Wednesday, December 15, 2010

டாக்டர் ருத்ரன்

'காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?' என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.

'இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி' என்றார் சுருக்கமாக. 'பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், அவளுடைய நட்புக்கள் என்று பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் ஜாதி எங்கே வந்தது? நகர்புற வாழ்க்கையில் ஜாதியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தானே காதல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.

'நீங்கள் நினைப்பது தப்பு. ஆரம்பத்தில் ஜாதி வித்தியாசங்கள் பெரிதாய்த் தெரியாது. மணந்துகொண்டு இல்லறம் தொடங்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி வித்தியாசங்கள் தோன்றும். பரம்பரை பரம்பரையாக மனசுக்குள் ஊறி வந்திருக்கும் யதார்த்தங்கள் முளைக்க ஆரம்பித்து விசுவரூபம் எடுக்கும். பெற்றோர்களும் உறவினர்களும் அந்த சிறிய தீயை ஊதிவிட்டுப் பெரிதாக்குவார்கள். பல பேர்களின் வாழ்க்கையில் இதைப் பார்த்திருக்கிறேன். ஒரே ஜாதியாக இருந்தால் ஓரளவு பிழைப்பார்கள். வேறு வேறு ஜாதியாக இருந்தால் பிரச்னைதான், என்று அழுத்தமாகச் சொன்னார் டாக்டர்.

பதினைந்து வருஷங்களுக்கு மேலாக டாக்டர் ருத்ரனை எனக்குத் தெரியும். பத்திரிக்கைகளில் ஏராளமாக எழுதியவர். டிவியில் பேட்டிகள் கொடுத்தவர். விவாத அரங்குகளில் பங்கேற்றவர். அவருடன் டெலிபோனில் சில முறைகள் பேசியிருக்கிறேன தவிர நேரடியாகப் பார்த்தது கிடையாது. (என்று நினைக்கிறேன்)

சில வருஷங்களுக்கு முன் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த 'அழகிய தமிழ் மகன்' படத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பாத்திரத்தில் சைக்கியாரிஸ்டாகவே நடித்தார் ருத்ரன். விஜய்க்கு அதில் இரட்டை வேடங்கள். குறிப்பிட்ட சில சொப்பனங்கள் பின்னர் அசலாகவே நடக்கின்றன என்பது விஜய்யின் அனுபவம். அதனால் பயம் ஏற்பட்டு மனநல நிபுணரான டைரக்டர் ருத்ரனிடம் சென்று ஆலோசனை கேட்க, 'இஎஸ்பி' எனப்படும் அந்த மனநிலை உண்மையானதுதான் என்றும் கனவின்படி நடப்பது நிச்சயம் என்றும் அவர் விளக்குகிறார்.

தற்கொலைகள் ஏன் நடக்கின்றன என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருப்பதைப் படித்ததும் அவரை சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. போனில் தொடர்பு கொண்டு, எப்போது வந்தால் அவருக்கு சௌகரியமாக இருக்கும் என்று கேட்டேன்.

அதிர்ச்சியுடன், 'நீங்கள் என்னைப் பார்க்க வருவதாவது! நானே உங்களைப் பார்க்க வருகிறேன்,' என்று கூறிய டாக்டர் ருத்ரன். இரண்டு வாரங்களுக்கு முன்பு என் இல்லத்துக்கு வருகை தந்தார். கூடவே உமா மகேஸ்வரி என்ற சைக்காலஜிஸ்ட் பெண்மணியும் வந்தார்.

மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வந்த டாக்டர் ருத்ரன் ஒன்பதரை மணி வரைப் பல விஷயங்களைப் பற்றி சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார். புராண காலத்து மகரிஷிகளைப் போல கம்பீரமான தாடி. இரு கைகளாலும் அடிக்கடி மாற்றி மாற்றி அதை உருவிக்கொண்டு பேசுகிறார். கண்களில் நல்ல தீட்சண்யம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி உரையாடுகிறார். மனித உறவுகள் செம்மைப்பட வேண்டுமானால் eye - contact  மிக முக்கியம் என்பது அவர் வலியுறுத்தி சொல்லும் விஷயங்களில் ஒன்று. கண்ணுக்கு கண் நேரே பார்த்துப் பேசினால் உள்ளத்தில் உள்ளது உள்ளபடி வெளிப்படும் என்கிறார்.

சிறு வயது முதல் தன்னிடம் தனியான அன்பு செலுத்தி, டாக்டராகப் பட்டம் பெறும்படி வளர்த்தவர் தன் அத்தைதான் என்று நன்றி விசுவாசத்துடன் தெரிவித்த டாக்டர் ருத்ரன், தான் வழிபடும் தெய்வம் காமாட்சி அம்மன் என்கிறார். நெற்றியில் பளிச்சென்று துலங்கும் சிவப்புக் குங்குமம் அதற்கு சான்று கூறுகிறது. காலம் சென்ற டாக்டர் மாத்ருபூதம்தான் தனக்கு குரு என்றார். (மாத்ருபூதம் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் ருத்ரன் சீரியசான மனிதராக இருக்கிறார்).

பேசிக் கொண்டிருந்தபோதுதான் நான் முதலில் குறிப்பிட்ட காதல் கல்யாணப் பிரச்சனை வந்தது. குடும்பத்தில் எதிர்ப்பு இருப்பதே இவர்களில் பெரும்பாலோருக்குப் பிரச்சனை. பையனை வெளியே அனுப்பிவிட்டுப் பெண்ணிடம் தனியே விசாரிப்பேன். ஏன் அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று விவரத்தைக் கேட்டு வைத்துக் கொண்டு பிறகு பையனைக் கூப்பிட்டுப் பேசுவேன். சிக்கல் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெளிவாகிவிடும்' என்றார் டாக்டர்.

ஆனால், வெறும் விரக்தி, தோல்வி மனப்பான்மை, கசப்புணர்ச்சி - இப்படிப் பல காரணங்களுக்காக ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. வெறுமென பேசி, விவாதித்து, ஆலோசனை கூறி அனுப்புவது பழைய நடைமுறை. இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு விதமான மன நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாத்திரை மருந்துகள் வந்திருக்கின்றன. தக்கபடி ப்ரிஸ்கிருப்ஷன் தருகிறேன் என்கிறார் டாக்டர் ருத்ரன். ஆனால், அவற்றை சரியானபடி உட்கொள்ளாவிட்டால் பலன் இருக்காது என்றவர், தன் நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி ஒரு தாயைப் பற்றியது என்றார். வளர்த்து பெரியவனான மகனுக்கு மனச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது என்று இவரிடம் அழைத்து வந்தாராம் அந்தத் தாய். இவரும் மருந்துகளைத் தந்தாராம். ஆனால் அவன் சில நாட்களில் இறந்து விட்டான். பின்னர் அந்த அம்மா இவரைப் பார்க்க வந்தார். தகுந்த சிகிச்சை தரவில்லை என்று சண்டை பிடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவருக்கு ஆச்சர்யமான அனுபவம். என் பிள்ளை நீங்கள் கொடுத்த மருந்துகளை சரியாகவே சாப்பிடவில்லை. அதனால் தான் இறந்துவிட்டான். இப்போது எனக்கு அவனைப் போலவே மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறது. மருந்து கொடுங்கள், ஒழுங்காக சாப்பிடுகிறேன்' என்றாராம் அந்தத் தாய்.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமும் அவசரமும் காட்டுகிறார்கள் என்றும், அது தவறு என்றும் டாக்டர் ருத்ரன் அபிப்பிராயப்படுகிறார். 'உடனே படிப்பு, உடனே வேலை, உடனே வெளிநாடு, உடனே எக்கச்சக்க சம்பளம் என்று அவசரம் காட்டுவது, வாழ்க்கையைப் பற்றிய விரிவான, ஆழமான பார்வையைத் தடுக்கிறது' என்கிறார்.

நாலைந்து உறவினர்களுடன், சென்னை கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகரில் ஆலோசனை க்ளினிக் நடத்தி வருகிறார் ருத்ரன். (ஃபோன்: 24811140, 23727738). ஆனால் குறிப்பிட்ட சில கிழமைகளில் மட்டும்தான் அவரை சந்திக்க முடியும்.        
ரா.கி.ரங்கராஜன்                              

3 comments:

Dr.Rudhran said...

மூத்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதியது இது. மூன்று மணி நேர உரையாடல்/அரட்டையில் சில விஷயங்கள் விடுபட்டும் சில மாறாகவும் பதிவாகியுள்ளன.
ஸைக்யாட்ரி எனும் வார்த்தை கூடத் தெரியாத காலத்தில் அவரது ப்ரொபஸர் மித்ரா தொடர்கதை வாசித்தவன் நான்.
இதற்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு மிகமிகக் கொஞ்சம்தான்.
இதன் மூலம் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்.

Anonymous said...

மதிப்பிற்குரிய டாக்டர் ருத்ரன் அவர்கள் மூத்த எழுத்தாளர் ர.கி.ர பற்றி பாராட்டுகிறாரா அல்லது குறை சொல்கிறாரா என்று தெரியவில்லை. பதிலில் தெளிவில்லை.

Kesav said...

ரா.கி.ரங்கராஜன் சமூக அவலங்களிற்கு டாக்டர் ருத்ரன் மூலம் தீர்வு சொல்ல முயன்றிருக்கிறார். நல்ல பதிவு