Friday, February 25, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

கரையும் மனிதர்கள்

தூக்க கலக்கத்தில் கதை கேட்கும் தயாரிப்பாளரை அசத்த வேண்டுமென்றால் அவரது உறக்கம் கலையும் அளவுக்கு ஒரு ஒன் லைனை சொல்ல வேண்டும். அப்படித்தான் கதாசிரியர் அந்தோனி ஜாஸ் வின்ஸ்கி ஒரு லைனை சொன்னார். துள்ளிக் குதித்த நார்டன், டோவ், செலினி ஆகிய மூவரும் ஆன் தி ஸ்பாட் படம் தயாரிக்க முன்வந்தார்கள். 'வேனிஷிங் ஆன் செவன்த் ஸ்ட்ரீட்' ஹாலிவுட் படம் உருவான விதம் இதுதான்.

தயாரிப்பாளரான மூவரும் நயா பைசா பாக்கியில்லாமல் சுரண்டி கொடுத்த தொகை வெறும் 10 மில்லியன் டாலர் மட்டுமே. வெறும் டிபனுக்குக்காக மட்டுமே பெரும் பாலான ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் செலவிடும் இந்தத் தொகையை வைத்துதான் மொத்த படத்தையும் இயக்குனர் பிராட் ஆன்டர்சன் எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்ததும் 20 நாட்கள்தான். நான்கே நான்கு கதாபாத்திரங்கள் தான் படம் முழுக்க வருகிறார்கள். இப்படி ஷூட்டிங்கில் ஏகப்பட்ட சிக்கனத்தை கடைபிடித்தவர்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கு மட்டும் பணத்தை தண்ணீராக செலவழித்திருக்கிறார்கள்.

காரணம் இந்தக் கதைக்கு கதாபாத்திரங்கள் அவசியமில்லை. ஊறுகாய் அளவுக்கு இருந்தால் போதும். மெயின் டிஷ், ஒன் அண்ட் ஒன்லி சிஜி ஒர்க்.

ரைட்.... அப்படியென்ன பிரமாதமான கதை?

இரவு வரக் கூடாது. வரவே கூடாது. அப்படி வந்தால் மனிதர்கள் கரைந்து விடுகிறார்கள். அவர்கள் அணிதிருக்கும் உடை மட்டும் அந்தந்த இடத்தில் அப்படி அப்படியே குவியல் குவியலாக இருக்கிறது. பயணித்த கார்கள், இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை ஆங்காங்கே சாலையில் அப்படி அப்படியே நின்றுவிடுகின்றன.

வெளிச்சம்... சிறிது வெளிச்சம் மட்டுமே மனிதர்களை கரையாமல் தடுக்கும். ஆனால், இரவில் மின்சாரம் இல்லை. பேட்டரி வேலை செய்யவில்லை. பகல் பொழுது சுருங்கிக் கொண்டே வருகிறது.

இதுதான் உலகம் முழுக்க நடக்கிறது. எதனால் மனிதர்கள் இரவில் இப்படி கரைகிறார்கள்? தெரியவில்லை. யார் இப்படி செய்கிறார்கள்? தெரியவில்லை. கண்டறிய முடியவில்லை. இதை தடுப்பது எப்படி? நோ ஐடியா...

கெட் ஐடியா, என மூளையை கசக்கி நான்கு கதாபாத்திரங்கள் கண்டறியும் உண்மைதான் படம். அதில் ஒருவர் தொலைகாட்சி நிருபர். அடுத்தவர் தியேட்டர் ஆபரேட்டர். மூன்றாவது ஓர் இளம் பெண். நான்காவது, ஓர் இளைஞன். தாய், தந்தையை இயற்கைப் பேரழிவில் பறிகொடுத்து விட்டு தன் வயிற்றுப்பாட்டுக்காக பார் ஒன்றில் வேலைப் பார்ப்பவன்.

இருட்டுதான் மனிதர்கள் கரைய காரணம் என வெவ்வேறு திக்கில் அனுபவபூர்வமாக உணரும் மூவர், ஜெனரேட்டர் உதவியுடன் டெடராய்ட் நகரின் 7 வது தெருவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாரில் அடைக்கலமாகிறார்கள். அந்த பாரில் சர்வீஸ் பாயாக இருக்கும் இளைஞன் அவர்களுடன் இணைகிறான். இந்த நால்வரும் தொலைக்காட்சி நிருபரின் தலைமையில் எப்படி தப்பிக்கிறார்கள், உலகை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை தடதடக்கும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ஹேடன் கிறிஸ்டன்சென், ஜான் லேக்யூ செமோ, தன்டி நியூட்டன், ஜேக்கப் லேடிமோர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் 'தி ஐ' 'ப்ளாஷ் ஷேட்ஸ்' ஆகிய முந்தைய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களின் சாயல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். என்றாலும் 'தி மெஷினிஸ்ட்' என்ற பம்பர் ஹிட் படத்தின் இயக்குனரான பிராட் ஆன்டர்சன், இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் என்பதால், பார்த்த மாதிரி இருந்தாலும் பார்க்கும் படி இப்படம் இருக்கும் என நம்பலாம்.

யார் கண்டது, சின்ன பட்ஜெட்டில் கட்டிப்போடும் சயின்ஸ் பிக்ஷன் திர்ல்லரை எப்படி எடுப்பது என்பதற்கும் ஒருவேளை இந்த 'வேனிஷிங் ஆன் செவன்த் ஸ்ட்ரீட்' பாடமாக அமையலாம்.                              

1 comment:

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.


hot tamil actress gallery