Monday, March 28, 2011

நாமே தொடங்குவோம்

 
கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடுவான்; எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான் சொல்லும் முன் உணர்வான்; அன்பர்
கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுளரோ?


நட்பின் பிணைப்புக் கயிறாகவும் அன்பைக் காண்கிறது பாரதியின் அந்தப் பாடல். இதுவே இன்னும் சற்று அழுத்தமான பிணைப்பாக, வேற்று நினைவின்றித் தேற்றி விண்ணவனாகப் புரியக் காதலாகிறது. உயிர்த் தோற்றத்திற்கு அத்திவாரமாகவும், வாழ்வுக்கு ஆதாரசுருதியாகவும், எல்லா இன்பங்களுக்கும் மூலமாகவும் அமைந்திருக்கிறது அன்பு.

இல்லறத்தை நடத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை விடப் பொதுவாக வேறு எந்தப் பிணைப்பும் அத்தனை ஆழமாக இருக்க முடியாதென்பதன் காரணமாக, அந்தப் பிணைப்பு காதல் என்பதால் குறிப்பிடப்படுகிறது. ‘இல்லறம் இனிது நடத்தலும், பிறவுயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயனாதலின் இது வேண்டப்பட்டது’ என்கிறார் குறளுக்கு உரை சொல்லும் பரிமேலழகர்.

தனக்கு நெருங்கியவர்கள் அனைவரிடத்திலும் எல்லா மனிதருக்கும் இயல்பாக ஊறும் நேசம் அன்பு என்றால், எவர் துயர் கண்டாலும் தோன்றும் இரக்கம் அருளாகிறது. சிலர் வெளிப்படுத்தாது விடினும், எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருந்துகொண்டிருப்பதுதான் இது. வள்ளலார் சொன்னது போல் ‘வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடும்’ இரக்கம். அன்புக்குப் பிறந்த குழந்தையே இந்த அருள் என்கிறது குறள் - அருள் என்னும் அன்பீன் குழவி!

அன்பின் அழுத்தமான பிணைப்பு காதல் என்றால், அந்தக் காதலைக் கடவுள்பால் செலுத்தி விடுகிற அடியார்களிடம் இன்னும் அழுத்தம் கூடுகிறது. கண்ணை அப்புகிறார்கள்@ கழுத்தை யானையின் காலால் இடறச் சொல்கிறார்கள்@ பிள்ளையைக் கறி சமைத்துக் கொடுக்கிறார்கள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாகிறார்கள்; தன்னையே கொல்ல வருபவனை அறிந்தும் கும்பிட்டு உபசரிக்கிறார்கள்…. “விருப்புறும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற்றென” சகலமும் அன்பால் துடிப்புறும் அழுத்த நிலை பக்தியாகிறது. பகைவனுக்கும் அருளும் நெஞ்சு உண்டாகிறது.

பக்தியோ அருளோ நட்போ காதலோ எல்லாமே அன்புதான். அன்பின்றி வாழ்தல் எளிதாவதில்லை. அன்புதான் இன்பத்தின் ஊற்றும். அன்பின் வழியது உயிர்நிலை. வன்முறையையும் பகைநெஞ்சையும் மாற்றும் சக்தி அன்பு ஒன்றுக்குத்தான் உண்டு. கேட்பதற்கு மதபோதகர்களின் தொணதொணப்புப் போல சலிப்பூட்டினாலும் இதை மறுக்க முடியாமலிருக்கிறது.

நம்முள் தவிர்க்க முடியாமல் எழும் கோபமும் விரோதமும், நமக்குத் தீமை செய்கிறவர்களை மட்டும் அழிக்காமல் நம்மையும் அழித்து முடித்து விடுவதையே செய்கிறது. வெறுப்பு ஆவேசத்தை உருவாக்கி அழிவுகளையே கொண்டுவருகிறது. இந்த வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. உணர்ச்சிகரமான மனநிலையை உருவாக்கி ஒன்றுபட வைக்கிறது. இவ்வாறு வெறுப்பின் மூலமே எதிரெதிர்த் தரப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு விடுகின்றன. நாம் முழுக்க முழுக்க சரி என்றும் எதிர்த்தரப்பு முழுக்க முழுக்கப் பிழை என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம்.

எதிர்த்தரப்பிலுள்ள எல்லோரையும் ஒரே உறைக்குள் போட்டு, நமக்குப் பிடிக்காத தன்மைகளை மட்டுமே கொண்டவர்களாக அவர்களைக் காட்டி, எதிரி என்ற ஒரே வார்த்தையில் சுருக்கி அடையாளப்படுத்துகிறோம். அதேபோல நம்மையும் ஒரே குடுவைக்குள் அடைத்து எதிர்த்தரப்பில் ஒரேயடியாக இருத்தி விடுகிறோம். இந்த வெறுப்பு மெல்ல மெல்ல வளர்ந்து எதிர்த் தரப்பிலுள்ளோர் நாம் பேசத் தகுந்த மனிதர்கள் அல்ல என்றாகிறது. எதிர்த்தரப்புடன் உரையாடல் என்பதற்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் அடைகிறோம். குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியபடி இருக்கும் மிகையுணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ரோசமும் விரோதமும் வன்முறையுமாக நிறைந்திருக்கும் நம் மனங்களினுள் சிறிது சிறிதாகவேனும் அன்புக்கு இடமளிப்பதன் மூலமே நாம் அழிவின் பாதையை விட்டுத் திரும்ப முடியும். அன்பைச் சுரக்க அனுமதிப்பதன் மூலம் பகையுணர்ச்சியைத் தணித்து, வாழ்வைப் பற்றிய நமது பார்வையையும் மாற்றிக் கொண்டால் யுத்தங்களைத் தவிர்ப்பது சுலபமாகிவிடும். வெறுப்பும் ஆத்திரமும் சிக்கலானவை. அன்புதான் எளிமையானது.

அன்பையும் காதலையும் புதைத்துவிட்டுப் பேரழிவில் ஈடுபட்டிருக்கிறது மனிதஇனம். தன்மானத்தின் பெயரால், தனித்துவத்தின் பெயரால், பொன்னுலகக் கனவுகளின் பெயரால், தேசப்பற்றின் பெயரால், பாதுகாப்பின் பெயரால், வழிந்தோடும் கண்ணீரின் பெயரால், பணம்-படிப்பால் கிடைத்த மேட்டிமையின் பெயரால், காட்டிவிட முந்தும் மனிதாபிமானத்தின் பெயரால் இன்று எங்கும் வடித்து இறக்கப்படுவது பயங்கரமே! இதை மாற்றும் சக்தி வன்முறைக்கு இல்லை என்பதையே வரலாறு சொல்கிறது.

வாழ்வு பற்றிய நமது அடிப்படை மனோபாவமே மாற்றமடைய வேண்டியிருக்கிறது. பழிவாங்குதலோ பகை தீர்த்துக் கொள்ளுதலோ அல்ல, இணக்கம் காண்பதே வெற்றிகரமான வாழ்வுக்கு வழி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இணக்கம் காண்பது இழிவுடைய செயலாகவும், இன்னா செய்தோர்க்குப் பதில் இன்னா செய்து காட்டுவதே என்றும் அதுவே மானமிக்க மனிதன் செயல் என்றும் நமக்கிருக்கும் வீர ரோச மனோபாவங்கள், எல்லோர்க்குமான நல்வாழ்வை உத்தேசித்து மாற வேண்டியிருக்கிறது. நல்லிணக்கம் என்பது தோல்வியோ அவமானமோ அல்ல, வாழ்வை வெற்றிகொண்டோம் என்பதேயாம்.

நல்லிணக்கம் என்பது என்ன? எப்படி அது உருவாக முடியும் என்பது பற்றி பேராசிரியர் ஜோன் போல் லெடராக் குறிப்பிடுவது இது:
“நல்லிணக்கம் என்பது எதிர் தரப்பாரிடையே உறவுகளை வளர்ப்பதை மையப்படுத்துகிறது. உறவுகளின் பரிமாணம் முரண்பாட்டின் உணர்வுகளையும், உளவியல் அம்சத்தையும் உள்ளடக்குவதோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற குறைபாடுகளை அங்கீகரித்து, ஒருவரில் மற்றவர் தங்கி வாழும் எதிர்காலத்தை தேடுவதும் ஆகும். இருதரப்பாரும் சந்திக்கும் இடம் ஒன்றை நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இடத்தில்தான் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற வௌ;வேறு சக்திகளும், தொடர்புடைய சக்திகளும் சந்திக்கின்றன. உண்மை, இரக்கம், நீதி, சமாதானம் என்ற வசனங்கள் உட்பட, பிரச்சினைகளில் நேரடியாக ஈடுபட்டுக் காலத்தை வீணடிக்காத முறையில் இருதரப்பாரும் கலந்துரையாடுவதற்கு, ஒரு கோட்பாடு என்ற வகையிலும், செயற்பாடு என்ற வகையிலும் நல்லிணக்கம் பிரச்சினைகளை மறுவடிவமைக்க முயல்கிறது. கடந்த கால துன்பங்களை கைவிடுவதற்கும், எதிர்காலத்தில் இணைந்த நல்வாழ்வை ஏற்படுத்திக் கொள்வதற்கும் புதிய வழிமுறைகளைக் கண்டுகொள்வதுதான் நல்லிணக்கத்தின் பிரதான இலக்கும், முக்கிய பங்களிப்புமாகும்.”

அவலங்கள் நீங்கிய மானுட நல்வாழ்வு குறித்து உண்மையாக அக்கறைப்படுபவர்கள், மனிதர்கள் மற்றும் உயிர்வாழ்க்கை மீதான தங்களது அன்பை வெளிக்காட்ட வேண்டிய தருணம் இது. அதாவது, மற்றவர்களிடம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதோ தொடக்கம் அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்றோ ஒவ்வொருவரும் தத்தம் ‘சரி’களுடன் காத்துக் கொண்டிருப்பது அல்ல. நல்லிணக்கம் என்பதை நம்மிடம் இருந்து தொடங்க என்ன வழி என்றே ஒவ்வொருவரும் கண்டறிந்து முன்காலடியை வைத்தாக வேண்டும். இந்தப் பாதையையும் நாமேதான் முனைந்து உருவாக்கியாக வேண்டும். நாமும் மற்றுமுள்ள மனிதர்களும் இணங்கி இசைந்தொன்றாய் வாழும் வழி இங்கு காண நமக்குள் அந்தப் பேரன்பு கூட வேண்டும்.

மற்றவர்களுடன் வாழ்வது என்ற கலையின் அடிப்படையே அன்புதான். வாழ்வதற்கான இச்சையின் ஆதிவல்லமை அன்புதான்; அன்பின் மேல் கட்டப்பட்ட அறம்தான். நீதி, கருணை, சகோதரத்துவம், காதல், பாசம் என்றெல்லாம் பலநூறு முகம்கொண்டு அதுதான் மனிதனைக் கூடி வாழச் செய்தது; சமூகமாக ஆக்கியது; விலங்குகளின் தலைமகனாக நிறுத்தியது. இனிமேலும் அதுவே நம்மை அழிவிலிருந்து மீட்கக் கூடும். அன்பு செலுத்த இயலாமல் போவதே நரகம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளக் கூடும்.

உண்மையான மனிதநேயம் என்பது பகைவெறுப்பையோ விரோதத்தையோ தூண்டும் விதமாக இராது; மக்களை அவற்றிலிருந்து மீட்டு இணக்கத்தினால் உருவாகும் இன்ப வாழ்வுக்கு இட்டுச் செல்வதாக இருக்கும்.

No comments: