Monday, March 14, 2011

எனில், நாங்கள் வாசிப்பதற்காகவே இருக்கிறோம்!

 
“சொர்க்கம் என்பது ஒரு மாபெரும் நூலகம் என்றே நான் எப்போதும் கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார் ஜோர்ஜ் லூயி போர்ஹே. “நூலகம் ஒரு மாயக்கூடம். அங்கு பலவகை வசீகர ஆவிகள் உலவுகின்றன” என்று எமர்சன் சொன்னார். “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்” என்று நம் வாசிகசாலைகள் அனைத்திலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் செயற்பாடு மனதுக்கு இன்பம் தருவதுடன் நம் வாழ்க்கைக்கும் எதையோ தருகிறது என்றே உணர முடிகிறது.

“வாழ்க்கையில் ஏற்பட்ட சூன்யத்தை புத்தகங்களால் நிரப்புகிறேன்” என்று பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் பெண் பாத்திரம் கூறுகிறது. சின்ன வயதில் நூல்நிலையத்திற்குப் போனபோது, அங்கே அவ்வளவு புத்தகங்களையும் இலவசமாகவே வாசிக்கலாம், பணம் கொடுக்கத் தேவையில்லை என்பது தனக்கு தாங்கமுடியாத வியப்பும் பரவசமுமாக இருந்தது என்ற கவிஞர் வைரமுத்துவின் உணர்வும் நம்மில் பலர் அனுபவித்திருக்கக் கூடியதே. ஜெயமோகன், “நூல்நிலையங்கள் அன்னையர்கள், பால்நினைந்தூட்டும் கருணைகள்” என்று எழுதினார். வாசிப்பின் மூலம் புதியன அறியும் போதையைப் பழகிக் கொண்டுவிட்ட ஒருவருக்கு புத்தகங்களே வாழ்வின் பெருங்கருணை என்று தோன்றுவதில் விசித்திரமில்லை. “வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் பொழுது” என்கின்ற ஆழ்வாரின் மனநிலை, புத்தகங்களோடு தொடர் பழக்கம் உடைய ஒருவரும் தமக்குக் கிடைப்பதாகச் சொல்லிக் கொள்ளக் கூடும்.

மனிதன் என்பவனை எவ்வளவுதான் அறிய முயன்றாலும், அறிய முடியாத விதத்திலேயே அவன் இருக்கிறான். வாழும் காலத்துக்குள் கொஞ்சமேனும் அறிந்துகொள்ள புத்தகங்கள் உதவ முடியும். மனம் நிகழ்த்தும் பல ஜாலவித்தைகளை புத்தகங்களின் வழியே ஒரு வேடிக்கை போலப் பார்த்துக் கொள்ள முடிகிறது. மனித உள்ளத்தின் மர்மத்தை அறியும் மார்க்கங்களினுள் ஒன்று வாசிப்பு. மர்மத்தின் மந்திர ஒளி சிதறிக் கிடக்கும் மனதின் வீதிகளில் உலவ ஒரு வாய்ப்பு. எல்லாப் புத்தகங்களிலும் அதை எழுதிய மனதும் பதிக்கப்பட்டிருக்கிறது.

“நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்” என்றார் தெகார்த்தே. கூடவே, வாசிப்பதால் நான் வாழ்கிறேன் என்றும் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. “என்னிடம், உலகில் ஒருவரை மட்டுமே உயிர்ப்பிக்க வைக்க முடியும். நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் எனக் கடவுள், உலகம் அழியும் நாளில் கேட்டால், நான் ஷேக்ஸ்பியரையே உயிர்ப்பிக்கக் கோருவேன். எனில், ஷேக்ஸ்பியரே பின் இந்த முழு இயக்கத்தையும் உருவாக்கி விடுவாரே!” என்று போர்ஹேயும், “ஒவ்வொரு மனிதனும் ரொஸ்ரோயெவ்ஸ்கியைப் படித்தால் உலகம் இன்னும் சற்று வாழத் தகுந்த இடமாக மாறிவிடும். அதில் சந்தேகம் இல்லை” என்று சாருவும் கூறுவது இதையாகத்தான் இருக்கும்.

இதுபோல மற்றவர்கள் சிலர் கூறுவதையும் இங்கு தொகுத்துக் கொள்ளலாம். கவிஞர் சுகுமாரன் சொல்கிறார்: “பொழுதுபோக்கோ, தோளை உயர்த்திப் பீற்றிக் கொள்வதற்கான வாய்ப்போ அல்ல இலக்கிய வாசிப்பு என்ற ஞானம் பிறந்த பின்னர், நூல்களில் தேர்வு ஏற்பட்டது. வாழ்க்கையைச் செழுமைப்படுத்திக் கொள்ளும் கணங்கள் புத்தகங்களில் மறைந்திருக்கின்றன என்ற தெளிவு வந்தபோது, வாசிப்பின் பொருளே மாறியது. வாழ்க்கையை உணர்வோ அல்லது அறிவோ சந்திக்கும் ஒரு கணத்தையாவது எந்த புத்தகமும் தராமலிருந்ததில்லை. அந்த எழுத்துக்களின் சாரத்திலிருந்து சிறு அணுவாவது என் நாளங்களுக்குள் கரைந்திருக்கிறது. அந்த அணுக்கள் இல்லாமல் சிந்தனையோட்;டம் இல்லை. என் எழுத்தும் இல்லை. வாழ்வின் துடிப்புமில்லை.”

எஸ். ராமகிருஷ்ணன் சொல்கிறார்: “புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. கதை, கட்டுரைகள், கவிதைகள் என்று புத்தகத்தின் பொருள் வேறுபட்டு இருந்தாலும் எல்லா புத்தகங்களும் ஒரு நினைவை சுமந்துகொண்டு இருக்கின்றன. பள்ளி நாட்களில் சில்லறை சில்லறையாக சேர்த்து வைத்து வாங்கிய ஆங்கில அகராதி இன்று வெறும் புத்தகமாக மட்டும் தென்படவில்லை. அது என் வளர்ச்சியின், நினைவின் அடையாளம். அதிலிருந்து எனக்கு என்ன கிடைத்தது என்பது நான் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத அந்தரங்கம்.”

. முத்துலிங்கம்: “மனிதன் அனுபவிக்கக் கிடைத்த எத்தனையோ இன்பங்களில் வாசிப்பு இன்பம் மேலானது. எவ்வளவு வாசித்தாலும் தெவிட்டுவதில்லை. ஒன்றுக்குப் பின் ஒன்றாக பிரமிக்க வைக்கும் புத்தகங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன…. புத்தகத்தில் உண்மையான பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது. ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தியோராவது புத்தகத்தில் வியப்பதற்கு விசயம் குறைந்துகொண்டே வரும். எனக்கோ வியப்பு கூடிக்கொண்டு வருகிறது. இது பொது விதியாக இருக்க முடியாது, எனக்கு மட்டும் சம்பவிக்கிறது என்றே நினைக்கிறேன். ஒருவேளை அனுபவம் கூடக் கூட நல்ல புத்தகங்களைப் படிப்பதற்குத் தெரிவு செய்யும் திறமை என்னிடம் அதிகமாகியிருக்கலாம். முன்னெப்போதும் இல்லாத மாதிரி தரமான புத்தகங்களின் வருகையும் அதிகமாகியிருக்கிறது. அவை தரும் வாசிப்பு இன்பமும் கூடுகிறது. அருமையான சொற்றொடர்கள் வரும்போது, ‘அட, இது எனக்குத் தோன்றாமல் போயிற்றே’ என்று என்னையறியாமல் தலையில் அடிப்பதும் அதிகமாகிறது. என்னுடைய எஞ்சிய வாழ்நாள் மட்டும் குறைந்துகொண்டே வருகிறது.”

ஜெயமோகன்: “நினைவுகூர்கிறேன், நான் இலக்கியத்தைக் கண்டடைந்த நாட்களை! நாஸ்தர்தாம் தேவாலயத்தின் ஒவ்வொரு கூழாங்கல்லும் விக்தர் ஹ்யூகோவை விட எனக்குத் தெரிந்தது. லண்டன் சந்துகளில் எனக்கு சற்று முன்னால் சார்ள்ஸ் டிக்கன்ஸ் நடந்தார். வங்கத்து நீர்நிலைகளில் மென்காற்றின் அலையெழுவதை தாகூருடன் சேர்ந்து கண்டேன். எனக்கு தடையே இல்லை. நான் ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே பேருந்து வரும் ஒரு சிற்றூரில் பிறந்து ஒரு நகரத்தைக் கூட காணாமல் வாழ்ந்த சிறுவன் அல்ல அப்போது. எனக்கு தூந்திரப் பனி தெரியும். அராபிய மணல் தெரியும். எனக்கு காலமில்லை. அக்பரையும் தெரியும் நெப்போலியனையும் தெரியும். ஒரு மந்திரக்கோல் என்னைத் தொட்டது. நான் விரிந்து பரந்து உலகை நிறைத்தேன். ஓர் உடலில் இருந்துகொண்டு ஓராயிரம் வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆம். அதற்காகவே இலக்கியம்.”

R.P. ராஜநாயகம் தனது வலைத்தளத்தில் சொல்கிறார்: “தி. ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இன்று கனவில் வந்தார். இதுவரை கனவில் கூட வந்ததே இல்லை. அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது. என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன். காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து வந்ததை சொன்னேன். தொலைத்துவிட்ட எல்லாவற்றையுமே அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன். காயங்கள், அவமானங்கள், சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே…. அவருடைய ‘சத்தியமா’ கதையில் வருகிற சிறுவன் நான் தான், அந்த ‘பரதேசி வந்தான்’ கதையில் வருகிற பரதேசியும் நான் தான் என்றேன். அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்தபோது பூஜை அறையில் பிள்ளையார், முருகன், லிங்கம், விஷ்ணு, ஆண்டாள் இவற்றின் படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன். இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து, ‘ஏன் அப்படி செய்தீர்கள்?’ என்று பதறி வருத்தப்பட்டார். கனவு எப்போது முடிந்தது. தெரியவில்லை. கனவுக்கு அர்த்தம் என்ன? கடவுளை தூக்கிபோட்டு விட்ட என்னால் தி.ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை. தி.ஜா வும் என்னோடு இருக்கிறார். ஒருநாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான். வெகு துயரங்களை அனுபவித்தவன், கரமசோவ் சகோதரர்களை எழுதிய கலைஞன். இது என் நம்பிக்கை. அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன்.”


நாம் அதுவரை அறியாத வாழ்வின் பகுதிகளை புதிது புதிதாக அறியத் தந்துகொண்டிருக்கும் புத்தகங்களை, வாழ்வின் பெருங்கருணைகள் என்றே சொல்ல வேண்டும். அவை நம் வாழ்க்கையை விரிவுபடுத்துகின்றன, விளங்க வைக்கின்றன, வாழும்படியாகச் செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. “உலகம் புத்தகமாவதற்காகவே இருக்கிறது” என்றார் மல்லார்மே. எனில், நாங்கள் வாசிப்பதற்காகவே இருக்கிறோம்.

No comments: