Thursday, February 17, 2011

என்ன மாதிரியான ஒரு சமூகம் இது!


மொழி, அரசியல் ஆகியனவற்றுக்கு அடுத்தபடியாக தமிழர்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக சினிமாவைச் சொல்ல முடியும் போலிருக்கிறது. காட்சிப் பிம்பங்களால் பரந்துபட்ட மக்களையும் இலகுவாக வசீகரித்துவிடுகிற சக்தியுடன் திகழ்கிறது சினிமா. கேளிக்கை தந்து கவருவதாகத் தோன்றும் அது, தனது மாயத்தன்மையோடு மனங்களினுள் புகுந்து அவற்றைக் கூர்மைப்படுத்தவோ மழுங்கடிக்கவோ செய்கிறது. இவ்வாறு மக்கள் மனங்களைக் கட்டமைப்பதிலும் சினிமா வலுவான பங்காற்றுகிறது என்றே தோன்றுகிறது.

தமிழ்மக்கள் என்றில்லை, எல்லா சமூக மனிதர்களுக்கும் இந்தத் தாக்கம் உண்டு. இலங்கையிலும் கூட நடிகர் விஜயகுமாரணதுங்க கொல்லப்படாமலிருந்தால் அவர் மிக எளிதாக இந்த நாட்டின் சக்திமிக்க தலைவராகியிருக்க முடியும் என்பதில் ஐயமில்லை. கடந்த தேர்தலிலும் கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் பழுத்த தலைவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சினிமாத்துறை சார்ந்த ஒருவரே மக்களின் பேராதரவைப் பெற்றிருப்பதையும் கவனிக்கலாம். வெகுமக்களிடம் சினிமா செலுத்துகிற தாக்கம் புறக்கணிக்கக்கூடியது அல்ல.

“அது ஒரு விபத்தைப் போல நம்மைத் தாக்குகிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் அமைதியை அது குலைத்து நமது நிலையை உணர வைக்கிறது. ஊடுருவி நம்மை மாற்றுகிறது” என்று ஒரு நல்ல புத்தகத்துக்கு காஃப்கா சொன்ன வரைவிலக்கணம் சினிமாவுக்கும் பொருந்துகிறது. புத்தகங்களைப் போலவே சினிமாவும் நம்முடைய கருத்துக்களை வடிவமைத்து வருவதாகத் தோன்றுகிறது. தமிழ் வெகுஜன சிந்தனை என்பது தமிழ் சினிமாவின் தாக்கத்தில் உருவாகியிருப்பதற்கான கூறுகளை அவ்வப்போது கண்டு ஆச்சரியப்பட்டுக் கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

தன்னேரில்லாத் தலைவனாக ஒரு நாயகனைத் தேடுவதும், அந்த நாயகன் எதிரிகளைத் துவம்சம் செய்வதை நமது ஏக்கங்களுக்கு வடிகாலாக்கிக் கொள்வதும், நாமெல்லாம் கண்ணீர் விடவோ அல்லது கைதட்டி ரசிக்கவோ மட்டுமான வெறும் பார்வையாளர்களே எனச் சுருங்கிக் கொள்ளவுமாகச் சொல்லித் தந்ததில் திரைப்படங்களுக்கும் பெரும் பங்கிருப்பதாகவே தோன்றுகிறது.

எதார்த்தத்தை எதிர்கொள்ளத் தயங்கி, வெறும் ரோச வீம்புக் கோஷங்களினால் இழுபட்டு, உள்ள நிலையைப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மறுக்கும் இந்த மனநிலை வேறு எப்படி உருவாகியிருக்கக் கூடும் என்று தெரியவில்லை. நாம் மேலும் மேலும் வருந்திச் சுமை சுமந்தால் யாராவது வந்து மீட்பார்கள் என்ற கழிவிரக்கத்தோடு, ஆகுமான நடைமுறைகள் பற்றி யோசிக்காமல் செயல்படாமல் இருக்கும் தன்மை எங்கிருந்து வந்திருக்கும்?

நம்மை மீட்டுக்கொள்ள நாமே செயற்பட வேண்டிய திட்டமிட வேண்டிய அவசியம் எதையும் பற்றி உணராமல், வெறும் கும்பல் எழுச்சி ஆவேசங்களிலேயே திருப்தி கண்டு தேய்ந்துகொண்டிருக்கும் சமூகமாக நாம் எப்படி மாறிப் போனோம்?

பிரமைகளை விலக்கிப் பார்க்கவும், பிழைகளைக் கேள்வி கேட்கவும், போகின்ற ஊருக்கு செல்லும் வழி சரிதானா என்று விசாரிக்கவும், அழைத்துப் போவதாகச் சொல்கிறவர்களை நிறுத்திக் கேட்கவும் இயலாதவர்களாக எப்படி ஆனோம்?

மற்றவர்களுக்கும் துயரங்கள் உண்டு. அவர்களுக்காகவும் நம் கண்ணில் நீர் வரும்போதுதான் நம் விடுதலையை நாம் உணர முடியும் என்பதனை எப்படி அறியாதவர்களானோம்?

விடைகள் பலப்பல இருக்க வேண்டும். நாம் பார்த்த, கேட்ட, வாசித்த கதைகளிலும் திரைப்படங்களிலும் கூட இந்த மனஅமைப்பிற்கான விடைகள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

பார்வையாளர் மனதில் ஒரு கனவுத்தன்மையைப் புகுத்தி எதார்த்தம் பற்றிய பார்வையை மழுங்கடிப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் ஆற்றும் பங்கும் மிகப் பெருமளவுதான். இந்தக் கனவுத் தன்மையும் பார்வைக் குறைபாடும் சமூக மனநிலையை மொண்ணையாக்கி விடுகிறது. பெரும் பள்ளத்தாக்கினுள்ளேயே உயர உயரப் பறப்பதான கற்பனையில் ஆழ்வதும், மற்றவர்களிலிருந்து நம்மைத் தனிமைப்படுத்தி விலக்கி உயிர்களைச் சிதைக்கும் பெருமையில் திளைப்பதும், கும்பல் எழுச்சியில் குப்புறக் கவிழ்ந்தபடி செல்வதும் இதனால்தான் நேர்கிறது.

ஜேம்ஸ் பாண்டின் விநோத கோட்டைப் போல நம்மை உள்மூடி வைத்துக்கொண்ட சமூகமாகத் தொடர்ந்தும் இருப்போமானால், துன்பங்களிலிருந்து வெளிவருதலும் மற்றவர்களோடு பேசுவதும் இணங்குவதும் வாழ்வதும் இயலாமலே போகும். முதலில் நம்மை மூடியிருக்கும் பிரமைகளைக் கிழித்து வெளியே பார்க்கத் துணிய வேண்டும்.

இந்த உலகு பல்வேறு விதமான மனிதர்களுடனும் பலப்பல குணாதிசய வகைமைகளுடனும்தான் இருக்கிறது. அடுத்தவர்கள் ஒருபோதும் நம்மைப் போலவே இருக்க மாட்டார்கள் என்பதே அடிப்படை உண்மை. இவ்வுலகில் அவர்களுடனும் இணைந்து வாழும் வழியைக் கண்டுகொள்வதே பண்பட்ட மனிதர் ஒவ்வொருவரினதும் முதல் அக்கறையாக இருக்கும். மொழியாலோ, நிறத்தாலோ, நடத்தையாலோ, நாமாக வரைந்துகொண்ட எல்லைகளாலோ மனிதர்களைப் பிரித்து நம்மை ஏதோ ஒரு அடையாள ரீதியாக குறுகலாக்கிக் கொள்வது நாகரிகமடைந்த மனிதர்களாக நம்மைக் காண்பிக்காது. இதற்கான பிழைகளைப் பிறரிடம் கண்டு அவர்களைத் திட்டித் தீர்த்தபடி இருப்பதும் நம் வாழ்வைச் செப்பனிட்டுக் கொள்ளும் வழியாகாது.

‘நாம்’ அற்ற பிறருடன் பேசவும் சகித்து வாழவுமான பொறிமுறைகளையும் நாமேதான் கண்டுகொள்ள வேண்டும். ஒரு பன்மைத்துவ சூழலுக்கு இசைந்துகொள்ளும் – அதற்காக நம்மை மாற்றிக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு.

நம் பிரமைகளிலிருந்து மீள்வதற்கு, உலகு தழுவிய பார்வையுடனான எழுத்துக்களும் மன ஆழத்தைத் தீண்டும் திரைப்படங்களும் உதவவேண்டும். நம் சமூகப் பொதுமனத்தினுள் கொஞ்சமேனும் குறுகுறுப்போ வெட்கமோ ஏற்படுவதற்கும் அவற்றையே நம்ப வேண்டியிருக்கிறது.

சிரிப்பு நடிகராக அறியப்படும் சார்ளி சப்ளின் படங்களிலிருந்து, சிரித்துக்கொண்டே நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கான வாய்ப்பையும் பெறமுடிவதை உதாரணமாகச் சொல்லலாம். ஆடும் சாய்மனைக் கதிரைக்குள் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரமுடியாமல் படாத பாடுபடுவார். அல்லது குறும்புத்தனமான சுழலும் கதவுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். இவர் எப்படி உள்ளே புக எத்தனித்தாலும், அந்தக் கதவு திரும்பத் திரும்ப அவரைத் தெருவுக்கே தள்ளிக் கொண்டிருக்கும். இல்லையெனில், சறுக்கு விளையாட்டுக் கற்றுக்கொள்ள, காலில் அந்த விளையாட்டுக்குரிய சில்லுகளைக் கட்டிக்கொண்டு நிற்பார். அந்தச் சில்லுகளோ அவர் காலிலிருந்து பிய்த்துக்கொண்டு தனியே போய் நிற்கும்.

இவையெல்லாம் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்போதே உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றையும் வெளிப்படுத்தும். சாப்ளின் போராடிக் கொண்டிருக்கும் இந்தப் பொருட்கள், அவரைப் பொறுத்தவரை பொல்லாதவையாக விளங்குவது மட்டுமல்ல, அவரது விரோதிகளாகவும் அவை மாறுகின்றன.

சுழலும் கதவைப் புரிந்துகொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வரை அவர் வெளியே தள்ளப்பட்டுக் கொண்டுதானிருப்பார். சறுக்கும் சில்லுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலாவிட்டால் வீழ்வதிலிருந்தும் தவிர்ந்துகொள்ள வழி கிடைக்காது.

பிரச்சினையிலிருந்து மீள்வதென்பது, அதற்காக நாம் என்ன புத்திசாதுரியமான முயற்சியைச் செய்துகொள்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கிறது. இன்றைய உலகில் சண்டை செய்வதும் முரண்டு பிடிப்பதும் அல்ல, புரிந்துகொள்ளலும் இணங்க வைப்பதும் இணக்கப் புள்ளிகளைக் கண்டு நம்மை மாற்றிக் கொள்வதுமே வெற்றியைத் தரும்.

No comments: