Friday, January 21, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

ரேடியோ டிராமா, காமிக்ஸ், டி.வி.தொடர், புரூஸ் லீ, ஆக்ஷன் காமெடி... இந்த ஐந்தில் ஒன்றை மறந்தாலும் பஞ்ச பூதங்களையும் கடந்து பஞ்சமா பாதகங்கள் நம்மை பின்தொடர்ந்து பஞ்சராகிவிடும். காரணம், வெளிவர இருக்கும் 'தி கிரீன் ஹார்னட்' ஹாலிவுட் திரைப்படம் அந்தளவுக்கு சக்தி படைத்தது.

அப்பாவை கொன்றவனை தேடிப்பிடித்து பழி வாங்கும் மகனின் செயல்தான் படத்தின் கதை. 60 நொடிகளுக்குள் படித்துவிடக் கூடிய இந்த ஒன்லைனை தான் 60 நிமிடங்களுக்கும் மேலாக படமாக எடுத்திருக்கிறார்கள். என்ன... வினாடிக்கு வினாடி சிரிக்க வைக்கப் போகிறார்களாம். யெஸ், சிரிப்பு போலீஸ் மாதிரி இது சிரிப்பு ஆக்ஷன் படம்.

ஆனால், படத்தின் ஆணிவேர் இயக்குநர் மைக்கேல் கான்ட்ரியோ அல்லது திரைக்கதை அமைத்து ஹீரோவாகவும் நடித்திருக்கும் சேத் ரோகனோ அல்ல. பதிலாக ஜார்ஜ் டபிள்யூ டிரெண்டிஸ். பற்களை கடித்து உச்சரிக்க வேண்டிய பெயருக்கு சொந்தக்காரரான ஜார்ஜ்தான் இந்த சிரிப்புக்  கதைக்கு சொந்தகாரர்.

1930களின் ஒரு முன்மாலைப் பொழுதில் 'தி கிரீன் ஹார்னட்' கதையை எழுதி முடித்தார். அது ரேடியோவில் நாடகமாக ஒளிபரப்பாகி எட்டு திசையிலும் முரசு கொட்டியது. பிறகென்ன... எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் பொழுது போக்கு பிரியர்களை மகிழ்விப்பதற்காக இதே கதையை பல மாதிரியாக காலம் தோறும் கொத்து பரோட்டா போட ஆரம்பித்தார்கள். எந்த தொழில்நுட்பத்தின் விதிகளுக்கு ஏற்ப சட்டென்று இந்தக் கதையை பொருத்தி விடுவார்கள். கல்லா கட்டுவார்கள். அப்படித்தான் ரேடியோ நாடகம், காமிக்ஸ் புத்தகமாக வெளிவந்தது. இன்றும் இந்த காமிக்ஸ் கதைக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக உருவாய், மருவாய், ஒளியாய், விளக்காய் உலா வந்த 'தி கிரீன் ஹார்னட்', 1960களில் ஒளியானது. அதாவது சின்னத்திரை தொடரானது. அத்தொடரில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர்தான் ப்ரூஸ் லீ. உண்மையில், செகண்ட் ஹீரோவுக்குதான் கதைப்படி அடிதடி காட்சிகள் உண்டு. அப்படியானால் முதல் ஹீரோ? அவர் டம்மி பீஸ். ரசிகர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதுடன் அவரது வேலை முடிந்துவிடும்.

இந்தத் தொடருக்கு பிறகே புரூஸ் லீ பெரிய திரையில் என்டர் ஆகி டிராகனானார். இப்படி தலைமுறையாக பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கதியாய் திரைப்படமாக்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அதை நினைவக்கியிருப்பவர் சேத் ரோகன்தான். ரேடியோ நாடகமாக உலா வந்த காலம் தொட்டு 'தி கிரீன் ஹார்னட்' கதையின் வரலாறு இவருக்கு தெரியும். தன் தலையணைக்கு அடியில் இக்கதையின் காமிக்ஸ் வடிவத்தை வைத்திருக்கிறாராம். அப்போதுதான் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை எடுத்து படிக்க முடியுமாம். பத்திரிக்கை பெட்டியில் இந்த அதிமுக்கிய தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இவான் கோல்ட் பெர்க்குடன் இணைந்து சேத் ரோகன் உருவாக்கிய திரைக்கதையை படித்துப் பார்த்து அசந்து போன கோலம் பியா பிக்சர்ஸ், ரோகனையே படத்தில் ஹீரோவாக நடிக்கும்படி சொல்லிவிட்டது. இயக்குநர் மைக்கேல் கான்ட்ரியும் அதை ஆமோதித்து பச்சைக் கொடி காட்டிவிட்டார். கதைப்படி சாகஸ காட்சிகள், இரண்டாவது ஹீரோவுக்குதான் சொந்தம். எனவே கிச்சுகிச்சு மூட்ட சம்மதித்து சேத்ரோகன் கதாநாயகனாகிவிட்டார்.

3 டி படம் என்பதால் குழந்தைகளுடன் திரையரங்கு வாருங்கள் என வெற்றிலை பக்கு வைத்து அழைக்கிறார் தயாரிப்பாளர். வாங்க மொய் வைத்துவிட்டு சிரிக்கலாம்.

கே.என்.சிவராமன்                          

No comments: