Friday, March 25, 2011

சிதைவும் வலியும் வெளியே இருந்து பார்த்தால் நல்ல சண்டைப் படம்தான்!

பெரும்பாலான தமிழ்ப் படங்கள், தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம், நாமே நம் உணர்வுகளை நாசமாக்கிவிட அனுமதித்த ஒரு சுயபரிதாபமே மிஞ்சுகிறது. இதுபற்றி எத்தனை கிண்டல்களையும் எரிச்சல்களையும் எழுதி, வாசித்து, பதிவு செய்துவிட்டோம்!

போகிறவர் காண்கிறவர்களெல்லாம் எட்டி ஒரு உதை போட்டுவிட்டுப் போகத் தூண்டுவதாக, எப்போதும் வழியில் படுத்துக் கிடக்கும் தெருநாய் போலவே இன்னமும் இவை இருந்துகொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லை மீறிய அளவில் மிகைப்படுத்துவதாகவும், நாடகத் தன்மையான வசனங்களும், யதார்த்தத்துக்குச் சற்றேனும் ஒத்துவராத ஆர்ப்பாட்டங்களுமாக பேராதரவு பெற்றுத் தமிழ் மனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருக்கின்றன சினிமாவும், தொலைக்காட்சியும்! திணற வைக்கும் மிகைத்தன்மையே இவற்றின் வாய்பாடு. வெறும் வாய்வீச்சுக்களோடு தேய்ந்து சிதைவதற்கு நம்மைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றன இவை.

சினிமாவின் அடிப்படைப் பண்புகளான காட்சிகளால் சொல்லுதல், சொல்லாமல் சொல்லுதல் என்பவை பற்றி எந்தப் பொருட்படுத்தலுமில்லாமல், பஞ்ச் வசனங்களும் பறந்து பறந்து அடித்தலுமாக… ‘நான் அடிச்சா தாங்க மாட்டாய் நாலு மாசம் தூங்க மாட்டாய்’ என்று அந்தரத்தில் மிதந்து மிரட்டுகிறது நம் சினிமா.

உலகளவில் சினிமா என்பது மனிதருக்குத் தந்த பெரிய மாற்றமானது, சொல்லாமல் விடுபடும் பகுதிகளைக் கொண்டே காட்சிகளையும் கதையையும் நமக்குள் தொகுத்துக் கொள்ளும் தன்மையை நமக்குப் பழக்கப்படுத்தியதுதான். துண்டு துண்டான காட்சிகளிலிருந்து ஒரு கதையை – கருத்தை தொகுத்துப் புரிந்துகொள்ளும் இயல்பு நமக்குள் வளர்ந்திருப்பதென்பது சினிமா கொண்டுவந்த சாதனைதான்.

சொல்லாமல் சொல்வதுதான் அழகு. நாடகம், இசை, ஓவியம், சினிமா எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். செக்கோவின் கதைகளைப் பற்றிச் சொல்லும் போது, வரிகளுக்கு இடையே உள்ள விஷயம்தான் வரிகளில் உள்ளதை விட அழுத்தமானதாக இருக்கும் என்பார்கள். ஒரு நல்ல கவிதையிலும் அதன் வரிகளுக்கு இடையேயுள்ள மௌனம்தான் அதன் தரத்தை உயர்த்துகிறது என்பர். வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லி வெள்ளையாக நிற்கும் கவிதைகள் வெட்கங் கெட்டவை என்றார் சுந்தர ராமசாமி.

இசையிலும் அப்படித்தான். இரு ஸ்வரங்களுக்கிடையே புலப்படாமல் இருக்கும் அதிர்வைத் தேடுவதில்தான் இசை அலாதியான சுவை பெறுகிறது. பிரபல இசைமேதை மோஸார்ட்டின் இசைத்தொகுப்பு வாசிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் முடிவில் விமர்சகரொருவர் இப்படி அறிவிப்பு செய்தார்: “நீங்கள் இதுவரை கேட்ட இசை அமேதியஸ் மோஸார்ட்டினுடையது. அதைத் தொடர்ந்து வந்த நிசப்தமும் மோஸார்ட்டினுடையது.”

இப்படி சொல்லாமல் சொல்லப்படும், பார்க்காமல் பார்க்கப்படும், கேட்காமல் கேட்கப்படும் விஷயங்களுக்கு எப்போதும் அழுத்தமும் தாக்கமும் அதிகம். நாங்களோ எல்லாவற்றையும் ஆர்ப்பாட்டமாக வாய்வலிக்க முழக்கித் தீர்ப்பதிலேயே மற்றவற்றைக் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பூங்காவில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை ஒரு பெண் வந்து தொட்டு எழுப்பினால் அவன் திடுக்கிட்டு எழுவதை சினிமாவில் எந்த வார்த்தையுமின்றியே காண்பித்துவிட முடியும். மாறாக, “நாரீமணியே! யாருமற்ற இந்த உத்தியாவனத்திலே நான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்குங்கால், நீ மெல்ல வந்து, நின்று, எனைத் தொட்டு எழுப்பியதன் காரணம் என்னவோ?” என்பதான எடுப்புகளிலிருந்து இன்றைக்கும் நாம் பெருமளவு மாறிவிடாமலிருப்பது ஒருவகையில் நம்மைப் பற்றித் தெளிவுபடுத்தி விடுகிறது.

நிஜ வாழ்க்கையிலும் அந்தக் கலைஞர்களின் வீர வசனங்களுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து மயங்குவது வரை இது நீடிக்கிறது. தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களின் உணர்ச்சிகர வசனங்கள், உளறல்கள் போலவே நிஜ வாழ்க்கையிலும் அதேமாதிரியான அவர்களது மிகைநாடகங்கள் நிகழ்த்தப் பெறுகின்றன. மக்கள் மோட்டுவளமாகத் தங்களையும் அழித்து மற்றவர்களையும் அழிக்கத் தூண்டுமளவுக்கு இவர்களது முட்டாள்த்தன வீராவேசங்கள் பகட்டாக வீசப்படுகின்றன. நிஜவாழ்க்கையிலும் தேவையற்ற அதே மிகைநடிப்புடன் வலம்வருவது பற்றி இவர்களுக்கு வெட்கமெதுவுமில்லை.

நிஜத்தைக் காண மறுக்கும் பிடிவாதம், கற்பனையில் உள்ள பெருமிதத் திளைப்புகளுக்கே முக்கியத்துவம், ஆர்ப்பாட்டமான துன்ப அரற்றுகையில் திருப்தி, ஐந்து சதத்துக்கும் பிரயோசனமில்லாத வெற்று வீர முழக்கங்கள், உண்மைநிலையை ஆராய முன்வராது தங்களது நம்பிக்கைகள் கனவுகளுக்காக மக்களைப் பகடையாக்குதல் என்று ஒரே படுத்தாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிலும் மிகைத்தனங்களையே வாரிக்கொட்டும் தங்கள் வழக்கத்தால், தங்களுக்குச் சம்பந்தமில்லாத அல்லது தெரியாத இடங்களிலும் மூக்கு நுழைத்துச் சிக்கல்களை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்தக் கலைஞர்கள் போடும் கூப்பாடுகள் குதியாட்டங்கள் எல்லாம் உண்மைநிலைகள் தகவல்களை அறிந்துகொள்ளாத – அறிய முற்படாத வெறும் முட்டாள்த்தன ஆவேசத்திலிருந்து பிறப்பவை மட்டுமே. இலங்கைக்கு வெளியேயுள்ள தமிழர்களுக்கேயுரிய – எந்த நோவுமற்ற சௌகரியங்கள், கனவுகள், பெருமித மிதப்புகள், போதைகளுக்கு ஏற்ற வகையிலேயே இவர்களது துள்ளுகைகள் அமைகின்றன.
இங்குள்ள மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தாத இந்தப் பொங்குகைகளை மறுத்துப் பேசாமல் அங்கீகரித்து, அதை நமக்கான ஆதரவுத்தளம் என்று நினைத்து மயங்கிய பிழையே இதுகாலவரையான நம் துன்பங்களுக்கும் காரணமாகிவிட்டது. இங்கிருந்து போகிறவர்களை ஏதோ ராட்சஸர்களின் பூமியிலிருந்து தப்பி வருகிறவர்கள் போல வரவேற்றுப் பொழியப்படும் மிகை அனுதாபத்தில் கிறங்கி, யதார்த்த நிலைகளை எடுத்துச் சொல்லாத தவறை நம்மவர்களும் செய்தபடி இருந்தார்கள். நம் பிரச்சினை என்ன என்பதை சரிவரத் தெளிவுபடுத்தாமல், கொலைக்குத் தப்பி மயிரிழையில் உயிர்பிழைத்துக் கொண்டிருப்பதான போலிச் சாகசமே காட்டுவதில் போதை கொண்டிருந்தோம். அதனால்தான், நமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் தீர்வொன்றைக் காண்பது குறித்துப் பேசுவதை விட சிங்களவர்களைத் துவம்சம் செய்யும் வெற்று வசனங்களிலேயே அங்குள்ள நடிகர்கள் திருப்தி கண்டார்கள் – கண்டுகொண்டிருக்கிறார்கள்.

அவர்களை அப்படியே விட்டுவிட்டு, நாம் நம்முடைய பிரச்சினைக்கு நம்மெல்லோருடையதுமான இணைந்த முயற்சியிலேதான் தீர்வை நெருங்கியாக வேண்டும். ஒரே நாட்டுக்குள் சேர்ந்து வாழப்போகும் நாம்தான் நமக்கிடையேயான பேச்சுக்களில் இறங்கியாக வேண்டும். தலைவர்களிடையே தொடங்கும் பேச்சு சமூகங்களுக்கிடையே எனவும் மாற வேண்டும். உசுப்பேற்றி விட்டுக்கொண்டிருக்கும் வெளியாரினால் இங்கு மாறப்போவது எதுவுமில்லை. நமக்கான வழியை நாமேதான் செய்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துவிட்டால், இதோ பாதை திறந்துவிடும். நம்புவோம். நல்லதை நினைத்து நடப்போம்.

No comments: