Thursday, March 3, 2011

சீ.வீ.கே.சிவஞானத்தின் கருத்திற்கு சுரேஷ் எம்பி விளக்கம்!

தமிழ் மக்களின் விடிவிற்காக ஒரே அணியில் செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவை. இதனைத் தவற விட்டால், அரச ஆதரவுடனும், பல கோடி பணத்துடனும் இன்னும் பலர் எம் மத்தியில் ஊடுருவுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி சார்பில் சீ.வீ.கே சிவஞானம் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற வகையிலும், அதன் இணைச் செயலர்களில் ஒருவன் என்ற வகையிலும் திரு.சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் 27-02-2011 அன்று நிகழ்த்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்த தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது எனது கடமையெனக் கருதுகிறேன்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக மாறினால் அது தமிழரசுக்கட்சியைச் சிறுமைப்படுத்தித் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றையே புதைக்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும்' என்பது திரு.சி.வீ.கே.சிவஞானத்தின் பேட்டியின் சாராம்சமாக உள்ளது. திரு.சிவஞானம் 2010ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் இணைந்து துணைச் செயலாளராக வருவதற்கு முன்பாக இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ்க்காங்கிரசின் சார்பாக போட்டி இட்டதோடு, அக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். 2009ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடுமாறு நாம் வலியுறுத்தியபோது பாதுகாப்புக் காரணங்களை முன்நிறுத்தி அதனை மறுத்தவர். அதன் பின்பு 2010 இல் தமிழரசுக்கட்சியில் இணைந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர். இவர்தான் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்தால் தமிழரசுக்கட்சியின் வரலாறு புதைக்கப்பட்டு விடும் என்று அங்கலாய்க்கிறார். இக்கட்டான நேரத்தில் கட்சியை காப்பாற்ற முன்வராதவர், வரலாறு தொலைந்துவிடும் என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த தந்தை செல்வா அவர்கள் அக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால், தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1976 இல் காலத்தின் கட்டாயம் கருதி தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை இணைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். அது இனப்பிரச்சினை தொடர்பாகக் கூட்டாகச் செயற்பட்டு முடிவுகளை எடுத்தது. அது ஓர் பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே செயற்பட்டுவந்தது. சௌமிய மூர்த்தி தொண்டமான் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு வெளியேறினாலும் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழர் விடுதலைக் கூட்டணி என்றே செயற்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு கூட்டணிக்குள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர், சின்னம் யாவும் திரு.ஆனந்தசங்கரி அவர்களிடம் போனதால்தான் தமிழரசுக்கட்சி மீண்டும் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தந்தை செல்வாவும், தலைவர் அமிர்தலிங்கமும் 25 வருடங்கள் தமிழரசுக்கட்சியின் வரலாற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் என்று யாராவது கூறமுடியுமா? அது காலத்தின் தேவை, பரிணாம வளர்ச்சி! வரலாறுகளை யாரும் குழி தோண்டிப் புதைத்துவிட முடியாது. உலகத்தின் பல்வேறு மையங்களில் இவை பாதுகாக்கப்படுகின்றன.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டது. தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய முக்கிய பணி கூட்டமைப்பிடம் வந்தது. இதனை நிறைவேற்ற எங்களிடம் உள்ள பலம் யாவும் எமது மக்கள்தாம். மிக மோசமான நெருக்கடிகளின் போதெல்லாம் அவர்கள் தமது கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். யுத்தம் முடிந்தவுடன் நடாத்தப்பட்ட வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைத்தார்கள். யாழ்.மாநகர சபைத் தேர்தலில் வெல்ல முடியாவிட்டாலும், கணிசமான ஆசனங்கள் எமக்கு கிடைத்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மக்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் வடக்கு – கிழக்கில் 14 ஆசனங்களைக் கொடுத்து மீண்டும் தமது கொள்கைப் பிடிப்பை வலியுறுத்தினார்கள். இதில் ஒரு சிலர் இணைந்திருந்தால் இன்னும் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும் என்பதும் பலபேரின் கருத்தாக இன்றும் இருக்கின்றது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தி, கிராம மட்டக் கிளைகளை உருவாக்கிக் கூட்டமைப்பு பயணிக்குமாக இருந்தால்தான் நாம் ஒரு வலுவான சக்தியாக இலங்கையாலும், உலக நாடுகளாலும் கணிக்கப்படுவோம். அன்று தந்தை செல்வா அவர்கள் தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சிந்தித்திருப்பாரேயானால் தமிழர் விடுதலைக் கூட்டணி தோன்றியிராது.

கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது தனித்துவங்களை காப்பாற்றிக் கொள்ளவும், தமது கட்சிகளின் வளர்ச்சிக்காக உழைக்கவும் முற்படுமானேயானால் குழப்பங்களும், தகராறுகளும் அதிகரித்து முரண்பாடுகள் அதிகரிக்குமே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுப்படாது. மாறாக அதனைச் சிதறடிக்கவே அது உதவும். திரு.சிவஞானம் தனது பேட்டியில் கூட்டமைப்பிற்கு உதாரணமாக தெற்கில் உள்ள ஐ.தே.க, சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் கூட்டுகளை உதாரணப்படுத்தியுள்ளார். ஆனால் அவையும் முறையே ஐக்கியதேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என பதிவு செய்த அரசியல்க் கூட்டுகள் என்பதை அவர் மறந்துவிட்டார். அது மாத்திரமல்ல, அவை தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டு மாத்திரமே. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு உருவானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே கூட்டமைப்பு தன்னை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறும் திரு.சிவஞானம் 2010 ஒக்டோபர் 17ஆம் திகதி நடந்த தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், கூட்டமைப்பைப் பதிவு செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்ததாகவும் கூறுகின்றார். அம்முடிவினை நாங்கள் வெளியிடவில்லை என்பதுடன் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் எமக்கு அக்கறையும் கிடையாது. அதற்கு உடன்பாடுமில்லை என்றும் கூறுகின்றார். அதே திரு.சிவஞானம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர்தான் பதிவை இழுத்தடிக்கின்றார்கள் என்றும், சுரேஸ் பிறேமச்சந்திரன்தான் இதில் கையொப்பமிடவில்லை என்றும் கூறுவது அபாண்டமானதும் மக்களை எனக்கெதிராக திருப்பிவிடும் உள்நோக்கம் கொண்ட பொய்யும் ஆகும்.

கடந்த ஆண்டு இவர்கள் முடிவெடுப்பதற்கு முன்பாக திரு சம்பந்தன் அவர்களைத் தலைவராகவும், திரு.மாவை சேனாதிராசா, திரு.செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரை இணைச் செயலாளர்களாகவும் கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுக்காக விண்ணப்பித்துள்ளது. திரு. சிவஞானம் கூறுகின்ற 2009ஆம் ஆண்டின் 58வது இலக்கச் சட்ட யாப்பின் பிரகாரம் தேவையான யாப்புகள் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால், மேலதிகமாக கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தமது கட்சி சார்பான ஒப்புதல் கடிதங்களை தரும்படி தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அதனைக் கொடுப்பதில் தான் இப்பொழுதுள்ள காலதாமதம். இந்தக் கடிதத்தினை தமிழரசுக்கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்பது தான் உண்மை. அக் கடிதம் தொடர்பாகத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நான் ஏற்கனவே பேசியுள்ளேன். எனவே, இது என்னாலோ அல்லது திரு.செல்வம் அடைக்கலநாதனாலோ காலதாமதமாகவில்லை என்பதையும் நான் கூறிக்கொள்கின்றேன். எனவே புரிந்துணர்வு, கையொப்பம் என்று புனைகதைகளைக் கூறி தயவு செய்து குழப்பங்களை உருவாக்க வேண்டாம்.

இறுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது கிளைகளை திறந்து செயற்படக் கூடாது என்று தாங்கள் முடிவெடுத்ததாகவும், ஒற்றுமை கருதி அதனை வெளிப்படுத்தவில்லை என்றும் சீ.வீ.கே கூறுகின்றார். ஆனால் அவ்வாறான ஒரு விடயம் கூட்டமைப்புக்குள் விவாதிக்கப்படவில்லை. கூட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும், எண்ணமும் எல்லோர் மத்தியிலும் இருந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து நாங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றே அறியப்பட்டிருக்கின்றோம். எங்களது வேலைத்திட்டங்கள், சந்திப்புகள் யாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றே நடைபெற்று வருகின்றன. தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்பதைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் நாம் போட்டியிட்டோம். இந் நிலையில் கூட்டமைப்புக் கிளைகள் திறக்கப்படக் கூடாது என எவ்வாறு தமிழரசுக்கட்சி முடிவெடுக்க முடியும்? அதுவும் ஏனைய கட்சிகளுடன் பேசாமல் எவ்வாறு அவர்கள் முடிவெடுக்கலாம்? 24 மணி நேரமும் கூட்டமைப்பாகச் செயற்படும் எம்மைக் கூட்டமைப்புக் கிளைகள் நிறுவக்கூடாது என்று எப்படிக் கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கிளைகள் தொடர்பாக தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று சிவஞானம் அவர்கள் கூறலாம். ஆனால் கூட்டமைப்புக் கிளைகளில் தமிழரசுக்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். கூட்டமைப்புக் கிளைகள் அமைக்கப்படக் கூடாது என முடிவெடுத்தவர்களை எவ்வாறு அக் கூட்டங்களுக்கு நாம் அழைப்பது?

தமிழ் மக்களின் விடிவிற்காக ஒரே அணியில் செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவை. இதனைத் தவற விட்டால், அரச ஆதரவுடனும், பல கோடி பணத்துடனும் இன்னும் பலர் எம் மத்தியில் ஊடுருவுவார்கள். புதிய கட்சிகள் வர இருக்கின்றன. உள்ளூர் வெளியூர் பிரமுகர்கள் ஏற்கனவே இதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் யுத்தத்தில் துன்பப்பட்டவர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டுவோம் எனக் கூறுவார்கள். எனவே கூட்டமைப்பைக் கிராம மட்டங்களுக்கு எடுத்துச் சென்று அதனைப் பலப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது. இல்லையேல் எமது எதிரிகளுக்கு வழிசமைத்துக் கொடுத்தவர்கள் என்று வரலாறு எம்மைத் தூற்றும்.

திரு சுரேஸ் பிறேமச்சந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
இணைச்செயலர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

1 comment:

Yoga.s.FR said...

ஆளாளுக்கு அறிக்கைப் போர் விடுவதை விடுத்து "குடும்பப்" பிரச்சினைகளை,குடும்பமே பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்தது! நம் பல்லக் குத்தி நாமே மணக்க வேண்டமே?????