Friday, March 11, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

'டைட்டானிக்' பட ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோவுக்கும் 'ரெட் ரைடிங் வுட்' ஹாலிவுட் படத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்பதற்கு முன்பு இப்பக்கத்திலுள்ள தலைப்பை படித்ததும், ஒரு கிராமம் அல்லது ஊரில் யார் ஓநாய் மனிதன் என்று கண்டறியும் சஸ்பென்ஸ் விளையாட்டு தென்படுகிறதல்லவா... அதை ஒரு எட்டு பார்த்துவிடுவோம்.

யெஸ், ''ரெட் ரைடிங் வுட்' ஹாலிவுட் படத்தின் கரு இதுதான். ஆனால், இந்தக் கருவுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. மேற்கத்திய நாடுகளில் பாட்டி சொன்ன கதையாக பல்வேறு இன, மொழி மனிதர்களால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட இந்த நாட்டுப்புறக் கதை, இப்போதுதான் திரை வடிவம் பெறுகிறது.

டேவிட் லெஸ்லி ஜான்சன் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருந்தாலும் இன்றுவரை 333 பேர் இதற்கு வெவ்வேறு வகையில் தங்கள் நிலம், மரபு, பண்பாடு சார்ந்து கதை வடிவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். என்றாலும் 'லிட்டில் ரெட் ரைடிங் வுட்' என்ற புகழ் பெற்ற நாட்டுப்புறக் கதையே இவை அனைத்துக்கும் ஆதி வடிவமாக கருதப்படுகிறது.

உண்மையில் இந்த நாட்டுப்புறக் கதையில் வருபவள் சின்னஞ்சிறு சிறுமி. அவள் சிக்கிக் கொள்வது ஓநாயிடம். ஆனால், காலம் மாற மாற... சிறுமி, டீன் ஏஜ் அழகியானாள். ஓநாய், ஓநாய் மனிதனானான்.

இப்படி இந்தக் கதை பல்வேறு தலைமுறைகளை சேர்ந்தவர்களின் நாக்குகளில் உருண்டு, புரண்டு, தாண்டவமாடி பல கோடி செவிகளை அடைந்த வரலாற்றை சார்லஸ் பேரால்ட் நூலாக தொகுத்திருக்கிறார். அதேபோல், இந்த நாட்டுப்புறக் கதையை உளவியல் ரீதியாக ஃபிராய்டிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் நல மனோத்தத்துவ நிபுணரான புரூனோ பெட்டல்ஹம்.

இவையனைத்தையும் கமா, ஃபுல் ஸ்டாப் விடாமல் வாசித்துத்தான் 'ரெட் ரைடிங் வுட்' படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பதாக நாட்டுப்புற கதைகளின் அம்மன் மீது கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் டேவிட் லெஸ்லி ஜான்சன்.

ரைட், என்ன கதை?

ஒதுக்குபுறமான ஒரு கிராமம், அங்கு வாழும் வெலேரி என்னும் அழகிக்கு பீட்டர் என்னும் இளைஞன் மீது காதல். ஆனால், அவளது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. பதிலாக தாங்கள் வாங்கிய கடனுக்கு பிராயசித்தமாக கடன் வாங்கியவரின் மகனுக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். எனவே தன் காதலனுடன் ஊரை விட்டு ஓட வெலேரி நாள் குறிக்கிறாள்.

இதற்கிடையில் அந்த கிராமத்தை சேர்ந்த மனிதர்கள், மாதத்துக்கு ஒருவராக ஓநாய் மனிதனுக்கு இறையாக்கிரார்கள். வெலேரியின் சகோதரி கூட இப்படி பலியானவள்தான். இதிலிருந்து தப்பிக்க, கிராமத்து பெரிய மனிதர்கள் சூனியக்காரர்களில் ஆரம்பித்து பலரையும் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால், யாராலும் ஓநாய் மனிதனிடமிருந்து அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இறுதியாக அந்தக் கிராமத்துக்கு வரும் ஃபாதர் சாலமன், ஓநாய் மனிதனை தான் விரட்டுவதாக சொல்கிறார். அதற்கான வேளைகளில் அவர் இறங்கும்போதுதான் ஓநாய் மனிதன் வெளியில் இல்லை...

அந்தக் கிராமத்தில் வசிப்பவர்களிலேயே ஒருவர்தான் என்பது தெரிய வருகிறது. ஓநாய் மனிதனை கண்டு பிடித்தார்களா... வெலேரி யாரை திருமணம் செய்து கொண்டால்... என்ற கேள்விக்கான விடையே 'ரெட் ரைடிங் வுட்' படம்.

ஐம்பைத்தைந்து வயதாகும் கேதரீன் ஹார்ட்விக்கீ இயக்கியிருக்கும் இப்படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ நடிக்கவில்லை. ஆனாலும் இப்படத்துக்கும் அவருக்கும் தொடர்பு உண்டு.

யெஸ், இப்படத்தை தயாரித்திருப்பவர், லியனார்டோ டிகாப்ரியோதான்.

கே.என்.சிவராமன் 

No comments: