Monday, January 3, 2011

அங்குதான் போக வேண்டும், இனி அழுதபடி வேண்டாம்

“நான், திரும்பியதிலிருந்து காத்திருக்கிறேன்
விதை முளைவிடக் காத்திருக்கிறது
நதி கடலை அடையக் காத்திருக்கிறது
மனிதன் எதற்குக் காத்திருக்கிறான்?
அவனும் ஒரு மரத்தின் விதையே; ஒரு கடலை நாடும் நதியே!
ஆனாலும், காத்திருத்தல் எவ்வளவு சுவையானது!
வாழ்வே ஒரு காத்திருத்தல்தானே!”

அந்த வரிகள் ஓஷோவினுடையவை. காத்திருத்தலை அறிவுபூர்வமாக அணுகினால், அதைக் கடக்கின்ற விவேகமும் முடிவு தரும் இன்பமும் விளங்கக் கூடும். ஆனால், காத்திருப்பை உணர்கின்றவர்கள் அனுபவிப்பது சித்திரவதையே!

ஒவ்வொருத்தரும் எதற்கெதற்கோ காத்திருக்கிறோம். ஒன்றாகவும் காத்திருக்கிறோம். காத்திருத்தலே வாழ்க்கை என்றாகிப் போகிறது. காத்திருத்தலின் கொடுமை எதுவென்றால், எதையாவது எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, நாட்களின், மணித்தியாலங்களின், நிமிஷத்தின் நீளம் அதிகரித்துத் தெரிவதுதான்.

நிமிஷங்கள் வருஷங்களாகி விடும் இந்த அனுபவம், “நாத்து நட்டுக் காத்திருந்தா நெல்லு கூட விளைஞ்சிருக்கும்” என்று நாட்டார் பாடலாக வருகிறது. “ஒருநாள் எழுநாள் போல் செல்லும் சேண் சென்றார் வருநாள் வைத்தேங்கு பவர்க்கு” என்று வள்ளுவன் வாய்மொழியாகவும் வருகிறது. அன்றில் பறவைகள், அரை அங்குலத்திற்கு விலகிவிட்டாலே, ஓர் ஆண்டிடைவெளி உண்டானது போலத் துடித்துப்போகும் என்பர்.

தலைவனது காலடிகளின் பின்னே சென்றுவிட்ட இதயத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக, வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தலைவிகள் துயரம் பற்றி எழுதப்படாத இலக்கியமே இல்லை எனும் அளவுக்கு இவ் வருத்தம் மிகப் பழமையானதும் தொடர்ந்து வருவதுமாகும். பார்த்துப் பார்த்துக் கண்கள் ஒளியிழந்து போவது பற்றியே, தனியாக கவலை வெளியிடும் பழைய பாடல்கள் ஏராளம். “வழிபார்த்து, என் கண்களும் ஒளியிழந்து புல்லிய ஆயின” (குறள்), “கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே” (குறுந்தொகை), “வெளிறுகண் போகப் பன்னாட்டிரங்கி” (புறம்), “கண்ணும் வாளற்ற” (சீவக சிந்தாமணி)……

தமயந்தியிடம் அன்னத்தைத் தூதனுப்பி விட்டுக் காத்திருக்கும் நளனது நிலைமை, தண்டனைக்காக நெருப்புக்குள் நிறுத்தி வைக்கப்பட்டவன் போல், நாழிகை என்பது நாலாறு மாதங்களின் அளவு கூட ஆகுமா என்று சிந்திக்கும்படியாகிறது. காத்திருப்பவரின் ஓர் இரவு, எல்லையற்ற நரகமாகி விடுவதை ஒரு தனிப்பாடல் நாயகி சொல்கிறாள்.

“அரவம் கரந்ததோ? அச்சுமரம் இற்றுப் ஃ புரவி கயிறுருவிப் போச்சோ? - இரவிதான் ஃ செத்தானோ? வேறுவழிச் சென்றானோ? பாங்கி! எனக்கு ஃ எத்தால் விடியும் இரா?” இந்தச் சூரியன் என்ன ஆனான்? பாம்பு விழுங்கி விட்டதா? அவன் ஏறிவரும் தேரின் அச்சு உடைந்து, குதிரைகளும் கயிற்றை உருவிக்கொண்டு ஓடிவிட்டனவா? அல்லது செத்துக்கித்துத் தொலைத்து விட்டானா? இல்லையென்றால் வழிமாறி வேறு எங்காவது போய்விட்டானா? என்றெல்லாம் கேள்வி வருகிறது. நீண்டுகொண்டே போகும் இரவை யோசிக்கையில், இது என்றாவது விடியுமா என்ற சந்தேகமே அவளுக்கு வந்துவிடுகிறது.

குறுந்தொகைக்காரி ஒருத்திக்கும், இரவின் நீளம் கண்டு அச்சம் வந்துவிடுகிறது. சூரியனோடு கோபித்துக் கொள்கிறாள். இன்னொருத்திக்கு, இரவு வெள்ளம், கடக்க முடியாத கடலாக நீண்டு கிடக்கிறது. “எல்லை கழிய முல்லை மலரக் ஃ கதிர்சினந் தணிந்த கையறு மலையும் ஃ இரவரம்மாக நீந்தினம் ஆயின் ஃ எவன் கொல் வாழி தோழி ஃ கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே”

விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது என்பர். எதற்கேனும் காத்திருப்பவரின் இரவு, சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு நீண்டது.

காதலில் மட்டுமல்ல, வாழ்வதிலும் காத்திருப்புக் காலம் கடுமையானதுதான். கடந்த முப்பது வருடங்களில், உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, கல்வியை இழந்து, செழிப்பை இழந்து, அமைதியை இழந்து பாடழிவுகளுடனும் பரிதவிப்புகளுடனும் அனல்மேல் வாழ்வை அனுபவித்தோம். புத்திசாலிச் சமூகம் என எண்ணியிருந்த நம் பிடியை முற்றிலுமாகக் கைவிட்டு, ஆயுதங்களின் பிடிக்கு ஆட்பட்டுக் காத்திருந்ததன் விளைவு…..

இப்போது நாம் ஒப்புக்கொள்ளக் கூசினாலும், உண்மை நிலைவரம் என்னவோ முன்பிருந்ததை விட மோசமாகச் சிதைந்தோம் என்பதே! ஊன்றி யோசிப்பவர்களுக்கு உதாரணங்கள் தேவையில்லை.

காத்திருப்பு இன்னும் தொடர்கிறது. சமமான உரிமைகளும், பாரபட்சமில்லாத சுதந்திரமும், நாமார்க்கும் கீழல்லாத - கௌரவத்துடனான வாழ்வையும் எதிர்பார்த்தே நம் காத்திருப்பு! நம் காத்திருப்பைக் களவாடிய காலம், நம்மை எத்திப் புரட்டி ஏமாற்றி உருக்குலைத்த சதியை உணர்ந்து கொள்கிறோம். போகவேண்டிய இடம் இன்னும் அங்கே இருப்பது நமக்குத் தெரிகிறது. அங்குதான் நாம் போக வேண்டும்.

அதற்கு, மீண்டும் முட்களும் புதைகுழிகளுமான அதே பாதையிலேயே போக முற்படும் முட்டாள்த்தனத்தை நாம் செய்யலாகாது. சூடு கண்ட பிறகு பூனை கூட அடுப்பங்கரையை நாடுவதில்லை. வாக்கு லாபத்துக்காக அதீதமான உணர்ச்சிகளை ஏற்றி நம்மை அழிவுகளுக்குள் தள்ளிவிடுபவர்கள் பின்னால் அள்ளுண்டு செல்லும் பிழையை மீண்டும் மீண்டும் விடலாகாது.

நமது தேவை, ரோசத்துக்காக அழிந்தோம் என்பதல்ல. புத்தியைப் பயன்படுத்தி இணக்கமாகவும் மற்றவர்களை இணங்க வைத்தும் வாழ்வோம் என்பதே! எதிரிகளை அழிப்பதல்ல, அவர்களை இணக்க அரசியல் தேவையின் பங்காளர்களாக்கி வென்று காட்டுவதே வீரம்! இன்றைய உலக ஒழுங்கை உணர்ந்துகொண்டு, புதிய பாதையைத் தேர்வு செய்து அதில் நம் சமூகத்தை அழிவின்றி முன்னகர்த்தும் விவேகம் நமக்கு வாய்க்க வேண்டும்.

பகை உணர்ச்சியை மட்டும் எரியவிட்டு, எம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது. பகைமறப்பும், பேச்சும், இணக்கப் புள்ளிகளைக் காணும் முயற்சிகள் மூலமுமே நாம் இந்த இடத்திலிருந்து நகர்ந்து மேலே முன்னேற வேண்டும். முதலில் பெறக்கூடிய நிர்வாக அதிகாரங்களை விரைவில் பெற்றுக்கொள்ளும் விவேகத்தைச் செயற்படுத்துவதே, இந்தச் சந்தியைக் கடப்பதற்கான இன்றைய முதல் அடிவைப்பாக இருக்க முடியும்.

வெறுமனே அவரவர் சுயலாபத்தை எண்ணிய காத்திருப்புடன் காலம் நகருமாயின், நாம் இன்னும் கீழே போய் நின்றுதான் வீரவசனங்களைப் பேச வேண்டி வரும். இந்த யதார்த்த அவலநிலையைச் சம்பந்தப்பட்டவர்கள் காலந்தாழ்த்தாது புரிந்துகொள்ள வேண்டும். எப்போதும்போல பந்தை எதிர்ப்பக்கம் எறிந்துவிட்டுப் பதுங்கி இராமல், நாமே முன்னேறி விளையாட வேண்டிய கடைசித் தருணம் இது.

மக்கள் காத்திருக்கிறார்கள். தலைவர்கள் புரிந்து கொள்கிறார்களா?

No comments: