Friday, January 14, 2011

கொலைகளை ஆதரித்த கூட்டுமனதுக்குள் இருந்தோமா?

இரகசியமாய் நம்மிடையே புழங்கிய ஜோக்குகளை இப்போது பயமின்றிப் பரிமாறிக்கொள்ளக் கூடிய ஒரு சூழல் உருவாகியிருப்பதைக் கொண்டாடியபடியே ஆரம்பிக்கலாம்.

ஒரு தலைவர் ஒரு பைத்தியக்கார விடுதியைப் பார்வையிடச் சென்றார். பைத்தியங்கள் எல்லாம் ஒழுங்காக உடை உடுத்தப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். தலைவருக்கு, ஒழுங்கும் வரிசை குலையாத கீழ்ப்படிவும்தான் உயிர் போன்றவை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரத்தை எடுத்துக்கொண்டு அவர்களை ஒழுங்குபடுத்தி நிற்க வைத்திருந்தது. தலைவர் அவர்களைப் பார்வையிட வந்தபோது, ஒரே நேரத்தில் அனைவரும் கையுயர்த்தி அவருக்கு வணக்கம் சொன்னார்கள். பெருமிதத்தோடு பார்வையிட்டு வந்த தலைவர், ஒரு நபர் மட்டும் வணக்கம் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து எரிச்சலுற்றார். அருகாக வந்துகொண்டிருந்த தன் தளபதிகளை ஒரு முழி முழித்துவிட்டு, அந்த நபரைப் பார்த்து “ஏன் வணக்கம் சொல்லவில்லை?” என்று உறுமினார். நடுங்கி வெலவெலத்துப் போன அந்த நபர் சொன்னார்: “மக...த்துவமி...க்க தேசியத் தலைவரே, நான் ஒரு நர்ஸ். பைத்தியமல்ல.”

சரி, விஷயத்திற்கு வருவோம். அந்தமாதிரி மருத்துவமனைகளுக்கு வெளியே மட்டும் என்ன வாழுகிறதாம்? “கடவுள் எப்படிச் செத்திருக்க முடியும்? தலைவர் மீண்டும் வருவார்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வெளியேதானே நிறையப் பேர் உலவி வருகிறார்கள்! பிரமாண்டமாய்க் கட்டியெழுப்பிக் காட்டப்பட்ட நம்பிக்கைகள் இடிந்துவிட்ட அதிர்ச்சியில் அப்பாவித்தனமாக உளறிக்கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். விஷயமறிந்தவர்கள் என்று கருதப்படும் எழுத்தாளர் கலைஞர்களும் அதுபோல உளறுவதை என்ன சொல்ல? தாங்கள் நம்பிப் பரப்புரை செய்துவந்த ஒன்றிலிருந்து மீண்டுவிட முடியாமல் தவிக்கிறார்கள் என்பதுதானா?

இவர்கள், பிரபாகரன் இல்லாமல் போய்விட்டதை ஒப்புக்கொண்டாலும், அந்த வெற்றிடத்தில் எந்தப் பேராளுமை கொண்டு நிரப்புவது என்ற கவலையில் மூழ்கியிருக்கிறார்கள். (“வாசலில் பிள்ளை அசிங்கம் பண்ணி வைச்சிருக்கு, அதை அள்ளித் தூர எறி என்று சொன்னால்... அதை எடுத்துட்டு அந்த இடத்தில எதை வைக்கிறதுன்னு கேட்டுட்டு நிக்கிறியே!” – கடவுளுக்குப் பதிலாக அந்த இடத்தில் எதை வைப்பது? என்ற கேள்விக்கு ஈ.வெ.ரா.பெரியார் சொல்லிய பதில்.)

அவர்களது, கவலைப்படும் தனிப்பட்ட உரிமையை நாம் கேள்வி கேட்க வேண்டியதில்லை. ஆனால், இவ்வளவு மக்களையும் அழித்து, தன்னைச் சார்ந்தவர்களையும் அழித்து, தன்னையும் அழித்துக் கொண்டவருக்காக மக்கள் எப்படிக் கவலைப்பட முடியும்? அப்படிக் கவலைப்படுவதற்கு வேண்டிய புனைவுகளை மீண்டும் தயாரித்து உலவவிட முனைவது, அந்த மக்களை மீண்டும் ஏமாற்றுவதாகுமல்லவா?

தேசியத் தலைவர், வல்லவர், மக்களைக் காக்க கண் உறங்காமல் திட்டமிடுபவர், சிங்கள வெறியரின் சிம்ம சொப்பனம், குண்டுகளை வீணாக்காது குரங்குகள் ஒரே வரிசையில் வந்தபிறகு ஒரே குண்டால் மூன்றையும் வீழ்த்தும் வெடிவீரர், அவருக்குப் பிடித்த கௌபோய் நடிகர்போல் ‘ஏகே’யை ஒருகையால் சுழற்றிச் சுடுபவர், தற்கொலைப் படையாளிகளுடன் கடைசி விருந்துண்டு அவர்களைச் சந்தோஷப்படுத்தி அனுப்பிவைப்பவர், உலகத்தமிழரின் ஒப்பற்ற கவர்ச்சித் திலகம் (இதைச் சொல்லித்தான் ஆறு கோடிக்கும் தலைவர் என்றிருந்த கருணாநிதியைக் கவலைப்பட வைத்தார்கள்), பெரும்பான்மைத் தமிழ்மனங்களின் ஓருருவமாய்த் திரண்ட தலைவர் என்றெல்லாம் புனைவுகளைப் பெருக்கியபடியேதான் போராட்டப் பிழை எதையும் தட்டிக்கேட்க விடாமல் பஜனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் பண்ணிய பஜனையில் மதிமயங்கி, “நாங்கள் பயந்து மூச்சடக்கி மரணத்துள் வாழ்வது எங்கள் பெடியள் பலமடையத்தானே! எல்லாத்தையும் வெண்டு தரும் விண்ணர் எண்டுதானே அவங்களை எல்லாரும் சொல்லுகினம்” என்று மக்களும் வாய்மூடிக் கொடுமை சகித்து, எதிரியிடம் அடித்தெடுத்த ஆயுதக் குவியலின் ‘ஷோ’க்களைப் பார்த்துப் புல்லரிப்பதொன்றே செய்துகொண்டிருந்தார்கள்.

மக்களை மதியாத, மானுடத்தின் அடிப்படை உரிமைகளை உணர்வுகளை மதியாத, மனித உயிர்களையும் மதியாத ஒரு போராட்ட வீறுநடைக்குப் பரணி பாடிக்கொண்டிருந்ததன் பலனல்லவா கடைசியிலே நாம் கண்டது?

சிங்கள இனம் மீதும், அரசு மீதும் பிரமாண்டமாக்கப்பட்ட வெறுப்பும் பகையும் விவேகமற்ற ரோசமுமல்லவா 25 வருடங்களாக நமக்குள்ளேயே வளர்ந்த கொலைக்கலாசாரத்தை, “போராட்டப் பாதையின் சிறு சறுக்கல்கள்” என்று பூசி மெழுகி மக்கள் மயங்கும் வீறுப்பிரச்சார நஞ்சூட்டியது?

பொதுமக்கள் மீதெல்லாம் பாய்ந்த தலைவரின் வீரத்தைப் போற்றிப் பாடியதும், தமிழர்களின் காவலனாகக் கதையளந்ததும் அல்லது அவற்றை மறுக்காதிருந்ததும், மாவீரம் - தற்கொடைத் தியாகம் பற்றியெல்லாம் பரணிகளைப் பாடிப் பரவிவிட்டு, “என்ன செய்ய... சரியோ தப்போ பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களை ஆதரிக்கும்போது அதை ஏற்றுக் கொள்வதுதானே ஜனநாயகக் கடப்பாடு” என்று மக்கள் மீது பழியைப் போட்டு நழுவுவது படித்தோர்க்குரிய ஞாயம்தானா?
அப்படியானால், மக்கள் உணர்வுகளைப் பிரதிநிதித்துவம் செய்த வரலாற்றுப்பாத்திரம் ஹிட்லருக்கும் இருந்தது எனலாமா? ஓ... அந்தப் பாத்திரம் நிரம்ப எவ்வளவு ரத்தம்!

 
பாசிஸத்திற்கு ஆதரவாக மக்கள் மனநிலையை உருவாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி, ஜெர்மானிய தேசியத் தலைவர் ஹிட்லர் தனது ‘மெய்ன் காம்ப்’ நூலில் விரிவாக எழுதிவைத்திருக்கிறார். அதைச் சும்மா புரட்டிப் பார்த்தாலே போதும். கடந்த 25 வருடமாக நாங்கள் செய்துகொண்டிருந்தவை என்னவென்பது புரிந்துவிடும்.

புலிகள் ஆரம்பத்திலிருந்தே பாசிஸ்ட்டுகளாகத்தான் வளர்ந்தார்கள். பாசிஸ்ட்டுகளாகத்தான் நடந்துகொண்டார்கள். பாசிஸ்ட்டுகளாகத்தான் மக்களையும் அழித்து முடிவை எய்தினார்கள் என்பதைக் காண மறுத்துச் சக்கரவட்டமடிப்பது, நாமே நம்பி வளர்த்த ஒன்றின் வீழ்ச்சியை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருப்பதால் அல்லவா?

2009 ஏப்ரல் முதல் மே வரை, கடைசி ஒரு மாதம்தான் மக்களைப் புலிகள் அழித்தார்கள் - அழிய விட்டார்கள் என்று சொல்வது, இப்போதும் பழைய ஏமாற்றைத் தொடர்வதாகாதா?

ஆரம்பத்திலிருந்தே அவர்கள் வளர்த்த – நம்மில் பலரின் ஊக்குவிப்பு மற்றும் மௌன அங்கீகாரத்துடன் வளர்க்கப்பட்டதுமான – போராட்ட நடவடிக்கைகளில் மக்களை, சமூகத்தை அழிப்பதற்கான கூறுகளே இருந்தன என்பதைக் கண்டுகொள்ளாமல் போனது குற்றமில்லையா? அவர்களது கடைசி நடவடிக்கைகள் வரை அவர்களிடமிருந்த மக்கள் விரோதத்தை, ஆபத்தான போக்குகளைக் காண முடியாமல் போய் கடைசி அழிவு வரை அவர்களை அனுமதித்திருந்தவர்களுக்கு குற்றத்தில் பங்கில்லையா?

நமக்குள் வளர்ந்த பாசிஸ எழுச்சிக்கு ஆதரவாக மக்கள் மனநிலையை உருவாக்கிவிட்டு, பிறகு அந்த மக்களின் கூட்டு மனதுக்குள் நாமும் இருந்தோம் என்பது ஒன்றும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய குற்றம் இல்லை, அப்படியா? ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த பாசிஸ வளர்ச்சியை எதிர்த்துக் கொண்டிருந்த எல்லோரும், மறுதரப்பில் புலிகளுக்குச் சமமான தப்பைச் செய்துகொண்டிருந்தவர்கள், அப்படித்தானா? சமூகத்தின் கூட்டுமனதை பாசிஸமே கையாளும்போது அதை அங்கீகரித்து நின்றவர்கள் கையில்தான் அந்த முற்போக்குப் பாத்திரமா? அதைத் தூர எறிந்துவிட்டுச் சுயவிமர்சனம் செய்துகொள்ளாமல் இன்னும் என்ன தடுக்கிறது உங்களை?

No comments: