Friday, January 28, 2011

மன்னர் காலத்து ஆவேசங்களுடன் மடிந்து சிதையும் தமிழர்கள்தானா இன்னும் நாம்?

நம்மைப் பற்றிய அதீத நினைப்புகளோடு மற்றெல்லோரையும் விலக்கி எதிரிகளாக்கியபடியும், பகைவெறுப்பை மிகைப்படுத்தும் உணர்ச்சி வேகங்களை ஏத்திவிட்டபடியும் நம் வளங்களையும் சமூகமனோபலத்தையும் சிதைப்பதற்கு நாமும் உடந்தையாக இருந்துவிட்டோம். யதார்த்தத்திற்கோ, உலகச் சூழ்நிலைமைக்கோ, சமூகப் பொது விவேகத்திற்கோ எப்பனும் இடம்கொடாது வெறும் மோட்டு எழுப்பத் துள்ளுகைகளால் பாடுகேடாய் அடிவாங்கிக் கொண்டதெல்லாம் முடிந்த கதை.

நம்மைத் தவிர்த்துப் பிற சமூகங்களெல்லாம் மோட்டுச் சமூகங்களே என்னுமொரு கிணற்றுத்தவளை நினைப்பை வளர்த்து, அதையே ஒரே பிடியாய் நம்பவும் செய்து, நம் பிரச்சினைக்கான மாற்று அணுகுமுறைகளையெல்லாம் ஒதுக்கிச் சண்டியர்களை வாய்பார்த்திருக்கும் சமூகமானோம். அழித்து முடிக்கும்வரை அவர்களுக்கு எதையும் சொல்ல முடியாதவர்களாக இருந்தோம்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை வாய்ப்பையும் குழப்பினோம். சந்திரிகா அரசாங்கம் பிரேரித்த தீர்வையும் துவக்கு முனையால் தள்ளிவிட்டுத் துள்ளினோம்.

நாம் செய்ய வேண்டியவை பற்றி நாமே சிந்திக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்து, யாரையேனும் நம்பிப் பார்த்துக்கொண்டிருத்தலே சுகம் என்று நம்மை நாம் பழக்கப்படுத்திப் பலகாலமாகிவிட்டது. இந்தியாவைப் பார்த்திருந்து, பிறகு புலிகளைப் பார்த்திருந்து பழக்கப்பட்டதன் பலனாக, இப்போது என்ன செய்யப் போகிறார் என்று மகிந்தவைப் பார்த்துக்கொண்டிருப்போம் என்றாகிவிட்டது.
“நீங்கள் தனியாக இருக்கும்போது ஒரு புலி எதிரே வந்தால் என்ன செய்வீர்கள்?” என்றொருத்தர் கேட்டதற்கு, “நான் என்ன செய்வது எது செய்தாலும் புலிதான் செய்ய வேண்டும்” என்று மற்றவர் பதிலளித்த கதை கேட்டிருக்கிறோமல்லவா? அதுதானே நம் கதையும்!

சரி, மகிந்த என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் சேர்ந்தொன்றாய்க் கேட்போமே என்று சிலருக்கேனும் புத்தி வந்திருப்பதை மெச்சத்தான் வேண்டும். இன்னும் பலருக்கு, வழமைபோலக் குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தால், வெளியில் இருந்து எவரேனும் வந்து எல்லாவற்றையும் சரிபண்ணிவிட்டுப் போவார்கள் என்ற கனவு கலையாமலே இருக்கிறது.

நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது, குடியேற்றம் நடக்கிறது, ராணுவத்தினர் பிடி இளகுவதாக இல்லை, ராணுவப் பின்பலத்துடன் பெரும்பான்மை இனத்தவர் தமிழ்ப்பிரதேசங்களுக்கு வருதலும் வர்த்தகம் செய்தலும் நடப்புடன் உலவுதலும் நடக்கிறது, மீள்குடியேறியோர் தொடர்பாய் அரசின் அக்கறைக் குறைவு, தீர்வுப் பேச்சில் மெத்தனம் எனப் பிரச்சினைகளை எல்லாம் வாய்ப்புலம்பல் அளவிலேயே வைத்தபடி இருக்கின்றனர். திட்டம் ஏதுமின்றி அரற்றுதல், வெளியாரிடம் முறையிடுதல், உள்ளுக்குள் தீர்க்க வழியேதுமில்லை என்று மக்களுக்குத் தொடர்ந்து உணர்ச்சி ஊசியடித்தல் போன்றவற்றையே இவர்கள் செய்துவருகின்றனர். பத்திரிகைகள், ஊடகங்கள், புத்திஜீவிகள் எனப்படுவோரும் இதற்குமேல் சொல்ல எதுவுமில்லாத வெற்றுப் புலம்பலுடனேயே நின்றுவிடுகிறார்கள்.

கையாலாகாத்தனப் புலம்பல்களையும், விவேகமற்ற உசார்மடத்தன இனமான வீரப்பேச்சுக்களையும் அள்ளிவிட்டுக் கொண்டே வெற்று ரோசமூட்டி, படுகுழிப் பயண வழிகாட்டும் ஆரவாரப் பிரமுகர்களை நிறுத்திக் கேள்விகள் கேட்டு விலக்க வேண்டிய தருணம் இது. நிலைமையை மாற்றுவதற்கான எங்கள் தரப்பு முயற்சிகளைப் பேசுகிறவர்களை, திட்டமிட்டுச் செயற்படுகிறவர்களை நாம் இனங்கண்டாக வேண்டும்.

இன்றைய நிலைமை வரவேற்புக்குரியது என்றோ அல்லது வருத்தத்துக்குரியது என்றோ வெறுமனே விளக்கமளித்துக் கொண்டிருப்பதால் மக்களுக்கு எந்த மாற்றமும் கிட்டப் போவதில்லை. இன்றைய சூழலை எதிர்கொள்ளுதலுக்கான திட்டமிடலும் அதுகுறித்த தயாரிப்பு நிலையும் நமக்குத் தேவை. குற்றச்சாட்டுகள் குறைகள் பற்றிய நம் எதிர்ப்புணர்வை விரோதபாவத்துடன் அணுகிக் காரியத்தைக் கெடுக்கும் ‘பொப்பியுலிச அரசியல்’ ஏமாற்றை இனியும் செய்துகொண்டிருக்கக் கூடாது. மக்கள் சிறிது சிறிதாகவேனும் பழைய நிலைக்கு மீண்டாக வேண்டும். அதற்கான குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் பெற்று படிப்படியாக முன்னகரும் விவேகமே உடனடித் தேவை. மோட்டுப் பிடிவாதங்களால் எதிர்த்தரப்புக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து மேலும் மேலும் மோசமான நிலைமைக்கு நம்மைத் தள்ளிச்செல்ல அனுமதித்துவிடக் கூடாது.
 
சாதாரண மக்களைப் பொறுத்தவரை, நேரடியான பாதிப்புகளைத் தருகிற உடனடி எதிரிகளே அவர்களுக்குப் பூதாகரமாகத் தெரிவர். தூரநோக்கில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய, நேரிடையாகப் புலப்படாமல் நிதானமாகச் சிந்திக்கும்போது மட்டுமே தெரிந்துகொள்ளக் கூடிய ஆபத்தான எதிரிகளை அவர்கள் உடனடியாக இனங்காண மறுப்பர். அந்த எதிரிகளை நண்பர்களாகவும் ஆபத்பாந்தவர்களாகவும் கருதும் போக்கும் அவர்களிடம் காணப்படும். அன்டோனியோ கிராம்சி போன்றவர்கள் இந்த சாதாரணமக்கள் மனநிலை குறித்து விளக்கியுள்ளனர்.

நாமும் இப்படித்தான் இன்னமும் உள்ளோம். நமக்கு அழிவுகளையும் வாழ்விழப்பையும் ஏற்படுத்தக் கூடிய கூறுகளை இனங்கண்டு கொள்ளாமல், எதையெதையோ நம்பி உணர்ச்சிகர எதிர்ப்பையே பிரதானப்படுத்திச் சீரழிந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைக் காப்பாற்றக்கூடிய உரிமைகளையும் அதிகாரங்களையும் மெல்ல மெல்லப் பெற்று விரிவாக்கி முன்னேறும் விவேகத்தைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக நம்மையுமழித்துப் பிறரைப் பழிவாங்கித் திருப்திகொள்ளும் குகைமனிதர் காலத்து வன்முறையையே உன்னதத் தமிழ்வீரமெனக் கொண்டாடுகிறோம். இப்போதும் வெற்று உணர்ச்சியேற்றல்களுக்கு வசமிழந்து குமுறிக் கொண்டிருப்பதேயல்லாமல் வேறு புத்திசாதுரிய நகர்வுகள் குறித்துக் கேள்விகள் கேட்கும் நிலைக்கு வரக்காணோம்.

வன்முறை நப்பாசைகளெல்லாம் மீண்டும் முள்ளிவாய்க்கால் பயணத்திற்கான அடுக்குகளே தவிர வேறெந்த வாழ்வுமல்ல என்பதை, வீரச்சவடால்களை நிறுத்தி நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் உரிமைகளையும் அதிகாரப்பகிர்வையும் சாதித்துக் கொள்வதற்கு, வன்முறை தவிர்த்த புத்திசாதுரியமான வழிமுறைகளைத் தேடிக் கைக்கொள்ளும் திராணி பெற வேண்டும். சினங்கொண்டு சீறிப் பூச்சாண்டி காட்டுவது, பழிக்குப் பழியாவேசத்தில் விவேகமற்றுத் துடிப்பது, திருப்பித் தாக்குவதொன்றே உயிர்வாழ்வதற்கான நியதி என்றெல்லாம் இனியும் நடித்துக்கொண்டும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டும் இருக்க முடியாது. மேலும் மேலும் மக்களை மன்னர்கால ஆவேசத்திற்கு மடிய விடமுடியாது.

காந்தி, மண்டேலா, கிழக்குத் திமோரியர்களிடமிருந்தெல்லாம் நாம் கற்றுக்கொள்ள இருப்பவைகளைப் பார்க்க வேண்டும். 

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சொன்னார்:
“சமூகம் அகிம்சையை உள்வாங்கினால், மக்கள் வன்முறையின்மைக்குப் பழகிவிடுவார்கள். இதனால் இராணுவ அதிகாரத்திற்குப் பதில் சிவில் அதிகாரம் முதன்மை பெறும். ஆகவே அகிம்சை வழியில் சுயராஜ்யமென்பது குழப்பத்துக்கும் அராஜகத்துக்குமான இடைவெளி என்ற அர்த்தமுடையதல்ல. அகிம்சை மூலமான சுயராஜ்யம் ஒரு முற்போக்கான அமைதிப் புரட்சியாகும். மூடிய அமைப்பிலிருந்து இயல்பாகவே மக்களின் கைக்கு அதிகாரம் மாறும் நிகழ்வாகும். பழுத்த பழம் மரத்திலிருந்து தானாக உதிர்வது போன்ற நிகழ்வாகும். அத்தகைய நிகழ்வு அடைய முடியாத ஒன்றாக இருக்கலாம் என்று நான் மீண்டும் சொல்கிறேன். ஆனால், அகிம்சையை சம்பந்தப்படுத்துவதை விட வேறு எனக்குத் தெரியாது. இன்றைய தொண்டர்கள் வன்முறையற்ற சூழல் உருவாகும் என்பதை நம்பாவிடில், அவர்கள் அகிம்சைப் போராட்டத்தை முற்றாகக் கைவிட்டு, வேறு வழியைப் பின்பற்ற வேண்டும். பிரிட்டிஷாரிடம் இருந்து வன்முறை மூலமே சுதந்திரம் பெறலாம் என்று மனதினுள் நினைத்துக்கொண்டு, அகிம்சையைப் பின்பற்றினால் நாங்கள் உண்மையற்றவர்களாவோம். எமது அகிம்சை நாம் நம்பும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்துக்கு விட்டுக்கொடுப்பது போல், பிரிட்டிஷ் மக்கள் அன்பு என்ற சக்திக்கும் இணங்கி நடப்பார்கள் என்று நாம் நம்ப வேண்டும். இதை நம்பாதவர்களுக்கு பல தலைமுறையாக, நீடித்துச் செல்லக்கூடிய இரத்தக்களரியுடனான, முன் எப்போதும் கண்டிராத புரட்சியே அனுபவமாகும். அத்தகைய புரட்சியில் பங்கேற்க எனக்கு விருப்பமில்லை. நான் அதை தூண்டும் கருவியாகவும் இருக்க விரும்பேன்.”

காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நமக்கு நிறைய உண்டு.

No comments: