Monday, January 10, 2011

உயிரோடு உலவுகின்ற சாவு

அரசு மீதான எதிர்ப்பை விசிறி விட்டபடியே “உவங்கள் ஒண்டுந் தராங்கள்” என்ற அரிய கண்டுபிடிப்பையே பல காலமாகத் திருப்பித் திருப்பிச் சொல்லிவரும் தமிழ்ரோசத் திண்ணைப் பேச்சுக்காரர்களின் வெற்றாவேசங்களை, மக்கள் சிறிது சிறிதாக விளங்கிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

மக்களின் வாழ்வுக்கான எந்த ஒரு சிறு அடிவைப்போ அறிகுறியோ காட்டாமல், அவலங்களைச் சொல்லியபடியே நீலிக் கண்ணீர் உகுத்தபடி இருப்பதும், ஆட்சியாளர்கள் மீது கோப உணர்ச்சி வற்றிவிடாமலிருப்பதே கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதற்கான மருந்து என்பதாகவும், குற்றப்பட்டியல்களை வாசித்தபடியே நொந்த மக்களை விற்றுத் தாம் வாழ்ந்து கொள்ளும் வெற்றுத் தமிழ் வீறாப்புகளை இனங்கண்டு தமிழ்மக்கள் எச்சரிக்கையடைந்து வருவதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்குகின்றன.

மக்கள் துன்பம் பற்றிப் பேசுபவர்களும் ஆவேசப்படுபவர்களும் அவர்களின் துன்பத்தை மாற்றச் செய்துகொண்டிருப்பதென்ன? மீண்டும் மீண்டும் குற்றப் பட்டோலை வாசிப்பு தவிர வேறு???

சிங்களக் குடியேற்றம், ராணுவப் பிரசன்னம், மீள்குடியேறியோர் கஷ்டங்கள், சர்வாதிகார ஆட்சி… என்றவாறான வெற்றுப் புலம்பல்கள் வீராவேச வசனங்களே மக்களுக்குப் போதும் என இப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்ற பழையகுருடிக் கனவு மெல்ல கலைந்து வருகிறது. “ஓம்… ஓம், கஷ்டங்கள் பிரச்சினைகள் எல்லாம் இருக்குத்தான். இதுகளை மாத்துறதுக்கு என்ன செய்யலாம் எண்டு சொல்லுறியள்? நாங்கள் மீளுறதுக்கு நீங்கள் என்னதான் செய்யிறியள்?” என்ற கேள்விகளோடு மக்கள் இவர்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சரி, உள்ள பிரச்சினைகள் துன்பங்களிலிருந்து மீள இவர்களிடம் உள்ள வழி என்ன? திட்டம் என்ன? எப்படித்தான் தீர்வு வரும் என்கிறார்கள்? என்ற கேள்விகளுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அவர்களது கஷ்டங்களுக்கு ஒரு மாற்றும் காணாது, எதிர்கால நம்பிக்கையும் காட்டாது உணர்ச்சியரசியலைப் பேசிப் பேசியே உயிர்களை வாங்கிக் கொண்டிருப்பதை நிறுத்தி, உருப்படியான எதையேனும் சொல்ல முடியுமா என்னும் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ‘தமிழ்வீரச்’ சளாப்புதல் இனிச் சரிவராது.

பதில் இல்லாத கள்ளத்தனத்தில் சிலர், மக்களையும் அழித்துத் தாங்களுமாய் மடிந்த ‘மாவீரர்’களை ஞாபகமூட்டிப் பயமுறுத்துவதன் மூலமோ, பழைய நாட்களை இழுத்து ‘வீரம்’ பேசியோ சமாளித்து விடலாம் என்று முயற்சிக்கிறார்கள். எந்த அடிப்படையுமில்லாத இவர்களது ‘எதிரிகளை மிரட்டிப் பணிய வைத்துவிடும் வெத்து வீரப் புளிச்சல்’ பேச்சுகள் கேட்டு மக்கள் அடித்தெளிவுக் கசப்புடன் சிரித்து விலத்துகிறார்கள்.

தமிழீழக் கனவை நம்பி, தம்மீது பாய்ந்த பாசிஸக் கெடுபிடியையும், ஆயுத அச்சுறுத்தலையும் சகித்திருந்த மக்கள் கடைசியில் தங்கள் ‘வீரர்’களால் பட வேண்டியிருந்த கஷ்டங்களையும் பச்சைமட்டையடிகளையும் கொலைகளையும் நினைத்துக் குமுறும் மனதை, இவர்களது கோமாளித்தனங்கள் கண்டு சிரிப்பதன் மூலம் சாந்தப்படுத்த முயன்று வருகிறார்கள்.

புலிகளின் எதேச்சாதிகார அச்சுறுத்தல் கெடுபிடிகளுக்குள் வாழ விரும்பாமல் அவர்களின் இழுப்பிற்குப் பின்னால் இழுபட்டுப் போகாமல் இருந்த மக்களும், அவர்களின் வாலைப் பிடித்த பிறகு விட்டுவிட முடியாமல் அவர்களுடனேயே முள்ளிவாய்க்கால் துயர்ப்பயணம் மேற்கொண்ட மக்களும் என எல்லோரும் அவர்களைப் பற்றி அறிந்தே இருந்தார்கள். ஆனாலும், விடுதலைக் கனவு, சிறிது சிறிதாக ஏனைய இன மக்கள், நாடுகளையெல்லாம் விரோதிக்கத் தூண்டப்பட்டு தனிப்பட்டுப் போனமை, விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் துணைபோனவர்களாக ஆக்கப்பட்டமை, அதனால் எதிர்வன்முறைகளிலிருந்தும் தவிர்ந்துகொள்ள நம் வன்முறையை அதிகமதிகம் சார வேண்டியிருந்தமை போன்ற பொறிகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்குப் புலிகளிடமிருந்து மீள முடியவில்லை. தவிர்க்க முடியாமல் பலருக்கு அவர்களது ஆயுதநிழலிலேயே பதுங்கும்படியானது. புலிகளை மனதளவில் எதிர்ப்பது வெளியே தெரிந்துவிட்டால் கூட உளவுப்பிரிவு அறிந்துவிடும்@ துவக்கின் அழைப்பு வந்துவிடும் என்ற நிதர்சனமும் சமூகத்தின் பொதுப்புத்திக்குள் சேர்க்கப்பட்டிருந்ததால், ‘மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம்’ என்ற பிரச்சாரகர்களை யாரும் மறுக்காதிருக்கப் பண்ணியது. மறுப்பவர்களை துரோகிகள் என்று ‘குழு விலக்கம்’ செய்வதை ஆமோதித்து தாம் தப்பித்துக் கொள்வதிலேயே கவனமாயிருந்தன சமூகத் தலையாடுகளும்.

ஹிட்லரின் பிரச்சாரகர்கள் போல நம்மிடையேயும் பாசிஸத்திற்கு ஆதரவாக மக்கள் மனநிலையை உருவாக்கவும், ‘புலிகளே மக்கள்; மக்களே புலிகள்’ என்ற தோற்றத்தை உலகுக்குக் காட்டும் பணியிலும் அறிஞர்கள் கலைஞர்கள் எனக் கருதப்பட்ட பலரும் முனைப்பாகச் செயற்பட்டிருந்தார்கள்.

இந்த நாட்டில் நாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக இருக்கக் கூடாது; சம உரிமைகளை அனுபவிப்பவர்களாக நாமும் இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை, கள்ளத்தனமாக ஏமாற்றி, அதிதீவிரப் போலிநடிப்பின் மூலம் பாசிசத்தின் பின்னால் இழுத்துப் போனார்கள். இன, மொழி ரோசத்தை வெறும் போதையாக ஊட்டி உச்சத்தில் ஆடவிட்டு, சமூக அறிவுக்கும் யதார்த்த புத்திக்கும் சமாதி கட்டினார்கள். மாற்றுச் சிந்தனையை ஒடுக்கி, ஜனநாயகத்தை மறுத்து, விவேகத்தைத் தொலைத்து வீரம் ஒன்றையே வழிபட்டு ஏக வழிகாட்டியதன் விளைவு…. மக்களை அழித்து, சமூக வளத்தை அழித்து, சமூகத்தின் முதுகுநாணையும் உருவிவிட்டதாக முடிந்திருக்கிறது.
 

இஸ்ரேலுக்கு இணையான புத்திசாலிச் சமூகம் என்று நம்மை நாமே எண்ணிக்கொண்டு இருந்ததல்லால், வேறு உலக அனுபவங்களை எண்ணிப் பார்க்க எங்கள் ‘தமிழ்வீரம்’ விடவில்லை. ரோசத்திலும் கோபத்திலும் மனித உயிர்களின் மதிப்பையே மறந்தவர்களானோம். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையாகக் கருதப்படும் ஆர்ஜெண்டீன எழுத்தாளரான ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் சிறுகதை ஒன்று, இந்த வாழ்வுச் சீர்குலைவைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது.

எதேச்சாதிகாரத் தலைவரின் வீரர்களால் காலத்துக்குக் காலம் பலர் தேடப்பட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதன் மூலமே மக்களைத் தலைவர் தன் பிடிக்குள் கொண்டுவருகிறார். அவ்வாறு உளவுப்பிரிவினராலும், துப்பாக்கிதாரர்களாலும் தேடப்பட்டுவரும் பெட்ரோ சல்வடார்ஸ் என்பவன் தான் பிடிபட்டுவிடக் கூடாதென்பதற்காக வீட்டின் பாதாள அறையில் ஒளிந்து கொள்கிறான். அந்தப் பாதாள அறைக்குச் செல்லும் வழிமீது சாப்பாட்டு மேசையைப் போட்டு மறைத்த அவன் மனைவி, தேடி வந்த வீரர்களிடம் பெட்ரோ தப்பிச் சென்றுவிட்டதாகச் சொல்கிறாள். 

அந்த வீடு தலைவரின் ஆட்களால் கண்காணிக்கப்படத் தொடங்குகிறது. பாதாள அறைக்குள்ளிருந்து வெளியே வரமுடியாமல் உள்ளேயே அடைந்திருக்க நேர்கிறது பெட்ரோவுக்கு. ஒன்பது வருட காலம் அந்த நிலவறையின் இருட்டில் மரணம் பீடித்த கனவுகளுடன் வாழ்கிறான் பெட்ரோ சல்வடார்ஸ். தீவிரவாதக் குழுவின் கண்காணிப்பிலிருக்கும் மனைவி வெளி உலகில், ஓடிப்போன கணவனைப் பற்றி வதந்திகளை உருவாக்கியபடி, குழந்தைகளை வேலைக்குச் சென்று காப்பாற்றி வருகிறாள். கணவன் இருப்பதைக் காட்டிக் கொள்ளவே முடியாத அச்ச வாழ்வில் அவளும் குழந்தைகளும்.

கணவனோ வெளியே வந்தால் தலை போய்விடும் ஆபத்தோடு பாதாள அறையில். ஒருவாறாக எதேச்சாதிகாரம் முடிவுக்கு வருகிறது. சல்வடார்ஸ் வெளிச்சத்துக்கு வருகிறான். அவன் உடல் மெலிந்து, சாவின் மஞ்சள் படர்ந்து, வெளி உலகினைக் காண்கிறான். அதன் பின்பு வாழ முடியவில்லை. இறந்து விடுகிறான்.

போரில் ஆயிரமாயிரமாய் மடியவிட்ட மக்களோடு, இவ்வாறு நிலவறைகளில் வாழ நேர்ந்து வலியும் வேதனையுமாக உருக்குலைந்து போன மனிதர்கள் பலரையும் நாம் உருவாக்கத் துணைநின்றோமா இல்லையா?

No comments: