Monday, April 11, 2011

போராடிப் போராடிப் போட்டுடைத்த வாழ்வு!

உலகின் நான்காவது பெரிய ராணுவத்தைத் துரத்திய, இந்தப் பிராந்தியத்தையே அச்சுறுத்தும் விதமாக முப்படைகளையும் வைத்திருந்த, குறுக்கிடுவதை எல்லாம் அகற்றுவதில் ஈவிரக்கமற்ற, குற்றங்களை மன்னிக்காத, பழிக்குப் பழிவாங்கியே தீரும், தன் மக்களுக்காகக் கண்ணுறக்கமில்லாமல் திட்டமிடும் ஒரு தலைவரையும் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட புலிகள் இயக்கம் –
புத்தி குறைந்ததும்(!) வீர மரபில் வந்திராததுமான ஒரு ராணுவத்திடம் ரியூப்பில் காத்துப் போனது போல ஒரேயடியாகத் தோற்று, அதாவது கடைசிவரை மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மனோபாவத்தைக் காட்டாமல் பாசிஸ விறைப்புடனேயே படார் முடிவெய்தி இரண்டு வருடங்களாகின்றன.

இன்னமும் அந்தத் தோல்வியின் காரணங்களை சுயவிமர்சனமாக நமக்குள் பரிசீலித்து ஒப்புக்கொள்ள நாம் தயாராகவில்லை. ‘மக்களை மேய்த்த’ கொலைமாவீரப் பிரலாபங்களின் மாயை, நம்மிடையே ‘படித்தவர்கள்’ என நம்பப்பட்டு இருந்தவர்களும் மக்களுக்குக் காட்டிய ‘ஃபிலிம்’ அல்லது ராணுவவாதப் புல்லரிப்பு, நீதியை மனித அறத்தைக் காலின் கீழ் மிதித்துவிட்டு அவர்கள் பேசிய ‘விடுதலை’ நியாயம், உலகையே நிராகரித்துவிட்டு உருவாக்கிக் கொண்ட ‘தமிழ்ஞாயம்’, சாத்தியமில்லை எனத் தெரிந்த பிறகும் தனிநாட்டைச் சொல்லி உயிர்களை அழித்ததும், கடைசிவரை மக்களின் கண்களைப் பொத்தியபடியே கூட்டிச்சென்று கவிழ்த்ததும், வைகோ-சீமான்-உலகத்தமிழ் வகையறாக் கோமாளித்தன மோட்டுத்தனங்களோடு சமூக முதுகுநாணை முறித்து இந்தக் கதியில் கொண்டுவந்து விட்டிருப்பதும்…. ஏன்? எதனால்? நம் தவறுகள் என்ன? நம்மை இனி மாற்றிக் கொள்வதாயின் எங்ஙனம்? என்ற சுயவிமர்சனங்களை நம்மவர்களிடமிருந்து காணமுடியவில்லை. அதுகுறித்த பிரக்ஞையும் வந்ததாகத் தெரியவில்லை.

இப்போதும் கூட, இந்தியா ஏமாற்றி விட்டது, உலகநாடுகளும் கூட இலங்கையரசுக்கு சார்பாக நின்று நம்மைத் தோற்கடித்து விட்டன, ச்சாய்…நம் மக்கள் இன்னும் கொஞ்சம் கூடச் செத்திருந்தால் ஒருவேளை ஐநாவோ அமெரிக்காவோ வந்து இலங்கைப்படைகள் மீது குண்டு போட்டிருக்காதா என்றெல்லாம்தான் சிந்திக்க முடிகிறதே தவிர, நாம் நமக்குக் கிடைத்த எந்தெந்த சந்தர்ப்பங்களையெல்லாம் கோட்டை விட்டு வீணாய்க் கொத்துக் கொத்தாக அழிந்தோம் என்ற திசைக்கே நம் எண்ணத்தைத் திருப்ப முடியவில்லை. நாம் ‘வாழ’ வேண்டுமானால், விட்டுவிட வேண்டிய வீம்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய எதார்த்தமும் பற்றி நிதானிக்க நம்மால் முடியவில்லை. பழம்பெருமை, இன்றைய காலத்திற்குப் பொருந்தாத வீரப்புளுகுகள், ஏட்டுக்கல்வியில் மட்டும் முன்னேறிவிட்டு நம்மை புத்திச்சமூகமாய் எண்ணிக்கொண்ட மாயை, மற்றவர்களை எல்லாம் மூடர்களாயும் இழிவாயும் நினைத்துக்கொண்டிருக்கும் கொழுப்பு, இதனால் மனங்களில் நிறையும் வன்மம்…. என இந்தச் சுமைகளே நம்மை மீள்வதற்கு விடுவதாயில்லை. என்ன மாதிரி ஒரு ‘நாம் தமிழர்’ எண்ணம்!

நம் வெடிவீரர்களைப் பற்றி அளவுக்கதிகம் புகழ்ந்தும், நம்ப வைத்தும், உள்ளுக்குள் உளுத்தபடியே பெருமிதங்களைப் போர்த்து மூடிக்கொண்டும், மற்றவர்களுடன் உரையாட முடியாதவர்களாய் வாழ்வை வென்றெடுக்க முடியாதவர்களாய் முழுமுட்டாள்களாயடிக்கப்பட்டோம். முள்ளிவாய்க்கால் வரைக்கும் அள்ளுண்ட மந்தைகளாயிருந்தோம். சமூகத்தைப் பலவருடங்களுக்குப் பின்னோக்கி முடக்க அனுமதித்தோம். இப்போதும் நமது சண்டித்தனங்களே சரியானவை@ நம் பீடுக்கும் பெருமைக்கும் நாம் யாருடனும் பேச வேண்டிய தேவையே இல்லை என்கிற தற்புகழ் போதையிலேயே வழிகளைத் தொலைத்து மக்களை வதைபட விட்டுக் கொண்டிருக்கிறோம்.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்:
சூதாட்டத்தில் திரௌபதியைத் தோற்றது குறித்துக் கோபப்படும் அருச்சுனன், தருமனை சுடுசொற்களால் திட்டிவிடுகிறான். பாண்டவர்களிடையே ஒரு கட்டுப்பாடு உண்டு. அதாவது, யார் தருமனை திட்டினாலும் அவன் கொல்லப்பட்டுவிட வேண்டும் என்பதே அது. அதன்படி இப்போது அருச்சுனன் கொல்லப்பட வேண்டும் என்கிறான் பீமன். அருச்சுனன் கொல்லப்பட்டால் பாரதமே இல்லை. அப்போது அங்கு வரும் கிருஷ்ணன், அவர்களது பதற்றத்தைக் கண்டு விஷயத்தைக் கேள்வியுற்று, ‘அட, இவ்வளவுதானா? கொன்றுவிடலாம் அருச்சுனனை’ என்கிறான். எல்லோரும் திகைக்க, ‘ஒரு பெரிய சபையின் முன்னே நீ தொடர்ந்து உன்னையே புகழ்ந்து பேசிக்கொள்ள வேண்டும். அதுவே உனக்கு மரண தண்டனை’ என்கிறான். அதன்படி அருச்சுனன் தன் வில்வித்தையைப் பற்றியும், தன் அழகைப் பற்றியும், வீரதீர பராக்கிரமத்தைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசுகிறான். கேட்பவர்கள் கெக்கலி கொட்டிச் சிரிக்க, அவனுக்கு அது மரணத்தைவிட மோசமாகத் தோன்றுகிறது.

இப்படி ஒரு தற்புகழ்ச்சியிலும், யதார்த்தத்தைப் புறக்கணித்த நிலைமறந்த வீர நினைப்புகளாலும்தான் நாமும் மரண அடி வாங்கினோம் என்பதொன்றும் இப்போது ரகசியமல்ல. நிதானமாக யோசித்தால் இதுபோல நம்மிடமிருந்த பல பல தவறுகள் பிடிபடக்கூடும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் நமக்கு மீட்சி கிடையாது. பரணி பாடிப் பாடியே அப்பாவி வாழ்வைப் போட்டுடைக்கக் காரணமாக இருந்தவர்கள், வெளிப்படையாக அந்தக் காரணங்களை விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் சமூகமும் மக்கள் வாழ்வும் மீள்வதற்கான காலத்தைப் பின்போட்டுக் கொண்டே செல்லும் அதே தவறைத் தொடர்ந்தும் செய்வதாகவே இருக்கும். அதாவது, மற்றவர்கள் திருந்தாமல் நமது துன்பங்களுக்கு முடிவில்லை என்று புலம்பியபடியே வாழ்வைத் தொலைத்துக்கொண்டிருக்கும் அபத்தம் தொடரும்.

பிழை செய்தவர்கள் புலிகள் மட்டுமா? ஒவ்வொருவரும் நம் மனதை உரசிப் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தெந்தப் பிழைகளுக்கெல்லாம் நாமும் துதிபாடிகளாயிருந்தோம் என்ற சுயவிமர்சனத்துக்கு இன்று அவசியம் இருக்கிறது. ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் லியோ ரோல்ஸ்ரோயின் கடைசி நாவல் ‘ஹட்ஜி மூரத்’தில் ரஷ்ய மன்னன் சார் நிக்கலஸைப் பற்றிய வர்ணனை இது: “தினந்தோறும் துதி பாட வேண்டுமென்பதற்கே அவன் தன்னைச் சுற்றி அறிவாளிகளை அமர்த்திக் கொண்டான். அவன் எது செய்தாலும் – அவன் செய்தது எதுவுமே தன்னலம் நோக்கியதுதான் – அது மக்கள் நலனுக்காக என்று அவர்கள் ஓயாமல் சொல்லி வந்தார்கள். இதனால் அவன் எதேச்சாதிகாரம் அதிகரித்தது. எல்லாவற்றையும் விடக் கொடுமை, துதிபாடிகள் சொல்வதை அவன் மெய் மெய்யாக நம்பத் தொடங்கியதுதான்.” தவறுகளை எடுத்துச் சொல்லாத துதிபாடிகளால் சூழப்பட்ட மன்னனும் தேசமும் வேறு கெடுப்பாரில்லாமல் கெடும் என்பதுதான் வள்ளுவர் சொல்லியிருப்பதும்.

உயிர்ப்பயம் காரணமாகவும், மாற்று இனங்கள் மீது வளர்க்கப்பட்ட துவேசம் காரணமாகவும், உலகையே எதிர்த்துத் தனிமைப்பட்டதன் காரணமாகவும், தமிழ்ப் பெருமிதங்களுக்கொப்ப நம்மைத் தனியே பிரித்துக் கொண்டுவிடலாம் என்ற ஆசையின் காரணமாகவும், ஆயுத அதிகாரத்தில் பங்குபெற்றுத் திளைக்கும் நடப்புக்காகவும், ஆண்டபரம்பரை மேலாதிக்க மோகத் தற்திருப்திகளுக்காகவும், மற்றுமற்றும் வௌ;வேறு அந்தரங்க ஆசைகளுக்காகவும் தவறுகளை அமுக்கிப் புலிகளைத் துதிபாடி வந்தவர்கள், இன்றைய தோல்விக்கு சுயவிமர்சனம் செய்யாமல் நழுவியபடி உள்ளார்கள். இதைவிடவும் மோசமாக, எதிரியையும் ஏதேதோ வெளிசக்திகளையும் திட்டும் பகைவெறுப்பு முழக்கங்களைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேறு செய்கிறார்கள்.

2009 மே இற்கு முன்னர் இரு தசாப்தங்களாக நமக்குள் நடந்து கொண்டிருந்தவை என்ன? விடுதலையின் பெயரால் என்னென்ன அற அழிப்புகளையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருந்தோம்? மக்களுக்கு எதார்த்தத்தை ஒளித்து என்னமாதிரி ஒரு போலிக் கனவைப் பொய்ப்பரப்புரையாக்கிக் கொண்டிருந்தோம்? எத்தகைய குரூரக் குணாம்சங்களை வீரத் தலைமைப் பண்பாக விதந்தோதிக் கொண்டிருந்தோம்? என்னென்ன விதத்தில் ஜனநாயக மறுப்புகளுக்கும் விரோதத்திற்கும் உதவி அவற்றை வளரவிட்டுக் கொண்டிருந்தோம்? நமது இழப்புகள், துன்பங்கள், நம் உரிமைகள், நம் நியாயங்கள் என்பவற்றின் பெயரால் எத்தகைய அநீதிகளையெல்லாம் அனுமதித்து வாளாவிருந்தோம்? நமக்குள் எழுந்த அபிப்பிராய பேதங்களை எல்லாம் உயிரழிப்பு மூலம் அடக்கிவிடுவதற்கு எவ்வளவு உற்சாகமாகத் துணைபோனோம்? என்பதையெல்லாம் பேசுவதற்குரிய காலம் உருவாகி இரண்டு வருடங்களாகியும் இன்னும் மறைத்து வருகிறார்கள் பலர். மறைப்பதற்குப் போடும் நாடகமாக எதிரி மீதான உணர்ச்சிகரக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் மேலும் பலர்.

இந்த இடத்தில் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் குறிப்பிடும் சில கருத்துக்களைத் தரலாம்:
“உன்னத இலட்சியங்களின் பெயரால் பெருமளவில் மனிதக் கொலைகளும் ஒடுக்குமுறைகளும் ஏன் நடந்தன என்பதற்கான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள் இன்று கண்டறியப்படுகின்றன. ஒற்றைக் கட்சிச் சர்வாதிகாரம், கட்சிக்குள் ஜனநாயகமின்மை, அபிப்பிராய பேதங்கள் வெளியிட அனுமதி மறுப்பு, தட்டிக் கேட்க ஆளில்லாமை – இப்படிப்பட்ட காரணங்களும் சொல்லப்படுகின்றன…. ஒரு தலைவன் கட்சி, சித்தாந்தம் முதலியன தன்னைப் பற்றிக் கொள்ளும் அதீத சுயநம்பிக்கை; பிழையே செய்யாத தன்மையைத் தனக்குக் கற்பித்துக் கொள்ளுதல் அல்லது அப்படிப்பட்ட பிரமைக்கு இலக்காகுதல்; தனது சிந்தனை, நடவடிக்கை, தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிறிதும் சந்தேகம் கொள்ளாதிருத்தல்; தன்னால் மட்டுமே மனிதகுலத்தைச் சுபிட்ச ராச்சியத்திற்குள் இட்டுச் செல்ல முடியும் என்று உறுதியாக நம்புதல்; பழிவாங்கும் மனப்பான்மை; பாவத்துக்கு வருந்தாமை; குற்றங்களை மன்னிக்காமை – ஆகியனவுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்றே நமக்குப் படுகிறது. மேற்காணும் பண்புகளைக் கொண்ட ஒரு மனம் எல்லாவற்றையுமே கறுப்பும் வெள்ளையுமாகப் பிரித்து வகைப்படுத்தி விடுகிறது. இரண்டுக்கும் நடுவில் வேறு வண்ணச் சாயல்கள் இருப்பதைக் காணத் தவறுகிறது. இத்தகையதொரு மனம், நியாயத்தை நிலைநாட்டுதல் என்ற பெயரால் தன்னையுமறியாமலேயே, மற்றொரு அநீதிக்கு வித்திட்டு விடுகிறது….”

இவையெல்லாம்தான் நம் மத்தியிலும் இருந்ததைக் குறித்து எந்த வெட்கமும் அடையாதவர்களாக இருப்பது பற்றியே இப்போது வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

No comments: