Sunday, April 24, 2011

நானிருக்கும் இவ்வுலகில் வேறுபடும் நீ வாழ நியாயமில்லை“நான் ஒரு மாபெருங் கடல். என்னுள் எத்தனையோ முரண்பாடுகள் அமைந்திருக்கின்றன” என்றார் வோல்ட் விட்மன். “நான் முரண்பாடுகளின் மூட்டை” என்று சொன்னார் ஜெயகாந்தன். முரண்படுவது ஒன்றும் விரும்பத் தகாத இயல்பல்ல. பாவத்துக்குரியதோ வெறுத்தொதுக்கப்பட வேண்டியதோ அல்ல.

முரண்களும் அவற்றின் மோதலும்தான் ‘புதிய’ ஒன்றைத் தோற்றுவிக்கிறது. முரண்பாடுகளே வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன. முரண்பாடுகளினால், அவற்றின் இடைவிடாத, ஒன்றையொன்று எதிர்த்த போராட்டத்தினால்தான் சமுதாயம் இயங்கி வந்திருக்கிறது. முரண்பட்ட அம்சங்களே இயக்கத்தை நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவை

ஒளி என்பதே இருளினால் அறியப்படுவதுதான். அன்பும் துவேசமும் ஒரு நுட்பமான கண்ணுக்குப் புலப்படாத, மிக மெல்லிய இழையில் ஒன்றுக்கொன்று வேறாக மாறிவிடக் கூடியவை. மிக நெருக்கமாக, உயிருக்குயிராய் பழகும் இருவர் பின்னர் ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் கொன்று தீர்த்துக்கொள்ள வெறியுடன் அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வளவு ஏன்? நம் இயக்கங்களிலும், கூட இருந்து முரண்பட்டுப் பிரிந்து போனவர்களே எதிரியை விடப் பயங்கர விரோதத்துக்குரியவர்களாக ஆகியதையும், முதலில் அவர்களையே தீர்த்துக்கட்டி விடும் ‘ஜனநாயக’ உணர்வில் நாம் தழைத்தோங்கியிருந்ததையும் அறிவோம்.

முரண்கள் இயல்பானவை. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. விவாதித்து முன்னகரத் துணைபுரிபவை. விலகல்களையும் வித்தியாசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனமே படுகொலைகளுக்கும் போர்களுக்கும் வித்தாகிறது. பாசிசத்தின் தோற்றுவாய் ஆகிறது. மதம், இனம், மொழி, கலாசாரம் என்பவற்றில் தீவிர பற்றும் தற்பாதுகாப்புணர்வும் மேலோங்குகையில் அது மற்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடும் அபாயம் எப்போதுமிருக்கிறது. இதுபற்றி விரிந்த பார்வை ஏற்படாமல் அதாவது மற்றைய இன, மொழி, மத, கலாசாரங்களைக் கணக்கிலெடுக்காமல், அவைபற்றி ஏதும் அறிந்துகொள்ளாமல் அவற்றை மறுத்து எங்களுடையதை நாம் உயர்த்திப் பிடிக்கையில் அது அடிப்படைவாதமாகிறது.

 உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு புள்ளி அளவில் இருந்துகொண்டு நம்முடைய மொழியும் நம்முடைய கலாசாரமுமே, சிறந்த மொழியும் கலாசாரமும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அறியாமை – சிறுபிள்ளைத்தனம் ஏற்பட்டுவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதிகாரமும் கிடைத்துவிட்டால் அடுத்த மொழியையும் கலாசாரத்தையும் அழித்தொழிக்கும் முனைப்பும் நம்மிடம் வந்துவிடுகிறது.

தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகையில் முற்போக்கானதாகத் தோற்றப்பாடு கொள்ளும் ஒரு இனக்குழு, தமக்குள்ளேயே இருக்கும் ஏனைய வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாத போது, அதுவும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆதிக்க சக்தியாகவே மாறுகிறது.

அந்நிய காலனித்துவத்துக்கெதிராகப் போராடிய நாடு அல்ஜீரியா. பிறகு, அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கபீலியா என்ற பகுதியில் மக்கள் தங்களுடைய சொந்த மொழியான கபீலிய மொழியைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டது. அல்ஜீரியாவின் ஆட்சிமொழியான அரபி மொழியே பேச வேண்டும் என்று கபீலியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தங்கள் மொழிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் போராடும்படி ஆகியது. அல்ஜீரிய அரசு ஒடுக்குமுறையரசாகியது. அதுபோலவே, கடும் அடக்குமுறைக்கும் இன ஒடுக்குதலுக்கும் உள்ளான யூதர்கள் பின்பு பிறர்மீது அடக்குமுறையை ஏவ சற்றும் தயங்காத நாடாக உருப்பெற்றிருக்கிறார்கள்
.
மற்றவர்களை, அவர்களது இயல்புகளோடும், நம்மிடமிருந்து மாறுபடும் வித்தியாசங்களோடும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதே நாம் பாசிஸ்டுகள் ஆவதன் ஆரம்பப் புள்ளி. நம்மிடமிருந்து வேறுபடுகிறவர்கள் நாமிருக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு நியாயமில்லை என்று கருதத் தொடங்கி விடுகிறோம்.

நம்மோடு முரண்படுபவர்களையும் ஒத்துப்போகாதவர்களையும் மிக அதிகளவில் கொண்டதுதான் இந்த உலகம். அந்தக் கடவுளிலிருந்து ஆரம்பித்து நம் மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், அயலவர்கள் என்று யாரோடும் எதனோடும் நம்மால் முழுமையாக ஒத்துப்போக முடிகிறதா என்ன? ஒத்துப்போகாதவர்களோடுதான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனாயிருக்க வேண்டும்…. சொன்னார்: “ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒழுக்கங்களை ஒழுக்கக்கேடு என்று புரிந்துகொள்வது ஒருவகை தீயொழுக்கம்” என்பதாக. நமக்கு அப்பாலான எதையும் விரோதமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்க இயலாமல் அல்லற்படுவதும் நமது சிறுபிள்ளைத்தனமாகுமே தவிர வேறல்ல. நம்மைப் பற்றியே கூட முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாத, நம்முடைய இந்த மிகக் குறைந்த அறிவை வைத்துக்கொண்டு, நம்மைப் பற்றிப் பெருமையாகவும் மற்றவற்றை இழிவாகவும் எண்ணிக்கொள்வதில் என்ன பொருளிருக்கிறது?

நம்மிடமிருக்கும் அறிவே நாம் பெருமைப்படவும் பாராட்டிக்கொள்ளவும் தக்கதுதானா? நம் அறிவால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எதை முழுமையாக அறிந்திருக்கிறோம்? எந்த ஒரு சின்னஞ்சிறு துகளையும் பற்றி என்ன தெரியும் நமக்கு? மறுபக்கத்தில், இந்த அறிவு என்பது அதிகாரமாகவும், மனித சமத்துவத்துக்கு எதிரானதாகவும், அழிவுக்குரிய கருவிகளைத் தேடிக் கொள்வதாகவும், இவற்றின் காரணமாகவே மனிதகுல அழிவுக்கு வழிவகுப்பதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம்
.
அறிவும் அதன் விளைவான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுமே பல தேசங்களையும் பல இனங்களையும் அடிமைப்படுத்திய வரலாறு நமக்குத் தெரியும். ஐரோப்பியர்கள் தென்னமெரிக்கா முழுவதையும் அடிமை கொண்டது அறிவினால்தான் நிகழ்ந்தது. ஆபிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அமெரிக்கக் கண்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக்கப்பட்டது அறிவினால்தான். மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன கருவிகளுக்கான அறிவு கீழைத் தேசத்தவனிடம் இல்லாததால்தான் இவன் எளிதில் அவர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது. அதேபோல, வேதத்தையும் உபநிஷதங்களையும் மனப்பாடமாக்கி வியாக்கியானம் செய்ய அறிந்துகொண்ட குழு, அந்த அறிவைப் பெற்றுக் கொள்ளாதவர்களை அடிமைகளாக்கியதும் அறிவோம்.

ஆயின், எளிதில் தோற்றுப்போய், எதிர்காலத்திற்காக யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கும் நாம் எப்படி நம்மைப் புத்திசாலிச் சமூகம் என்று சொல்லிக் கொள்வது? நம் பாடழிவைத் தடுத்துக் கொள்ளத் தெரியாத நாம் எப்படி நம்மை அறிவுச்சமூகம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்? நடந்து முடிந்த வரலாற்றில் அறிவும் அதனூடான செயற்பாடுகளும் நம் தரப்பில் இல்லாமல் போனதுதானே அவலமுடிவாக அம்பலப்பட்டது!

அதுமட்டுமல்ல, உணர்ச்சிகரமான ஆவேசத்தில் கூட்டப்படும் மக்கள் திரளிடமிருந்து அறிவு பறிக்கப்பட்டு விடுகிறது. உணர்ச்சிகரமாகக் குறுக்கித் தரப்பட்ட நியாயங்களுக்கப்பால் எதையும் யோசிக்க விடாமல் செய்யப்படுகிறார்கள். அவர்களைத் திரள வைத்த சக்திகளிடம் தம்மை ஒப்படைத்து கோஷங்களினூடாக பகையுணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். 1984ல் டெல்லியில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டமை, 2002ல் குஜராத் படுகொலைகள், 1983ல் ஜூலைப் படுகொலைகளுக்கெல்லாம் பயன்பட்டது இந்தக் கும்பல் எழுச்சி மனோபாவமே. கூட்டமாகத் திரண்டிருக்கையில் உயிரழிவு பற்றியோ மனித அறங்கள் நீதிகள் பற்றியோ சிந்திக்க முடிவதில்லை.

இதற்கு வெளியே இவர்களை மீறிச் சென்று நன்மை தீமைகளை அலசிப் பார்க்க, மனிதாபிமானத்துடன் சிந்திக்க முயலும் எவரும் இந்தத் திரளுக்கு எதிரான துரோகிகள் எனவே காட்டப்படுவார்கள். இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மானிய மக்கள் காட்டியதும், கடந்த இரு தசாப்தங்களாக நம்மவர்கள் காட்டியதும் இதையே என்பதை இன்று யாரும் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும்
.
வரலாற்றின் அந்தக் குரூர நாடகத்தையே நாங்களும் திரும்ப நடித்தோம். நாடகம் முடிந்துவிட்டது. இனி நாம் அதுபற்றிப் பேச வேண்டும். வீழ்ச்சி ஏன் என்று விமர்சனம் செய்து அறிந்து மீள வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்தும் அந்த நாடகத்தையே நடத்தும் பாவனைகளைப் பண்ணிக் கொண்டிருப்பது, நம்மை மீளவிடாமலடிக்கும் அறியாமையும் வஞ்சனையுமே ஆகும்.

No comments: