Monday, February 21, 2011

மாவீரர்களும்… மாமனிதர்களும்… மக்கள் பாடழிவும்

இறந்தவர்களைப் பற்றி உயர்வாகப் பேசுவதும், அவர்களது நல்ல பக்கங்களைப் பற்றி மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருப்பதும் நாம் மரபாய்க் கடைப்பிடித்து வரும் பழக்கங்களிலொன்று. இதைப் பயன்படுத்தி, மாண்ட ‘மாவீரர்கள்’ பற்றி உணர்ச்சிகரமாக நாலு வார்த்தை பேசி மக்களை ‘உச்சு’க் கொட்ட வைத்து வாக்குகளை அள்ளிவிட்டால் போதும் என்ற முயற்சியில் இப்போதும் சிலர் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது.

கங்கை கொண்டு கடாரம் வெல்லவும் கடல் கடந்து புலிக்கொடி பறக்கவும் ஆயிரமாயிரமாய் மக்களை மடியவிட்டு வளம்நிறை ஊர்களை எரியவிட்ட அதே நினைப்புகளிலேயே இப்போதும் வாழ்வை மறந்துவிட்டு மக்களைப் பொங்கியழியச் சொல்வது தவிர வேறு வழி தெரியவில்லை இவர்களுக்கு. இன்றைய உலகை ஒட்டி ஒரு வாழ்வுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. உணர்ச்சிகரக் கிறக்கத்தில் எதார்த்தம் மறக்கடித்த மக்களின் கழுத்துக்கு ‘தமிழ்ப் பெருமை’ நுகத்தடியை மாட்டிவிடுவதிலேயே இருக்கிறார்கள். இவ்வளவு கஷ்டங்களைச் சுமத்தி நம்மைப் பாடுகேடாய் வீழ்த்திய பிறகும் ‘மாவீர’ ஏமாற்றை விடுவதாயில்லை இவர்கள்.

எதிர்த்தரப்பு மீதான வெறுப்பையும் ஆக்ரோசத்தையும் பகையுணர்ச்சியையும் வற்ற விடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம், நம்முடைய எந்தத் தவறுகளால் சமூகத்திற்கு இந்தப் பாடழிவு உண்டானது என்பதைப் பார்க்கவோ பேசவோ விடாமல் தந்திரமாகத் தடுத்து வருகிறார்கள். நாம் விட்ட பிழைகளையும், நம்மை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற முட்டாள்த்தனமான பாசிச வழிமுறைகளையும் பற்றி எந்தச் சுயவிமர்சனமும் செய்துகொள்ளாமல், இப்போதும் மக்களைக் கருக்கும் பகைவெறுப்பு நெருப்பை மூட்டி மூட்டியே குளிர்காய்ந்து வருகிறார்கள்.

நாம் நீதியும் நியாயமுமான, பயங்கரவாதத்தையும் பாசிசத்தையும் நமக்குள் அண்ட விடாத போராட்ட வழிமுறைகளையேதான் கடைசிவரை பின்பற்றினோமா? மக்களை அழித்து முடித்ததில் எதிரிக்கு மட்டுமே பொறுப்பிருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் முழுக்க முழுக்க உண்மையேதான் சொல்கிறார்களா? அப்படியானால் எதிரிகளாகப் பார்த்துத் திருந்தாத வரை (அல்லது யாரும் வந்து திருத்தாத வரை) நாம் தொடர்ந்து அழிந்து கொண்டும், சமூகத்தை முன்னகர விடாமல் தடுத்துக் கொண்டும் இருக்க வேண்டியதுதானா? எதிரிகளைப் பிரமாண்டப்படுத்திக் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பதைத் தவிர, நம் வாழ்க்கையைச் செப்பனிடவும் மேம்படச் செய்யவும் நமக்கு வழிகளே இல்லையா?

நம்முடைய உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை மிகச் சரியாகத்தான் நடத்தினோம் என்று நம்மை நாமே நம்பவைத்துக் கொண்டிருந்தால், இனியும் நம் சிதைவைத் தடுத்துக் கொள்ள முடியுமா? நமது பிழைகளை மனந்திறந்து விவாதிக்காமல் உணர்ச்சியில் குமிழியிட வைத்து அழைத்துச் செல்ல முற்படுபவர்கள் நம்மைச் சரியான பாதையில் கொண்டு செல்வார்களா? அல்லது நட்சத்திரங்களைக் காட்டியபடியே மேலேற வகை தெரியாத சாக்கடைக்குள் நடக்க வைக்கப்படுகிறோமா?

வன்முறை வழி மூலம் மனிதர்கள் மேலான ஒரு வாழ்க்கைக்குச் செல்ல முடியும் என்பதிலுள்ள அபத்தத்தை விளக்கும் பல வரலாறுகளும், இலக்கியங்களும், மாந்தர் அவலங்களும் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றன. ஆனால் உணர்ச்சிகரமும் குழும ஆவேசமும் கொண்டதாகத் தயாரிக்கப்படும் ஒரு திரையால் அவை எளிதாக மறைக்கப்பட்டு மனிதகுலம் மீண்டும் மீண்டும் விவேகமற்றுச் சரிந்து வீழ நேர்கிறது. “தேசியக் கருத்தியலின் பிரதானமாக ஆதிக்கம் செலுத்தும் குணம் என்னவெனில், அது தேசிய சமூக முரண்பாடுகளையும் எதிர்சக்திகளையும் மறுக்கும். அந்த மறுப்பை வன்முறையினால் நிலைநாட்டும்… எல்லாப் பாசிஸங்களும் அதிதேசிய கருத்தியலினால்தான் கட்டப்பட்டன” என்கிறார் இந்திய மார்க்ஸியரான இஜாஸ் அகமது.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே போரிஸ் பாஸ்டர்நாக்கின் பிரபல ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலின் நாயகன் இதை விவாதிக்கிறான். சமூக – பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புரட்சியை மனமொப்பி வரவேற்கும் அவன், புரட்சித் தலைவர்களின் ஆணைகளும் அவர்கள் விதிக்கும் மரண தண்டனைகளும் மனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவதை எதிர்க்கிறான். அது வெறும் பிரமை என்கிறான். அருவமான முழக்கங்கள், உணர்ச்சிகரக் கோஷங்கள், தனிப்படுத்தல்களின் பெயரால் செய்யப்படும் கொலைகளும் வன்முறையும் மனிதர்களை இட்டுச்செல்லும் படுகுழி பற்றி எச்சரிக்கிறான்.

உன்னதமான இலக்கைத் தூய்மையான வழிமுறைகள் மூலமே அடைய முடியும். மாறாக, அடைய வேண்டிய இலக்கைக் காரணமாக வைத்து, அதற்காக நிகழ்த்தப்படும் படுகொலைகள் அநியாயங்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் நியாயப்படுத்துவதும் மனிதர்களுக்கெதிரான குரூரத்தின் பகுதிகள்தான் என்கிறான். மனிதனுக்கு எதிரான கொடுமைகளை ஒடுக்குதல்களை நீக்குவதற்கு அச்சுறுத்தலையும் கொடிய பயங்கரவாதத்தையும் பயன்படுத்தினால் நாம் உருவாக்க விரும்பும் ‘விடுதலை மனிதன்’ சர்க்கஸ் கூடாரத்தில் சவுக்குக் கொண்டு விலங்குகளைப் பழக்கும் மனிதனாகத்தான் இருப்பானேயொழிய ஏசு கிறிஸ்துவாக அல்ல. பொய்மையையும் பலாத்காரத்தையும் கொண்டு ஒரு புதிய சமுதாயத்தைக் கட்ட முடியாது என்பதை வலியுறுத்துகிறான்.

மெக்ஸிகோ தேசிய விடுதலைப் படையின் துணைத்தளபதி மார்க்கோஸ் போன்ற ஆயுதமேந்திப் போராடியவர்களும் இதுபற்றித் தெளிவுடனிருந்ததை அறிகிறோம். “புரட்சியின் வெற்றியே இறுதி இலட்சியம் என்னும்போது, இந்த இலட்சியமே வழிமுறைகளை எப்போதும் நியாயப்படுத்தி விடுகிறது என்று நாங்கள் கருதவில்லை. இலட்சியங்களே வழிமுறைகளுமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இலட்சியங்களுக்காகப் போராடுவதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் அதேசமயத்தில்தான் நாம் நமது இலட்சியங்களையும் கட்டமைக்கிறோம்” என்கிறார் ஜபடிஸ்டா தலைவர்.

மக்களை ஒன்றுபடுத்தவும், ஒரு குறிக்கோளுக்காகப் பிணைப்புற்று ஆதரவாய் எழுச்சி கொள்ளவும் ஒருசமயம் உதவிய அதே நம்பிக்கை, மற்றமைகளைப் புறக்கணிக்கும் மூடத்தனமாகவும் தன்முனைப்புக் கொண்டதாகவும் ஆகும்போது, அது உடனடியாகப் பேரபாயத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்துள்ளது என்பதையே சரித்திரமாய்க் காண்கிறோம். நம்மிடையே மெத்தப் படித்தவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் எனப்பட்டவர்கள் ஏன் இதுபற்றி மக்களுக்கு உணர்த்தாதிருந்தார்கள்? பயமுறுத்தல், படுகொலை, பயங்கரவாதம், பாசிஸம் என்பவற்றையெல்லாம் பட்டவர்த்தனமாகவே தமதியல்பாகவும் செயல்பாடுகளாகவும் கொண்டிருந்த புலிகளை, அவர்களே நமது ‘விடுதலை வீரர்கள்’ என்று இவர்களைச் சொல்லப் பண்ணியது எது? சிங்களப் பொதுமக்களையும், முஸ்லிம்களையும், மாற்றுக்கருத்துத் தமிழர்களையும் இன்னுமின்னும் ‘தடை’ என்று கருதிய எல்லோரையும் போட்டுத்தள்ளிவிட்டு விடுதலை இலக்கை அடைய, எல்லா அறங்களையும் காலால் மிதித்துச் செல்லப் பண்ணியது எது? இவர்களின் படிப்பெல்லாம் சமூகத்துக்கோ, குரலற்ற மக்களுக்கோ, மனித அறங்களுக்கோ எப்பனும் உதவாமல் ‘கொள்கை உருவாட்டம்’ ஏறிப் புத்தி மறந்தவர்களாக ஆனது ஏன்? படிப்பு, புத்திஜீவிதம், கொள்கைப் பிடிப்பு, பிரமுகத்தனம் போன்றவை இருந்துவிட்டால் மட்டும் மனிதர்கள் பண்பட்டவர்கள் என ஆகிவிடுவதில்லை என்பதையே நாம் கண்டுகொண்டோம்.

வெறும் கல்வியும், அரசியல், ஆய்வு அறிவுகளும் ஒருவரின் மனதுள்ளிருந்து அழுக்குகளும் ஆபத்தான சிந்தனைகளும் நீங்க உதவி விடுவதில்லை. அதற்கு வேறுவகையிலான படிப்பின், பண்படுதலின் அவசியம் பற்றி நாமறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதுபற்றிய ஜோசஃப் பிராட்ஸ்கியின் குறிப்பு இது:
“டிக்கன்ஸை கொஞ்சமும் படிக்காதவனை விடவும் டிக்கன்ஸை நிறையப் படித்தவனுக்கு ஒரு கருத்தின் பெயரால் தன் சக மனிதர்களைச் சுட்டுக் கொல்வது மிகச் சிரமமாக இருக்கும். டிக்கன்ஸ், ஸ்டெர்ன், ஸ்டெந்தல், தஸ்தாயெவ்ஸ்கி, ஃப்ளாபர், பால்ஸாக், மெல்வில், ப்ரூஸ்த், ம்யூசில் ஆகியோரைப் படிப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்; அதாவது இலக்கியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். எழுத்தறிவைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ அல்ல. எழுத்தறிவுள்ள படித்த ஒருவனுக்கு, இந்த அரசியல் ஆய்வுக்கட்டுரையை அல்லது அந்த அரசியல் ஆய்வுக்கட்டுரையைப் படித்த பிறகு, தன் சக மனிதர்களையே கொல்வது முற்றிலும் சாத்தியமாகிறது. அப்படிச் செய்யும்போது தன் கொள்கை உறுதிப்பாட்டின் பரவசத்தை அனுபவிக்கக் கூடச் செய்கிறான்…. வெளிப்படையான சந்தேகத்துக்கிடமில்லாதவற்றைக் குறித்த ஆய்வுரைகளைப் பற்றிய தவறு என்னவென்றால், அவற்றினுடைய சிரமமற்ற தன்மை மனசாட்சியை மாசுபடுத்துகிறது. அவை நமக்கு ஒரு நன்னெறி சார்ந்த சௌகரியத்தையும், நாம் செய்வது சரி உணர்வையும் கொடுக்கிறது. இங்குதான் அவற்றின் தீய கவர்ச்சி இருக்கிறது; இந்தத் தீய கவர்ச்சியின் இயல்பு ஒரு சமூக சீர்திருத்தவாதியின் தீய கவர்ச்சியின் இயல்புடன் ஒத்துள்ளது.”

இவ்விதமே நமது படித்த நடுத்தர வர்க்கம், தமக்கு அநியாயம் என்று பட்டவற்றுக்குப் பழிவாங்குவதற்காக நம் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகளை ஆதரித்து மௌனமாயிருந்தது. நமது இழப்புகளுக்குப் பயங்கரவாதப் பதிலடி கொடுப்பதை நியாயப்படுத்தியும் பகைவெறுப்பை வளர்த்தும் அழிவுகள் பெருகுவதை ஊக்குவித்தது. குஜராத் படுகொலைகள் பார்த்து விரக்தியுற்று எழுதிய அஷிஸ் நந்தியின் கருத்துக்கள் நமக்கும் பொருந்துவதை இங்கு சுட்டி நிறைவு செய்யலாம்.

“என்றேனும் ஒரு தலைமுறை தோன்றலாம். சுயநலம் சார்ந்தோ அல்லது பகைமை வாழ்க்கையில் வெறுத்துப் போயோ அந்தத் தலைமுறை பரஸ்பரம் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்ளும். அதுவரையிலும் நாம் பொறுமையுடன், ஆனால் வாளாவிராமல், மதிப்பீடுகளைக் கைவிட்டு விடாமல், காத்திருக்க வேண்டியிருக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் ஓரளவேனும் மனமாறுதல் ஏற்பட்டு, தவறுகளுக்காகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற தேடல் தோன்றும். இந்த மாநிலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கலாசாரத்தை குஜராத்திப் பாரம்பரியம் இறுதியாக வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.”

நாமும், ‘உலக மனிதர் யாவரும் நம் உறவினர்’ என்றும் ‘பகைவனுக்கும் அருளும் நெஞ்சும்’ கொண்ட நம் பாரம்பரியத்தை நம்பிக் காத்திருப்போம்.

No comments: