Thursday, January 13, 2011

நடைப்பயணம் தமிழர் வாழ்வுரிமையை மீட்குமா?

"இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்".
"1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழரின் பூர்வீக பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும்".

என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈ.என்.டி.எல்.எப் அமைப்பினர் டெல்லி வரை நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை எப்படியும் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று சிங்கள அரசு ஒரு புறமும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறிகொள்ளும் ஒரு சிலர் மறுபுறமும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதாக ஈ.என்.டி.எல்.எப் குற்றம் சாட்டியுள்ளது.

அண்மையில் 26.10.2010 பத்து தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வந்த கட்டுரையும் நேற்றைய தினம் வை.கோவின் கடுப்பான அறிக்கையும் இதற்கு சான்றாக கூறப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ன கூறுகிறது என்பதை உங்களின் கவனத்திற்கு தருவதிலும் அது எவ்வாறு சீர்குலைக்கப்பட்டது என்பதையும் அறிக்கையில் விளக்கி உள்ளது அந்த அமைப்பு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது இந்த ஒப்பந்தம் ஏமாற்று என்றும், அதை ஆதரித்தவர்கள் துரோகிகள் என்றும் புலிகளின் குரலாக இயங்கியவர்கள் அன்று தூற்றி திரிந்ததை நாம் மறந்து விடவில்லை. அந்தக் குழுக்களில் இருந்து ஒரு சிலர் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு அரிய வாய்ப்பினை தவற விட்டதாக கூறிக் கொள்வதும் நடை முறையில் உள்ளது.
இந்த ஒப்பந்தம் கூறுவதாவது;
1. ஒப்பந்தம் கையெழுத்தானதும் இலங்கை ராணுவம் முகாம்களுக்கு சென்று விட வேண்டும்.
2. வடக்கு கிழக்கில் கடமையாற்றும் உரிமை சிங்கள ராணுவத்திற்கு கிடையாது.
3. சிங்கள ராணுவம் மற்றும் காவல் துறையினர் தமிழர்கள் எவரையும் கைது செய்ய முடியாது.   
4. சிறையிலிருந்த அனைத்து தமிழ் இளைஞர்களும் இயக்க பாகுபாடில்லாமல் விடுவிக்க பட வேண்டும்.
5. வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து இடைக்கால நிர்வாகம் தமிழர்களை கொண்டு அமைக்கப்படும்.
6. நிலம், கல்வி, காவல்துறை ஆகியவை மாகாண அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.
இவ்வாறான சட்ட ரீதியான பலம் கொண்ட ஒரு மாகாண அரசைத்தான் விடுதலைப் புலிகள், தமிழர்களின் எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து முறியடித்தனர்.


அந்த மாகாண அரசையும் தமிழர்களையும் பாதுகாக்க என்று சி.வி.எப் (Citizen Volunteer Force) என்ற முழுக்க முழுக்க தமிழர்களை கொண்ட ராணுவப்படையை, சட்ட பூர்வமாக ஒரு படை அமைந்ததை விரும்பாத சிங்கள தலைவர்கள் புலிகளை பயன்படுத்தி முறியடித்தனர். பின்னாளில் சிங்கள அரசு தனது தந்திரத்தை மாற்றி புலிகளை தாக்க தொடங்கி இன்றைய நிலைக்கு தமிழினத்தை கொண்டு வந்து விட்டனர். நடந்து முடிந்த இந்த பாரிய தவறுகளை புலிகளின் அனுதாபிகள் புரிந்து கொள்ளாமல் இன்றும் வாய் வீரம் பேசிக் கொண்டிருப்பது வேதனையை தருகிறது.

நாங்கள் எண்ணற்ற துரோகங்களை செய்ததாக வைகோ கூறியுள்ளார். ஒரு துரோகத்தை அவர் சொல்லியிருந்தால் நாங்கள் தெளிவான விளக்கத்தை சொல்லியிருப்போம்.

"எங்களை துரோகிகள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் இனத்துக்கே துரோகம் செய்கிறீர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். உங்களுக்கு ஒன்று தெரிவித்துக்கொள்கிறோம் ஈழத்தமிழர் பிரச்சனையில் முதன் முதலில் நேரடியாக தலையிட்டவர் இந்திரா காந்தி. முதன் முதலில் தலையிட்ட கட்சி காங்கிரஸ். தாயின் கனவை நிறைவேற்றத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் ராஜீவ் தலையிட்டார். அவரை உங்களது வீர மறவர்கள் சுட்டுக் கொன்றார்கள். அதனால்தான் அழிவை சந்தித்தது ஈழ தமிழ் இனம். ஈழத்தமிழரது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று எங்களுக்கு தெரியும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.        

எது எப்படியிருப்பினும் இந்திய இலங்கை ஒப்பந்தம் முறைப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களது வாழ்வுரிமை பாதுக்காக்கப்பட்டிருகும் என்றே தோன்றுகிறது. அந்த வகையில் ஈ.என்.டி.எல்.எப்பின் பாத யாத்திரை வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம். 


No comments: