Wednesday, January 5, 2011

கவிதைச்சரம்

தொலைந்தது

ரண்டு வருடங்களின் முன்
தொலைந்துபோன
ஒரு ஜோடி
செருப்புகள்
அலமாரியை
நகர்த்தியபோது
மீண்டன.
அவை தொலைந்த தினம்
ஒரு மழை நாள்
எங்கோ எதற்காகவோ
அவசரமாகப் புறப்பட்டு
பின் தடைப்பட்ட பயணம்
மனைவியுடன் நேர்ந்த சண்டை
குழந்தைகளிடம் நடத்திய விசாரணை
நாய்க் குட்டி மீது ஏற்பட்ட சந்தேகம்
வீடு முழுவதும் குடும்பமாகத்
நடத்திய தேடுதல்.

இரண்டு வருடங்களின் முன்
செருப்புகளோடு சேர்த்து
ஒரு பகற்பொழுதையும்
அலமாரியின் அடியில்
ஒளித்துவைத்தவருக்கு
அவை மீண்ட இப்பொழுதில்
நன்றி சொல்கிறது மனம்!

********************************

பிரார்த்தனை

ம்மா எப்போதுமே
பூஜை அறையில்
பிரார்த்தனையிலேயே
இருப்பாள்
பிறந்த நாட்களில்
பரீட்சை தினங்களில்
வேலை கிடைத்தபோது
தம்பி நோயுற்றபோது
அக்காவின் திருமணத்தின்போது
பேரக் குழந்தைகள் பிறந்தபோது
துன்பங்களோ இன்பங்களோ
எவை வந்தபோது
அம்மாவின் ஒரே பதில்
பிரார்த்தனை
அன்று அம்மாவை
அறுவை சிகிச்சைக்காக
வைத்திய சாலையில்
விட்டுவிட்டுத்
திரும்பியபோது
பூஜை அறையில்
அம்மா இல்லை
பிரார்த்தனை மட்டும் இருந்தது!

பாணன் 

********************************


புரிதல்

பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை

நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்

காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்

வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்

எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன் !

பா.கிருஷ்ணன்   

No comments: