Monday, December 27, 2010

என்ன செய்யப் போகிறோம் இந்த வாழ்க்கையை?


இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு வரப்போகிறது. “ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா” என்று காதலில் விழுந்தவர்கள் வேண்டுமானால் பாடி அவசரப்பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் புத்தாண்டுச் சபதமெடுக்கிறவர்களும், அத்தனை தீர்மானங்களையும் வரிசை குலையாமல் அதே தீவிரம் குறையாமல் இந்த வருசத்துக்கும் ஒருமுறை சங்கல்பம் செய்துகொள்ளலாம். சங்கல்பம் எல்லாம் செய்துகொள்ளத் திராணியற்றவர்களும், வருசம் பிறந்தாலாவது புதுசாய் நல்லதொரு வழி பிறக்காதா என்று நம்பப் பழகிக்கொண்டுவிட்ட அந்த வழக்கத்தினடிப்படையில் ஒரு புது எதிர்பார்ப்பின் பூரிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம்.

ஆனால், அதே மனங்களும், அதே வீம்புகளும், அதே வெறுப்புகளும், பிறரைத் தம் மனதுக்குள் அண்டவிடாத அகந்தையும், பன்மைத்துவ வாழ்வு குறித்து எந்தப் பான்மையற்றவராயும் மனிதர்கள் இருக்கையில் எல்லா ஆண்டும் மற்றொரு ஆண்டே!

மனித குலத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு ஆண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து, எவ்வளவோ அறிவு வளர்ச்சிகளை அடைந்து, எத்தனையெத்தனையோ மாற்றங்களில் வியப்புகளில் பயணித்து மேலே மேலே ஏறி வந்துவிட்டோம். உயர உயரப் பறந்தது எல்லாம் ஒரு பள்ளத்தாக்கின் உள்ளேதானா?

இன்னும் வாழும் வழி தெரியவில்லை. மனிதரை மனிதர் நோகச் செய்யும் வழக்கம் ஒழியவில்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோர்க்கும் ஒரே நீதி, எல்லோர்க்கும் இந்த பூமி என்கிற மனிதகுல லட்சியத்தை எட்ட முடியவில்லை. மனிதப் பொது விருப்பமெல்லாம் இன்னும் கனவாகவே தொடர்கிறது.

அடக்குதலும், அழித்தலும், ஒதுக்கிவைத்தலும் இல்லாதொழிந்து, ஒருவரையொருவர் உதாசீனம் செய்திடாத அன்பு மானுட மலர்வுக்கான ஏக்கம் இன்னும் ஏக்கமாகவே இருக்கிறது. பயம் இல்லாத, தீங்குகள் நேராத, மற்றவரிலிருந்து தாழ்வில்லாத, பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கே மனிதர்கள் எல்லோரும் ஏங்குகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறாயின், அதைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சியாகவே எங்கள் எல்லோர் பேச்சுக்களும், செயல்களும், சிந்தனைகளும் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இந்த பூமியை – நாட்டை வாழத்தகுந்த நந்தவனமாக்க நாம் பாடுபடுவோம். உறவுகள், வளங்கள், நன்மைகள், நற்பண்புகள் எல்லாம் சிதைந்து கருகி நாடும் வாழ்வும் நாசமாக நாம் ஒத்துழைப்புத் தர வேண்டாம். பல்வேறு உயிரினங்களின் கூட்டிணைவில் ஓர் அமைதிச் சமுதாயமாகப் பூத்துக் குலுங்குகிற பூங்கா; ஒன்றையொன்று அழித்துவிட முயலாத எளிய சிறிய உயிரினங்கள் சேர்ந்து வாழ்கிற சோலை@ காழ்ப்புகளை உதிர்த்த மனங்களின் மலர்வில் மணம் பரப்புகிற நந்தவனம்! இதுவே நமக்கு வேண்டும். உடன்வாழும் மனிதர்களும் உறவுமே நமக்கு உயிர்ப்புத் தரும் காற்றுப் போல@ உரிமையும் சுதந்திரமும் நாம் உலவ விரும்பும் வானைப் போல. ஏழைகளெமக்குத் தோழமை சுகம்.
நமது வாழ்வும் தேவைகளும் தூயன. இதில் யாரும் நஞ்சைக் கலக்க அனுமதிக்க வேண்டாம். யாரையும் விலக்காத, யாரையும் இழிவாய் நினைக்காத, ஒருவரிலொருவர் ஏறி அழுத்த முயலாத அமைதியும் எளிமையுமான வாழ்க்கைக்கே நாம் பாடுபடுவோம். அதுவே எங்கள் தேவை என்பதை உரத்துச் சொல்ல குரல்தருபவர்களைத் தேடுவோம். எதுகை மோனை அலங்காரங்கள் ஆணவத் தோரணைகள் அழுங்குப் பிடிவாதங்கள் அகன்ற அந்தக் கவிதை வாழ்க்கைக்கே நாம் காத்திருக்கிறோம்.

“எல்லோரிடமும் எப்போதும் பேரன்புடன் இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறேன். சந்திக்கும் முதல் மனிதன் எதையோ செய்து, எப்படியோ சீண்டி உணர்வுகளை நாசமாக்கிவிட்டுப் போய்விடுகிறான்” என்று துக்கப்படுகிறான் சுந்தர ராமசாமியின் நாவலில் வரும் ஜே ஜே. நம் இயல்பைத் தக்க வைத்துக் கொள்ள விடாமல் சீண்டும் சமூகச் சூழலிலேயே நாம் வாழ வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். வாழ்வை நேராக்கிக் கொள்ள, எத்தகைய சீண்டல்களுக்குள்ளும் நம் இயல்பை விட்டுவிடாமல் நல்லதை நோக்கி அடிவைப்பதிலேயே வழி இருக்கிறது.

பதின்மூன்றாண்டுகள் வனவாசம் என்று காட்டில் பொறுமையாக இருக்கும் தருமனை பாஞ்சாலி துளைத்தெடுக்கிறாள். “சத்தியம், பொறுமை, அன்பு என்று தர்மத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறீரே…. நீர் காப்பாற்றும் தர்மம் உம்மைக் காப்பாற்றவில்லையே…. காட்டில் பிச்சையெடுக்க வைத்துவிட்டதே….” என்று குமுறுகிறாள் பாஞ்சாலி. “திரௌபதி! தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை. அப்படிச் செய்தால் அது வியாபாரம். நான் தர்ம வியாபாரி இல்லை. தர்மத்தைக் காப்பது என் குணம். சத்தியம், பொறுமை, இரக்கம் என்ற தர்மங்கள் என்னைக் காக்காது போனாலும், அவற்றைக் காப்பது என் கடமை@ அது என் இயல்பு” என்கிறான் தர்மன்.

நமது நல்ல குணங்களை விட்டுவிடாமல், மற்றவர்களின் சீண்டல்களுக்குப் பதற்றப்படாமல் பார்த்துக் கொள்வோமானால், நம் நிமிர்வை யாரும் தடுக்க முடியாது. நல்லதை நோக்கி நம்மோடு மற்றவர்களும் நடப்பதற்கு இணைவர். ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை ஒன்று குறிப்பிடுவதும் இதையே.

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார். அருகே தேள் ஒன்று நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்றுவதற்காகத் தண்ணீருக்குள் கைவிட்டுத் தூக்குகிறார் துறவி. தேள் அவர் கையில் கொட்டுகிறது. வலியில் அவர் கையை உதற, தேள் மீண்டும் நீரில் விழுந்து விடுகிறது. தத்தளிக்கிறது. அதன் கஷ்டத்தைப் பார்த்து அதை மீண்டும் தூக்குகிறார் துறவி. கையில் ஏறியதும் மறுபடி கொட்டுகிறது தேள். அவர் கையை உதற, விழுகிறது, தத்தளிக்கிறது. மீண்டும் தூக்குகிறார். தேள் மீண்டும் கொட்டுகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் கேட்கிறார்: “சுவாமி, தேள்தான் கொட்டுகிறதே. திரும்பத் திரும்ப அதை ஏன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே?” துறவி சொன்னார்: “கொட்டுவது அதனுடைய இயற்கைக் குணம். காப்பாற்றுவது எனது தர்மம். அதனுடைய குணத்தை அது விடாத போது, என்னுடைய இயல்பை நான் ஏன் விட்டுவிட வேண்டும்?”

நம்முள்ளிருக்கும் நல்ல இயல்புகளை செயல்பட விடுவதன் மூலம்தான் வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள முடியும். நம் மனங்களுக்குள்ளேயே கடவுள்தன்மையும் சாத்தானின் அழுக்குகளும் உண்டு. இரண்டையும் அவதானித்து எதைச் செயல்பட விடுவதென்பதில் நாம் ஒவ்வொரு கணமும் விழிப்புடனிருக்க வேண்டியிருக்கிறது. வெறும் உணர்ச்சிகர போதையில் நடந்துகொண்டால், நம் வாழ்வையும் உலகையும் சாத்தான்வசம் ஒப்படைத்துவிட்டுத் திட்டிக் கொண்டிருப்பதாகவே இருக்கும். இதுகுறித்து மற்றொரு பிரபல கதையும் உண்டு.

யார் பெரியவர் என்பதில் கடவுளுக்கும் சாத்தானுக்குமிடையே போட்டி. கடவுள் தகதகவெனப் பொலியும் பகல்பொழுதைப் படைத்தார். சோம்பலை அனுப்பி வைத்தது சாத்தான். மனிதனை, அவன் வழியிலேயே போய்த் திருத்த எண்ணிய கடவுள், அவன் தூங்குவதற்கென்றே இரவைப் படைத்தார். அச்சத்தை ஏற்படுத்தியது சாத்தான். மனிதன் தன்னம்பிக்கை பெறுவதற்காக அவனது இதயத்தில் கவிதையையும், கலைகளையும் சுரக்கச் செய்தார் கடவுள். பொய் என்பதை உண்டாக்கியது சாத்தான். மனிதனின் மகிழ்ச்சிக்காக காதல் என்ற அமுதை அனுப்பி வைத்தார் கடவுள். அதில் காமக் குரூரம் என்ற நஞ்சைக் கலந்தது சாத்தான். தடுமாறிக் கொண்டிருந்த மனிதனைப் பலப்படுத்துவதற்காக உறவுகளை அமைத்துக் கொடுத்தார் இறைவன்.

பணத்தைக் கண்டுபிடித்தது சாத்தான். நட்பு – அதைச் சிதைக்கப் பொறாமை, உழைப்பு – அதைத் திசைதிருப்பப் பேராசை என்று போட்டி தொடர்ந்து கொண்டேயிருந்தது. இனி, மனிதனைத் தன்னருகே கொண்டுவந்து விடலாம் எனத் தீர்மானித்து சில பாதைகளைக் கொடுத்தார் கடவுள். மதங்கள் என்ற அந்தப் பாதையில் மனவேற்றுமை என்ற முட்களைப் பரப்பி, மனிதனை வெறிகொள்ள வைத்தது சாத்தான்.

நாம் கடவுளின் குழந்தைகளாக இருக்கும்போது கவிஞர்களாகவும், காதல்நெஞ்சம் கொண்டவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், அன்பு நிறைந்தவர்களாகவும், அடுத்தவர் துயரையும் அறிந்து விலக்கப் பாடுபடுபவர்களாகவும் இருக்கிறோம். சாத்தானின் கைப்பாவையாக ஆகும்போது சோம்பேறிகளாகவும், பொய்யர்களாகவும், பேராசைக்காரர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாறிவிடுகிறோம்… என்று முடிகிறது அந்தக் கதை.

கடவுளை நம்புகிறவர்களாக இருந்தாலும் சரி, அல்லாதவர்களாயினும் சரி இந்தக் கற்பனைக்கதை சொல்கிற நீதியைப் புறக்கணிக்க வேண்டியதில்லை.

மனிதர்கள் தேவர்களாக உயரவும், மண்ணில் வானம் தென்படவும், மானுடம் வென்று வாழ்க்கையைக் கொண்டாடவும் வழிகள் இங்கு உண்டு. நம் எல்லோர்க்கும் தெளிவாகத் தெரிந்தவையே அந்த வழிகள்.

அமெரிக்க கவிதாயினி எமிலி டிக்கின்சன் எழுதினார்: “ஒரே ஒரு இதயம் முறிவதை என்னால் நிறுத்த முடிந்தால் நான் வாழ்ந்தது வீணல்ல. ஒரே ஒரு வாழ்வின் வேதனையைக் குறைக்க முடிந்தால் அல்லது கீழே விழுந்த ஒரு குருவியை அதன் கூட்டுக்குத் திருப்பினாலே நான் வாழ்ந்தது வீணல்ல.”

இதோ, வரும் ஆண்டுப் பொழுதிலும் ஒருமுறை நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். என்ன செய்யப் போகிறோம் இந்த வாழ்க்கையை?
எல்லோர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

No comments: