Monday, January 31, 2011

இன்னும் இன்னும் எதிரிகள் வேண்டும்

உள்ளுராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழினத்தின் ஒற்றுமை பற்றியும், ஒன்றுபட்டு வாக்களிப்பதால் தமிழர்கள் அடையக் கூடிய வீறு பற்றியும், எதிரிகளுக்குக் காட்டக் கூடிய பயப்பீதி பற்றியும் மீண்டும் ஒரு சுற்று பிரலாபங்களைக் கேட்டு சில வாரங்களுக்கு நம் தலையில் கிறுகிறுப்பை ஏற்றிக் கொண்டு உலாவரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் போகிறது.

இதுவரை காலமும் வாக்களிப்பில் ஒற்றுமையை சரிவரக் காட்டாததன் காரணமாகவே இன்னும் அவலங்கள் தொடர்கின்றன. இம்முறை மூச்சுப்பிடித்து அந்தப் பிழையை சரிசெய்துவிட வேண்டும். உலக எதிரிகளை வீராவேசத்துடன் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கக் கூடிய யாருக்காவது ஏகப்பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து விட்டால், நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடும். இந்தத் தேர்தலிலாவது அதைச் சாதித்துவிட வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தலுக்கும் தமிழர்தம் ஒற்றுமையின்மை பற்றிய கவலையையே நம் மற்றெல்லாக் கவலைகளையும் விடப் பெருத்த கவலையாகப் பட வேண்டியிருக்கும் என்ற பதகளிப்பு நமக்கு உருவாகப் போகிறது.

தலைவர்களும் பத்திரிகைகளும், நம்மை நாமே நொந்து கொள்ளுமளவுக்கு, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வின் மகத்துவத்தை, அதே மாறாத ஞாயங்களோடு எடுத்தோதப் போகிறார்கள். இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது மட்டும்தான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ‘இந்தியன்’ உணர்வு ஏற்படுவதாகச் சொல்லப்படுவதுண்டு. அதுபோல, இங்கே இப்படி ஏதாவது தேர்தல் வரும்போதுதான் நாமும் தன்மானத் தமிழர்களாய் உணர்ந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது.

இந்த வண்டவாளத்துக்கிடையில், தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்காகத்தான் சிங்கள அரசாங்கம் அடிக்கடி தேர்தலைக் கொண்டுவருகிறது என்ற ‘தமிழ்ஜனநாயக’க் கண்டுபிடிப்பைச் செய்து வெளிநாட்டிலிருந்து இணையத்தளங்களில் எழுதும் கோமாளிக் குஞ்சுகளும் தங்களைத் தன்மானத் தமிழ்த் தேசியர்கள் என்பதாகத்தான் பாவனை பண்ணிக் கொள்கின்றன.

அந்த அளவுக்கு தேர்தல் என்றால் தமிழின ஒற்றுமை, ஒற்றுமை என்றால் தேர்தலில் வாக்குப்போடுவது என்பதற்கு மேல் எண்ணமுடியாதபடி நம் வாய்பாடு மிகச் சுருக்கமாகி விட்டது. ஒற்றுமைப்பட்டு என்னத்தைச் சாதிப்பது என்பதற்குப் பதிலாக ஒற்றுமைப்பட்டு எதிர்த்தரப்புக்கு “ஷோ” காட்டும் திருப்தியொன்றே போதும் சிலருக்கு. போரில் வெல்ல முடியுமா முடியாதா என்பதையெல்லாம் விட்டுவிட்டு, அடித்தெடுத்த ஆயுதங்களின் “ஷோ”வைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமென்றிருந்த மனநிலையின் தொடர்ச்சி. என்ன செய்ய?

இவர்கள் ஒருபுறமிருக்க, இவர்களை விடவும் ஆக்ரோசமாக (நாமிருக்கும் நிலையை இவர்கள் விவரித்துச் சொல்வதைக் கேட்டு நாமே குலைப்பனில் நடுங்கும்படியாக) இரத்தக் கண்ணீரைப் பெருக்கியபடியே இருக்கிறார்கள் தமிழக தமிழ்த் தேசியர்கள். இங்குள்ள குடிதண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கக் கூட இந்த ரத்தக் கண்ணீர் உதவாதென்பது அவர்களுக்கும் தெரியும். “சிங்கள இனம் இருக்கும்வரை ஈழத்தமிழினத்தின் கஷ்டங்கள் நிரந்தரமே. உங்கள் வாழ்க்கை போனால் என்ன, சிங்களவனை சும்மா விட்டுவிடலாமா? அதனால் எங்கள் பொங்குதமிழ்க் கண்ணீர் ‘ஷோ’வைப் பார்த்து தமிழாவேசக் கொதிமூச்சை விட்டுக் கொண்டிருப்பதே உங்களுக்கு ஒரே வழி. கடைசி உயிர் வரை அழித்து தமிழீழத்தைப் பெறும் கனவுதான் சரிவரவில்லை, கடைசிக் கந்தாயம் வரை வாழ்க்கையை இழந்தாவது உங்குள்ளவர்கள், சிங்களவன் பிழை என்பதைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். தமிழர்களா கொக்கா?” என்பதே அவர்களின் தமிழ்ச் சகோதரத்துவச் செய்தி.

துன்பப்படுபவர்களுக்கு வாழ்க்கையை வழங்க எந்த ஒரு துரும்பையும் எடுத்துப் போட மாட்டார்கள். தொடை தட்டி எதிரியைத் திட்டி முழக்குவதில் மட்டும் பேராதரவு விநியோகித்துக் கொண்டிருப்பார்கள். ஈழத்தமிழர்களுக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கும் தமிழக இனவீறாளர்கள், சிங்கள ராட்சசர்களைக் கட்டமைக்கும் விதம் சிறுபிள்ளைத்தனமானது மட்டுமில்லை, நம்மைச் சிக்கலில் மாட்டிவிடும் கொழுப்புத்தனமுமாகும்.

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் என்றவாறான செய்திகளைத் தினமும் தூக்கிப்பிடித்து, அதை ஈழத்தமிழர்களுக்கான ஆதரவாகவும்; காட்டும் இனவாத நாடகம் நடத்துகிறார்கள். சிங்கள இனவெறுப்பைக் கக்குவதை ஈழத்தமிழர்களுக்கான அனுதாபமாய் காட்டி ஏமாற்றுகிறார்கள். தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது யாருடைய கடலில்? போரினால் நொந்து வாழ்வை மீட்க அவதியுறும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமான அதே கடல்பகுதியில்தான். இப்போதுதான் வலையும் வள்ளங்களும் மீன்பிடி அனுமதியும் பெற்று சிறிது சிறிதாகத் தங்கள் வயிற்றுப் பிழைப்பை ஆரம்பிக்கும் அதே கடல்பிரதேசத்தில்தான் தமிழகத்திலிருந்து இவர்கள் இழுவைப்படகுகளுடன் வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள். இவர்களைத்தான் இலங்கை ராணுவத்தினர் தாக்கி விரட்டுகிறார்கள். உண்மையை மறைத்து இதையும் ஈழத்தமிழர் ஆதரவுப் பிரசாரமாக அங்குள்ள தமிழ்த் தேசியர்கள் கதைவிட்டுக் கொண்டிருப்பதுதான் கொடுமை.

எழுவைதீவு மீனவர்கள் கடந்த 12ம் திகதி தொழிலைப் பகிஷ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முன்பு அவ்வப்போது அத்துமீறி வந்து மீன்பிடித்துச் சென்றுகொண்டிருந்த தமிழக மீனவர்கள் இப்போது வாரத்தில் ஏழு நாட்களும் இழுவைப்படகுகளில் வந்து தீவுப்பகுதிக் கடலில் மீன்பிடித்துச் செல்வதாகவும்,  இதனால் தங்கள் தொழிலைப் பாதித்து வயிற்றிலடிப்பதாகவும், இலங்கை அரசு இதைக் கண்டித்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தே எழுவைதீவு மீனவர்கள் போராட்டத்தை அறிவித்திருந்தார்கள்.

நிலைமை இப்படியிருக்க, தமிழக தமிழ்த் தேசிய வீரர்களின் நாடகமோ என்னவாக இருக்கிறது? வடபகுதி மக்களின் உண்மையான கவலையை காதில் வாங்கிக் கொள்ளாமலே, ஒட்டுமொத்த தமிழினத்துக்கெதிரான ராஜபக்ஷவின் ராட்சச அரசு, ராணுவ வெறியாட்டம் என்று ஏதேதோ கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகளில் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உதவ வந்தது போலவும், இலங்கை ராணுவத்தினர் அவர்களை உதவ விடாமல் அடித்து விரட்டியது போலவும் ‘நாம் தமிழர்’ பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேறொன்றுமில்லை, இன்னொரு இனத்துக்கெதிரான பகையுணர்வுகளைப் பெரிதாக்கி வைத்துக் கொள்வவதே அவர்களது இனத்துவ அரசியல் உள்ளாசைகளுக்குத் தேவையான தோதாக இருக்கிறது.
இத்தகைய ‘நாம் தமிழர்’ ஒற்றுமைகளை நம்பி தொடர்ந்தும் ஏமாறிக் கொண்டிருக்கலாகாது என்பதை நாம் இப்போதேனும் புரிந்துகொள்ள வேண்டும். நமது தேவைகளைத் தெரிந்து பகைமறந்து முன்னகர வேண்டும்.

நம் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பல இன மக்களாக, உலகப் பந்தில் ஒரு புள்ளி அளவு இடத்தில் இருக்கும் நாம் என்ன மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம்? இந்த வாழ்வை ஒன்றுசேர்ந்து மேலானதாக ஆக்கிக்கொள்ளும் விதத்தில் ஏதாவது திட்டமிடுகிறோமா? வாழ்வைச் சிக்கலாக்கி விடாத பொறுப்புணர்வுடன் பேசுகிறோமா? நடக்கிறோமா? எல்லோருமாகவே இந்தத் தீவில் வாழவேண்டும் என்பதை உணர்கிறோமா? அதற்கே தீர்வு என்று யோசிக்கிறோமா? நமக்கே பிரச்சினை, நமக்கே தீர்வு, மற்றவர்கள் பிரச்சினை நமக்குத் தேவையில்லை, தெரியவும் வேண்டாம் என்ற மனநிலையோடு அல்லது கொள்கைப் பிடிவாதங்களோடு நம் சிக்கல்களை விடுவித்து விட முடியுமா?

எந்த யோசனையுமின்றி சிங்கள அரசுக்குத் தமிழனின் ஒற்றுமைப் பலத்தை வாக்குகளில் காட்டிவிடுவதொன்றே போதும் என்று சில நாட்களுக்குப் பரபரத்துப் பின் பழையபடியாகிவிடும் பனிக்காலத்துத் தடுமன் காய்ச்சல் போலவே தேர்தல்கள் நமக்கு வந்து போகின்றன. தேர்தல் ஒற்றுமையல்ல நமக்கு வேண்டியது. தீர்வுக்கான ஒற்றுமை. இதற்கு, நம்மிடையே உள்ள கருத்துபேதங்களையும், குறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளையும் கூறிக்கொண்டிருப்பதை விடுத்து, தீர்வுக்காக நாம் ஒன்றுபடக்கூடிய புள்ளிகள் குறித்துப் பேசுவதே தேவையானது.

வெவ்வேறு கட்சிகளின் தோற்றமே ஒரு கட்சியின் போக்கிலிருந்து மற்றவர்கள் மாறுபடும் விஷயங்களைக் கொண்டு உருவானவைதான். எனவே, சாதாரண மக்களின் வாழ்வு குறித்த அக்கறையைக் கொண்டிருப்பவர்கள், அதிகாரப்பகிர்வுக்காக நம்மிடமுள்ள குறைந்தபட்ச ஒற்றுமைப்புள்ளிகளை இனங்கண்டு கொள்வதையே பிரதானப்படுத்துவர். நமக்குள் அதாவது சிறுபான்மையினக் கட்சிகளிடையே இருக்கும் பேதங்கள், குறைகூறல்கள் எல்லாம், இந்நாட்டில் அதிகாரப்பகிர்வு நடைபெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களின்போது பேசப்பட வேண்டியவை.

நம்மிடையே அபிப்பிராய பேதங்களும், குற்றச்சாட்டுகளும் நிறைய இருக்கவே செய்யும். இல்லாவிட்டால் இத்தனை கட்சிகள் உருவாகியிருக்கப் போவதில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்குமே தனித்தனி அபிப்பிராயங்களும் மற்றவர் மீதான குறைகள் குற்றச்சாட்டுகளும் இருக்குமென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அதை முதன்மைப்படுத்துகின்ற தருணம் இதுவல்ல.

அதிகாரப்பகிர்வு நடைபெற்றுத் தீர்வு கிடைத்த பின்பே தமிழ்க்கட்சிகள் தங்களுக்குள்ளே இருக்கும் முரண்பாடுகளைப் பிரதானப்படுத்த முடியும். தீர்வு கிடைத்த பிறகான தேர்தல்களிலேயே நமக்குள் சொல்லெறிதல்களையும் குற்றச்சாட்டுகள் வீசுதலையும் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான, சமூகம் பாடழிந்துள்ள நிலையிலிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள்வதற்கான தீர்வுக்கான இணக்கப்புள்ளிகளையே நம்மிடையே நாம் காண முனைய வேண்டும். அல்லாதவர்கள், மேலும் மேலும் வீழ்ச்சிக்குத் துணைபோகும் சமூக அழிப்பு அரசியலின் கருவிகளாகத்தான் இருப்பர்.

No comments: