Friday, February 11, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

சுண்டல் பொட்டலத்திலிருந்த செய்தி துணுக்கை கதாசிரியர் கிறிஸ்டோபர் பெர்டோலினி பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் வசிப்பது அமெரிக்காவில், அங்கு சுண்டல் விற்கப்படுகிறதா... அப்படியே விற்கப்பட்டாலும் பழைய பேப்பரில் பொட்டலம் கட்டி விற்கப்படுகிறதா... அதுவும் 1942ம் வருடத்து செய்தித்தாள் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறதா...? என்றெல்லாம் நமக்கு சர்வ நிச்சயமாக தெரியாது. சரி பார்க்க ப்ளைட் பிடித்து அமேரிக்கா செல்லவும் நமக்கு வசதியில்லை.

எனவே இந்த சாத்தியத்தை ஓரம் கட்டி விடுவோம். பதிலாக இணையத்தில் பொழுது போகாமல் கிறிஸ்டோபர் மேய்ந்தபோது, அவர் கண்களில் 1942ம் வருடத்து செய்தி தட்டுப்பட்டிருக்கலாம் என்பதற்கு சாத்தியமிருக்கிறது.

இந்த சாத்தியம்தான் 'பேட்டல்; லாஸ் ஏஞ்சல்ஸ்' திரைப்படம் உருவாகக் காரணம். இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில், அமெரிக்காவிலுள்ள பேர்ல் ஹார்பர் (துறைமுகம்), ஜப்பானிய குண்டுவீச்சுக்கு இலக்கானது. இந்த குண்டுவீச்சு ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலால் நிகழ்த்தப்பட்டது என்பதை கண்டறிய அமெரிக்க அரசுக்கு சில நாட்கள் பிடித்தது. அந்த சில நாட்களுக்குள் வெளியான செய்திதாள்களில் குண்டு போட்டது யார் என்பது குறித்து ஏராளமான - தாராளமான கதைகள் உலா வந்தன.

அவற்றில் ஒன்றுதான், 'வேற்று கிரக மனிதர்கள் இக்காரியத்தை செய்திருக்கிறார்களா?' என்ற செய்தித் துணுக்கு. எதேச்சையாக படுத்தப்படி இதை வாசித்த கிறிஸ்டோபர், சட்டென எழுந்து அமர்ந்தார். மடமடவென ஒரு கதையை எழுதினர். அதுதான் இந்த மாதம் வெளியாகப் போகும் 'பேட்டல்; லாஸ் ஏஞ்சல்ஸ்' திரைப்படம்.

பியூனஸ் அயர்ஸ், பிரான்ஸ், சியோல் மற்றும் ஜெர்மனி, சீனாவிலுள்ள பல நகரங்கள் அடுத்தடுத்து அழிகின்றன. என்ன காரணம்? யாருக்கும் தெரியவில்லை. ஏன் அழிகிறது? விடை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நகரங்களுமே சீட்டுக் கட்டு உதிர்வதுபோல் உதிர்ந்து உருத்தெரியாமல் அழிந்துவிடுகின்றன. எஞ்சி இருப்பது லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமே. விரைவில் இந்நகரமும் தாக்கப்படலாம், அழியலாம் என அனைவருக்குமே புரிகிறது.

எப்பாடு பட்டாவது லாஸ் எஞ்சலெஸ்ஸையாவது காப்பாற்றலாம் என முடிவு செய்கிறார்கள். அதற்கு முதலில் யார், எப்படி, ஏன் தாக்குகிறார்கள் என கண்டறிய வேண்டும். அப்பொழுதுதான் அழிவை தடுக்கவும், அழிப்பவர்களை தகர்க்கவும் முடியும்.

இந்த அசைன்மெண்டை கப்பல் படைத்தளபதி ஒருவரிடம் ஒப்படைக்கிறார்கள். நீர் மூழ்கி கப்பலின் துணையுடனும், தனது குழுவினரின் ஒத்துழைப்புடனும், அவர் எப்படி அந்த வேற்றுகிரக மனிதர்களை வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் மிச்ச சொச்ச கதை.

படித்ததுமே படத்தில் கிராபிக்ஸ், ஜுகல்பந்தியை நடத்தியிருக்குமே என்ற ஆர்வம் ஏற்படும். சந்தேகமே வேண்டாம். படத்தின் முக்காலே மூன்று சதவீத பட்ஜெட், கிராபிக்ஸ் வேலைக்காகத்தான் செலவளிக்கப்பட்டிருக்கிறது.

இயக்கியிருப்பவர், தென்னப்பிரிக்காவில் பிறந்த ஜொனார்த்தன் லீபெஸ்மேன். நடிப்புக்காக கோல்டன் க்ளோப் விருதை பெற்றிருக்கும் ஆரோன் என்கார்ட், இப்படத்தில் கப்பல் படைத்தளபதியாக நடித்திருக்கிறார்.

சுவாரஸ்யமான விஷயம் ஒன்று இருக்கிறது. எந்த செய்தித் துணுக்கு கதாசிரியர் கிறிஸ்டோபரை ஈர்த்ததோ, அதே செய்தித் துணுக்கு 1979ல் இன்னொருவரையும் வசீகரித்தது. அச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு '1941' என்ற பெயரில் ஒரு காமெடி படத்தை இயக்கவும் செய்தார். ஆனால், படம் ஊத்திக்கொண்டது. இந்த விஷயம் கிறிஸ்டோபருக்கு தெரியும். என்றாலும் துநிந்துபோன 'பேட்டல்; லாஸ் ஏஞ்சல்ஸ்' படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

கிறிஸ்டோபர் கதை எழுதியிருக்கும் இப்படம் வெற்றி பெற்றால், '1941' என்ற டப்பா படத்தை தந்தவரை விட இவர் பெரிய ஆளாக ஹாலிவுட்டில் மதிக்கப்படுகிறார்.

காரணம், 1979ம் ஆண்டு, '1941' என்ற படத்தை இயக்கியவர் வேறு யாருமில்லை... உலக கமர்ஷியல் படங்களில் பிதாமகனாக ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்!

கே.ஏன்.சிவராமன்

No comments: