Saturday, April 23, 2011

தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள்!

'ஆணும், பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா?' என பெண்கள் உற்சாகக் குரல் கொடுக்கும் காலம் இது. வாழ்வில் உயரவேண்டும் எனும் வேட்கை பெண்களை அலுவலகங்களுக்குள் நுழைய வைக்கிறது. அதே பெண்கள் தன்னம்பிக்கை உடையவர் களாகவும் இருந்துவிட்டால் அலுவலகத்திலுள்ள உயரிய இருக்கைகள் எல்லாம் அவர்களுக்காகக் காத்திருக்கும்.
 
தன்னம்பிக்கைக்கும், வாழ்க்கைச் சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வீட்டில் மதிக்கப்படும் ஒருவர் அலுவலகத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் வாய்ப்பு அதிகம். வீட்டிலோ, நண்பர்களாலோ நிராகரிக்கப்படும் நபர், அலுவலக சூழலில் தன்னம்பிக்கை இல்லாமல் அவஸ்தைப்படவும் வாய்ப்பு அதிகம் என்கின்றன உளவியல் ஆய்வுகள்.
 
நமது வாழ்க்கைச் சூழல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்களை மையப்படுத்தியே அமைந்து விட்டது. ஆண்களை விடப் பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், அதைத் தேடும் வேட்கையும் அதிகமாய்த் தேவைப்பட அதுதான் காரணம்.
 
அலுவலக ஆண்கள் சக பெண் பணியாளரைக் கொஞ்சம் இளக்காரமாய்ப் பார்ப்பதும், பெண் உயரதிகாரிகளைக் கொஞ்சம் பொறாமையாய்ப் பார்ப்பதும் வெகு சகஜம். இந்த உளவியல் எதிர்ப்புகளுக்கு பலியாகாமல் இருக்க வேண்டியது பெண்களின் தேவை. தன்னுடைய பலங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையும், தனது பலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் திடமும் பெண்களை அலுவலகத்தில் திரும்பிப் பார்க்க வைக்கும்.
 
அலுவலகத்தில் ஆண்-பெண் பேதமெல்லாம் கிடையாது என்று நீங்கள் முதலில் மனதில் எழுதிக்கொள்ள வேண்டும். அப்படியே ஒரு பாகுபாடு திரை மறைவில் இயங்கினால் கூட, எந்த நிறுவனமும் அதை வெளிக்காட்டுவதில்லை. எனவே, நிர்வாக விதிமுறைப்படி பெ ண்களுக்கு எதுவும் மறுக்கப்படப் போவதில்லை. அதையே துருப்புச் சீட்டாய்க் கொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் சமம் எனும் எண்ணமே தன்னம்பிக்கையை உயர்த்தும் நெம்புகோல் தான். எல்லோரும் சமமெனில், அங்கே திறமைசாலிகளுக்கு மட்டும் தானே வரவேற்பு!
கேரல் ஆன் பார்ட்ஸ் என்பவர் கான்க்லோமெரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பணி இடமாற்றம் கேட்டார்.
 
'பெண்களெல்லாம் இந்த வேலையைச் செய்ய முடியாது, டிரான்ஸ்பர் கிடையாது' என்று சொல்லி விட்டார்கள்.
அவர் அசரவில்லை. அந்த நிறுவனத்தையே உதறினார். தன்னுடையை திறமையின் மேல் அசாத்தியத் துணிச்சலுடைய அவர் தான் இன்று புகழ் பெற்ற யாகூ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி.
 
சின்ன வேலையோ, பெரிய வேலையோ உங்களுக்கு இடப்படும் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றுங்கள். சின்னச் சின்ன வேலைகளை செவ்வனே செய்து முடிப்பவர்களுக்குத் தான் பெரிய பெரிய வாய்ப்புகள் காத்திருக்கும் எனும் அடிப்படையை மறக்காதீர்கள். புதிது புதிதாக படித்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய அசரடிக்கும் கல்வியினாலும், திறமையினாலும் அலுவலகத்தில் கவனிப்புக்கு உள்ளானீர்கள் எனில், நீங்கள் வென்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
 
'தயக்கமில்லாத மனம்' இன்னொரு தேவை. பெரும்பாலானவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடமோ, சக பணியாளரிடமோ அலுவல் நிமித்தமான ஒரு சின்னக் கேள்வியைக் கேட்கக் கூடத் தயங்குவார்கள். 'இது ரொம்ப சாதாரண கேள்வியோ? இது கூட தெரியலையான்னு நெனச்சிடுவாங்களோ?' போன்ற தயக்கம் தான் இதன் காரணம்.
உண்மையில் சாதாரண கேள்வி என்று ஒன்று கிடையவே கிடையாது. தயங்காமல் கேள்வி கேட்பவர்கள் தான் பதிலைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
 
'நீங்கள் அடிக்காத எந்த ஷாட்டும் கோலாக மாறுவதில்லை' என்பார் வேன் கிரெஸ்கி எனும் உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர்.
 
முதல் சுவடு எடுத்து வைக்காத பயணங்கள் இல்லை. சிறகை விரிக்காமல் வானத்தில் பாதைகள் இல்லை. எனவே, தோல்விகள் ஏற்படுமோ, பிறருக்கு முன்னால் ஒரு அவமானச் சின்னமாய் நிற்போமோ எனும் பயமே வேண்டாம். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனிதனை அவமானங்கள் சந்திப்பதில்லை.
 
தயங்குபவர்கள் அலுவலக சூழலில் முன்னேற முடியாது. அவர்களை மிதித்து, அவர்களுடைய முதுகில் ஏறி மற்றவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அப்புறம் காலம் முழுதும், மிதிபட்டுக் கொண்டே கிடக்க வேண்டியது தான். எனவே, தயக்கம் இல்லாத அணுகுமுறை அலுவலக வாழ்வில் ரொம்ப அவசியம்.
 
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். `இது என்னால் முடியும்' என்று சொல்வது மட்டுமல்ல தன்னம்பிக்கை, 'இதை என்னால் செய்ய முடியாது...' என்று சொல்வதும் தன்னம்பிக்கையின் வடிவம் தான். குறிப்பாக அலுவலக சூழலில் உங்களால் முடியாத விஷயங்களை `முடியாது' என்று மறுத்தால் தான் நீங்கள் கம்பீரக் குதிரை! இல்லையேல் பொதி சுமக்கும் கழுதை தான். எப்போதும் உங்கள் முதுகில் ஏதேனும் விழுந்து கொண்டே இருக்கும்!
 
'வேலை விஷயத்தில் நான் ரொம்ப திறமைசாலி' எனும் உயர்வான அபிப்பிராயம் இருக்க வேண்டியது அவசியம். நம்மை நாமே உயர்வாக நினைக்கவில்லையேல், பிறர் உயர்வாக நினைக்கப் போவதில்லை.
 
பெண்களின் தன்னம்பிக்கைக் குறைபாடுகளுக்கு பெற்றோரும் ஒரு வகையில் காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள். சின்ன வயதிலிருந்தே அவர்களை சிறப்புக் கவனம் எடுத்து தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தால், அவர்கள் அலுவல் வீதிகளில் நடக்கும் போது தலை கவிழ்வதில்லையாம்!
 
சின்ன வயதில் அப்பா, அம்மா, பிறகு நண்பர்கள், அதன் பின் கணவன், அவருடைய குடும்பம் என பிறர் சொல்லும் கருத்துக்களின் பிரதிபலிப்பாய் பெண்கள் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
 
உண்மையில் பெண்கள் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதன் பிம்பமல்ல. தான் யார், தன்னுடைய இயல்பு என்ன என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்தெந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ, அப்படியே ஆகிவிடுகிறீர்கள். `உங்களுக்கு எஜமானர் நீங்களே' எனும் சிந்தனை இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றியடைய முடியும்.
ஏஞ்சலினா ஜோலி ஹாலிவுட்டைக் கலக்கும் ஹீரோயின். ஒருகாலத்தில் தாழ்வு மனப்பான்மையினால் உழன்றவர். அதிலிருந்து வெளியேறி தன்னம்பிக்கையைத் துணையாக்கிய பின்பு அவருடைய வாழ்க்கை வெற்றிகரமாய் மாறியது!
 
உங்கள் ஒவ்வோர் செயலிலும் தன்னம்பிக்கை புலப்பட வேண்டியது அவசியம். உங்கள் நடையில், உங்கள் கைகுலுக்கலில், உங்கள் பேச்சில்... ஏன் நீங்கள் அமர்வதில் கூட உங்களுடைய தன்னம்பிக்கை வெளிப்படட்டும். எந்தக் காரணம் கொண்டும் அலுவலக விஷயங்களைச் செய்யும் போது எமோஷனாகாமல், கண்ணீர் விடாமல், தழுதழுக்காமல் இருங்கள்.
 
உங்கள் முன் மாதிரிகளை நிஜ வாழ்க்கையிலிருந்து கண்டெடுங்கள். தொலைக்காட்சியோ, சினிமாவோ உங்களுக்கு நிஜமான ஒரு முன்மாதிரியைத் தராது. அவர் களைப் போல தோற்றமளிக்க வேண்டும் என நினைப்பது உங்களுடைய மன அழுத்தத்தைத் தான் அதிகரிக்குமே தவிர, தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யாது.
 
உங்களை எதெல்லாம் ஊக்கமூட்டுமோ, அதையெல்லாம் விரும்பிச் செய்யுங்கள். அது அலுவலக வேலையாய் இருக்கலாம், சமூக சேவையாய் இருக்கலாம் அல்லது கவிதை எழுதுவதாய் கூட இருக்கலாம். அதேபோல யாரெல்லாம் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கிறார்களோ, அவர் களோடு மட்டுமே அதிக நேரம் செலவிடுங்கள்.
 
உங்கள் மனம் ஒரு அழுத்தமற்ற பூந்தோட்டமாக இருக்கவேண்டும். அதில் சுதந்திரக் காற்று சுற்றி வரவேண்டும். அலுவலகத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும் போது, உங்கள் வீட்டிலும் அந்த மகிழ்ச்சி பரவும். வீட்டில் ஆனந்தம் அதிகரிக்கும் போது அந்த மகிழ்ச்சி, அலுவலகத்தில் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
 
தன்னம்பிக்கைப் பயணத்தில் உயர்வுகளும் தாழ்வுகளும் வந்து கொண்டே இருக்கும். தாழ்வுகளைக் குனிந்து பார்த்து மருகுவதை விட, உயர்வுகளை உதாரணமாய்க் கொண்டு மேலும் உயர்வுகளை நோக்கிப் பயணிப்பதே சிறந்த அணுகுமுறையாகும்.
 
இயலாதென முடங்கியது கற்காலம்!
வெற்றியென முழங்குவதே தற்காலம்!
 
சேவியர்

5 comments:

சாகம்பரி said...

நீங்கள் சொன்ன அத்தனையும் நல்ல கருத்துக்கள். ஆண்களுக்கும் பொருந்துமே. ஆனால், ஒரு கருத்தில் மட்டும் மாற்றம் வேண்டும். வீட்டிண் சூழல் நன்றாக இருந்தால்தான் அலுவலகத்திலும் சாதிக்க முடியும். Thank you.

இராஜராஜேஸ்வரி said...

'நீங்கள் அடிக்காத எந்த ஷாட்டும் கோலாக மாறுவதில்லை' என்பார் வேன் கிரெஸ்கி எனும் உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர்.
ஆக்கபூர்வமான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

இப்படித்தான் எல்லோரும் சொல்லி சொல்லியே ஆண்களுடைய வேலை வாய்ப்புகள் எல்லாம் பெண்களுக்கு போய் விட்டது

இப்போது இருப்பது ஆணாதிக்க உலகம் அல்ல
பெண்ணாதிக்க உலகம் . இனியும் அதுவே தொடரும்

Divya said...

ஏன். பெண்ணாதிக்க உலகில் நீங்களும் சில ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழுங்களேன்.

Divya said...

புதிய பெண் உலகில் பெண்களுக்கு மட்டுமே அனைத்து உரிமைகள். ஆண்கள் வீட்டோடு வாழட்டும். பெண்களின் பாதுகாப்பில் ஆண்கள் வாழ்க்கை மலரும். ஆண்களை ஒரு மலரைப் போல் நடத்துவோம்.