Monday, May 2, 2011

வாழ்க்கையை வாழும்படியாகச் செய்ய….

கலைகளின் பயன் என்ன? இலக்கியங்களைப் படிப்பதால் என்ன பயன்? பொழுதைப் போக்குவதுதானா? வேறு வேலை இல்லாதவர்களின் வேலையா? எதற்காக இந்தக் கலைகள்? இத்தனை இலக்கியங்கள்?

இலக்கியங்களால் என்ன பயன்? என்று கேட்கப்பட்டதற்கு – ‘சரி இந்த வாழ்க்கையினால் என்ன பயன்?’ என்று திருப்பிக் கேட்டார் கண்ணதாசன். எதிலும் ‘உடனடி லாபம் என்ன’ என்று எதிர்பார்க்கிறவர்களுக்கு இப்படி மடக்கடியாகத்தான் கேட்டு யோசிப்பதற்கு நிதானிக்கிறார்களா என்று பார்க்க முடியும்.

கலைகளும் இலக்கியமும் வெறுமனே மனதை இன்புறுத்துவதுடன் முடிந்துவிடுகிறதா என்ன? அதற்கும் அப்பால் நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துவதில்ரூபவ் நாமறியாத நம் உருவாக்கத்தில் இவற்றின் பங்கும் பயன்பாடும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கலைகள் இல்லாமல் கதைகள் இல்லாமல் மனிதகுலம் இன்றைய நிலைக்கு வளர்ந்திருக்குமா என்று கேட்டால்ரூபவ் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆமாம் இலக்கியம் மனித வாழ்வைப் பண்படுத்தியிருக்கிறது; மனிதனை மேம்படுத்தியிருக்கிறது; மனிதனாகச் செய்திருக்கிறது. நிதானமாக யோசித்தால் இதை நாம் ஒவ்வொருவரும் உணர முடியும் – ஒரு பூவிலிருந்து ஒரு வசந்தத்தை அறிய முடிவது போல.

வாழ்க்கையை அறிவதற்கான மெய்காண்முறையே இலக்கியம். குழந்தைகளாய் இருக்கும்போதே கதை கேட்பதன் மூலம் நாம் கற்பனை செய்யப் பழகுகிறோம். இது நம்மைச் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறது. இவ்வாறு கதைகளின் மூலம் நம் அனுபவங்களைத் தொகுக்கும் சிந்தனை உருவாகி வருகிறது. பண்பாடு என்பதே நாம் பழகி வந்த கலைகளதும் அழியாத சொற்களதும் தொகுப்புத்தான். மொத்த மானுடக் கலாசாரமே மொத்த மானுட வரலாறே இலக்கியங்களினூடு பகிரப்படுகிறது என்று சொல்லப்படுவதில் மிகையெதுவுமில்லை. இலக்கியம் மனிதனது ஆக்கத்தில் இன்றியமையாத முறையில் உறவு கொண்டுள்ளது. மனிதன் தன்னை மேலும் மனிதனாக்கிக் கொள்வதற்கான ஆக்கத்திறன்களை அவை வழங்குகின்றன.

இன்பமும் துன்பமும் மேலும் விளங்கிக் கொள்ள முடியாத புதிர்களும் கொண்டதாகவே வாழ்க்கை இருக்கிறது. அதிலும் இன்றைய நம் வாழ்வு எண்ணிறந்த அவலங்கள் கொண்டது. நாலாபுறத்திலுமிருந்து தாக்குகிற நெருக்கடிகளுக்குள் நம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதே சீவியம் என்றிருக்கிறது. இந்தச் சிக்கல்களைக் கடக்கவும், மனிதர்களைக் கற்கவும், மனிதராக வாழவும், நாளைய உலகிற்குள் நாம் பொருந்திக் கொள்வதற்கும் இலக்கியங்கள் உதவ முடியும். பேரியாற்று வெள்ளத்தில் அகப்பட்ட தெப்பம் போல, நமது போக்கை நாமே தீர்மானிக்க முடியாத இந்த அலைவிலிருந்து நிலைப்படுத்திக் கொள்வதற்கு அவை துணைபுரிய முடியும். இந்த வாழ்க்கையை வாழுகிற விதமாகச் செய்து கொள்வதில் அவற்றுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

அடுத்த மனிதரை எந்தவிதத்திலும் இம்சிக்கக் கூடாது. நமக்கிருக்கும் இன்பங்கள், துன்பங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சலிப்புகள், சங்கடங்கள் எல்லாமே ஒவ்வொரு மனிதருக்குமானவைதான். பூமியில் வாழவும், சுவாசிக்கவும், கடவுளை வணங்கவும், கஷ்டங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் நம் சக மனிதனுக்கும் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டிருப்பவை இலக்கியங்களே. மற்றவர்களுடன் வாழ்வது என்ற கலையையும் இலக்கியங்களே நமக்கு அளிக்கும்.


மானுட வாழ்வு, பிரபஞ்சத் தோற்றம்ரூபவ் மனுக்குலத்தின் அல்லாட்டங்கள், பல்வேறு உயிர்களின் வாதை, சிருஷ்டியின் உள்ளீடாக உறைந்திருக்கும் வன்முறை, பேரழிவு…. இவை பற்றிய ஆய்வுப் பார்வைகளும் வாழ்க்கை வழிகளும் கலை இலக்கியங்கள் நமக்குக் கடத்தித் தந்தவையே. நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரன் பாமுக் சொன்னார்: “மகிழ்வுடன் இருக்க தினமும் குறிப்பிட்டளவு இலக்கியத்தை நான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் தினமும் தேக்கரண்டியளவு மருந்து உட்கொள்ளும் நோயாளிக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. என்னளவில் இலக்கியம் ஒரு மருந்து” என்றார். மாபெரும் விஞ்ஞானி அல்பேட் ஐன்ஸ்டீன், இலக்கியங்களிலிருந்து நாம் பெறக் கூடியது பற்றி இன்னொரு பார்வையில் வியந்து சொன்னார்: Dostoevsky gives me more than any scientist, more than Gauss.

நமக்குள்ளிருக்கும் வன்முறை உணர்வை முற்றாக ஒழித்துவிடுவது எளிதல்ல. எல்லோரிடமும் அவ்வப்போது தலைதூக்க முயன்று ஒரு மெலிதான நாகரிகப் போர்வையினால் கீழே தள்ளப்பட்டுக் கொதித்துக் கிடக்கின்றன வன்முறை உணர்வுகள். எவராலும் மிக எளிதாக இதைச் சீண்டி விட்டுவிட முடியும். ஆனால் மறுபாதியில் நமக்குள் அன்பும் நற்குணங்களும் கூடத்தான் இருக்கின்றன. வன்முறைக்கு மாற்றாக இவற்றைச் செயல்பட விடுவதற்கு இலக்கியப் படிப்பு உதவும். இன்றிருக்கும் நமது எதிர்ப்பான, வெறுப்பும் பகையுமான மனநிலையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறக்கூடிய, வாழும்படி செய்யக்கூடிய சூழல் உருவாகுவதற்கு அதையே நாம் நம்ப வேண்டியிருக்கிறது.

வாழ்வின் அவலத்தை உரியபடி கண்டு வெளியே சொல்லும் இலக்கியங்கள், மனிதனை உயர்த்துவதையே ஒரு முயற்சியாகச் செய்கின்றன – செய்ய வேண்டும். துயரங்களைத் தணித்து மனிதர்களின் எண்ணத்தை உயர்த்துவதுதான் இலக்கியத்தின் மகத்தான குறிக்கோள். ரஷ்ய எழுத்தாளர் ஜோசஃப் பிராட்ஸ்கி சொன்னார்: “எழுத்தாளர்களைத் தண்டித்தல், எழுதவிடாமல் அடக்குதல், தணிக்கைமுறை, நூல்களை எரித்தல் போன்றன எல்லாம் குற்றங்கள்தான். இந்த அநீதிகளை நாம் கண்டிக்க முடிகிறது. ஆனால் இதையெல்லாம் விட மோசமான குற்றமான – புத்தகங்களைப் படிக்காமை என்று வரும்போது நாம் அதிகாரமின்றி நிற்கிறோம். வாசிப்பு என்பதை அலட்சியப்படுத்துவதே மனித வாழ்வைச் சிதைவுறச் செய்யும் குற்றமாக உள்ளது. அந்தக் குற்றத்திற்கு ஒருவன் தன் வாழ்வையே விலையாகக் கொடுக்கிறான். அதுவே ஒரு சமூகமாக இருந்தால் தன் வரலாற்றையே விலையாகக் கொடுக்கிறது.”

பழங்குடிச் சமூக நிலையிலிருந்து மாறாத, வன்முறை வெறித்தனத்தைக் காட்டிய ‘தேவர் மகன்’ படத்தின் கடைசிக் காட்சியில் “போய்ப் படிங்கடா டே” என்பதும் இந்த அடித்தெளிவுதான்.

இலக்கியம் ஒரு சக்தி. நமக்குள் அது வந்து சேர, வாழும் வழி பிடிபடும். வாழ்க்கையைப் பற்றியும் வாழ்வது பற்றியும் பேசுபவையே கலை இலக்கியம் எல்லாமும். தன்னலத்தைப் பின்தள்ளி விடுவதும், பிறர் துயர் துடைக்க இந்த வாழ்வைப் பயன்படுத்துவதுமே உயர்வென்று இலக்கியங்கள் வலியுறுத்தும். அன்பு, கருணை, அறம் எனப் பல்லாயிரமாண்டுக் கால மரபு உருவாக்கிய விழுமியங்களை நாம் தொடர்ந்து கண்டடைதல் இலக்கியங்கள் மூலமாகவே சாத்தியமாகிறது – படிப்பற்றவர்களிடமும் பாரதமும் இராமாயணமும் சென்று சேர்ந்திருப்பதைப் போல.

மற்றவர்கள் வதைபடும் விதமாகத் தங்கள் இலட்சியப் பிடிப்பை உறுதியாக வைத்துக் கொள்வதில் மனிதாபிமானம் எதுவுமில்லை. சுயநலத்திற்காகப் பிறர் வாழ்வையும் பணயம் வைப்பதே அதுவாகும். பிறரைக் காக்கும் விதமாகத் தாங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வைக் கொண்டுவருபவர்களே பேராண்மையாளர்கள் என்றும் அவர்களால்தான் உலகம் செழிக்கும் என்றும் இரண்டாயிர வருடத்திற்கு முன்பிருந்தே பேசிவந்திருக்கின்றன இலக்கியங்கள்.


“உண்டாலம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்ரூபவ்
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர், அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுனர் உண்மையானே”
                            
என்றிருக்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியார்.

நம் வாழ்க்கையையும் அதேசமயம் மற்றவர் வாழ்க்கையையும் நேசிக்கும் மனப்பாங்குதான் நம்மை மனிதர்களாக உயர்த்தும்.

இந்த ‘வாழும் விருப்பத்தை’ கவிஞர் ஷண்முக சுப்பையா மிக எளிய வரிகளில் சொல்கிறார்:
“அணைக்க ஒரு அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்க சற்றும் வசதியில்லா வீடு
உண்ண என்றும் உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு பிடிப்பில்லா தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை.”

வாழவும் வாழ வைக்கவுமாகவே கொள்கை கோட்பாடு இயக்கங்கள் எல்லாம். கடைசி உயிர் வரை கஷ்டப்படவும், அழிக்கவும் காரணங்கள் உருவாக்க அல்ல.

No comments: