Tuesday, April 5, 2011

வாழ்வைத் தொலைத்து விட்டு வதைபடுதல் என்ன ரோசம்?

 

மிகத் தூய்மையான எல்லாம் நிறைந்த ஒரு தீர்வுக்காக கடைசி உயிர்வரை அழிக்கும் திட்டத்தில் சிலர் இன்னும் விடாப்பிடியாக உள்ளார்கள் என்றறிய நடுக்கமே உண்டாகிறது. “வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வையே நாம் கேட்கிறோம். அதை அவர்கள் தரப்போவதில்லை. அதை அம்பலப்படுத்தவே பேச்சுவார்த்தைக்குப் போகிறோம்” என்பதை இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது எவ்வளவு தூரம் சரி? இதையே தமிழ்வீரம் என்று நம்பிக் கொண்டிருக்கும் சூழல் இன்னும் இங்குள்ளதென்றால் என்ன மாதிரியான ஒரு சமூகம் நாம்?

அரசாங்கம் தர முடியாததைக் கேட்பது; அதன்மூலம் எதிர்ப்புணர்ச்சியைப் பெருக்குவது@ முறுகல் நிலைமை தணியவிடாமல் பார்த்துக் கொள்வது@ கொள்கை-இலட்சியம்-இனக்குழுப்பெருமை-தனித்துவத்திற்காக எதையும் இழக்கலாம் என்ற உணர்ச்சிகரத்தில் கொந்தளிக்கும் திரளாக மக்களை வைத்திருப்பது@ எதிர்ப்பு வீரவசனங்களால் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை வேட்டையாடிக் கொள்வது…. அத்துடன் எல்லாம் (தலைவர்களுக்கு) இனிதாய் முடிந்துவிடுகிறது. மக்களின் கஷ்டங்களோ தொடர்கிறது.

புலிகள் முடிந்து இரண்டு வருசமான பிறகும் இந்த நாடகத்தையே இவர்கள் வெற்றிகரமாகத் தொடர்வதற்கு இயலுகின்ற நம் அறிவுச்(!)சமூக நிலையை என்ன சொல்ல?

சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசாங்கத்துடன் அவர்கள் பேசவேண்டும் என்பது யதார்த்தம். பேசி அவர்களிடம் தீர்வைப் பெறமுடியாது என்று கண்டுகொண்டவர்கள் என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? ஏனைய உலக நாடுகள் அரசாங்கங்களிடம் நம் பிரச்சினையை எடுத்துப்போகும் முயற்சிக்குச் சமாந்தரமாக இந்தத் தீவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மனங்களுடனும் பேசுவது முக்கியமல்லவா? அப்போதுதானே நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை துலங்கவும் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது? யுத்தம் முடிந்த சூழலிலும் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? முஸ்லிம், மலையக மக்களிடமும் பிறகு சிங்கள பொது மக்களிடமும் நம் நியாயத்தை விளங்கப்படுத்தாமல், அவர்களின் கணிசமான ஆதரவை பெற்றுக்கொண்டு முன்செல்ல முற்படாமல் அரசாங்கத்தை – உலகத்தைச் சாடிக்கொண்டிருந்து ஆகப்போவதென்ன? தனிநாடு, சமஷ்டி, முழு அதிகாரம் என்று உதார் விட்டுக்கொண்டே இருப்பதுதான் அரசாங்கத்தையும் ஏனைய தரப்பு மக்களையும் இணக்கத்திற்கு நகர்த்தும் வழியா?


அரசாங்கம் தர முடியாத தீர்வையே நாம் கேட்டுக் கொண்டிருப்போம்@ பெரும்பான்மை மக்களும் நம் தீர்வை ஒப்புக்கொள்ளவே மாட்டார்@ நமக்கு அநீதிகள் தொடர்ந்து நடந்தபடியேதான் இருக்கும் என்கிற வெறுப்பிலும் விரோதத்திலும் மக்களைத் திரள வைத்து இப்போதும் இந்தத் தீவுக்குள் விலகித் தனிப்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம் என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள்? மீண்டும் ‘புலியிச’க் கனவுக்குள் அமிழ்த்தி, ‘அழியும் மக்களின் ஆக்ரோச எம்பீக்களாய்’ வருவது ஒன்றுதானா நினைப்பு? ‘சிங்களவனைப் பழிக்குப் பழி வாங்காமல் தமிழனுக்கு வாழ்வில்லை’ என்று, இங்குள்ள நிலைமை பற்றி ஒரு சுடலையும் அறியாமல் உசார் பீலா விட்டுக் கொண்டிருக்கும் அயலக, உலகத் தமிழர்களின் உருவாட்டம்தானா உங்களுக்கும் இனிக்கிறது? வாழ்வைத் தொலைத்துவிட்டு வதைபடுதலில் தமிழ்வீரச் சிலிர்ப்பைக் கண்டுகொள்ளும் பழங்குடி ரோசத்தில் வெளியுலகார் திளைக்கலாம். வதைபடும் மக்களிடம் வாக்குகளுக்குப் போகும் நீங்களுமா அவர்களுக்கு வால்முறுக்கி விடுவது?

பேச்சுவார்த்தையில் பிரயோசனமில்லை, எதிர்த்தரப்பு சரிவரவே மாட்டாது என்ற கண்டுபிடிப்புகள்தானா இப்போதும் உங்கள் வழிகாட்டல்? அவ்வளவுதானா பகைமறப்பும் மீளிணக்கமும்? தமிழ்மக்கள் எல்லோருமே ஒற்றுமைப்பட்டு எங்களுடன் நிற்க வேண்டும். அதன்பிறகுதான் விசயத்தை வெல்லலாம் என்று காலத்துக்குக் காலம் பந்தை மக்கள் பக்கம் அடித்து விடுகிறீர்கள். பந்தைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு செய்வதறியாமல் நாங்கள்!

ஒற்றுமைப் பந்து எங்கள் பக்கம் இருக்கும் வரை நீங்கள் விளையாடாமல் இருப்பதை கேள்வி கேட்க முடியுமா? நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கலங்கி, இந்த ஒற்றுமை கெட்ட தமிழ்ச்சாதியை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். மலையைத் தூக்கிக் கொண்டு நடப்பேன் என்று உதார் விட்டுக் கொண்டிருந்த பயில்வான் கதை கேட்டிருக்கிறோமல்லவா! ஊரிலுள்ள எல்லோருமாய்ச் சேர்ந்து அந்த மலையைத் தூக்கி என் தோளில் வைத்துவிடுங்கள். அதன்பிறகு பாருங்கள் என் கெட்டித்தனத்தை என்ற கதைதான்.

வெறுப்பும் பழிவாங்கும் உணர்ச்சியும் மறையாமல் இணக்கமும், இணைந்து முன்னேறும் வாழ்வும் எப்படிச் சாத்தியமாகும்? கோபம், பகை, விரோதம் போன்றவற்றைக் கைவிடாமல் நல்லிணக்க வாழ்வுக்கு எப்படி வாசல் தெரியும்?

ஒரு சாமுராய் வீரன்  ஸென் துறவிவியிடம் வந்து கேட்டான்:

“சொர்க்கத்திற்கு நரகத்திற்குப் போவதற்கென்று வாசல் ஏதும் உண்மையாகவே இருக்கிறதா?”
துறவி அவனைப் பார்த்தபடியே சொன்னார்:
“உன்னைப் பார்த்தால் வீரனைப் போலவே இல்லையே. பிச்சைக்காரனைப் போலல்லவா இருக்கிறாய்!”
சாமுராய் கோபமடைந்து வாளை உருவினான். அதனைக் கண்ட துறவி, “இந்த மொட்டைக் கத்தியை வைத்தா என்னைக் கொல்லப் போகிறாய்?” எனக் கேலியுடன் கேட்டார்.
கோபம் தலைக்கேற வாளுடன் துறவியைக் கொல்ல நெருங்கினான் சாமுராய். சிரித்துக்கொண்டே துறவி சொன்னார்: “இப்போது பார்த்தாயா நரகத்தின் கதவு திறப்பதை.”
சாமுராய் தன்னை உணர்ந்தவனாக வெட்கத்துடன் வாளைக் கீழே போட்டான்.
உடனே துறவி சொன்னார்: “பார்த்தாயா சொர்க்கத்தின் கதவு திறப்பதை.”


கடந்தகாலத் தவறுகளைத் தூக்கிப் பிடித்தபடி, வெறுப்பைத் தூண்டி வளர்த்து, இணக்கம் காண முடியாதவர்களாக எதிரிகளைச் சித்தரித்து, துவேசத்தில் மக்களைக் குழுவாகத் திரட்டிப் பழிதீர்ப்பு மனோநிலையில் வைத்திருப்பது பகைமறப்பு – நல்லிணக்கத்தின் பாதையல்ல. இது வன்முறை அரசியலின் எச்சமே.

சுயநல நோக்குடன் பிறர் மீதான வெறுப்பையும், பிறருடன் சேர்ந்து வாழ முடியாமைக்கான நியாயங்களையும், மோதல்களையும் முன்னிலைப்படுத்துகிறவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அறிவுஜீவிகளாக இருந்தாலும் சரி மானுட அழிவும் அவலமும் கஷ்டங்களும் அவர்களுக்குப் பொருட்டே அல்ல. அவற்றைக் கொள்கைப்பிடிப்புக்குக் கீழ்ப்படுத்தியே சிந்திப்பார்கள். தங்களது வீம்பு, ரோச, பிளவு அரசியலின் மூலம் மக்கள் ஆயிரம் லட்சம் என அழிந்தால் கூட அந்த அழிவையே எதிரிக்கு எதிரான ஆயுதமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள். அதை எந்த மனசாட்சி உறுத்தலும் இல்லாமல் செய்ய இனக்குழு ரோசம் அவர்களை வழிநடத்தும். மக்கள் குருதி பெருக்குவதும், வீடிழந்து, தொழிலிழந்து, உருக்குலைந்து உலைவதும் இலட்சியப் பயணத்துக்கான உரம் சேர்ப்பே என்று பிரசாரப்படுத்தவும் தயங்கார்.

எதிரிகளை உருவாக்கி பிரமாண்டப்படுத்தி வெறுப்புக்குரியவர்களாக்கி அவர்களோடு பொருதுவது வன்முறையின் வழிமுறை. இது மக்களின் பேரழிவை பாடுகளை புறக்கணிக்கும். மாறாக, எதிரிகளை உருவாக விடாமல் பார்த்தபடியும், அவர்களுக்கு வன்முறை வாய்ப்பைக் கொடுக்காதபடியும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்துவதன் மூலம் நிதானமுடன் சாதிப்பதே சமூகத்தைச் சிதைத்துவிடாது முன்னகர்த்தும் வழிமுறை. நம் தலைவர்களிடம் நாம் வேண்டுவது இதையே; கொந்தளிக்க வைக்கும் அவர்களது பேச்சுக்களை அல்ல.

1 comment:

விசரன் said...

யதார்த்தமான பதிவு. உண்மையை உணர்ந்தாலும் அதை ஏற்க தயாராக இல்லை தலைவர்கள்.