Monday, January 31, 2011

உள்ளுராட்சித் தேர்தல் எமது கட்சி பங்குபற்றாது

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிக்கை தமிழர்களின் அரசியற் கட்சிகளிற்கிடையிலான ஐக்கியத்தையும் எமது கட்சியின் யதார்த்த நிலையையும் கருத்தில் கொண்டு இம்முறை உள்ளுராட்சித்; தேர்தலில் நாம் பங்கு பற்றுவதில்லை என தீர்மானித்துள்ளோம. இதனை எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அறியத் தருவது காலத்தின் தேவை என்பதைக் கருத்திற் கொண்டே இவ்வறிக்கையை வெளியிடுகின்றோம்.

தமிழ்மக்களுக்கான ஓர் அரசியல் அதிகார விடுதலையைப் பெறல், சமூக அடிமைத் தளைகள் ஒடுக்குமுறைகளை ஒழித்தல், பொருளாதார சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டல், முற்போக்கான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில் தோழர் நாபாவின் வழிகாட்டலில் ஒரு புரட்சிகர இயக்கமாகச் செயற்பட்ட நாம் காலப்போக்கில் தேர்தல்களில் பங்குபெறுவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டியவர்களானோம். புலிகள் வல்லமை கொண்டவர்களாக இருந்த போது மக்களோடு உறவுகளைப் பேணுவதற்கும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியல் தக்க வைப்பதற்காகவும் நாம் தேர்தல்களில் பங்குபற்றினோம். இன்று மக்களோடு நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தேர்தல்களில் எமது கட்சி வெற்றிகரமான ஒன்றாக இருப்பதற்கான மக்கள் பலம் இப்போது எம்மிடம் இல்லை. அதனை வெற்றிகரமாக ஆக்குவதற்கான கட்சிக் கட்டமைப்புப் பலத்தையும் நாம் இன்னமும் அடையவில்லை, தேர்தல்களைச் சந்திக்கும் பணபலமும் எம்மிடமில்லை. 

இந்நிலையில் தேர்தல் ஒன்றைச் சந்திப்பதானால் தமிழர்களிடையேயுள்ள கட்சிகளுக்கிடையில் ஓர் ஐக்கியம் ஏற்படும் பட்சத்தில் நாமும் பங்குபற்றலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால் அதற்கான நிலைரமைகள்; ஏற்படவில்லை. இந்நிலையில் எமது கட்சியானது எதிர்வரும் தேர்தலில் எந்த வகையிலும் பங்கு பற்றுவது சாத்தியமுமில்ல சரியானதுமல்ல என முடிவு செய்துள்ளோம்.. தேர்தல்களில் எமது கட்சி மீண்டும் எப்போது பங்குபற்றும் என்பதைத் தீர்மானிப்பதற்கு முதலில் எமது கட்சியை அதன் புரட்சிகர முற்போக்குக் குணாம்சங்களிலிருந்து பிசகாது இயங்கும் நிலையை உறுதிப்படுத்துவோம்! ஒரு புரட்சிகரக் கட்சிக்குரிய அடிப்படைகளில் முறைப்படுத்தப்பட்ட கட்சிக்கட்டமைப்பை பரந்துபட்டதாக கட்டியெழுப்புவோம்! பரந்துபட்ட பொதுமக்கள் மத்தியில் காத்திரமான தாக்கமுடைய சக்திகொண்ட கட்சியாக எமது கட்சியை வளர்ச்சியடையச் செய்வோம்! இந்த அரசியல் வேலைத்திட்டங்களையே எமது கட்சியின் அடுத்துவரும் காலகட்டத்து;கான செயற்திட்டமாகக் கொண்டு செயற்படுவோம் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.; எமது கட்சி எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது மேலும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மக்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக வளர்ச்சியடைந்திருக்கிறோம். என்பதைப் பொறுத்து நாம் பின்னொரு தடவை மீண்டும் தேர்தலில் பங்குபற்றுவது பற்றி தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு தேர்தல்களில் பங்குபற்றும் விவகாரங்களை நாம் பின்தள்ளிப் போட்டிருக்கிறோம். 

சமூகத் தலைமை என்பது வெறுமனே தேர்தல்களைப் பற்றி மாத்திரம் கருத்தில் கொண்டதாக அல்லாமல் பரந்துபட்ட மக்கள் சக்தியை தன்னகத்தே திரட்டிய உண்மையான மக்கள் தலைமையாகப் பரிணமிக்க வேண்டும். அரசியல் தலைமைத்துவம் ஒரு சமூக இயக்கமாகச் செயற்படவேண்டும் எனக் கருதுகிறோம். மகாத்மா  காந்தியடிகள், மகாசிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ், மாமேதை லெனின், தந்தை பெரியார் போன்றோர் மக்களின் சுதந்திரத்திற்கும் உண்மையான ஜனநாயகத்துக்கும் சமூக பொருளாதார விடுதலைக்குமான இயக்கத்தை நடத்தியது போன்ற சமூக ஜனநாயக சுதந்திர இயக்கம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை இங்கே நிலவுவதை நாம் உணருகிறோம்.

யுத்தத்துக்குப் பிந்திய சூழ்நிலையில் தேசிய ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள், சமூகத் தீண்டாமைகள், பெண் அடிமைத்தனம் மனிதனால் ஏற்படுத்தப்படும் சூழலியல் மோசடிகள்; கலாச்சார சீரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கணக்கிலெடுத்துச் செயற்படவேண்டியுள்ளது. 1983ற்கு முந்திய எமது அரசியல் செயல்முறைகளையும், எமது சமகால தேசிய மற்றும் சர்வதேச அரசியல் பொருளாதார யதார்த்தங்களையும் கருத்திற்கெடுத்து செயற்பட வேண்டியிருக்கிறது.

இராணுவமயப்பட்ட சூழ்நிலை, அன்றாடம் நிகழும் மக்களுக்கெதிரான வன்முறைகள், ஊழல்கள், சமூகச் சீர்குலைவுகள், திட்டமிட்ட குடியேற்ற மற்றும் கலாச்சார திணிப்பு முயற்சிகள்;, அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்புகள், சீரழியும் கல்வி முறைகள், நியாயங்களற்ற நீதிமுறைகள், என்றும் பயந்த வாழ்க்கை, அடிப்படைச் சுதந்திரங்களுக்கு உத்தரவாதமின்மை என இன்று நிலவும் பாரதூரமான பிரச்சினைகள் தொடர்பாக நாம் விழிப்புணவுணர்வுடன் மக்களோடு இணைந்து செயற்பட வேண்டியிருக்கிறது.

இன சமூகங்களிடையே அரசியல் அதிகாரப் பகிர்வு, சமத்துவ சகோதரத்துவமான வாழ்வு, ஐனநாயக கலாச்சாரம்; பற்றி காத்திரமான உணர்வை நாம் நாடளாவிய அளவில் ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. இயலுமானவரை தமிழ் மக்களினது சகல கட்சிகளுடன் முஸ்லிம் மக்களது கட்சிகளுடனும் தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து இந்த செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். தமிழ்த் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடும் அரங்கம் தொடர்ந்து செயற்பட வேண்டும்;. அது தேர்தல்களுக்கு அப்பாற்பட்டது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் சமகாலத்தில் மக்கள் அனுபவிக்கும் அன்றாடச் சவால்களையும் எதிர் நோக்குவதற்குமான கூட்டாகும்.. எனவே அது தேர்தல்களால் தடைப்படாது பார்த்துக் கொள்வது தமிழர்களிடையேயுள்ள கட்சிகள் அனைத்தினதும் கடமையாகும். 

1990களில் உலகளாவிய அளவில் நிலவிய சோசலிச மற்றும் முற்போக்கான தேசிய விடுதலை இயக்கங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளும்;, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நிலைகொண்டிருந்த தமிழ்ப்பாசிசத்தின்; விளைவுகளும், அத்துடன் பௌத்த சிங்கள மேலாதிக்க அகங்காரத்தின் சூழ்ச்சிகளும் இங்கே ஒருவிதமான கொள்கையுமற்ற பிழைப்புவாத அரசியற் சூழ்நிலை ஒன்றை இன்றைய சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஒருபுறமும் பணமும் அதிகாரமமதையும், மறுபுறம் மக்களிடையே மற்ற இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான உணர்ச்சிகளை ஊட்டும்; அரசியல் வியாபாரமும் முக்கியமாகிப் போயுள்ளன. இந்தக்காலகட்டத்தில் நாம் நிதானமாக முன்னோக்கிக் கால்பதிக்க வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் மீறி நாம் சாமானியமக்களைச்சார்ந்து நின்று  தார்மீக நெறிமுறைகளை மீறாத சமூக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஐனநாயக அரசியல் செயற்பாட்டில் தேர்தல்கள் முக்கியமானவைதான். ஆனால் அவைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென நாம் கருதக்கூடாது. எதிர்காலத்தில் மக்களுக்குப் பணியாற்றுவதற்கு தேர்தல்களினூடாக வரும் பதவிகளும் முக்கியம் என்று விரும்புவோமாயின் அதற்கு முதலில் எமது கட்சியையும் உறுப்பினர்களையும் எமது நெருங்கிய ஆதரவாளர்களையும் அவ்வாறான சேவைக்குரிய தரத்துக்கு நாம் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கான காலமும் சூழலும் தேவைப்படுகிறது. இங்கு நாம் ஒளித்து மறைத்து மக்களை ஏமாற்றி வழிநடத்தும் போலிப் பிரமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இதனாலேயே இத்தனை விடயங்களையும் இங்கு பகிரங்கமாக முன்வைக்க விரும்புpறோம்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மக்கள் நேர்மையானவர்களாகவும், நல்லவர்களாவும் வல்லவர்களாகவும் உள்ள மக்களின் உண்மையான சேவையாளாகளுக்கு தங்கள் ஜனநாயக உரிமையான வாக்குகளை சரியாக அளித்து தெர்வு செய்ய வேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறோம். .

எமது நிலைப்பாடு கண்டு போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். உண்மை நிச்சயம் வெல்லும். நாம் ஏன் தேர்தலில் பங்கு பற்றவில்லை என்னும் விடயத்தில் எமது மக்களிற் பெரும்பாலோர் எம்மைப்; புரிந்து கொள்வார்கள் என்பதை நாம் நம்புகிறோம். 
எமது அனைத்து உழைப்பும் மக்களுக்கே.

தி.சிறிதரன்
பொதுச் செயலாளர்,
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

No comments: