Thursday, April 21, 2011

மனம் மாறினால் வாழ்வு மலரும்!

ஒருவர் தனது மனோபாவத்தை மாற்றிக்கொள்வதன் மூலம், தமது வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு என்பார்கள். ஆனால் நம்மில் பலரும் அதன் அருமையை உணர்வதில்லை. எல்லாம் மாறிவிடும், நல்லது நடந்துவிடும் என்று நினைப்பதால் மட்டும் நன்மை நடந்துவிடுமா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். உடலும், மனமும் ஒன்றையொன்று சார்ந்தவை. மனதில் நம்பிக்கை பூக்கும்போது நம் செயல்பாடுகளிலும் உற்சாகம் பிறக்கிறது. அப்போது வெற்றியும் எளிதாக வருகிறது.
 
மைக்கேலும், ஜான்சனும் நண்பர்கள். தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார் மைக்கேல். கடவுளை வணங்கும்போது புகைபிடிப்பது சரியா, தவறா என்று அறிய நினைத்தார் அவர். எனவே அவர் தனது நண்பர் ஜான்சனையும் அழைத்துக் கொண்டு ஓரு பாதிரியாரைப் பார்க்கச் சென்றார். பாதிரியாரிடம், 'வழிபடும்போது புகைபிடிக்கலாமா?' என்று கேள்வி எழுப்பினார். உடனே பாதிரியார், 'அவ்வாறு செய்வது தவறு' என்று பதில் அளித்தார். பாதிரியாரின் அறையை விட்டு வெளியே வந்த மைக்கேல், வெளியே நின்று கொண்டிருந்த ஜான்சனிடம் நடந்த விவரத்தைக் கூறினார். உடனே ஜான்சன், 'பாதிரியார் கூறியது சரிதான்' என்றார். அத்துடன், `கேள்வி தவறாக இருந்தால் பதில் எதிர்பார்த்தவிதத்தில் அமையாது' என்று கூறினார். மேலும் அவரே பாதிரியாரிடம் சென்று, 'புகைபிடிக்கும்போது வழிபடலாமா?' என்று கேட்க, 'எப்போது வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம்' என்றார் பாதிரியார். கேட்கும் கேள்வியைப் பொறுத்துதான் பதில் அமையும் என்பதை இதிலிருந்து உணரலாம்.
 
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டர் ரூசோ தனது 'சமூக ஒப்பந்தம்' என்ற நூலில், 'பிறக்கும்போது சுதந்திரமாகத்தான் பிறக்கிறோம். ஆனால், வளர வளர சமூக சங்கிலிகளால் நம்மை விலங்கிட்டுக் கொள்கிறோம்' என்கின்றார். அதை உடைத்தெறிய வேண்டுமென்றால் மனதில் விழிப்புணர்வும், விடுதலை உணர்வும் தோன்ற வேண்டும். அப்போது, மனவிலங்குகள் தானாக உடைந்துவிடும் என்று அறைகூவல் விடுத்தார் ரூசோ. அவர், தான் மனதளவில் முழுமையாக நம்பியதை பிறருக்குக் கூறியதால், அதை அறிந்தவர்களும் முழுமையாக நம்பியதால் பிரெஞ்சுப் புரட்சி தோன்றியது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அனைவரின் அனுபவப் பொருளானது.
 
சமீபத்தில் அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் விளைவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்த உண்மை. ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் பல முயற்சிகள் மேற்கொண்டு நிலைமையைச் சமாளிக்க உழைத்து வருகிறார். அமெரிக்காவில் 1929-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின்போது பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்தது. 1932-ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் உயர்ந்தது. பலர் தங்களது உடைமைகளை இழந்து தெருவிற்கு வந்து பழங்களை விற்றுப் பிழைப்பு நடத்தத் துவங்கினர்.
  
1933-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் பதவி ஏற்றார். அவரது கால்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே தனது பணியை சிறப்பாகச் செய்தார். அவர் தனது உரையில், வீழ்ச்சிக்கு காரணம் நம்பிக்கையின்மையே என்றும், வேறு வலிமையான காரணம் எதுவும் கிடையாது என்று மக்களுக்கு நம்பிக்கைïட்டினார். பயத்தை தவிர்த்து அனைவரும் தங்கள் சேமிப்பை நம்பிக்கையுடன் வங்கியில் முதலீடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரது உரை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அமெரிக்கா பின்னடைவில் இருந்து மீண்டது. அதற்குக் காரணம் ரூஸ்வெல்ட்டின் ஆளுமைத்திறனும், தொடர்புகொள்ளும் ஆற்றலும்தான்.
 
இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தனது உரையின்போது கைகளை உயர்த்தி 'வி' என்பது வெற்றியைக் குறிக்கும் என்று கூறி ராணுவவீரர்களை உற்சாகப்படுத்தினார். நம்பிக்கையும், உற்சாகமும், ராணுவ வீரர்களிடம் ஒரு பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழர்களின் பண்டைய சரித்திர வரலாற்றைக் காணும்போதும், 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்பதன் மூலம் போர் வீரர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் தொடர்பு கொள்ளும் ஆற்றல் பலனளித்ததை அறிய முடிகிறது.
 
அரிய கண்டுபிடிப்புகளை உலகத்தின் பயன்பாட்டுக்கு அளித்த அறிவியல் அறிஞர்களும் சரி, அரிய தத்துவங்களை உலக வாழ்வுக்கு வழங்கிய பெரிய சமூக சிந்தனையாளர்களும் சரி, தொழில்திறன் மிக்க வல்லுநர்களாக இருந்தாலும் சரி, தத்துவ மேதைகளாக இருந்தாலும் சரி, அனைவரையும் இயக்கும் நிïரான்களின் அளவு ஏறக்குறைய சமமான எண்ணிக்கையிலேயே இருக்கும். ஆனால் அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் இணைப்பை 'டென்ட்ரைட்' என்பார்கள். இவற்றின் அளவுதான் ஒருவரை சாதாரணமாகவும், திறமைமிக்கவராகவும் உலகத்துக்கு அடையாளம் காட்டுகிறது. கற்கும் திறனை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொள்ளுதல், கற்ற அறிவை அனுபவக் களத்தில் செயல்படுத்துதல் போன்றவையே ஒவ்வொரு தனிமனிதனையும் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறது.
 
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலம் வரலாற்றில் அன்னியர்களின் படை எடுப்புகளை அதிகம் சந்தித்திருக்கிறது. அதனால் எதையும் எதிர்கொண்டு வெல்வதற்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. பஞ்சாப் மாநìலத்தில் தனிமனிதரின் சராசரி வருமானம் பிற மாநிலங்களை விட அதிகம். சமீபத்தில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் ஜப்பானியர்களின் மனஉறுதி, கடினஉழைப்பு, குழுவாக செயல்பட்டு இடர்களைக் களைய மேற்கொள்ளும் முயற்சி, தங்களை தனிமனிதர்களாகக் கருதி முக்கியத்துவம் அளிக்காமல் சமூக நன்மைக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் மனப்பாங்கு ஆகியவையே வெள்ளி நட்சத்திரங்களாக மின்னின.
 
சமீபத்தில் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியதை நாம் அனைவரும் நினைந்து மகிழ்கிறோம். வெற்றியின் ரகசியம், விளையாட்டு வீரர்கள் தங்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும், குழு உணர்வும்தான். தோல்வி என்பதும் சரி, வெற்றி என்பதும் சரி. அது முதலில் அவரவர் மனதில் தோன்றுவது தான். 'உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்றார், மறைந்த கவியரசர் கண்ணதாசன். அந்த வரிகளின்படி, மனமே செயல்களின் கர்த்தாவாக விளங்குகிறது.
 
ஒவ்வொரு இளைஞனும் தனக்குள் இருக்கும் உன்னதத்தை உணர்ந்து அதை வெளிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். லிபியாவில் நடந்துவரும் போராட்டத்தில் இளைய சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு சமூக மேம்பாட்டிற்காக போராடி வருகின்றனர். இளைஞர் களின் சக்தி என்பது முகவரி எழுதாத கடிதம் போன்றது. தனிமனித நலன், வீட்டு நலன், சமூக நலன், நாட்டு நலன் என்று கருதி தத்தமது எண்ணங்களுக்கு ஏற்பச் சரியான முகவரியை இளைஞர்கள் எழுதும்போது நாட்டின் வளர்ச்சி உறுதியாகிறது. நல்லவற்றை எண்ண வேண்டும். எண்ணியதைத் திறம்படக் கூறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். சொல்லும், செயலும் ஒன்றுபட வேண்டும். எதிர்காலம், நிகழ்கால செயல்பாடுகளின் தொடர்ச்சியே.
 
ப.சுரேஷ்குமார்

No comments: