Tuesday, March 8, 2011

கறுப்பு சொர்க்கம்


நீங்கள் வீடியோ கேம்ஸ் ஆடுவீர்களா? சாட் செய்வீர்களா? அப்படியானால் நீங்களும் இந்த அபாயத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது!

அவர்கள் பிரான்ஸின் தென்பகுதியில் இருக்கிற இளம் காதலர்கள். அங்கும் இங்குமாகச் சுற்றித் திரியும் அக்காதல் பறவைகள் கையில் ஒரு மொபைல் பொன் சிக்குகிறது. 'யாரோ தவறவிட்டார்கள்... போன் செய்தால் கொடுத்துவிடலாம்' என கையேடு எடுத்து வருகிறார்கள். அங்குதான் விபரீதம் ஆரம்பம்.

போன் மணிக்குப் பதிலாக எஸ்.எம்.எஸ். கீச்.கீச். அடுத்தடுத்து வருவதால் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஒவ்வொன்றும் அவர்களை வியப்பூட்டுகிறது. குறுந்தகவல்களை பின்தொடர்வதால் போன் உரிமையாளரைக் கண்டுபிடித்துவிடலாம் என முடிவெடுக்கிறார்கள். ஊருக்கு வெளியே நிசப்தம் கொஞ்சும் பகுதிக்குப் பொய் சேர்கிறார்கள். அந்த இடமே ரொமான்டிக்காக இருக்கிறது. முத்தத்தில் மூழ்கலாமா என யோசிக்கும் வேளையில் கண்ணில் படுகிறது ஒரு கார். ஏதோ ஆபத்து என மனம் சொன்னாலும், அதை நோக்கி விரைகிறார்கள். காருக்கு உள்ளேயும் ஓர் இளம்ஜோடி. மூடப்பட்ட காருக்குள் காலி மாத்திரை பாட்டில். விஷவாயு கக்கும் ஒரு குழாய் காருக்குள் செல்கிறது. பார்த்ததும் பகீர் ஆகிறார்கள். தற்கொலைக்கு முயற்சித்து, மரணத்தின் விளிம்பில் சரியும் அவர்களை காப்பாற்றப் போராடுகிறார்கள். பெண் மட்டுமே தப்புகிறாள். ஆண் காருக்குள்ளேயே காலி. 'ஆன்' செய்யப்பட்ட நிலையில் காரில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராவை எடுத்துக்கொள்கிறார்கள். அதிர்ச்சியோடு அவரவர் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

எஸ்.எம்.எஸ். மட்டும் நின்றபாடில்லை. அதை ஆராய்ந்ததில் 'பிளாக் ஹோல்' என்ற வீடியோ கேம் ஆடினால் புதிர்களை விடுவிக்கலாம் எனத் தெரிய வருகிறது. காதலிக்குத் தெரியாமல் ஆட்டத்துக்குள் நுழைகிறான் காதலன். அந்த வெர்சுவல் ரியாலிட்டி விளையாட்டுக்குள் பேரழகி ஒருத்தி வருகிறாள். அவனுக்கு ஆடிப்பார்க்கும் ஆசை அதிகரிக்கிறது. விளையாட்டோடு 'சாட்' வசதியும் உள்ளதால், ஒரு அழகியோடு அரட்டை தொடங்குகிறது. விளையாட்டு அழகியும் சாட் அழகியும் அன்றோரு தினம் காரிலிருந்து காப்பாற்றிய அழகியும் அழகியும் ஒரே பெண்தான்!

அதிரடி, அத்துமீறல், சாகசம் என இரவும் பகலும் ஆட்டம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றாகக் கலக்கிறது. காதலிக்கு இந்த விவரம் தெரியாததால், சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. விளையாட்டு வினையாகும் ஒருகட்டத்தில் காதலனையும் மரணம் துரத்துகிறது.

இதெல்லாம் எப்படி? புதிர்கள் அவிழும் அபாய நேரத்தில் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்தானே? நிஜத்திலும் நிழலிலும் வியாபித்திருக்கும் அந்த அழகியின் அண்ணன்தான் அத்தனையையும் ஆட்டுவித்தவன். தங்கையைப் போலவே ஒரு கேரக்டரை விளையாட்டில் உலவவிட்டு, அவளைப் போலவே சாட் செய்து இளைஞர்களுக்குத் தூண்டில் போடுவான். சிக்கியவனோடு தங்கையை நிஜமாகவே பழகவிட்டு, ஜோடியாக தற்கொலை செய்துகொள்ள தூண்டுவான். கடைசி நேரத்தில் தங்கையை மட்டும் காப்பாற்றிவிடுவான். தற்கொலை நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்து ரசிப்பான். அவன் கூறுவதை தங்கை செய்தே தீர வேண்டும். மறுத்தால் என்ன நடக்கும் என யோசிக்ககூட முடியாது. அப்படியொரு சைக்கோ அவன்.

எத்தனையோ பேர் மரணிக்க, எதோ ஒருவிதத்தில் அந்த அழகியும் காரணமாக இருந்திருக்கிறாள். நம் நாயகனையும் சொர்கத்துக்கு வழியனுப்பும் நாள் வருகிறது. ஏனோ அவளுக்கு விருப்பமில்லாமல் அண்ணனோடு மல்லுகட்டுகிறாள். க்ளைமாக்ஸ்!

இப்படியெல்லாம் நடக்குமா என யோசிக்க வைத்தாலும், டிஜிடல் புரட்சி நடக்கிற இந்த வேலைக்கு ஏற்ற விழிப்புணர்வு செய்தி இது. இணையம் எனும் எண்ணற்ற சாத்தியங்கள் நிறைந்த கறுப்பும் கலரும் நிறைந்த உலகில் ஏராளமான நாசக்கார பட்டன்களும் உண்டு. தவறுதலாக எதோ ஒன்றை அழுத்தித் தொலைத்துவிட்டால்? அதுதான் பிரெஞ்சு இயக்குனர் ஜில்ஸ் மர்சந்த் இயக்கிய 'பிளாக் ஹெவன்' படத்தின் திரைக்கதை. கேன் திரைப்பட விழாவில் நள்ளிரவுக் காட்சியாக திரையிடப்பட்டு, பல பேரை சீட் நுனிக்கு வரவைத்த டெக்னோ த்ரில்லர் இது!

வள்ளி    

No comments: