Friday, February 4, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

இது சண்டை படம்தான். மார்ஷியல் ஆர்ட்ஸ்தான் பிரதானம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்படம் தயாராகியிருக்கிறது. என்றாலும் முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இப்படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம். படத்தின் மையமாக வெளிப்படும் கருத்தில் நெகிழ்ந்து போகலாம்.

அப்படிதான் சென்ற ஆண்டு இப்படம் சீனாவில் வெளியானதும் அம்மக்கள் நெகிழ்ந்து போனார்கள். மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்கள். வழிந்த கல்லாவை தயாரிப்பாளர் ஆள் போட்டு அள்ளினார். பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், படத்தை ஆங்கிலப்படுத்தி, இதோ உலகம் முழுக்க திரையிட ஆயத்தமாகி விட்டார்கள்.

'ஐபி மேன் 2; தி லெஜென்ட் ஆஃப் கிரான்ட் மாஸ்டர்' ஹாலிவுட் படத்தின் முன்கதை சுருக்கம் இதுதான். ஐபி மேன் உண்மையில் சீனாவில் வாழ்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர். 1940களின் இறுதியில், ஜப்பானின் ஆதிக்கத்தில் சீனா இருந்தபோது அவர் எதிர் கொண்ட சவால்களை முதல் பாகம் விவரித்தது என்றால் - மனைவி நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போது குடும்பத்துடன் அவர் ஹாங்காங் வந்து சேர்வதிலிருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. அப்போது அந்தத் தீவு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு உட்பட பகுதியாக இருந்தது. ஒதுக்குபுறமாக குடியேறியவர், வருமானத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியை தொடங்குகிறார்.

ஆனால். கற்றுக்கொள்ள எந்த மாணவரும் வரவில்லை. பதிலாக வம்புச்சண்டைகள் தேடி வருகின்றன. அதில் முக்கியமானவர், இன்னொரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர். உண்மையில், அந்த நபருக்கு எந்த வித்தையும் தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்தவர் போல் மக்களை ஏமாற்றி வருகிறார். எங்கே ஐபி மேனால் தனது திறமையின்மை வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சும் அந்த நபர், ஐபி மேனை வலுச்சண்டைக்கு அழைக்கிறார். இச்சண்டையில் வெற்றி பெருபவர்தான் உண்மையான மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்பது பந்தயம்.

இதற்கு ஐபி மேன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் காவல்துறை கைது செய்து, நகர வாழ்க்கையை குலைக்க முயற்சித்ததாக இருவர் மீதும் வழக்கு போடுகிறது. சில நாட்களுக்கு பின் பிணையில் ஐபி மேன் வெளியே வருகிறார்.

அவரிடம் ஓர் இளைஞன் தகராறு செய்கிறான். அவனை கண்டித்து அனுப்புகிறார். சென்றவன் தன் நண்பர்களுடன் திரும்பி வருகிறான். அவர்கள் அனைவரையும் ஐபி மேன் வீழ்த்துகிறார். அப்போது வெளிப்பட்ட அவரது திறமையில் மயங்கிய அந்த இளைஞர்கள், அவரிடமே மாணவர்களாக சேருகிறார்கள்.

இடையில் அந்த போலி மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞரை வீழ்த்தும் படலம் அரங்கேறுகிறது. இதைப் பார்த்த ஓர்  ஆங்கிலேயர், 'எங்கள் பாக்ஸிங் சண்டைக்கு முன்னாள் உங்கள் கலை தூசு' என ஏளனம் செய்கிறார். தங்கள் நாட்டை - தங்கள் கலாசார அடையாளத்தை கிண்டல் செய்த ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட முடிவு செய்யும் ஐபி மேன், பாக்ஸிங்கை கற்று ஹாங்காங்கின் புகழ்பெற்ற பாக்ஸருடன் மோதி வெற்றி பெறுகிறார். 'இனத்தை காரணமாக வைத்து எந்த நாட்டு கலையையும் அவமதிக்காதீர்கள்' என்று சொல்லிவிட்டு வீடு திரும்புகிறார். அவர் மனைவிக்கும் சுகப் பிரசவம் நிகழ்கிறது...

சீன சூப்பர் ஸ்டாரான டோனி யென், சம்மோ ஹங், லைன் ஹங் உட்பட பலர் நடித்திர்க்கும் இப்படத்தை 'ஐபி மேன்' முதல் பாகத்தை இயக்கிய வில்சன் ஹிப் இயக்கியிருக்கிறார்.

படத்தின் இறுதிக்காட்சிதான் ஹைலைட். வீடு திரும்பி பிறந்த குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழும் ஐபி மேனை ஒரு சிறுவன் சந்திக்கிறான். தனக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் வித்தை கற்றுத் தரும்படி கேட்கிறான். அவனது கண்களையே உற்றுப் பார்த்தவர், அவன் கன்னத்தை தட்டி உரிய வயது வந்ததும் வரும்படி சொல்லி அனுப்புகிறார். கனவுடன் விடைப்பெற்றுச் செல்லும் அந்தச் சிறுவன்தான் புரூஸ் லீ.

யெஸ், புரூஸ் லீயின் குருதான் ஐபி மேன்.

கே.என்.சிவராமன்

1 comment:

Senthil said...

new movie?