Wednesday, January 26, 2011

உயிர்த்தெழ வகை தெரியாதவர்கள் சிலுவையில் விரும்பி ஏறக்கூடாது

பூவுலகில் அடர்த்தி மிகுந்து வாழ்கிற மனித இனம் இன்று உள்ளீடான ஒரு நஞ்சை அருந்திக் கொண்டிருக்கிறது என்று லெவி-ஸ்ட்ராஸ் சொன்னார்.

நம்மையே அழித்துக் கொள்ளும் விதமாக மனிதர்கள் நாம் அருந்திக் கொண்டிருக்கும் நஞ்சு எதுவாக இருக்க முடியும்? பகையும் வெறுப்பும்தான். மனிதர்கள் போரையும் வன்முறையையும் உயிரழிவுகளையும் தொடர்ந்து பெருக்கிக் கொண்டிருப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்ள?

அப்பாவி மக்களின் வாழ்வு அல்லல்களுக்குள் சிக்குப்பட்டுக் கிழிந்து கொண்டிருப்பதை, அநீதிகளும் அநியாயங்களும் நடந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால், அநியாயங்களை எல்லாம் ஆவேசமாய் எதிர்த்தபடி செல்வது என்ற ஒற்றைவழிப் போக்கில் இன்றைய சிக்கல்களை விடுவித்துவிட முடியாது. அப்பாவி ஒருவனின் காலடி கூட அவனறியாமல் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டுவிடும் அமைப்பில் நாம் வாழ்ந்து வருகிறோம். உயிரழிவுகள் தவிர்த்த ஒரு எதிர்ப்பு வழிமுறையையே நாம் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, மீண்டும் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்புகளைத் தெரிந்திராதவர்கள், தாமே விரும்பிச் சிலுவையில் ஏறக்கூடாது என்பதையே இந்த முப்பது வருடப் பாடமாக நாம் பெற்றிருக்கிறோம்.

நம் எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல எதிர்ப்புகளையும் சரிவர அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு வெறுப்பும், வீம்பும், ரோசமும், நம்மிடம் மட்டுமே நியாயம் என்கிற பிடிவாத லட்சியக் கோபங்களும் உதவப் போவதில்லை. மற்றவர்களுடனான இணக்கத்தையும், எதிர்காலம் நோக்கிய பேச்சையும் நிகழ்த்துவதற்கான ஏகுவழியாகவே நமது நீதிக்கான குரலெழுப்புதல்கள் அமைய வேண்டியிருக்கிறது.

சூரியனுக்குக் கீழே உள்ள விஷயங்களிலே மிகவும் குழப்பமானதும் புரிந்துகொள்ள முடியாததுமான ஒரே விஷயம் உண்மை மட்டுமே என்று ஹெர்மன் மெல்வில் சொன்னது சரிதான். ஆவேசங்கள், கும்பல்லோ கோவிந்தா ஆர்ப்பாட்டங்களின் இடையே அது காணாமலடிக்கப்பட்டு விடுகிறது. நமது பத்திரிகைகள் ஊடகங்களும் இதற்குப் பெரும் பங்களித்து வருகின்றன. உண்மையைச் சொல்லிவிடாமல், வெகுமக்களுக்கு உவப்பான கிறுகிறுப்பை ஏத்தும் போட்டியில் விற்பனைக்கு முந்துவதையே அவை தர்மமாய்க் கொண்டுள்ளன போல் தெரிகிறது. பத்திரிகைச் சுதந்திரத்தை விடப் பத்திரிகைகளிடமிருந்து சுதந்திரம்தான் இன்று மக்களுக்குத் தேவை என்று சொல்லப்படுவதை ஒப்புக்கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது நிலைமை. இதுகுறித்தும் நாம் கேள்விகளை வைக்க வேண்டும். பத்திரிகைகள் ஒரு தொழிற்சாலை அல்ல. அது நீதியின் குரலை வெளிப்படுத்துவதாகவே மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாதகமாய் பொறுப்பற்ற விதத்தில் அவர்களை வெறுமனே உணர்ச்சிச் சுழலில் உருட்டிக்கொண்டிருக்க கூடாது. அவர்கள் வாழ்வதற்கான வழியை அது மறித்து நிற்பதாகி விடும். இப்படி நம்பகத்தன்மையை இழந்துவிடும் ஒரு ஊடகம் மலக்கழிவு போலவே அருவருக்கப்படும்.

அநியாயமும் அடக்குமுறையும் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது ஒன்றே உலக மகா அநியாயம், உலகில் இந்தச் சிறு இடத்தில் உள்ள நாம் மட்டுமே அரச அடக்குதலில் இருக்கிறோம், மக்களை அடக்குகிற விதமாய் நடந்துகொள்ளும் ஒரே அரசு இதுதான் என்கிற விதமான மிகைப்படுத்தல்களால் அல்லது உலகப் பார்வையின்மையால் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு அதீதமாய்ப் பொங்கி நுரைத்து வெடித்து அழிந்துவிடக் கூடாது. அது முட்டாள்தனமாகவே முடியும். உலக யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக செயற்பட்டு சமூகத்தைக் காப்பாற்றி மேல்நகர்த்தும் விதமாகவே நமது எதிர்ப்புகள் அமைய வேண்டும். ஆவேச வீறில் மிகையாகத் துடித்தாடி எல்லாவற்றையும் போட்டுடைத்து வீழ்வது ஒருபோதும் சிறந்த எதிர்ப்பாகாது. வெறும் எதிர்ப்பு மட்டும் மக்களைக் காக்கும் மார்க்கமாகாது.

உலக அரசியல் விவகாரங்களில் நியாயம் அநியாயம் என்பவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? நம்மைத் தூண்டி விடுகிறவர்கள், அனுதாபம் காட்டி உணர்ச்சியேற்றுபவர்கள், நாம் மட்டுமே ராட்சசர்கள் நடுவே இருப்பதாகச் சொல்லி நாம் போரிட்டழிய ஞாயம் வழங்குபவர்கள் எல்லோரும் உண்மையாக நியாயத்தைக் காப்பாற்றுபவர்களா? நமக்கு வாய்த்திருப்பதுதான் பேசவோ சேர்ந்து வாழவோ முடியாத கொடூர எதிர்த்தரப்பு. அதுதான் உண்மையா?

ஹிட்லரை அரக்கன் என்று பெயர் சூட்டி அவனுக்கு முடிவு கட்டிய தர்மிஷ்ட ஜனநாயக நாடுகள், தாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன. வாய் ஓயாத மனிதாபிமான வேஷப் பேச்சுகளின் பின்னால் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகள்தான் எத்தனை? சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி ஈராக்கில் உயிரிழப்பு 12 இலட்சங்களைத் தாண்டுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் நிலைமை அதற்குச் சளைத்ததல்ல. வியட்நாமில், சிலியில், எல்சல்வடோரில், பாலஸ்தீனத்தில்…. பரந்த மனப்பான்மை கொண்டதாகச் சொல்லப்படும் பிரான்சும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கூட அல்ஜீரியாவில், ருவாண்டாவில் செய்துமுடித்த பாதகங்கள் சிறியவையல்ல.

ரஷ்ய எழுத்தாளர் துர்கனேவ் சொன்னார், “ஒரு பூகம்பம் வந்து ரஷ்யா முழுக்க அழிந்து போனாலும் உலகத்தில் ஒருவரும் கவலைப்படப் போவதில்லை.” இதை நாமும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் கஷ்டப்படக் கஷ்டப்பட வேறு யாரும் உதவிக்கு வரக்கூடும் என்று பெருங்குரலெடுத்துப் புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாம்தான் பேசியாக வேண்டும். தீர்வு கண்டாக வேண்டும். முதலில் இந்த நம்பிக்கையோடு இறங்கினால்தான் பேசக்கூடிய சூழலே இங்கு உருவாக முடியும். வெளித்தரப்புகளை நம்பிப் பொங்கிக் கொண்டிருப்பதில் பொருளில்லை.

எங்களை நாங்களே அழித்துக் கொள்ளும் விதமாக, வாழ்வைச் சிதைத்துக் கொள்ளும் விதமாக எதிர்ப்பை வைத்துக்கொள்வது புத்தியில்லை. இங்கு வெறுப்பை எதிர்ப்பை வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் நினைப்பில் தேர்தலையும் மீண்டும் அதனால் வரும் பதவிகளையும் தவிர வேறெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. மக்களுக்கு வாழ்வைத் திருப்பித் தரும் திட்டங்கள் உள்ளதைக் காணமுடியவில்லை.

சமூகத்திற்கான கருத்தை உருவாக்குபவர்களும் இன்னும் பிரமைகளிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்களது நியாய உணர்வினடிப்படையில் உருவாக்கி வைத்திருக்கும் இலட்சியத்தை முக்கியப்படுத்தி ரோசமும் வீம்புமாகவே இன்னமும் மக்களை உணர்ச்சியில் கருக்கி வருவதை வெறும் சுயநலம் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தமக்குச் சரி என்று படுவதை மட்டும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும் எல்லையற்ற அகந்தையால் சமூகத்தையும் நெருக்கடிகளுக்கு ஆளாக்குபவர்களாக இருக்கிறார்கள். இவர்களது ‘இலட்சியப் பார்வை’யும் இணக்கத்தின்பால் நகர விடுவதில்லை. உலகில் நமக்கு மட்டுமே அநீதிகள் நடந்திருப்பதாகச் சொல்லி, மக்களைக் கொதிகலன்களுக்குள் போட்டு மூடிவிடுவதாக முடிகின்றன இவர்கள் புலம்பல்கள்.

நமது லட்சியங்கள், உள்ளாசைகளுக்காக பெரும்பாலோரைப் பலியிட்டுக் கொள்வதாக நம் பிடிவாதங்கள் தொடரக் கூடாது. நாம் மிகச் சரியானது இதுவே என்று கருதிச் செய்யும் சில செயல்கள் மற்றவர்கள் பலபேரைத் தண்டிப்பதாக அமைந்துவிடும் சாத்தியங்களை இவர்கள் உணர வேண்டும். போத்துக்கல் எழுத்தாளர் யொஸே ஸரமாகோ நாவலில், லாசரஸ் மரணமடைந்து கிடக்கும்போது இயேசு அவனை உயிர்ப்பிக்க முயல்கிறார். அப்போது மரியா மக்தலேனா தடுத்து நிறுத்தி, போதும் அவனை உயிர்ப்பித்து இரண்டுமுறை சாகச் செய்யாதீர்கள் என்கிறாள். மக்களுக்கு உணர்ச்சியூட்டி, பகையை உயிர்ப்பித்து, இன்னுமொரு தடவை போரிட்டு அழிவதே நமக்கிருக்கும் ஒரே மார்க்கம் என்று காட்ட முனைபவர்கள் இதை யோசிக்க வேண்டும்.

கிரேக்க துன்பியல் நாடகங்களில், நன்மையோ தீமையோ தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கதாநாயகனுக்குத் தெய்வங்கள் கொடுத்திருக்கும். அதேசமயத்தில் அவன் எப்பொழுது தீமையைத் தேர்ந்தெடுப்பான், அவனை அழித்துவிடலாம் என்று அவை காத்துக் கொண்டிருக்கும். அதுபோலவே நம்மையும் இயற்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. தேர்ந்தெடுப்பில் நாம்தான் விவேகத்தைக் காண்பித்துக்கொள்ள வேண்டும். பிழையான தேர்வுகள் பெரும் பீழைகளையே தரும் என்பதை இப்போது எவரையும்விட நன்கறிந்து கொண்டவர்கள் நாம்.

அவநம்பிக்கைகளையே வெளியிட்டபடி எதிர்ப்புகளி;ல் நாம் சிதைந்து கொண்டிராமல் அதிலிருந்து வெளிவர வேண்டும். தொடர்ந்து ஏமாற்றமடைந்து கொண்டிருந்தாலும் கூட, இழப்புகளற்ற இணக்கமான வாழ்வுக்காக நம்பிக்கையோடு மறுபடி மறுபடி அணுகுவதில் பெரிய பாதகங்கள் இருக்காது. அவநம்பிக்கையோடு விலகிச் செல்லச் செல்ல அழிவுகளின் புதைசேற்றுக்குள்ளேயே நாம் மூழ்கிக் கொண்டிருக்கும் நிதர்சனத்தை விட அது மேலானது. சமூகத்தை மோசமான விபத்துகளுக்குத் தள்ளிவிடாமலிருக்கும் பொறுப்புணர்வையும் அது காண்பிக்கும். நலம் பயக்கும் வழியை நாம் தேர்ந்துகொள்ள வேண்டும்.

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம்
ஆமே என்னின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

அந்த கம்பனின் பாடல் சொல்வதும் இதைத்தான். ஒன்று என்றால் ஒன்றுதான். பல என்றால் பல. அல்ல என்றால் அல்ல. ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. உண்டு என்றால் உண்டு. இவற்றில் எது நலம் பயக்குமோ அதை நம்பி நம் வாழ்க்கை செல்கிறது. இதைவிட வேறென்ன வழி நமக்கு?

No comments: