Thursday, December 23, 2010

உடம்பு எப்படி இருக்கிறது ?

எப்பேர்பட்ட ஞானியாக இருந்தாலும் பல்வலியை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஓர் அறிவாளி சொன்னதாக முன்னர் ஒரு முறை எழுதினேன். யோசித்துப் பார்க்கையில் அவர் அப்படி சொன்ன சமயம் அவருக்கு பல்வலி இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அவரே ஜலதோஷம் ஏற்பட்டு டஜன் கணக்காகக் கைக்குட்டைகளை அசிங்கப்படுத்தி கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள், எப்பேர்பட்ட ஞானியாக இருந்தாலும் ஜலதோசத்தை  மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி இருப்பார்.

கடவுள் கிருபையில் உடம்பு நல்லபடியாக (அதாவது கூடுமானவரை நல்லபடியாக) இருக்கும்போது குளிருக்கு அடக்கமாகக் கம்பளியைக் போர்த்திக் கொண்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமில்லையா? எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. இன்டர்நெட்டில் ஆரோக்கியக் குறிப்புகளைப் படிக்கிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காட்டிலும் சுவாரஸ்யமான சங்கதிகள் உண்டென்றால் அவை இவைதான்.

சிலவற்றை இங்கே தருகிறேன்.

  • ஃபோன் மணி அடித்தால் இடது காதில் வைத்துக் கேளுங்கள்.
  • ஒரு நாளில் இரண்டு தடவைகளுக்கு மேல் காப்பி சாப்பிடாதீர்கள்.
  • மாத்திரைகளை விழுங்குவதற்குக் குளிர் நீர் கூடாது. சுடுநீரைக் குடியுங்கள்.
  • மாலை ஐந்து மணிக்குப் பிறகு பலமான சாப்பாட்டை சாப்பிடாதீர்கள்.
  • சாப்பிடும் உணவில் எண்ணையின் அளவைக் குறையுங்கள்.
  • பகல் வேளையில் அதிகமாகவும் இரவு வேளையில் குறைவாகவும் தண்ணீரை அருந்துங்கள்.
  • இரவு பத்து மணிக்குப்படுத்து காலை ஆறு மணிக்கு எழுந்திருங்கள்.

எந்த நோய்க்காக எந்த டாக்டரிடம் போனாலும் 'நிறைய வாக்கிங் போங்கள்' என்று சொல்கிறார்கள்.

நடைப் பயிற்சிக்கு எதனால் அத்தனை முக்கியத்துவம்?

காரணம்: உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான சக்தியைப் பாதம்தான் தருகிறது. பாதத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தியை அனுப்புகிறது. நடக்கும் போது பாதத்தின் அந்த பாகத்துக்கு அழுத்தம் ஏற்படுகிறது. பாதத்தின் நடுப் பகுதிகள்தான் அப்படி என்றில்லை. கால் விரல்களுக்கும் அந்த சக்தி நிறையவே உண்டு. ஆகையால் நடந்தது போதும் என்று உட்கார்ந்திருக்கையில் காலின் சுண்டு விரல் முதல் கட்டை விரல் வரை ஒவ்வொன்றாக மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக விரல்களின் நுனிப் பகுதிகளை மசாஜ் பண்ணுங்கள். ஒரு புது உற்சாகம் உண்டாவதை உணர்வீர்கள்.

அடுத்த முக்கியத்துவம் தண்ணீருக்கு.

காலையில் கண் விழித்தவுடனே வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர்கள் தண்ணீர் குடிப்பதை ஜப்பானியர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் நாட்டு ஆராய்ச்சிக் கழகமொன்று எந்தெந்த நோய்களைத் தண்ணீர் குணப்படுத்தும் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருக்கிறது.

காலையில் பல் விளக்குவதற்கு முன்பே இரண்டு டம்ளர்கள் தண்ணீரை அருந்துங்கள். பிறகு பிரஷ் போட்டுப் பல் விளக்கலாம். ஆனால் அடுத்த 45 நிமிட நேரத்துக்கு எதையும் குடிக்கவோ உண்ணவோ கூடாது.

காலை சிற்றுண்டிக்கும் பகல் உணவுக்கும் இரவு சாப்பாட்டுக்கும் பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு எதையும் குடிக்கக் கூடாது. சாப்பிடக் கூடாது.

இந்தத் தண்ணீர் சிகிச்சை உயர் ரத்த அழுத்தத்தை (பி.பி) 30 நாட்களிலும், வாயுத் தொல்லையை 10 நாட்களிலும், நீரிழிவை 30 நாட்களிலும், மலச் சிக்கலைப் பத்து நாட்களிலும், காச நோயை 90 நாட்களிலும் அறவே ஒழிக்கும். அல்லது கட்டுப்படுத்தும்.

இந்த சிகிச்சையை மூட்டுவலி உள்ளவர்கள் முதலில் வாரம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கலாம். இரண்டாவது வாரத்திலிருந்து தினந்தோறும் வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி பாத்ரூம் போகும்படி இருக்கும். பிறகு சரியாகிவிடும்.

சாப்பாட்டின் போது குளிர்ந்த நீரை அருந்துவது தவறு. ஏனெனில் குளிர்ந்த நீர் சாப்பிட்ட உணவின் எண்ணெய்ப் பகுதியை கெட்டிப்படுத்தி, ஜீரனத்தைத் தாமதப்படுத்துகிறது. சீனர்களும் ஜப்பானியர்களும் சாப்பிட்டவுடன் சூடான டீயைக் குடிக்கிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம்.

உடலில் ஓடும் ரத்தம் எந்த க்ரூப் என்பதைப் பொறுத்து மனிதனின் குணாதிசயம் அமையும் என்று கூட இந்த ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது.

இது மட்டுமல்ல. முகத்தில் சில பயிற்சிகளை செய்தால் மனத்தில் ஆரோக்கியம் பெறலாம் என்று தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக -

கண்களின் கீழ்ப்புறம் நான்கு விரல்களையும் வைத்து மசாஜ் செய்வது போல மேலே தூக்குங்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்று என்னிவிட்டுக் கையை எடுத்துவிட்டு, மறுபடி அவ்வாறே செய்யுங்கள். பிறகு அதே இடத்தில் விரல்களை வைத்துக் கீழே இழுங்கள். மூன்று வரை எண்ணிவிட்டு நிறுத்திக் கொண்டு மறுபடி செய்யுங்கள். இதன் மூலம் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.

இதே போல இரண்டு பொட்டிலும் நான்கு விரல்களை வைத்து இரண்டு பெரு விரல்களைத் தாடையின் கீழே வைத்து பொட்டை மெல்ல அழுத்துங்கள். பிரச்சனைகளில் தீர்மானமாக முடிவு எடுத்து செயலில் இறங்குவீர்கள்.

மூக்கின் இரு பக்கங்களிலும் ஆட்காட்டி விரல்களை வைத்து மசாஜ் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுங்கள். இருபத்து நான்கு முறைகள் இப்படி செய்தால் செய்யத்தக்கது எது, தகாதது எது என்ற தெளிவு ஏற்படும்.

பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே காதுமடலைப் பிடித்துக் கொண்டு தலையுடன் அழுத்தினாற்போல் மேலும் கீழுமாக மெதுவாக தேயுங்கள். யாரிடமேனும் எரிச்சல் ஏற்பட்டிருந்தால் அது நீங்கி நட்பு உணர்ச்சி உற்பத்தியாகும்.

ரா.கி.ரங்கராஜன்

இவற்றைப் போல மனதுக்கும் உடலுக்குமான ஆரோக்கியத்துக்கான அறிவுரைகள் ஆயிரக்கணக்கான அறிவுரைகள் ஆயிரக்கணக்கில் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.

அதெல்லாம் கூட எதற்கு? 'எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்' என்ற கந்த சஷ்டி கவசத்தைப் படிப்போமாக.                          

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

உபயோகமான தகவல்கள்.