Saturday, December 18, 2010

வெறுப்பும் வீம்பும் அகல விடுதலை சாத்தியமே


“கனவு – மனசாட்சியின் குரல்” என்கிறார் ஸோக்கிரட்டீஸ். “உடல் அசதியினால் ஏற்படுகிற ஒரு வீண் காட்சி” என்கிறார் வோல்டேர். “உணர்வற்ற ஒரு நிலைக்கு அழைத்துச் செல்லும் ராஜபாட்டை” என்கிறார் ஃப்ரெய்ட். கனவுகள் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் உண்டாம்!

மனம் என்பதை நனவுமனம், நனவிலிமனம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். நம்முடைய எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், பயங்கள், சந்தேகங்கள் எல்லாம் உள்மனத்தில் – நனவிலி மனத்தில் பதிவாகின்றன. இந்த உள்மனதைத்தான் ளரடிஉழnஉழைரள என்கிறார்கள். உள்மனத்தில் பதிவான நினைவுகளில் சில, முன்பின் தொடர்பில்லாத சிறு பகுதிகளாக வெளிப்படும் அதுதான் கனவு என்கிறார்கள். நாம் விழித்திருக்கும்போது ஏற்படும் பலவித உணர்ச்சிகளும் உள்மனத்தில் பதிவாகி, இரவிலோ பகலிலோ தூங்கும்போது, கனவாகிய வடிகால் மூலமாக வெளிப்படுகிறது என்று விளக்குகிறார்கள். உடம்பில் நோய்க் குறைபாடுகள் இருக்கையில் கெட்ட கனவுகள் வருவதாகவும், உடம்பு ஆரோக்கியமாக இருக்கையில் நல்ல கனவுகள் வருவதாகவும் கூட சொல்கிறார்கள்.

விஞ்ஞான விளக்கங்கள் ஒருபுறமிருக்கட்டும். இலக்கியத்திலோ கனவுகள் அதிபுனைவு நவிற்சிகளாய் பரவசமூட்டுபவை. “கனவுகள் அழகானவை. கண்களில் பூக்கின்ற மலர்கள் அவை” என்கிறார் ஒரு புதுக்கவிஞர். அவை நமக்கு மட்டுமே சொந்தமானவை என்பதால் அவை நம் அந்தப்புரச் செடிகள் என்றும் சொல்கிறார்.

நாச்சியார் திருமொழியில், திருமாலாகிய தன் காதலன், தன் கரங்களைப் பற்றி மாலையிட்டதாக, அவள் கனவு கண்டு களிப்பெய்துகிற நிகழ்ச்சியைக் காணமுடிகிறது. பிரிந்து போனவனைக் கனவில் கண்டு மகிழும் பெண்ணை குறள் சொல்கிறது. “நனவினால் நல்காதவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்” ஏதோ, கனவிலேனும் காணக்கூடியதாய் இருப்பதால்தான் அவளது உயிர் உடலை விட்டுப் பிரியாது இருப்பதாகச் சொல்கிறாள்.

“கேட்டிசின் வாழி தோழி! அல்கல் பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய வாய்தகைப் பொய்க்கனா மருட்ட, ஏற்றெழுந்து அமளி தைவந்தன்னே….” என்று கனவால் ஏமாந்த கதையைச் சொல்கிறாள் குறுந்தொகைத் தலைவி. அந்தக் கதையைக் கண்ணதாசன் இற்றைத் தமிழ்ப்படுத்தித் திரைப்பாடலாக்குகிறார். “கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி! கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி!”

எகிப்து நாட்டின் வரலாற்றிலே, நான்காவது துட்மோஸ் மன்னன் பட்டத்துக்கு வந்தது பற்றி ஒரு கதை உண்டு. துட்மோஸ் வேட்டைக்குச் சென்று, களைப்பினால் ‘ஸ்பிங்ஸ்’ தேவதை சிலைக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கிவிட்டதாகவும், அப்போது வந்த கனவிலே தனக்கு மகுடம் சூட்டப்படுவதாக அவர் கனவு கண்டதாகவும், அதன்படியே பின்னாளில் அவர் மன்னராகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு பின்னுக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே உணர்த்தும் ஆற்றலும் கனவுக்கு உண்டு என்ற நம்பிக்கையைப் பல இடங்களில் காண்கிறோம். இராமாயணத்தில் திரிசடை கண்ட கனவு, சிலப்பதிகாரத்தில் கண்ணகி கண்ட கனவு, சீறாப்புராணத்தில் கதீஜா கண்ட கனவு…. இதெல்லாம் பின்னால் நடக்கப் போவதை முன்பே சொல்லிய கனவுகள்தான்.

பின்னால் நிகழப்போகும் தீங்குகளையெல்லாம் கனவில் கண்ணகி கண்டதைப் போலவே, பாண்டியன் தவறான தீர்ப்பு வழங்கிய பிறகு பாண்டிமாதேவியும் கெட்ட கனவு காண்கிறாள். செங்கோலும் வெண்கொற்றக் குடையும் நிலத்தில் முறிந்து விழவும், வாயில் மணி பயங்கர ஒலி எழுப்பவும், இரவில் வானவில் தோன்றவும், விண்மீன்கள் எரிந்து விழவும், எட்டுத்திக்கும் அதிர்வதாயும் கனவு காண்கிறாள் கோப்பெருந்தேவி. யூலியஸ் சீஸரும், கட்டபொம்மனும் இறப்பதற்கு முன், அவர்தம் மனைவியர் கனவு கண்டதைச் சொல்லியே போகவிடாமல் தடுக்கிறார்கள்.

‘வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகளே!’ என்கிறது ஜென் பௌத்தம். “வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர் தம் உரை பிழையன்று காண்” என்று அதை வழிமொழிந்து தன் சுயசரிதையைத் தொடங்குகிற பாரதி, “உலகெலாமொர் பெருங்கன வஃதுளே உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலகமானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவினுங் கனவாகும்” என்கிறான். அதிலும், “திலக வாணுதலார் தரும் மையல் தெய்வீகக் கனவு” என்பதே அவனதும் அபிப்பிராயம். “களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்” வாணியின் தொழில் என்றே அவன் காண்கிறான்.

மனிதர்கள் எல்லோர்க்கும் கனவுகள் உண்டு. அடிப்படைத் தேவைகள் கூட பலருக்கு கனவாகவே இருக்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம்…. இவற்றோடு வலியவர்களாலும் வெற்று வாய்சாலகர்களாலும் பறிக்கப்படாத நிம்மதியான ஓர் எளிய வாழ்க்கை. இதுவே கனவு! துண்டு நிலம், அதில் பாயும் ஆறு, அதன்மேல் நிலவு… எல்லோருக்கும்தானே வேண்டும்?

வரலாற்றினூடு வளர்ந்து விரிந்து வருகிற மனிதர்கள் நாம். நம்மை நாமே குறுக்கிக் கொண்டும், பிளவுபடுத்திக் கொண்டும் அழிந்துகொண்டிருப்பது அவலமானது. தீமையும் கொடுமையுமான பாதைகளில் சிக்குண்டு, ஏமாற்றுக்கும் வஞ்சனைக்கும் ஒத்துழைப்பதினாலும் சிதைந்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தீமைகள், அவலங்கள் எல்லாம் அழிவதிலோ அல்லது நிலைப்பதிலோ நமக்கும் பங்குண்டு. நம்மை வாழவிடாமலடிக்கிற வறட்டுப் பெருமிதத் தளைகளிலிருந்து நாம் விடுபடுவோம்.

பகையுணர்ச்சியும் வன்மமும் வறட்டு ரோசங்களும் நம் வாழ்வை அழிப்பதைத் தெரிந்து கொள்வோம். ராமனது அம்பினால் தன் மனதில் ஏறி இறுகியிருந்த சுமைகள் கழிந்து, வீழ்கிற நிலையில் ராவணனின் முகம் மும்மடங்கு பொலிந்தது என்று கம்பன் சொல்கிறான். அது உண்மையாகவே இருக்கும். ஆதிக்க உணர்வு அழிந்து, வெறுப்பும் வீம்பும் அகன்று, ஓர் எளிய உண்மையான மனிதனாகி விடுவதில் பேரின்பம் உண்டாவது சாத்தியமே. மனிதன் தன்னைத் தானே அவலப்படுத்திக் கொள்கிற பிடிவாதங்களுக்கு விடைகொடுத்தால் மகிழ்ச்சியான விடுதலையுணர்வு சாத்தியம் என்பதையே ராவணனிடமும் காண்கிறோம்.

மேதைமை மிக்க திரைப்பட இயக்குனரான அகிரா குரோசாவா தன் படங்களைப் பற்றிச் சொல்லும்போது சொன்னார்: “உலகெங்கிலும் மக்கள் தாமே தமக்குத் துன்பத்தை உண்டுபண்ணுவதற்கு முனைவதாகவே தோன்றுகிறது. இப்பொழுதை விட இன்புற்றிருப்பதற்கு மனிதனுக்கு உரிமை உண்டு. அச் செய்தியைத்தான் நான் உணர்த்த முயன்றிருக்கிறேன்.”

மனித மனம் பல நூற்றாண்டுகளாகவே சகமனிதன் மீது எல்லையற்ற வன்முறையைச் செலுத்தி அதில் உற்சாகம் காண்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறது. எந்த மனிதனும் சுயவிழிப்புணர்வுடன் இருக்காவிட்டால், மரபாயிருந்து வரும் சில துவேசங்களுக்கு (இனவெறி, நிறவெறி, மதவெறி, சாதிவெறி….) அவனறியாமலே பலியாகிக் கொண்டிருக்கும் அவலம் நிகழும். மன இடுக்குகளுக்குள் மறைந்து கிடக்கும் இந்த துவேசமும் வன்முறையும் தன்னை மறைவாகக் காட்டிக் கொண்டேயிருக்கும். சுயவிழிப்புணர்வுடன் தத்தம் மனதில் புதைந்துள்ள துவேசத்தையும் வன்முறையையும் அவதானிப்பதன் மூலமே தொடர்ந்து அதை விலக்கும் முயற்சியை மேற்கொள்ள முடியும். அந்த முயற்சியில் ஈடுபடாதவர்களுக்கு, தமக்குள் மறைந்து கிடக்கும் துவேசத்தை தம்மால் அறிய முடியாமல் போகும். நம் துன்பங்களுக்கான பழியை எப்போதும் மற்றவர்களின் மீதே போட்டுக்கொண்டு மீளமுடியாமல் மறுகுவதாக இருக்கும்.

ஷண்முக சுப்பையாவின் இந்தக் கவிதையின் தலைப்பு ‘புரியாத ஒன்று’ என்பதாக இருந்தாலும், விஷயம் எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான்.

“என் சாதி போலொரு உயர்ந்த சாதி
இப் பூதலத்தில் இல்லை
என் மதம் போல் மகத்தான ஒரு மதம்
இச் சகத்தினில் இல்லை
என் மொழி போல் எழிலான ஒரு மொழி
இவ்வூழியில் இல்லை
ஆனால் –
என் சாதியல்லாத சாதியில்
என் மதமல்லாத மதத்தில்
என் மொழியல்லாத மொழியில்
என்னை விடச் சிறந்தவர்கள்
எப்படித்தான் பிறந்தார்கள்
என்பதுதான் புரியவில்லை.”

1 comment:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இந்த பதிவிற்கு கனவுகளின் ராஜாங்கம் என்றுதான் தலைப்பிடவேண்டும் . கனவுகளின் உண்மைத் தன்மைப் பற்றி மிகவும் சிறப்பாக அரிய முடிகிறது தாங்கள் தந்திருக்கும் பல குறிப்புகளில் இருந்து .பகிர்வுக்கு நன்றி