Wednesday, March 9, 2011

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

மக்களின் உடனடி வாழ்க்கை, அன்றாடத் தேவைகள், பசி, பிணி, குந்தக் குடிலற்று தொழிலற்று அலைதல், உறவுகள் இன்னும் ஒன்றாய்ச் சேர முடியாத வாழ முடியாத அவலம், கல்வி பொருளாதார சமூக வளப் பின்னடைவு என்று நமது இன்றைய பிரச்சினைகள் பலவாக உள்ளன. இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் நமக்கு இன்னும் எவ்வளவோ உதவியும் ஆதரவும் கைதூக்கிவிடலும் வேண்டியிருக்கிறது. இந்நிலையில், பழிக்குப் பழி உணர்ச்சியையே பெருக்குவதிலும், எதிர்த் தரப்பே பெருங் குற்றவாளிகள் என்று நிரூபித்துத் ‘திறுத்தி’ கொள்வதிலும், சேர்ந்து வாழ வகையோ நம்பிக்கையோ கிடையாது என்று கைவிரித்துக் காட்டுவதுமே தம் ஒரே ‘அரசியல்’ என்று நடந்துகொள்பவர்களை நாம் என்னவென்று சொல்வது?

குரலற்ற – சாதாரண மக்களைப் பாதுகாத்தல், அவர்களது துயர் களைந்து வாழ்வுக்கு உதவுதல் என்பதே அவர்களுக்குத் தலைமை தாங்க வருவோரின் பொறுப்பாகிறது. அதற்கான சாத்தியபூர்வ வழிகளைக் கண்டு கொள்ளுதலும், மீள்வதை விரைவுபடுத்தும் வகையிலான பேச்சும் செயல்களுமே நேர்மையைக் காண்பிக்கும். மாறாக, இன்றும் மக்களை நெருக்கடிகளுக்குள்ளும் உணர்ச்சிகர ஆவேசங்களிலும் வைத்திருப்பது மலிவாக வாக்குகளைப் பெறுவதற்கான தந்திரமே. இது, தமது அரசியல் லாபத்திற்காக மக்கள் அவலம் தொடர வேண்டும் என்று உள்ளுர விரும்பும் நிலைக்குச் செல்லவைத்து விடுகிறது. வைகோ வகையறாக்கள் மற்றும் புலம்பெயர் நிழல் அரசாங்க கோமாளிகளின் மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் இதையே உணர்த்துகின்றன.

மக்களை உணர்ச்சிகரப் படுத்தும் கருத்துக்கள் மூலம் போரும் வீரமும் முதன்மைப்படுத்தப்பட்டு அதிகாரப் பதவிகளை தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்தியது தமிழ் வரலாறு நெடுக இருந்து வருவதுதான். சங்ககாலப் பாடல்கள் உயிரழிப்பு வீரத்தை விதந்தோதும் முறையில் இன்றும் நம்மை உணர்ச்சிவசப்படுத்துவதாகவே இருக்கின்றன.

‘களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே’ (புறம். 277) என்றும், போர்க்களத்தில் தப்பி மீளாமல் பிணக்குவியல் நடுவே சிதைந்து கிடந்த மகன் உடலைக் கண்டு பிறந்த போதை விடப் பெரிதாக உவகை கொண்ட தாய் (புறம். 278) என்றும், போருக்கு அழைப்பு வரும்போதும் என் முறை வரட்டும் என்று காத்திருக்க முடியாமல் ‘என்னை முன்னால் அனுப்பு’ (புறம். 292) என்று அவசரப்படும் வீர ஆண்மகன்களை அரசர்களுக்காகப் புலவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

போரில் எதிர்கொண்ட யானையை வீழ்த்தித் தந்தை மாண்ட பின், ஆநிரை கவர்ந்த பகைவரைத் தடுத்து கணவனும் மாண்ட பிறகு, போர்ப் பண் கேட்டு விருப்பத்தோடு மயங்கி தன் ஒரே மகன் கையில் வேல் கொடுத்து வெண்ணிற ஆடை உடுத்தி தலையில் எண்ணெய் தடவிச் சீவி போர்க்களம் நோக்கிச் செல்கெனத் தன் மகனை அனுப்பும் பெண்களும் (புறம். 279), ஈன்று புறம் தருதலை தன் கடனாகவும் போரில் நின்று மடிதல் தன் மகன் கடனாகவும் நம்பும் மறத் தாய்மாரைப் பற்றிய பாடல்கள் (புறம். 312) உண்டு.

ஆனால் இவற்றை ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருப்பவையாக மட்டுமே அந்தப் பாடல்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும் வாழ வைக்கவும் வீரமும் ஆவேசமும் மட்டுமே போதும் என்று சொல்லி அவை நின்றுவிடவில்லை. மாற்றுக்குரல்களும் இருந்திருக்கின்றன. போரும் வீரமும் காதலும் போன்றே மனித நல்வாழ்வுக்கான மாற்றுத் தேவைகள் எண்ணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை என்பதை இடித்துச் சொல்லி, உனக்குத் துன்பம் தருகிறவர்களைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிராமல் உன்னுடைய எந்தத் தன்மைகள் உனது துன்பத்திற்குக் காரணமாய் அமைகின்றன என்று யோசிக்கும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

மண்ணையும் நீரையும் அழித்துப் போரிடுவதால் யாருக்குப் பயன்? என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். உலக மன்னர்களிடையே நீ சிறந்த புகழை அடைய வேண்டுமாயின் போர் புரிந்து நிலத்தையும் வளத்தையும் அழிப்பதல்ல@ நீர் நிலை பெருக்கி மக்களைக் காக்க வேண்டும் அதுதான் மன்னர்க்கான தகுதி (புறம். 18) என்று கூறும் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.

‘உலகம் முழுவதையும் போரால் கவர்ந்து ஆளும் வீரம் அல்ல அறம்தான் உயிர்களுக்குத் துணை’ (புறம். 357) என்றும், ‘உயிர் கொல்லும் போரின் குரூரத்தை அறியாமல் பலர் கையிலெடுத்துக் கொள்கிறார்களே, மக்களை வாழவொட்டாமல் செய்கிறார்களே’ (புறம். 356) என்றும் எச்சரித்து வருந்தியிருக்கிறார்கள்.

போரையும் பகையையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்த மன்னர்களிடம் போய் விவசாயிகளின் துயரையும் சாதாரண மக்களின் அவதியையும் துணிவோடு எடுத்துச் சொன்ன வெள்ளைக்குடி நாகனார் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ‘உனது வெண்கொற்றக் குடை வெயிலை மறைப்பதற்கு உள்ளது அல்ல, வருத்தமுறும் குடிமக்களுக்கு ஆதரவு காட்டுவதற்கேயாகும். அவர்களது வாழ்வுப் பாடுகளை உணர்ந்து உன் குடியைக் காப்பாய். அவ்வாறு செய்தால் பகைவரும் உன் காலில் பணிந்து நிற்பர்’ என்று சமுதாய உணர்வோடும், எளிய மக்கள்பால் கரிசனையோடும் பாடியுள்ளனர். “பகடு புறந் தருநர் பாரம் ஓம்பிக் குடி புறந் தருகுவை ஆயின் நின் அடி புறந் தருகுவர் அடங்காதோரே” (புறம். 35)

‘இவன் யார் என்குவையாயின்’ எனத் தொடங்கும் முடமோசியார் பாடல் ஒரு நிலத் தலைவனிடம், போர் இன்றி இருத்தல் பற்றிக் கூறுகிறது. “பழன மஞ்சை உகுத்த பீலி கழனியுழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளைந்த கள்ளின் விழுநீர் வேலி நாடு கிழவோனே” (புறம். 13). வளம் நிறைந்த உன் நிலத்தைக் காக்க போர் செய்யாதே என்று அறிவுறுத்துவதன் மூலம் பெருநில அரசிடமிருந்து சிறுநிலத்தைக் காக்கும் உத்தி பேசப்படுகிறது.

இன்றும் நமது தேவை, நம்மிடம் ஏற்பட வேண்டிய சிந்தை மாறுதலும் யதார்த்தத்தை உணர்ந்துகொண்ட திட்டமிடலும் வழிகாணலும்தான். நம் நிலத்தையும் வாழ்வையும் காக்கும் உத்தியை நம் புதிய சூழ்நிலைக்கேற்ப விவேகமுடன் கண்டடைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வன்னிப் பெருநிலப் பரப்பிலுள்ள விவசாய பூமிகள், குறிப்பாக அரச நிலங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். 70களில் செய்து மிகுந்த பயன் காணப்பட்ட, ‘படித்த வாலிபர்களுக்கு இரண்டு ஏக்கர் விவசாயக் காணி வழங்கும் திட்டம்’ போல இன்றும் செய்வதற்கு முடியும். நாடு முழுவதற்கும் பிரயோகிக்கப்படும் ‘பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற மஹிந்த சிந்தனைத் திட்டம் இதற்கு இடமளிக்கும். மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு இளைஞர்கள் பிரச்சினை மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளையும் இது தணிக்கும்.

இதுபோல இணக்கமுடன் தீர்வு காணப்பட வேண்டிய எவ்வளவோ பிரச்சினைகள் நம்முன் உள்ளன. ‘உதெல்லாம் நடக்கிற அலுவலில்லை’ என்று பேச்சில் வீம்பைக் காட்டிக் கொண்டிருப்பவர்கள், மேலும் மேலும் எதிர்த்தரப்பிலிருந்து வரும் பாதக நடவடிக்கைகளுக்கே உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

உடன் தேவைகளை நிறைவேற்றி, பெறக்கூடிய அதிகாரங்களைப் பெறும் சாத்திய வழி கண்டு, மெல்ல மெல்ல நாம் காலூன்றி மேல்நகர வேண்டியிருக்கிறது. விழுந்து கிடப்பவர்களை மேலும் மேலும் நடைமுறைச் சாத்தியமில்லாக் கனவு போதை ஆவேசத்தில் ஆழப் புதைத்துவிடக் கூடாது. ஒரு வேளை உணவுக்கு அல்லாடுபவர்களின் கதியை ஒருநாளைக்கு பலமுறை உண்ணுபவர்களின் ரோசமும் வீம்பும் தீர்மானித்துவிடக் கூடாது.

1 comment:

சமுத்ரா said...

நல்ல பதிவு ..நன்றி