Friday, January 7, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

'திரும்புமா' என்று யாரும் கேட்பதில்லை. அதனாலேயே திரும்பத் திரும்ப இதிகாசங்களும்  பன்மொழி வித்தகர்களின் நாக்குகளால் காலத்துக்கு தகுந்தபடி எடிட் செய்யப்பட்டு காலம்தோறும் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் போல கடத்தவும்படுகின்றன.

அந்தவகையில் நாம் வாழும் இக்காலக்கட்டம் எந்தத் தலைமுறையை சேர்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எப்படியாக இருந்தாலும் பாரசீக படைப்பான 'ஆயிரத்தோரு இரவுகள்' தமிழக குக்கிராம மக்களுக்கும் அத்துப்படி என்பது நிஜம்.

அப்படி இருக்க அமெரிக்காவுக்கு மட்டும் இப்படைப்பு போய் சேராமலா இருக்கும்?

1706 ல் ஆங்கிலத்தில் இப்படைப்பு மொழியாக்கம் செய்யப்பட்டபோதே போய்ச் சேர்ந்துவிட்டது. அன்றுமுதல் மேற்கத்திய நாடுகள் தொழில் நுட்பத்தில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. எறும்பாக ஊரும் எழுத்தாக, படங்களாக விரியும் காமிக்ஸாக, கண்முன்னால் ஓடும் சினிமாவாக... இத்யாதி... இத்யாதி.

இப்படி இத்யாதியாக நீளும் ரயில் பெட்டியில் சமீபத்தில் இணைந்திருக்கும் கடைசி பெட்டிதான் வெளிவர இருக்கும் 'சிந்(து)பாத் தி ஃபிப்த் வோயேஜ்' ஹாலிவுட் திரைப்படம். பெரும்படைப்பான 'ஆயிரத்தோரு இரவுகளின்' கிளைதான் சிந்துபாத் கதை. இந்தக் கிளையை தனி ஆலமரமாக இப்படத்தில் ஃபோகஸ் செய்திருப்பவர் ஷாஹின் சியான் சாலிமோன். எழுத்தாளரும், இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான இவர், சிந்துபாத் கதையை கம்ப்யூடர் கிராபிக்ஸுடன் திரைப்படமாக எடுக்க காரணமாயிருக்கிறது.

'ஆயிரத்தோரு இரவுகள்' எங்கு பிரவேசித்ததோ அங்குதான் ஷாஹினும் பிறந்தார். யெஸ், ஈரான்தான் இவரது தாய்நாடு. அம்மாவும் அப்பாவும் புகழ் பெற்ற பெர்சியன் இசைக்கலைஞர்கள். ஆனால், 1978ல், ஈரானில் புரட்சி வெடித்ததையடுத்து தங்கள் மகனை மட்டும் காப்பாற்றும் பொருட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்போது ஷாஹினுக்கு வயது 6.

மொழி, இனம் தெரியாத ஊரில் தாய், தந்தை இல்லாமல் தனித்துவிடப்பட்ட ஷாஹினை அமெரிக்கரான ஜார்ஜ் தத்தெடுத்துக் கொண்டார். திரைப்படக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து அப்போதுதான் ஜார்ஜ் ஓய்வு பெற்றிருந்தார். எனவே ஷாஹினின் வரவு, அவர் வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்தது. தான் அறிந்த தனக்கு தெரிந்த அனைத்து கலைகளையும் ஷாஹினுக்கு கற்றுத் தந்தார்.

பள்ளியில் படித்தபடியே திரைப்பட நுணுக்கங்களையும் கற்று வந்த ஷாஹின், பெற்றவளின் மடியில் தலைசாய வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் 'ஆயிரத்தோரு இரவுகள்' கதையை மனத்திரையில் ஓடவிட்டார். அது தன் தலையை கோதியபடி அம்மா சொன்னக் கதை என்பது ஷாஹினுக்கு மட்டுமே தெரியும். எனவே ஷாஹினை பொறுத்தவரை 'ஆயிரத்தோரு இரவுகள்' என்பது வெறும் கதையல்ல. அம்மா. 
       
இப்படி வளர்ந்த ஷாஹின், தன் அம்மாவை ரத்தமும் சதையுமாக  சந்தித்து கல்லூரியில் படித்த காலத்தில்தான். அதுவரை  'ஆயிரத்தோரு இரவுகள்'தான் இவருக்கு தாய்ப்பாசத்தை கொடுத்தது. எனவேதான் தனது முதல் படைப்பான, 'டிஜின்' திரைப்படத்தை 'ஆயிரத்தோரு இரவுகள்' சாயலில் எடுத்தார். இதோ, இப்போது சாயளில்லாமல் நேரிடையாகவே சிந்துபாத்.

இந்த  ஹாலிவுட் படத்தை தயாரித்திருப்பது, 'ஜெயிண்ட் ஃபளிக் ஃ பிலிம்ஸ்'. இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். ஷாஹினும் அதில் ஒருவர். 'இதுவரை நல்ல கதைகள் எதுவும் எழுதப்படவில்லை அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு விட்டது' என்ற வாசகம்தான் இந்நிறுவனத்தின் தாரக மந்திரம். ஆக்ஷன் ஃ பேன்டஸி, அட்வென்ச்சர் படங்களை தயாரிக்க வேண்டுமென்பதுதான் இவர்களது நோக்கம்.   
       
வாருங்கள், ஷாஹினின் அம்மாவை சிந்துபாத்தின் வடிவில் சந்திக்கலாம்.

கே.என்.சிவராமன்

No comments: