Saturday, April 2, 2011

சாதனைக்கு எதுவும் தடையில்லை

ஆஸ்திரேலியாவிலிருந்த அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பாவுக்கு பதட்டம் நீங்கி பரவசம் எட்டிப்பார்த்தது.

கொஞ்ச நேரத்திலேயே மகனைக் கொண்டு வந்து காட்டினார்கள். ஆர்வத்துடன் மகனைப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. நிக் வாயிச்சஸ் பிறந்த 1982-ம் ஆண்டு டிசம்பர் 4, பெற்றோருக்கு துயர நாளாய் ஆகிவிட்டது.

ஐயோ! இவன் என்ன செய்வான்? இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான்? என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள்.

குழந்தை சிறுவன் ஆனான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அங்கு அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன.

எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா...?

"கடவுளே முடி வளர்வது போல, என்னோட கை கால்களும் வளரட்டுமே'' என்பது தான்.

முடியைப் போல கை கால்கள் வளராது எனப் புரிந்த வயதில் தற்கொலை செய்ய முயன்றான் சிறுவன் நிக். அதிலும் அவனுக்கு வெற்றியில்லை. தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு.

எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தின் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் மாற்றுத் திறனாளி ஒருவர் தனது கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கோல்ப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார்.

அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான அத்தியாயம். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது.

கோல்ப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் "லைஃப் வித்தவுட் லிம்ப்'' எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

கணினி மென்பொருள் போன்ற நிறுவனங்களில் பணியாளர் களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இவருடைய வீடியோ காட்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நாம் தடுமாறி கீழே விழுந்தால் கைகளை ஊன்றி எழுவோம். அல்லது கால்களைக் கொண்டு எழுவோம். காலும், கையும் இல்லாத இவர் விழுந்து விட்டு எழும் காட்சியை வீடியோவில் பார்க்கும் போது தன் மேல் குறையிருக்கிறது என்று நினக்கும் எல்லோருமே அந்த நினைப்பை மாற்றிக் கொள்வது உறுதி!

தனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. எந்தக் குறையும் இல்லாதவர்களே தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால், கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது?

தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை.

'காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்' என்கிறது உளவியல்.

'சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? காது இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா?' என்பார்கள்.

இதற்கு பதில் முடியும் என்பது தான்!

முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும்.

இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசை மேதை பீத்தோவான். அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா?

எது இல்லாமலும் ஒரு மனிதனால் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது.

1880-ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஆர்தர் கேட் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகான குழந்தை ஒன்றரை வயது வரை வெகு சாதாரண குழந்தையாய் தான் இருந்தது.

திடீரென வந்த ஒரு நோய் குழந்தையின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. பார்வை போய்விட்டது. கேட்கும் திறனும் போய்விட்டது. பார்க்காமல், கேட்காமல் இருந்த அந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பதென திகைத்தனர் பெற்றோர்.

படிக்க வைப்பது எப்படி?, பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி?... யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஆனி சுலிவன் எனும் பெண் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் துணிந்தார்.

எப்படி...?

ஒரு கையில் பொம்மையை வைப்பார், மறு கையில் பொம்மை என ஆங்கிலத்தில் எழுதுவார்.

ஆனால், குழந்தையால் ஒரு கையில் இருக்கும் பொருளுக்கான வார்த்தை தான் மறுகையில் எழுதப்படுகிறது என்பது மட்டும் புரியவேயில்லை.

ஒரு நாள் ஒரு கையில் குளிர்ந்த நீரை திறந்து விட்டுவிட்டு மறு கையில் "வாட்டர்'' என எழுதியபோது தான் குழந்தைக்கு 'பளிச்' என மனசுக்குள் 'பல்ப்' எரிந்திருக்கிறது. பின் அசுர வேகத்தில் வார்த்தைகள் கற்பிக்கப்பட்டன.

இவளால் என்ன செய்ய முடியும் என பரிதாபமாய்ப் பார்க்கப்பட்ட அந்த பெண் உலகையே பிரமிக்க வைத்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார். உலகிலேயே கேட்கும் திறன் மற்றும் பார்வை இரண்டும் இல்லாமல் பட்டம் பெற்ற முதல் நபர் எனும் பெருமை அவருக்குக் கிடைத்தது. பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் முன்னேற்றக் குழுக்கள் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார்.

அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினரானார். மிகச் சிறந்த பேச்சாளராகவும், அசத்தலான எழுத்தாளராகவும் பரிமளித்தார். பன்னிரண்டு நூல்கள், பல நூறு கட்டுரைகள் என அவருடைய எழுத்துப்பணி பிரமிப்பூட்டுகிறது. அமெரிக்க அரசு சிறப்பு நாணயம் வெளியிடுமளவுக்கு பெருமையடைந்த அந்தப் பெண்மணி தான் ஹெலன் கெல்லர்.

நம்மிடம் எது இல்லை என்று பார்த்து முடங்குவது துயரங்களின் தெருக்களில் நடப்பது போன்றது. நம்மிடம் என்ன ஸ்பெஷல் என்று பார்த்து வாழ்வதே வெற்றியின் வீதிகளில் வீறு நடை போடுவது போன்றது.

கனடாவிலுள்ள டொரோண்டாவில் வாழ்ந்து வந்தான் சிறுவன் பிரான்ங் ஒடியா. பதின்மூன்று வயதாய் இருக்கும் போது அவர் பாலியல் வன் முறையால் பாதிக்கப்பட்டார். மனம் வெறுத்த அவர் அந்த பதின் வயதில் வாழ்க்கையில் பிடிமானம் இழந்து மதுப் புட்டியைப் பிடித்துக் கொண்டார். அவர் மதுவைக் குடிக்க, மது அவரைக் குடித்தது. வெகு விரைவிலேயே எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்.

ஆறுமாதம் தெருவில் பிச்சை எடுத்தும், பிளாட்பாரத்தில் தூங்கியும் வாழ்க்கையை ஓட்டினார். ஒரு காபி குடிக்கக் கூட காசில்லையே என நினைத்த அவருக்கு ஒரு சின்ன பொறி தட்டியது. ஒரு காபி ஷாப் ஆரம்பித்தால் என்ன? அதற்குப் பணம் வேண்டுமே! ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். வென்றே தீரவேண்டும் எனும் வேட்கையும், வெல்ல முடியும் எனும் நம்பிக்கையும் அவரிடம் வேகமெடுத்து வளர்ந்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஒரு சின்ன காபி கடை ஆரம்பித்தார். பெயர் "செகண்ட் கப்''!

இன்று கனடாவிலேயே மாபெரும் காபி ஷாப் நிறுவனமாக, பலநூறு கோடி ரூபாய் அளவில் வளர்ந்து நிற்கிறது அந்த சின்னக் கடை! கனடா முழுவதும் அந்தக் கடைக்கு இன்று 360 கிளைகள் இருக்கின்றன.

தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் சில ஆண்டுகளிலேயே கோடீஸ்வரரானார். அவருடைய தன்னம்பிக்கை அவரை குப்பையிலிருந்து தூக்கி சிம்மாசனத்தில் உட்கார வைத்து விட்டது!

நமது உடல் தான் நமது மனத்தைத் தூக்கிச் சுமக்கிறது என நாம் தவறாக நினைத்து விடுகிறோம்.

இல்லை! நமது மனம் தான் நம்மை அதன் விருப்பத்துக்கு ஏற்ப அழைத்துச் செல்கிறது.

உறுதியான மனமே சாதனையின் ஆதாரம்!

அதுமட்டும் இல்லையேல் வாழ்வே சேதாரம்!


சேவியர்

1 comment:

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதான் படிக்கும் போதே மனம் பதறுகிறது...

சாதிக்க மனம் இருந்தால் போதும்..