Tuesday, February 8, 2011

மக்கள் தொழிலுக்குச் செல்லும் வரை நிவாரணம் வழங்கப்பட வேண்டும்


வன்னி மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையினால் பல்வேறு குளங்கள் தமது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் மேலதிக நீர்வரத்தினால் அவை உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளதுடன் சிலகுளங்கள் உடைப்பெடுத்தும் உள்ளன. பெரும் சேதத்தைக் குறைப்பதற்காக குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன்; வெட்டிவிடப்பட்டுமுள்ளன. வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக வவுனியாவில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பாடசாலை, பொதுநோக்கு மண்டபங்கள், தேவாலயங்கள் போன்ற பல்வேறு இடங்களில் தங்கியுள்ள மக்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளையும், சேதவிவரங்களையும், தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

சுமார் 100ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகத் தமது குடும்ப மூத்த உறுப்பினர்கள் சொல்லக்கேள்விப்பட்டுள்ளதாகவும் இன்று நேரிடையாக அனுபவிப்பதாகவும் நொச்சிமோட்டையைச் சேர்ந்த ஒரு பெரியவர் தெரிவித்தார்.

கடந்த 5,6 மற்றும் 7ஆம் திகதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளான கருப்பணிச்சங்குளம், சமனங்குளம், ஆச்சிபுரம், சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயம், கற்குளம் பொதுநோக்கு மண்டபம், புளியங்குளம் இந்துக்கல்லூரி, பழையவாடி பாடசாலை, பம்மைமடு பொதுநோக்கு மண்டபம், புளித்தரித்த புளியங்குளம் (அரபாத் நகர்) செல்வா நகர், செக்கடிப்புலவு, கற்பகபுரம் பாடசாலை, பறன்நட்டகல் பாடசாலை, அந்தோனியார்கோயில், சிறீராமபரம், சிவபுரம், புதிய கோயில்குளம் ஆகிய இடங்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டார்.

பம்பைமடு குளத்திற்கு அருகாமையிலுள்ள ராசையன்குளம் கட்டு உடைந்துள்ளது, நெல், உளுந்து உட்பட அனைத்துப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. உளுந்து பயிரிடப்பட்ட அனைத்து காணிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் உளுந்துகள் அனைத்தும் முளைகட்டியுள்ளன.

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள்; வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதுடன், சில காணிகளில் கதிர்வைக்கும் பருவத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நீர்ச்சாவியடித்துவிட்டது. மொத்தத்தில் இவ்வருடம் விவசாயத்தை மேற்கொண்ட அனைவரும் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். வன்னி மக்கள் அனைவரும் யுத்த சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்து வாழ்வாதாரத்தை இழந்திருந்து மீள்குடியேறியதும் அனைத்து விவசாயப் பெருமக்களும் தங்களது உளக்குமுறல்கள், மனத்தாக்கங்கள், இழந்த இழப்புக்களினால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் ஆகிய அனைத்தையும் தங்களது காணிகளில் உழைப்பைச் செலுத்துவதினூடாக இறக்கிவைக்க முயற்சித்தனர். பயிர்வகைகளும் அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நன்கு செழித்து வளர்ந்தது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல் இயற்கை தனது திருவிளையாடல்களை நடத்திவருகின்றது. மீண்டும் கையேந்தும் நிலைக்கு எமது மக்களைத் தள்ளியுள்ளது.
வவுனியாவில் மட்டும் 15,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்லும் 14,000ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்தும் அடியோடு அழுகிவிட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளத்தினால் வீடுகளின் தரை ஊறியுள்ளதால் தரைவிரிப்பின்றி வீடுகளில் தங்க முடியாமையினாலேயே பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ளனர். தினக்கூலியை நம்பி அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்கள் தாங்கள் எப்பொழுது வேலைக்குப் போவோம் என்று தெரியாததினால் உணவிற்கு என்ன செய்யப்போகின்றோம் என்ற கவலையுடன் இருக்கின்றனர். அவர்களது பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, வன்னியிலுள்ள அனைத்து மக்களுக்கும் அவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ளும்வரை உலர் உணர்வுப் பொருட்கள் வழங்கப்படவேண்டிய தேவையுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினாலும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தினாலும் மக்கள் இடம்பெயர்ந்து பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் பட்டினிச்சாவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின் விபரங்களைக் கீழே குறிப்பிட்டுள்ளேன். தாங்கள் இதனைத் தங்களது கவனத்தில்;கொண்டு ஆவன செய்யுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அரிசி, அத்தியாவசிய உப உணவுப்பொருட்கள் (சீனி, மா, பருப்பு, காய்கறி போன்றவை), தரைவிரிப்பு (தரப்பாள்), எரிபொருள்

மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் கிராமம் மல்வத்துஓயாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையினைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதனால், அவற்றினை உலங்கு வானூர்தியினூடாகவே வழங்க வேண்டியுள்ளது. அதனைப்போன்றே கொழும்பிலிருந்து வவுனியா வருவதற்கான ஏ9 வீதியும், வவுனியா-மன்னார் போக்குவரத்தும், மதவாச்சி – மன்னார் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொடருந்து மூலமாகவோ அல்லது உலங்கு வானூர்தி மூலமாகவோ இங்கும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்குமாறும் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

No comments: