Tuesday, January 18, 2011

இங்கே நாம் தனியாக இல்லை

எத்தனை தத்துவங்கள், விஞ்ஞானங்கள், வளர்ச்சிகள் இருந்தென்ன? மனிதர்கள் நாகரிகமடைந்திருக்கிறார்கள் என்று இன்னும் தயக்கமின்றிச் சொல்லிக் கொள்வதற்கு முடியவில்லை. உலகம் ரத்தப்பசியோடுதான் இன்னும் அலைகிறது. மனிதர்கள் சரியானதைத் தேர்வு செய்வதில்லை, விருப்பப்படுவதைத்தான் தேர்வு செய்வார்கள் என்றார் ரொஸ்ரோயெவ்ஸ்கி. அந்த விருப்பாவேசங்களால் வில்லங்கங்களை வருவித்துக் கொண்டே அதற்காக அழுது புலம்பிக்கொண்டும் இருக்கும் விவஸ்தையை அல்லது விவஸ்தையின்மையைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அழுதபடியே குறைகளைப் பெருங்குரலெடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தால் யாரவது வந்து கவனிப்பார்கள்தானே என்பதற்கப்பால் வேறு யோசனைகளோ முயற்சிகளோ தேவையில்லை என்றே நம்மில் பெரும்பாலோர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். “தீர்வை நாம் வலியுறுத்த மாட்டோம்; அது இலங்கை அரசாங்கமும் தமிழ்க்கட்சிகளும் பேசிக் கண்டுகொள்ள வேண்டியது” என்று சிவ்சங்கர் மேனன் சொன்னால், ஒருமுறை திடுக்கிட்டுவிட்டுப் பழையபடி அதற்கும் சேர்த்து எல்லோரையும் ஒருபாட்டம் திட்டிக் கொண்டிருப்பதாகவே இன்னுமிருக்கிறது நம் சூழல்.

நம்மைப் பற்றி நம்மிடமிருக்கும் நல்லபிப்பிராய நினைவிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது கஷ்டமாகவே இருக்கிறது. எல்லாத் தரப்பும் எல்லா மனிதர்களும் தாம் சரியானவர்கள் என்றே நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், நாம் மட்டுமே சரி என்று முறுக்கிக் கொண்டு நிற்பது ஒருபோதும் பிரச்சினை தீரப் போதுமானதில்லை. மற்றவர்களின் சரி என்ன என்பது பற்றிய கவனிப்பும் கணிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது. வெறுமனே குறை கண்டுபிடிக்கும் வாதங்களினால் வாழ்க்கையை சீர்செய்துகொள்ள முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான உண்மைகளைச் சொல்லியபடியே தவறான முடிவுக்குச் சென்று சேர்வதில் யாருக்கு நன்மை?

உலகில் கறுப்பு அல்லது வெள்ளையைத் தவிர வேறு வண்ணங்கள் இல்லையென்பது பார்வையிலுள்ள கோளாறுதான். குறைகள் இருக்கலாம். யாரிடம்தான் குறைகள் இல்லை? அல்லது எங்குதான் குறைகள் இல்லை?

பலநூறு பாத்திரங்களோடும் கிளைக் கதைகளோடும் விரிந்து பரந்து கிடப்பது மகாபாரதக் கதை. அதில் எந்த ஒரு பாத்திரமும் குறைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை என்பதைப் பார்க்கிறோம். மிக உயர்ந்தவராக வர்ணிக்கப்படுகிற தர்மபுத்திரரின் பாத்திரமே குறைகளும் சறுக்கல்களும் கொண்டதுதான்.

சூதாடியபோது, துரோணர் வகுத்த வியூகத்தை உடைக்க அபிமன்யுவை ஏவியபோது, துரோணரைக் கொல்ல அஸ்வத்தாமன் இறந்தான் என்பது போல் கூறியபோது, கர்ணனிடம் தோல்வியுற்று யுத்தகளத்தை விட்டு விலகியபோது எல்லாம் அவர் தாழ்ந்தார். கர்ணனிடம் அவருக்கிருந்த அச்சம்@ அவனைத் தன்னால் வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டு அவர் பட்ட துன்பம்@ அவனை அர்ஜூனன் வீழ்த்தி விட்டான் என்று நினைத்து முதலில் மகிழ்ந்து, பின்னர் அப்படி நடக்கவில்லை என்பதறிந்து மனம் குமுறி, அர்ஜூனன் மீது சுடுசொற்களை வாரியிறைத்தமை எல்லாமே அவர் குறைகள்தான்.

ஓரளவிற்கு குறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நின்றவர் என்று கூறத்தக்க விதுரரும், சூதாட்டத்திற்கு அழைக்கச் சென்றபோது தர்மனிடம் சில செய்திகளை ஒற்றன் போலவே தெரிவித்தார். துருபதன் அவமானப்படுத்தினான் என்பதற்காக அவனை வஞ்சம் தீர்த்துக் கொண்டவர் துரோணர். சீடனுக்காக ஏகலைவனையும். அம்பைக்குச் செய்த அநீதிக்காகவே அழிந்தவர் பீஷ்மர். மேலும் இவர்களெல்லாம் திரௌபதியின் மானபங்க நிகழ்ச்சியின் போது வாய்புதைத்து இருந்தவர்களும் கூட.

அவதார புருஷன் ராமனின் குறைகள் பட்டிமண்டபங்கள் முதல் மணிரத்னத்தின் ராவணன் படம் வரை பேசப்பட்டு விட்டது.

தவறுகளையும் சேர்த்துத்தான் நாம் மனிதர்கள். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதும் உண்மையே. “தோட்டத்தில் உன் மூலையை நீ கவனித்துக் கொண்டால் போதும்” என்றார் ரூஸோ. நாங்களோ அடுத்தவன் மூலையில் உள்ள கோளாறுகளைப் பார்ப்பதிலேயே நேரத்தையும் வாழ்வையும் வீணடித்துக் கொள்கிறோம். அநியாயங்கள், அடங்காப் போர்கள், பஞ்சங்கள், பாதகங்களினாலும் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகில், எவரும் நாம் முழுக்க முழுக்கச் சரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படி நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவர்களையே மேலும் ஆபத்தானவர்களாய்க் கருத வேண்டியிருக்கிறது.

“கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல்” என்ற குறளுக்கு, பரிமேலழகர் உரை சொல்வது போல, வடிவத்தில் அம்பு நேரானதும் செம்மையானதுமாக இருந்தாலும் செயலால் அது கொடியது@ யாழ் வளைந்திருந்தாலும் செயலால் மேன்மையானது.

பலரை மகிழ்ச்சிப்படுத்தவும் வாழ்வை அர்த்தப்படுத்தவும் வளைந்து கொள்வது ஒன்றும் இழிவானதில்லை. நம் தவறுகளைக் கண்டுகொள்ள மறுத்து மற்றவர் தவறுகளுக்காய் முறுக்கிக்கொண்டு நேராய் நிற்பதில் நாம் பெருமைப்பட முடியாது. அப்படி நிற்பவர்களிடமும், நாம் தணிந்து அவர்களையும் தளர்த்தி வழிக்குக் கொண்டுவர முயல்வதில் இழிவெதுவுமில்லை. பலருக்குமான வாழ்வைச் செய்துதரும் மேன்மைச் செயலே அது.

மக்களிடமும் மனிதத்திடமும் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் எவரிடமும் பேச நமக்குத் தடை இல்லை. எல்லாத் தரப்புடனும் எல்லாச் சமூகங்களுடனும் நாம் பேச முடியும். அயோத்தியில் வீரமும் இறுமாப்பும் இல்லை ஏனென்றால் அங்கு போரும் வன்முறையும் இல்லை என்று கம்பன் சொன்னதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம்மிடம் மட்டுமே முழுச் சரியும் இருப்பதாக நினைத்துக் கொள்வதால்தான் இணக்கத்தைப் புறந்தள்ளும் இறுமாப்பு வெல்கிறது. வாழ்வு தோற்றுப் போகிறது. எங்கள் பக்கத்தில் நியாயமும் சரியும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது ஒன்றும் தவறல்ல. நாங்கள் நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமே நியாயமும் சரியும் என்பதுதான் தவறு. எதிர்த்தரப்பின் சந்தேகங்களைப் புறக்கணித்துவிட்டு எமது தீர்வை நாம் கோர முடியாது, பெற்றுவிடவும் முடியாது.

ஒரு மனிதனை அளக்கும் அளவுகோல், அவன் மனதில் மற்றவர்களுக்கு என்ன இடம் என்பதைக் காண்பதாகத்தான் இருக்கும். “அயலானின் கண்களுள் ஆழ்ந்து நோக்கு. அவனுள் இயங்கும் வாழ்வு நீயே எனக் காண்பாய்” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வதும் இதையே. மற்றவர்களை அவர்களின் வித்தியாசங்களுடன் ஏற்றுக் கொள்ளும் கலையை நமது இன, மொழி உணர்வுகளோ சமய நன்னெறி காட்டல்களோ மட்டும் தந்துவிடாது. மற்றவர்களுடன் வாழ்வதை நாமே முயன்றுதான் கற்றுக்கொண்டாக வேண்டும். வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்கு, இந்தக் கற்றலே நமக்கு உதவ முடியும். ஏனெனில், இந்த உலகில் நாம் தனியாக இல்லை.

இந்தக் கவிதை ஆர்.ராஜகோபாலன் என்ற கவிஞருடையது.

“என்னை நான் மறந்துவிட்டு
மற்றவர்க்காய் காரியங்கள்
செய்யவேண்டும் என
நீ சொல்கிறாய்.
படுத்துக்கொண்டு யோசிக்கும் போதும்
தனியாக நடந்து போகும் போதும்
என்னைச் சுற்றியே என்
பிரக்ஞை உழலுகிறது.
ஏன், நான் இறந்து போகும்போது கூட
என்னைப் பற்றியே என்
நினைவுகள் இருக்கும்.
ஆக, எப்படியும் என்னை
முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை அதுதான்
நான் மற்றவர்க்காய் செய்யும் காரியமோ!”