Thursday, January 27, 2011

இளமைக்குள் இன்னொரு இமயம்!

இளமைக்குள் இருப்பவர்கள் இளைஞர்கள்.

நானும் இளைஞன்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர். திரும்பக் கிடைக்காத அந்த தெய்வீக நாட்களை இப்போது நினைத்தாலும் இளமை துளிர்க்கிறது.

இளமை, வாழ்வின் வசந்தகாலம். எழுதும் கவிதையில் காதல் ததும்பும். எழுத்திலும், பேச்சிலும், ஏன் நடையிலும் கூட நளினம் இருக்கும். பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம் பிறக்கும். பார்த்துவிட்டால் சிறகுகள் முளைக்கும்.

பள்ளி, கல்லூரி நாட்கள் கவலையின் சுவடுகளே பதியாத மகரந்த நாட்கள். போரடிக்கும் வகுப்புகளை `கட்' அடித்துவிட்டு கட்டுப்பாடின்றித் திரிந்த காளைப்பருவம், இரவுகளைப் பகலாக்கிக் கனவுகளில் மிதந்த கனாக்காலம். அதுதான் இளமைக் காலம். நினைக்க நினைக்கப் பசுமை நினைவுகள் மனசெல்லாம் படர்கின்றன.

கடந்து சென்ற ஜனவரி 12 - இளைஞர் தினம்.

வாழ்நாள் முழுவதும் இளைஞர்களுக்காக எழுச்சிக்குரல் கொடுத்த வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள். இந்த நாள் தேசிய இளையோர் தினமாக தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது.

'நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார் விவேகானந்தர். இளைஞர்களிடம் உள்ள மகத்தான ஆற்றலைத்தான் இவரின் இந்த வைர வரிகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

'ஓர் இளைஞனால் எட்டிப் பிடிக்க முடியாத உயரம் என்று எதுவுமில்லை. அந்த உயரத்தை அடைவதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. எல்லாம் உனக்குள்ளே தான் இருக்கின்றன. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன' என்றார் விவேகானந்தர்.
எதிர்காலத்தின் இரும்புத்தூண்களாம் இளைஞர்கள் துருப்பிடித்துத் தேய்ந்துபோய் விடக் கூடாது என்பதற்காக உரத்த சிந்தனைகளை இளைஞர்களுக்கு வாழ்நாளெல்லாம் வழங்கியவர், நம்பிக்கையோடு இளையோரை நடைபயில வைத்தவர், விவேகானந்தர்.

இனிய இளையோரே... நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதைத் திடமாகத் தீர்மானிக்க வேண்டிய பருவம் இதுதான். விவேகானந்தரே சொல்வார், 'அடுத்தவனுடைய பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை. உன்னுடைய பாதையை நீ கண்டுபிடி' என்று. ஆம்! நீங்கள் போகவேண்டிய பாதை எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவும் இந்தப்பருவத்தில்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், சாதிப்பதற்கு ஏற்ற வயது இதுதான்.

சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெற்ற சிலரை உங்களுக்கு நினைவு
படுத்துகிறேன்...

பாப்ரா பியர்ஸ் - 15 வயதில் தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்

போரிஸ் பெக்கர் - 17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் ஆனார்
 
ரிகோபெட் மெசூ - 33 வயதில் நோபல் பரிசு பெற்றார்
 
பகத்சிங் - தேசத்தின் விடுதலைக்குத் தலையைத் தானமாகக்
கொடுத்தபோது வயது 32
 
கீட்ஸ் - இமாலயக் கவிதைகளை எழுதி முடித்தபோது வயது 24
 
கலிலியோ - கடிகாரத்தின் பெண்டுலத்தை கண்டுபிடித்தபோது வயது 19
 
அலெக்சாண்டர் - வெல்வதற்கு இனிமேல் தேசமே இல்லையே என்றுஏங்கிய போது வயது 32

இவர்கள் மட்டும்தானா... இன்னும் பலரும் சாதனைப் பக்கங்களில் பதிவாகியிருக்கிறார்கள். இளமை, சாதனையின் இருப்பிடம் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

'முடியும் என்று நம்புவோர்க்கே எதுவும் முடியும்' என்பார் சிந்தனையாளர் வெர்ஜில். இளையோரே, உங்களாலும் இத்தகைய சாதனைகளைச் செய்ய முடியும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்துகிறேன்.

பாண்டியன் நெடுஞ்செழியன், பதினாறு வயதுப் பாலகன். காலத்தின் கட்டாயத்தால் அரியணையில் அமர்த்தப்படுகிறான். சிறுவன்தானே, இவனை எளிதில் வென்றுவிடலாம் என குறுநில மன்னர்கள் சிலர் கொக்கரிக்கின்றனர். அதற்கான ரகசியத் திட்டங்களைத் தீட்டுகின்றனர்.

பாண்டியனின் செவிகளுக்குச் செய்தி எட்டுகிறது. கோபம் அவனது கண்களில் கொப்பளிக்கிறது. படைத் தளபதிகளை அழைக்கிறான். வீரர்களை அணிவகுக்கச் சொல்கிறான். பாசறையில் இருந்து பாண்டியன் நெடுஞ்செழியன் வீரர்களுக்கு வீர
உரையாற்றுகிறான். தலையாலங்கானம், போருக்குத் தயாராகிறது.

'போர்... போர்... போர்...' வீரமுழக்கம் வீதியெங்கும் கேட்கிறது. படைகள் மோதுகின்றன. போரில் வெற்றிபெறுகிறான் நெடுஞ்செழியன். வெற்றிமுழக்கம் செவிகளில் தேனாய்ப் பாய்கிறது. 'தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்' என வரலாறு அவனுக்கு வாகை சூட்டுகிறது.

எப்படி இந்த வெற்றி அவனுக்குச் சாத்தியமானது? வேறு எதுவும் இல்லை. இளமை ரத்தம். இன்னொன்று, வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற தன்னம்பிக்கையுடன் கூடிய துடிப்பு! இதுதான் இளமையின் இருப்பிடம்.

இனிய இளையோரே... இளமைப்பருவம் அழகான ஒரு வெள்ளைத்தாள். இதில் எதுவும் எளிதில் பதிந்துவிடும். வெற்றியில் வீழ்ந்துவிடாமலும், தோல்வியில் துவண்டு விடாமலும் உங்கள் இதயங்களைத் துடிப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு இமயம் இருக்கிறது.

பேராசிரியர்.க.ராமச்சந்திரன்

No comments: