Thursday, January 6, 2011

குலத்துக்கே பழியுண்டாக்கிய கோபம்

“நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”

என்றார் வள்ளுவர். வேண்டிய அறிவை, ஆற்றல்களைப் பெற்றிருப்பது மட்டும் ஒரு மனிதனை உயர்ந்தவனாக்கி விடாது. எத்தனை பலமும் திறமைகளும் இருப்பினும், அடக்கமும் அவனிடம் இருந்தால்தான் அவன் பாராட்டத்தகுந்த மனிதனாக இருக்க முடியும்.

பொங்கும் நேரம் அறிந்து ஆக்ரோசமாய்ப் புறப்படுவது போல, அடங்க வேண்டிய இடம் அறிந்து தன்னை அடக்கிக் கொள்ளவும் தெரிந்திருப்பதே வீரம். தன் வலி அறிதலும் மற்றவர் வலி அறிதலும் வெற்றிக்கு ஆசைப்படுபவர்களிடம் இருக்க வேண்டிய விவேகங்களில் முக்கியமானவை. ‘வலி’ என்பது ஆற்றலையும் குறிக்கும் துன்பத்தையும் குறிக்கும்.

நம்மவர் துயரங்களையும் அறிந்து மற்றவர் துயரங்களையும் உணர்ந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தும் போதே அதற்கு அறம் சார்ந்த நியாயம் கிடைக்கிறது. அதுபோல் எதிர்த்தரப்பு ஆற்றலையும் எடைபோடத் தெரிந்திருந்தால், அடங்கிப் போக வேண்டிய நேரம் எது என்பது பற்றிய அறிவும் கைகூடுகிறது. நம்மை நம்பியவர்களினதும், பொதுவாக மனித உயிர்களினதும் பெறுமதியும் வலியும் தெரிந்திருந்தால், நம் ரோசப் பிடிவாதங்களை விட்டு இறங்கி வருவது ஒன்றும் கேவலமாகிவிடாது என்பதும் விளங்கும்.

காலமல்லாத காலத்தில் வீரத்தைக் காட்டுவது சிறுபிள்ளைத்தனமாகவே அமையும். அனைவரினதும் நலனுக்காக அடங்க வேண்டிய நேரத்தில், ஒன்றும் தெரியாதவனைப் போன்று நடந்துகொள்வதிலேயே புத்திசாலித்தனம் வெளிப்படும். அச்சமயம் நம்மைத் தாழ்த்துவதால் நாம் தாழ்ந்துவிடுவதில்லை. அதேபோல, பொங்கியெழ வேண்டிய நேரத்தில் அடங்கியிருக்கத் தேவையில்லை என்பதும் தெளிவு. இந்த வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டவன்தான் வீரனாக இருக்க முடியும். காலத்தையும் சூழலையும் கணக்கிடத் தெரியாத வீரம், வெறுமனே அழிவுகளை விளைத்துவிட்டே முடிவெய்தும்.

அடக்கம் என்பது ஒரு இயல்பு. அது இயல்பாகவே நமக்குள் கூடிவர வேண்டும்; மற்றவர்களுக்காக நாம் நடந்துகொள்ளும் முறையினால் அல்ல. நான் அடக்கமாகவே நடந்துகொள்கிறேன் என நினைத்துக் கொண்டாலே அது அகந்தையாகி விடும். “நான் மிகவும் அடக்கமானவன்” என்று நினைத்துக் கொள்வதைப் போன்ற வேடிக்கை வேறு கிடையாது. “நீ உறங்குகிறாயா?” என்ற கேள்விக்கு, “ஆமாம்!” என்று பதில் சொல்வதைப் போல.

இராமாயணத்தில் கம்பன் காட்டுகிற அனுமனது ஆற்றல் எல்லாம் அவனது அடக்கத்தினாலேயே பெருமையின் உச்சியைத் தொடுகிறது.

“அடங்கவும் வல்லீர்; காலம் அது அன்றேல், அமர் வந்தால் மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர்” என்று சாம்பன் அதை அனுமனிடமே சொல்கிறான். கடல் கடந்து வந்து சீதையைக் கண்டு, தன் பேருருக் காட்டிவிட்டு அனுமன், என் போல பல லட்சம் படைவீரர்கள் ராமனுக்குத் துணையாக உள்ளனர் “யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்@ ஏவல் கூவல் பணி செய்வேன்” என்று சாதாரணமாகச் சொல்கிறான்.

ஆனால், இதே அனுமனின் வீரத்தைக் கண்டே விபீடணன் ராமனிடம் சரணடைய வந்ததாகச் சொல்கிறான். “அனுமன் அரக்கரை அழித்த ஆற்றலையும், இலங்கையை எரித்து மீண்டதையும் கண்டுதான் இங்கு வரத் துணிந்தேனே தவிர, உன் வில்லுக்கு வாலியும் கரன் முதலியோரும் வீழ்ந்ததைக் கேட்டு அல்ல” என்று ராமனிடமே சொல்கிறான் விபீடணன். “உன் ஆற்றலையன்று, உன் தொண்டனின் ஆற்றலை வியந்தே வந்தேன்” என்கிறான்.

அனுமன் தன் வீரத்தை எண்ணி இறுமாந்து கொள்பவன் அல்ல. இறுமாந்து இறுமாந்து எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொட்டிவிட்டு மடிந்தவனும் அல்ல. ‘குடத்துப் பாலில் ஒரு துளி மோர் விழுந்தது’ போல இலங்கையையே தன் தனித்தன்மையால் மாறிப் போய்விடச் செய்த அனுமன், மீண்டு போய் ராமனிடம் சீதையைக் கண்ட செய்தியைச் சொன்னதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறான். அரக்கர்களைத் துவம்சம் செய்து தனியொருவனாக அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியதையோ இலங்கையை எரித்தது பற்றியோ ஒன்றும் சொல்லாது விடுகிறான். தன் வெற்றிகளைத் தானே உரைப்பதா என்று நாணுகிறான்.

இந்த அடக்கமே அவனைச் சமநிலை குழம்பாத முடிவுகளை எடுக்கத் துணையாய் நிற்கிறது. கிட்கிந்தைக்கு வரும் ராம லக்குவர்களைத் தூரத்தே கண்டே பகைவர்களாய் கருதிவிடும் சுக்ரீவன் போலல்லாமல், நேச சக்திகளை இனங்காண வைக்கிறது.

அனுமனது வீரம் நம்மைப் பிரமிப்புக்குள்ளாக்குவது, அவனது அடக்கத்தையும் அறிவதால்தான்.

வீரம் என்பது மக்களைப் பயமுறுத்துவதாக அல்ல; ஒவ்வொரு கணத்திலும் அது மக்களைப் பாதுகாப்பதாக நம்மை உணரவைக்க வேண்டும். அப்போதுதான் அது பிரமிப்புக்குரியது. அந்த வீரம் தேவையற்ற சினங்களை நீக்கி விடும். எதிரிகளையும் அவர்கள் தீவிரத்தையும் குறைக்குமே தவிர, எதிரிகளை அதிகரித்தபடி இருக்காது.

எல்லோர் மீதும் சினங்களைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதல்ல வீரம். அப்படிப் பாயும் சினத்தைப் பார்த்துப் பெருமிதப்பட்டுக் கொண்டிராது, தவறு களைந்து நெறிப்படுத்தப் பேசியிருக்க வேண்டியது கற்றறிந்த பெரியோர் கடன். தனக்கு நேர்ந்த துன்பத்திற்காக உலகையே அழித்துவிட முன்னும் கடுஞ்சின வார்த்தைகளை சடாயு முன்னால் கூறுகிறான் ராமன். “ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி” என்று அவன் பிழையை உணர்த்திப் பேசுகிறான் சடாயு. “ஆராய்ந்து பார்த்தால் இதில் உங்கள் குற்றமும் பெருமளவு இருப்பது தெரியவரும். அதனால், உங்கள் குலத்துக்கே நாசத்தைத் தேடிக்கொள்ளும் கோபத்தைக் கைவிட்டு, நிதானமுடன் அனைவரையும் காப்பாற்றும் வழி காணுங்கள்” என்கிற விதமாக அறிவுரைக்கிறான் அந்தப் பறவையரசன். ராமன் கேட்டுக் கொள்கிறான். ஆனால், கெடுகுடிகள் யார் சொல்லும் கேட்பதில்லை. கேட்கும் நிலையிலும் யாரையும் விடுவதில்லை என்பதெல்லாம் சரிதான். நம்மிடம் விபரமறிந்த சடாயுக்கள் யாரும் இருந்திடவில்லையோ என்று சிந்தித்தால் உண்டாவதே பெருங்கவலை. நடக்கப் போவதைப் புரிந்துகொள்ளவும், மக்களுக்கு அதுபற்றி எச்சரித்து நேர்படுத்தவும் முடியாதளவுக்கு அவ்வளவு மடத்தனம் நிரம்பியதாகவா இருந்தது நம் ‘படித்த’ சமூகம்?

இப்போதேனும் நமக்கு வேண்டிய அடித்தளத்தைப் பெற்றுக்கொண்டு மேலே நகரும் விவேகம் வருமா நமக்கு? இப்போதும் வாய்ப்பைத் தவறவிடுவதால் மீண்டும் நம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஏற்படப்போகும் இழப்பை பற்றி நாம் உணர்ந்து கொண்டுள்ளோமா? வாழ்வை எதிர்பார்த்து வாடியிருக்கும் மக்களுக்கு தமிழ்த் தலைமைகள் காட்டும் வழி என்ன? வீரம் பேசியே வீழ்ந்து கொண்டிருப்பதுதானா?

No comments: