Monday, March 21, 2011

மனம்தான் பகை; அதை வேட்டையாடுவோம் வாருங்கள்!

இணைய வலைப்பக்கமொன்றில் வாசிக்க கிடைத்த ஒரு குட்டிக்கதை:

பிரபஞ்சத்தைப் படைத்துக் கொண்டிருந்தான் கடவுள். வேலை இன்னும் இழுத்துக் கொண்டே கிடந்தது. கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் கிரகங்களையும் உருவாக்க வேண்டுமென்றால் சும்மாவா? நெற்றியில் வழிந்த வியர்வையைக் கைவிரல்களால் வழித்து விட்டுக் கொண்டான். சூரிய மண்டலம் சம்பந்தமான வேலைகளும் முடிந்து விட்டன. ஒரு நட்சத்திர மண்டலமும் இன்னொரு நட்சத்திர மண்டலமும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாதவாறு, யாராலுமே புரிந்து கொள்ள முடியாத கணித சூத்திரங்களை உருவாக்கி எல்லாவற்றையும் இணைக்க வேண்டும். அதற்குத் தேவை, காலம். காலமும் உருவாக்கப்பட்டு அந்த வேலையும் முடிந்தது. பூமிக்குத் தண்ணீரும் காற்றும் புவியீர்ப்பு விசையும் அளிக்கப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் ஒரு வேலை பாக்கியிருந்தது. இருப்பதிலேயே ஆகக் கடினமான வேலை அதுதான் என்று தோன்றியதால் ஒரு தேவதையைத் துணைக்கு அழைத்தான் கடவுள்.

“சிருஷ்டி முடிந்து விட்டது. ஆனால் ‘இந்த சிருஷ்டியின் காரணம் என்ன? இதன் அர்த்தம் என்ன?’ என்பதன் பதில் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது. அந்த பதில் ஒரு பொக்கிஷம். விலைமதிக்க முடியாத அந்த பொக்கிஷத்தை நீதான் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். செய்வாயா?” என்று கேட்டான் கடவுள்.

“ஓ நிச்சயமாக. அந்தப் பொக்கிஷத்தை யாராலும் ஏறி வர முடியாத ஒரு மலை உச்சியிலே கொண்டு போய் வைத்து விடுகிறேன், பிரபு.”

“மனிதர்களுக்கு அதெல்லாம் ரொம்ப சுலபம்.”

“அப்படியானால் அதை ஒரு பாலைவனத்தின் மத்தியிலே வைத்து விடுகிறேன். யாராலும் நெருங்க முடியாது.”

“ம்ஹம். ஒட்டகம் என்ற பிராணியைப் படைத்திருக்கிறேன். அதில் ஏறி அங்கேயும் வந்து விடுவார்கள் மனிதர்கள்.”

“அப்படியானால் நிலவில் வைத்து விடுகிறேன். அல்லது, இந்தப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள நட்சத்திரம் ஒன்றில் வைத்து விடுகிறேன். அங்கே அவர்களால் நிச்சயமாக வர முடியாது.”

“இல்லை. அங்கே வருவதற்கும் அவர்கள் வாகனத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அவர்களுக்கு அப்படி ஒரு சக்தி வாய்ந்த திறனை அளித்திருக்கிறேன். மனிதர்கள் மற்ற பிராணிகளைப் போன்றவர்கள் அல்ல.”

சொல்லிவிட்டு சிறிது நேரம் யோசித்தான் இறைவன். “ம்….அந்த ரகசியமான இடம் என்னவென்று தெரிந்து வி;ட்டது. வாழ்வின் சூட்சுமத்தை மனிதனுக்குள்ளேயே வைத்து விடு. அதுதான் ரொம்பவும் பத்திரமான இடம். சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடம். அங்கே வைத்தால்தான் அதன் அருமை மனிதனுக்குத் தெரியும்….”

நாம் எளிதில் தேடிக் கண்டு கொள்ள முடியாத இடங்களும் புதையல்களும் நமக்குள்ளேயே இருப்பதை யார் மறுக்க முடியும்? ஒவ்வொரு கணப் பொழுதுகளிலும், எதிர்பார்த்திராத எதையெதையோ வெளிப்படுத்தி நம்மை எப்போதும் வியப்பிலாழ்த்தும் இந்த மனதை புரிந்து கொள்வது சுலபமாக இல்லை. ‘வெயில் நுழைபறியா குயில் நுழை பொதும்பர்’ என்கிற ரகசிய இருட்டாகத்தான் அது இருக்கிறது. மனசையறிய மார்க்கமுண்டா என்றுதான் தத்துவ ஞானிகளும் யோகிகளும் கவிஞர்களும் விஞ்ஞானிகளும் கூட தேடித் தேடிச் சலிக்கிறார்கள்.

“என் மனசுள் குமுறிக் கொண்டிருக்கிறது எரிமலைகள். குறுக்கும் நெடுக்கும் ஓடுகிறது காட்டாறுகள்” என்று விக்ரமாதித்யன் சொல்வது போல களேபரங்களுடனும் கரைகாணா எண்ண ஓட்டங்களுடனும்தான் அது இருக்கிறது. எங்கோ இண்டு இடுக்குகளில் ஒளிந்திருந்து திடீர் திடீரென்று வெளிப்பட்டு, ‘நமக்குள்ளிருந்ததா இது’ என்று நம்மைத் திகைக்க வைப்பவை ஏராளம். ஏன்? எதற்கு? இப்படி நடக்கிறது – நடந்து கொள்கிறோம்? என்று புரிந்து கொள்ளவே முடியாமல் எப்போதும் மனம் ஆடும் கூத்துகள் பலப்பல.

“ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்! அடுத்ததை நோக்கி அடுத்தடுத் துலவுவாய்!  நன்றையே கொள் எனிற் சோர்ந்து கைநழுவுவாய்!  விட்டு விடென்றதை விடாது போய் விழுவாய்!  தொட்டதை மீளவுந் தொடுவாய்!  புதியது காணிற் புலனழிந்திடுவாய்!  புதியதை விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்!....  பிணத்தினை விரும்பும் காக்கையே போல அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்!....  உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்!  இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்!  இன்பமே நாடி எண்ணிலாப் பிழை செய்வாய்!  இன்பங் காத்துத் துன்பமே உழப்பாய்!  இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்!.... என்றெல்லாம் மனதின் கூத்துகளை விவரித்து அதனோடு விரிவாக வழக்காடுகிறான் பாரதி.

“துணி வெளுக்க மண்ணுண்டு; தோல் வெளுக்கச் சாம்பருண்டு
மணி வெளுக்கச் சாணையுண்டு; மனம் வெளுக்க வழியில்லையே….” என்று வருத்தப்படுபவன், அதனோடு போராட முடிவெடுக்கிறான்.

“மனம்தான் சத்துரு; வேறு நமக்குப் பகையே கிடையாது. மனம்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு, நம்மை வேரறுக்கிறது; அடுத்துக் கெடுக்கிறது.
மனம்தான் பகை. அதைக் கொத்துவோம் வாருங்கள்; அதைக் கிழிப்போம் வாருங்கள்; அதை வேட்டையாடுவோம் வாருங்கள்….”

தன் மனதை ஜெயிக்கத் தனியொருவனால் ஆகாது என்றுணர்ந்து எல்லோரையும் துணைக்கழைக்கிறான்.
மனநலத்தைப் பாதுகாத்துக் கொள்வதே மலையினும் மாணப் பெரிது என்று உணர்த்துகிறார் வள்ளுவரும். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை அதிகாரங்களுக்கு அடுத்ததாக அறன் வலியுறுத்தலைச் சொல்லும் அவர், “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

இந்த வாழ்க்கையே சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. நாமெல்லாம் ஜெயிக்க விரும்பித் தோற்றுக் கொண்டிருக்கும் சூதாடிகளாகத்தான் இருக்கிறோம். இந்த மனம் நம்மை எங்கெல்லாம் இழுத்துச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எலாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே” என்கிறது பராபரக்கண்ணி. மனதை அடக்கக் கற்றுக் கொள்ளாமல் வெற்றியில்லை என்பதே தாயுமானவரதும் செய்தி. அறிய முடியாததாய் இருப்பதை அறிதலும், பிறகு அதை அடக்குதலும் என்கிற பெரியதொரு சவாலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் ரகசியம் நமக்குள்ளேதான் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு வெற்றி பெறுவதா அல்லது கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைப்பதா என்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

இங்கு மாற்றங்கள் உருவாக வேண்டும் என்றால், அதற்கு நம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பழைய வெறுப்பிலும் பகையிலும் தொங்கிக் கொண்டிராமல், எதிர்காலத்தை யோசித்து நம்மைப் புதியவர்களாக்கிக் கொள்ளவும், புதுப்பாதை காணவும் வேண்டியிருக்கிறது. நம்மை வாழவிடாமலடிக்கும் வரட்டுப் பிடிவாதங்களையும், எத்தனையோ ஆண்டுகளாய் மனதில் ஏறி இறுகியிருக்கும் வீம்புகளையும் விட வேண்டும். மற்றவர்களை உணர்தல், மக்கள் வேதனைகளை அறிதல், ரோசங்கள் பெருமைகளுக்கு மேலாக அழிவோலமில்லா வாழ்வை முன்வைத்தல், பகைமறத்தல், சகித்தல், பன்மைத்துவ வாழ்வமைத்தல், நாண்டு கொண்டு நில்லாமல் நலம் நாடி முன்னகர்தல் என நம்பிக்கையின் திசையில் நம் மனங்களைத் திருப்ப வேண்டியிருக்கிறது.

மனிதர்களை விலக்கி வீம்பு காட்டும் மனதை எல்லோரது நன்மைக்காகவும் இணக்கம் கொள்ளப் பழக்குவோம். எளிமையானதும், எல்லோரும் இன்புற்றிருப்பதுமான ஒரு வாழ்வுக்காக நாம் இறங்கிச் செல்வதில் எந்த இழிவுமில்லை. இணங்கியும் இணங்க வைத்தும், இந்த வாழ்வை வெல்லும் திண்ணிய மனங்களைப் பெற, சித்தர்கள் போலவே நாமும் ஏங்குவோம். “மனதை ஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி எனதறிவை அம்பாக்கி எய்வதினி எக்காலம்?”

3 comments:

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு.. மேலும் இப்படியான பதிவுகளை நான் எதிர்ப்பார்க்கிறேன் .. நன்றிகள் !

Rex said...

அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள் & நன்றிகள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மற்றவர்களை உணர்தல், மக்கள் வேதனைகளை அறிதல், ரோசங்கள் பெருமைகளுக்கு மேலாக அழிவோலமில்லா வாழ்வை முன்வைத்தல், பகைமறத்தல், சகித்தல், பன்மைத்துவ வாழ்வமைத்தல், நாண்டு கொண்டு நில்லாமல் நலம் நாடி முன்னகர்தல் என நம்பிக்கையின் திசையில் நம் மனங்களைத் திருப்ப வேண்டியிருக்கிறது.//

அற்புதமா சொல்லியிருக்கு..நல்ல பல குறளும் எடுத்துக்காட்டும்.. மனம் விட்டு நீங்காது..


கிட்டத்தட்ட இதே மாதிரி இன்றைய என் பதிவும்.. மக்கள் பற்றி நினைக்க சொல்லியே.. சமூக அக்கறையில் ஈடுபடவும்.,.

http://punnagaithesam.blogspot.com/2011/03/karthik-llk.html