஸ். சுரேந்திரன் செயற்பட்டதால்தான் அவருக்கு எதிராக உயர் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையை விளங்கிக்கொண்ட நேர்மையான உண்மையான உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் தங்களின் பிடிக்குள் வைத்துக்கொண்டு பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளுமாறு தூண்டிவிட்டுள்ளனர். இதில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் பங்கு முக்கியமானதாகும்.

கடந்த மூன்று தினங்களாக நகரசபையில் இடம்பெற்றுவரும் பணிப்புறக்கணிப்பின் பின்னால் நின்று ஊழியர்களைத் தூண்டிவிடும் சம்பந்தப்பட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவியாணையாளரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி, இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை நியமித்து இது தொடர்பான நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

No comments: