Thursday, February 3, 2011

எதிர்கால வாழ்வை இன்னும் என்ன செய்யக் கருதி இருக்கிறோம் நாம்?

தங்கள் பாதுகாப்பையும், உரிமைகளுடனான விடுதலை வாழ்வையும் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஒற்றுமைப்பட்டுக் கோரிக்கைகளை வைக்க வேண்டுமென்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது. அதுவே வெற்றியளிக்கும் என்பதும் யாவருமறிந்ததே.

ஆனால், தமிழ்க்கட்சிகள் ஒரு நீடித்த ஒற்றுமைக்குத் தயாராகிவிடுவார்கள் என்று நம்புவது, அமெரிக்காவோ ஐ.நா. சபையோ வந்து நமக்குத் தீர்வைப் பெற்றுத் தந்துவிடாதா என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும். நம்மில் பெரும்பாலோர் இத்தகைய எளிய நம்பிக்கைகளுக்கு மேலதிகமாகச் சிந்திக்கும் சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பப்படாதவர்கள் என்பதும் உண்மையே.

தேர்தலுக்கும், தமிழ்மக்களின் உணர்ச்சிகர ஆதரவைத் தூண்டி வைத்திருப்பதற்கும் ஒற்றுமைக் கோஷத்தை எடுத்து விடுவதல்லால், அதன் அரசியல் தேவை-முக்கியத்துவம் குறித்துச் சிந்திக்க மனப்படாதவர்களாகவே நம் பிரதிநிதிகள் உள்ளார்கள். ஏனைய கட்சிகளெல்லாம் நம் கொள்கைகளை ஒப்புக்கொண்டு நம்மோடு வந்து இணைந்துவிடுவதே தமிழொற்றுமை ஆகும் என்பதே பெரும்பாலானவர்களின் ஒற்றுமை குறித்த எண்ணமாக உள்ளது.

வௌ;வேறு கட்சிகளின் தோற்றம் என்பதே கொள்கை வேறுபாடுகளினாலும், வழிமுறைகள் அணுகுமுறைகள் பற்றிய மாற்று யோசனைகளாலும் உருவானவைதான். கட்சிகள் மட்டும் என்றில்லை. ஒவ்வொரு தனி மனிதருமே சிறிய சிறிய அளவிலேனும் மற்றவர்களோடு ஒத்துப்போக முடியாத அபிப்பிராய விலகல்களோடு உள்ளவர்தான். வௌ;வேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்குள் ஒன்றுபடுகின்ற புள்ளிகளை இனங்கண்டே அவர்கள் இணைந்து ஒரு கட்சி உருவாகின்றது. அதுபோல, தனித்தனியாகப் பல்வேறு கொள்கைகளையும் உடைய கட்சிகள், ஒன்றுபடுகின்ற ஒருசில நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவைகளுக்கிடையிலான ஐக்கியத்தை உருவாக்க முடியும்.

இந்த யதார்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத பிரதிநிதிகளை நாம் தெரிவுசெய்து விட்டிருக்கிறோம். தங்கள் கட்சியின் நிலைப்பாடுகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்களுடனேயே ஒற்றுமைப்பட முடியும் என்பது முட்டாள்த்தனமான கருத்து மட்டுமல்ல உள்ளார்ந்த பாசிஸத்தன்மை கொண்டதுமாகும்.
ஐக்கியம் என்பது வேற்றுமைகளிடையே காணும் ஒற்றுமை மூலம் உருவாவதுதான். அவரவர் கட்சி நலன்களுக்கு சுயலாபங்களுக்கு மேலாக சமூக நலனையும் மக்கள் நலனையும் முன்னிறுத்தி யோசிக்கும்போதே ஐக்கியம் சாத்தியமாக முடியும். மக்களுக்கு மேலாக அவரவர் கட்சி நலனையும், அடுத்த தேர்தலுக்கான வாக்குகளையும் மனதிலிருத்திக்கொண்டு ஒற்றுமை பற்றி யோசித்தால் அச்சமும் மடமையும் விசாலமடையா மனதின் காழ்ப்புமே வெளிப்பட்டு நிற்கும்.
வெறும் படைபல வீரம் குறித்த உசார்மடத்தனப் பீத்தல்கள், மற்ற சமூகங்களையும் மக்களையும் கூட விலக்கி நம்மைத் தனிமைப்படுத்திய பயங்கரவாத செயற்பாடுகள், நமக்கு அப்பால் ‘சரி’ ஏதுமில்லை என்கிற பாசிஸ தற்குறித்தனம், ஆயுதங்களுக்குக் கீழ்ப்படுத்தி மக்களை நிறுத்திய ராணுவ வாதம் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தான்தோன்றித்தனமாக இழுத்துச் சென்று கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் தாமும் அழிந்துபட்டார்கள் புலிகள். பாடழிவு, அகதிமுகாம், கையேந்தல் வாழ்வு என்று சமூகத்தின் மனோபலத்தையே சிதைத்துவிட்டுச் சென்றார்கள். நாற்புறமும் சிதைந்து கிடக்கும் சந்தியில் நாம் நிற்கிறோம். திரும்ப நம்மை மீள்விக்கப் பாதை அமைத்துக் கொள்ள வேண்டிய தருணமிது. விவேகமும் நிதானமும் அர்ப்பணமும் விட்டுக்கொடுப்பும் கூடிய தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தித் தமிழ்வாழ்வை மீட்டுக்கொள்ளும் பாரிய சவால் முன்னாலிருக்கிறது.

நமக்குள் வளர்ந்த பாசிஸத்திற்கும் ராணுவவாதத்திற்கும் இடம்விட்டு சமூக முதுகெலும்பை முறிக்கத் துணைபோனவர்களாக நம்மில் பலர் இருந்தோம். பிழையை வளர விட்டுப் பீழையுண்டாக்கிய தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு இப்போது யுத்தத்தில் வென்றுவிட்டவர்களைக் கரித்துக்கொட்டி என்ன ஆகப்போகிறது? இப்போதேனும் விவேகமான நகர்வுகளுக்கு நாம் யோசிக்க வேண்டாமா?

உடனடித் தேவையாக ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எல்லாத் தமிழ்மக்களினதும் பொது எதிர்பார்ப்பல்லவா? இதற்கு ஆவேசப்பட்டு விரோதத்தைக் கக்கும் அதே பழைய வீரப்பேச்சுக்களால் ஆகுவது என்ன என்று இனியும் நாம் சிந்திக்க வேண்டாமா? வாக்குகளுக்கும், வாய்சாலகத்தைக் காட்டவும் என வெறுமனே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் இனரோசப் பேச்சுக்களால், இன்னுமின்னும் நாம் இருந்த இடத்தை விட்டுக் கீழே கீழே வழுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமல்லவா? பிடிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுச் சும்மா பீற்றிக் கொண்டிருக்கும் அரசியலால் மக்கள் அடைந்தது என்ன? இப்போதேனும் ஒன்றுகூடி யோசிக்க வேண்டாமா?

இதற்கு மேலும் கற்பனை ரதங்களில் மக்களை ஏமாற்றி அழைத்துச் செல்லாமல், சாத்தியமான ஒரு தீர்வுக்கு தமிழ்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட்ட முடிவுக்கு வரப் பேசுதல் வேண்டும். அனைவரும் ஒன்றுபடும் புள்ளிகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் தங்களுக்குள்ள சமூக அக்கறை மற்றும் மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பது என்ன என்பதை உணர்த்தியாக வேண்டும். இன்றைய சூழ்நிலையைக் கடக்க இதன் உடனடி அவசியம் உணரப்படா விட்டால், நாம் இன்னும் கீழே போய் நின்றுதான் வீரமுழக்கம் இடவேண்டி வரும்.

நடந்துகொண்டிருப்பவற்றைத் தடுக்க அல்லது அதன் தீவிரத்தைக் குறைத்து அடுத்த கட்டத்திற்கு நகர, முதலில் இன்று தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடக் கூடிய விடயங்களையேனும் கண்டு தொடங்குதல், நாம் இன்னும் பாடுகேடான நிலைமைக்குப் போய்ப் பின் அரற்றுதலைத் தவிர்க்க உதவும். அரச தரப்பை தீர்வுக்கு வலியுறுத்துவதற்கும், தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பையேனும் பூர்த்தி செய்யும் விதமாக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தமிழ்க்கட்சிகளிடம் உள்ள இணக்கப்புள்ளிகளை அவர்கள் தம்மிடையே கலந்துபேசிக் கண்டுகொள்வதே இன்றைய முதல்படி.

ஒன்றுபட்ட கோரிக்கைகள் எவையெவையாக இருக்க முடியும் எனத் தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதும், அதில் உறுதியை வெளிப்படுத்தி நிற்பதும், அரச தரப்பிற்கு குறைந்தபட்சம் அதிலிருந்தே பேச்சைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அளிக்கும். அதைவிடுத்து, வேறு யாரேனும் மூலம் அரசுக்கு நிர்ப்பந்தத்தை அளித்து நாம் தமிழீழத்திற்குச் சென்றுவிடலாம் என்ற கனவையே இன்னமும் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்க முனைந்தால், “உள்ளதும் போச்சுதடா” அனுபவமே தொடராகும்.

ஒன்றுபடக் கூடிய புள்ளிகளை விட்டுவிட்டு கொள்கை வேறுபாடுகளிலேயே தொங்கிக்கொண்டு, தத்தம் பிரமுகத்தனத்தையும் பதவிகளையும் பாதுகாக்க பராதிப்படுகிறவர்களின் அரசியல் ஞானத்தையும் சமூக அக்கறையையும் நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும். நம் வாழ்வை இன்னுமின்னும் என்ன செய்யக் கருதி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டாக வேண்டும்.

No comments: