Wednesday, March 2, 2011

மற்றவர்க்கு நம் மனதில் என்ன இடம்?

மனித வாழ்க்கை குறித்தும் கௌரவமான உயிர்வாழ்வு குறித்தும் மிகக் கடுமையான சிக்கல்களும், நுண்மையான புரிதல்களும் உலக அளவில் உருவாகியுள்ளன. ஆனால் இவை பற்றிய எந்த அக்கறையுமற்று, வெறுமனே வாயிலும் வயிற்றிலுமடித்துப் பிலாக்கணம் வைப்பதற்கப்பால் எதையும் நகர்த்துவதற்கு வகைதெரியாதவர்களெல்லாம் தலைமைகளாக உலா வருவதை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறோம்.

உணர்ச்சிகரமான முறையில், ‘மற்றவர்களால் நமக்கு எப்போதும் ஆபத்து’ என்கிற அச்சமூட்டுதல் மட்டுமே ஒரே அரசியல் செயற்பாடாக, நம்மை விழுங்கப் பூதம் ஒன்று முன்னால் காத்திருக்கும் கதையைச் சொல்லியபடி கையறுநிலையில் சேர்ந்து கதறுவதையே தங்களது அரசியலுக்கு மூலதனமாக்கிக் கொள்ளும் வெறும் சப்பட்டைகளை நெல்லெனச் சேமித்து வீட்டினுள் வைத்திருக்கிறோம். தமிழ்மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பது ஒன்று போதும், சமூகம் காப்பாற்றப்பட்டுவிடும் என்ற உணர்ச்சிகரப் பொய்யால் திரும்பத் திரும்ப ஏமாறக்கூடிய சமூகமாகவே நாம் இன்னுமிருக்கிறோம்.

மிகப் பிளவுபட்ட ஏற்றத்தாழ்வு காண்பிக்கும் சமூகமாக, சமத்துவம் சகோதரத்துவம் போன்றவற்றை உள்ளே செயற்படுத்த முடியாத சமூகமாக இருந்துகொண்டே வெளியே இவற்றை எதிர்பார்க்கும் வாயளவுப் பிரலாபங்களுடன் திருப்திப்படுவோராக இருக்கிறோம். வெகுமக்களை முன்னிலைப்படுத்துவதை – சமூக உணர்வை தொலைத்துவிட்டு பகைவெறுப்பு அரசியலுக்கும், திட்டுதலும் விரக்திப் புலம்பலுமே விடுதலை நோக்கி நகரப் போதுமானது என்ற மாயைக்கும் பழகிவிட்டோம். மற்றவர்களை நம்பவோ, பிறருடன் ஒட்டவோ ஒழுகவோ பேசவோ முடியாத, விலக்குதலும் சுயபெருமைகளுடன் விலகி உள்சுருங்குதலுமான நோய்த்தன்மை கொண்ட சமூகமாகி விட்டோம்.
நம்மில் பெரும்பாலோர் விடுதலை வீரர்களாய் நம்பியிருந்தவர்கள் நியாயங்களையும் அறங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு முன்னேறியபோது, தயக்கமின்றி நியாயப்படுத்தியவர்களால் வளர்த்து விடப்பட்டதே இது. குரூரம் கண்டு அஞ்சி நடுங்கி வெறுப்போராய் இருந்த நாம் குரூரமானவர்களாக மாறிய கதை இது. நம் சமூகத்தின் பெரும்பான்மை மனநிலையாக வடிக்கப்பட்ட குரூரத்தை இனங்காட்டி எச்சரிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த பெருமக்கள் அறிஞர்கள் எனப்பட்டவர்களெல்லாம் ஒத்தோடிகளாய் மாறியிருந்த துயரம் இது.

இந்த இடத்தில், பிரேம் எழுதி பரவலாக விவாதிக்கப்பட்ட ‘மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள்’ கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துகொண்டு மேலே தொடரலாம்.

“எந்த உறுதிப்பற்றும் பாசிசத்திற்கு அடிப்படையாக அமைய முடியும் என்பது நமது இன்றைய புரிதல். பாசிசத்தின் அடிப்படை கேள்வி கேட்காத பணிவும், முழுமையான நம்பிக்கை ஒப்படைப்பும், பிரக்ஞையற்ற பின்பற்றுதலுமே. அது புரட்சிகர (விடுதலை) கோட்பாடுகளின் மூலமும் கூட நிகழ முடியும். இந்தப் பாசிசத்தை நாம் எதிர்த்து நிற்க அதே வகை பாசிச வழியும் வன்முறையும் கொடூர ஆற்றலும் வேண்டும். நமது எதிர் பாசிசம் அதே அளவு அழிவுகளை விளைவிக்கும். அதை நியாயப்படுத்தும்….

‘ஹிட்லர்’ என்ற ஒரு நிகழ்வை இன்று உலக மாற்று அரசியல் சமூகக் கருத்தியலாளர்களும் மனித நேயவாதிகளும் கொடூரமான, தீமை நிறைந்த, பயங்கரத்தின் ஒற்றைத் தோற்றமாக உருவகித்து விடுவதன் மூலம் பல வகைப் புரிதல் முறைகளின், நடத்தை இயல்களின் கொடூரத்தை பயங்கரத்தை இலகுவாக மறந்துவிட, மறைத்துவிட முடிகிறது. ஆனால் ஹிட்லர் என்பது தனிமனித உரு அல்ல. (இதுபற்றி வில்ஹெம் ரெய்ச் தொடங்கி பலர் விரிவாக விளக்க முயற்சித்துள்ளனர்) ஒரு தேசத்தின், ஒரு பெரும்பான்மையின் பெரு மனத்தோற்றம். மக்களின் நாயகனாக, தேசப் பிதாவாக, தேவ தூதனாக ஹிட்லர் நிற்க முடிந்தது அதனால்தான்.

ஹிட்லரை கொடூர உருவாக விவரித்து விளக்கிக் காட்டுவது இன்றைய நவீன பொது மனித உரிமை மற்றும் சமத்துவ அரசியல் கோட்பாட்டுப் புரிதல்தானே தவிர மனித சமூக மதிப்பீடுகளின் அடிப்படை நம்பிக்கை அதுவல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹிட்லர் இருந்திருந்தால் நெப்போலியன் போல் ஒரு வரலாற்று நாயகனாக வழிபடப்பட்டிருப்பான். நெப்போலியன் தோல்வியடையாமல் இருந்திருந்தால் கூட கடவுளாகி இருப்பான் இல்லையா. நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்கள் தோல்வியடையாமல் இருந்திருந்தால் கடவுளாகவே வழிபடப்பட்டிருப்பார்கள். இன்னும் கூட அவர்கள் உண்மையில் கடவுளர்களே. மனித மனத்தின் அடிப்படைச் சக்திகளை ஆற்றல்களை ஆட்டிப்படைக்கும் கடவுள்கூறுகள் அவர்களே. படுகொலைகளே பெருவெற்றிகளின் அடிப்படை.”

இதனடிப்படையில், புலம்பெயர் எழுத்து ஊழியக்காரர்களும், கவிதாயினிகளும் பிரபாகரன் மாண்டபோது, “ஐயோ, நம் கடவுளை இறந்துவிட்டதாய்ச் சொல்கிறார்களே” என்று கதறியழுது கவிதைகள் எழுதியதையும், பேட்டிகளில் பிரலாபம் வைத்துப் புலம்பியதையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
இன்றும் ‘கடவுள் வருவாரா’ என்று காத்திருக்கும் அவர்கள் மனநிலையும் நாம் புரிந்துகொள்ளக் கூடியதே. அந்த நோய்க்கூறையே தொடர்ந்து வளர்த்தெடுத்து கதிரைகள் பிடிப்தையே அரசியலாய்ச் செய்து வருவோருக்கும் இன்னும் நாம் வாக்குப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

“மக்கள் பிழை செய்து வன்முறையாக மாறும்போது அவர்களின் அடிப்படைகள் தகர்ந்து நீதியுணர்வை இழந்து வீழ்ச்சியடைவது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை நாம் அறிவோம்” என்று சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலேயே மோகன்தாஸ் கரம்சந் காந்தி எழுதிவைத்திருப்பதைப் பார்க்கும்போது வியப்பாகிறது.

நாய்க்குட்டிக்கு பிஸ்கட்டை மேலே தூக்கிப் பிடிப்பது போல் நமக்கு ‘விடுதலை’ என்பதைக் காட்டி, கொடூரமும் கொலைகளும் அச்சத்திற்குள் வைத்திருத்தலும் நியாயப்படுத்தப்பட்ட பெருமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக நாம் உலகை மறந்திருந்தோம். பொதுச் சமூக உணர்வும் நேசமும் அற்ற, நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதை மாற்றமுடியா நோய்க் கூறாகக் கொண்ட, பிறரை எப்போதும் இழிவாகவே கருதிக் கொள்கிற அளவுக்கு இனவீம்பு கொண்ட, நமக்கு அப்பால் எதையும் கணிப்பிலெடுக்காத சமூகமாக நம்மை மாற்றியமைத்த பெரியவர்களும் முன்னவர்களும் நாம் பெருமையோடு நினைக்கத் தகுந்தவர்களல்ல என்ற உண்மை இப்போது நமக்குப் புலனாகிறது.

பெரும்பான்மைத் தமிழ்மக்களின் மூளைத் திசுக்களில் படிந்துபோன நம்பிக்கைகள், முடிவுகள், வெறிகள், வேட்கைகள் அனைத்துடனும் உரையாடி சிறிது சிறிதாக எங்களை வேறுவடிவத்துக்கு மாற்ற வேண்டிய கடினமான பணி முன்னாலுள்ளது. வீழ்ச்சியை நிறுத்தும் திட்டமிடல்கள் எதுவும் இன்றி வெற்று கோஷங்களையே அரசியல் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பது, தற்போதைய வாழ்வை மட்டுமல்லாது அடுத்து வரும் தலைமுறைகளையும் பலியிடும் கொடுஞ்செயலாகும். மக்கள் நலம் சார்ந்து சிந்திப்பதாக நம்பும் எந்த அரசியல் கட்சியும், இயக்கமும், குழுவும், தனிநபரும் இவைகுறித்து விவாதத்தைத் தொடங்க, விளக்கம் பெற, புதிய செயல்திட்டங்களை உருவாக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்யாத எந்தக் கட்சியும், நபரும் மேலும் மேலும் வீழ்ச்சிக்குத் துணைபோகும் மனித அழிப்பு – சமூக அழிப்பு அரசியலின் கருவிகளாகத்தான் இருக்க முடியும்.

தற்போது பகட்டாகப் பேசி மட்டுமே திரியும் அரசியலின் மாயைகள், வேடங்கள், தீவிரவாத பகட்டுகள் அனைத்தையும் புரிந்துகொள்ளவும், மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்களது உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ளவும் இதுவே தருணம். ‘இன்னும் நம்மைக் கொலைகள் துரத்திக் கொண்டிருக்கு’ என்பது போன்ற மாய்மாலத் தீவிர அலப்பறை மூலம் மக்களை இப்போதும் வாக்குகளாக மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களை விலக்கி, உண்மையான மனித நேயம், சமூக அக்கறை, வீழ்ச்சியிலிருந்து எழுந்து மேல்நகர யதார்த்த திட்டமிடல், செயல் கொண்ட சக்திகளை அடையாளம் காண வேண்டியது உடனடித் தேவை. எதிர்காலம் பற்றிய களைப்புடனும் அச்சத்துடனும் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் மாற்று அரசியலையும், வழிகாட்டும் திட்டங்களையும் வழங்குபவர்களை இனங்காண வேண்டும்.

மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்குரியவர்களாக நாம் ஒவ்வொருவருமே நம்மைச் செதுக்கிக் கொள்ளவும் செம்மைப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அதற்கு, பழையவைகளைப் பேசிக் கொண்டிருப்பதல்ல வழி – எதிர்காலத்தை யோசிப்பதே.

எதிர்த்தரப்பின் தவறுகள் நமக்குத் தெரிந்திருப்பதைப் போல நம் தவறுகளையும் நாம் தெரிந்துகொள்வோம். மன்னிப்புகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் புதியதொரு சூழலுக்குள் புகுவோம். எதிர்த் தரப்பு தன் பெரிய தவறுகளை ஒப்புக் கொள்ளாத வரை நம் சிறிய தவறுகளை ஒப்புக்கொள்ள நாம் ஏன் முந்த வேண்டும்? என்பது நல்லிணக்கத்தின் தேவையை உணர்ந்து கொண்டவர்களிடமிருந்து வரக்கூடிய கேள்வி அல்ல.

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிச்சிட்டு வர்றேன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அரசியல் பற்றி அழமான அலசல்..
உள்ளது உள்ளபடியே சொல்லியிருக்கிறீர்கள்..
//
மன்னிப்புகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் புதியதொரு சூழலுக்குள் புகுவோம்.////
உண்மைதான்..
வாழ்த்துக்கள்..